இந்திய மேம்பாட்டுச் சங்கம் (Association for India's Development) தனது வளர்ச்சித் திட்டங்களுகூகு நிதி திரட்டுவதற்காகப் பிரபல பொம்மலாட்டக்கரர்களான ராம்தாஸ் பத்யே மற்றும் அபர்ணா பத்யேவை அழைத்திருந்தனர். அவர்களுடன் வந்தது ஆளுயரப் பொம்மைகள் மட்டுமல்ல. அடக்க முடியாத சிரிப்பு வெடிகளும் தாம். லிஜ்ஜத் பப்படத்திற்கு வரும் முயல்குட்டியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதுவும் இவருடன் வந்திருந்தது.
பொம்மைகளில் தான் எத்தனை வகை! கயிற்றில் இணைத்தவை, கம்பி கொண்டவை, கைப்பாவைகள், விரலில் இயங்குபவை - ஆச்சரியம்தான். அவருடன் எல்லாமே பேசின, வாதிட்டன, கேலி செய்தன, சிணுங்கின, சண்டை போட்டன. ராம்தாஸின் மருங்குரைத்திறன் (ventriloquism) நம்ப முடியாததாக இருந்தது. அவரும், அவரது பொம்மைகளும் சற்றும் சளைக்காமல் பேசிக் கொண்டிருந்ததில் அவர் மூச்சு விட்டதாகக் கூடத் தெரியவில்லை. சிரித்துச் சிரித்து மாளவில்லை அவையோருக்கும். பல குழந்தைகள் லிஜ்ஜத் முயலின் அட்டகாசச் சிரிப்பை அவையில் எழுப்பியதே இளைய தலைமுறைக்கும் இந்த முயல் பிடித்து போனதை அறிவித்தது.
முதலில் வந்த Tom the Terrible ரொம்ப விஷமம். ராம்தாஸை எப்படியாவது சீண்டி எரிச்சலூட்டும் எண்ணத்துடன் அவரது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னது. பின்னால் வந்த பொம்மைகளும் சாதாணம் அல்ல. ஆனாலும் நிகழ்ச்சி வெறும் சிரிப்பு மட்டுமே அல்ல. அவரது சம்பாஷணைகளில் நாட்டு நடப்பும், சமுதாயத்திற்கான பல சிந்தனைகளும் எளிதில் ஏற்கும்படியாகச் சொல்லப்பட்டன.
ராம்தாஸ் தன் தந்தை பேரா. ஓய்.கே. பத்யேவிடம் மருங்குரைத்தலைக் கற்றார். இது ஒரு குரல் மாயமே. ஒருவரே தானாகவும், தன் கையில் இருக்கும் பொம்மை போலவும் பேசுவது. பொம்மை பேசுகையில் இவரது வாயில் அசைவு ஏற்படாது. எந்திரப் பொறியியல் படித்துவிட்டு இக்கலை மீது கொண்ட காதலால் மடைமாறிய ராம்தாஸ¤க்கு 1992-ல் பன்னாட்டு மருங்குரைப் போர் மாநாட்டில் (சின்சினாட்டி) நிகழ்ச்சி தர வந்த அழைப்பு பெரும் கவுரமாகும். இதுநாள் வரை இவரே இக்கவுரவம் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியராவார். அபர்ணா பத்யேவும் பாடகி. நடிகை மட்டுமின்றி பொம்மலாட்டக்காரரும் கூட.
அமெரிககாவில் 36 கிளைகளோடு இயங்கும் இந்திய மேம்பாட்டுச் சங்கத்துக்காக 500 தன்னார்வத் தொண்டர்கள் பணிசெய்கின்றனர். அட்லாண்டாவில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. நற்பணிக்குப் பணம் திரட்டியதோடு ஒரு அரிய கலைவடிவத்தை நிலைக்கத் துணை செய்த நிறைவும் சங்கத்துக்கு உண்டு. இந்த நிகழ்ச்சிக்குப் பொருளுதவிய 'மெட்ராஸ் சரவணபவன்', 'வெஸ்டர்ன் யூனியன்', 'ஷாலின் ·பினான்ஷியல்ஸ்' ஆகியவை வணிக நிறுவனங்கள் பொதுப்பணிக்கு என்ன செய்யமுடியும் என்பதற்கு முன்னுதாரணங்கள்.
மேலும் அறிய :http://www.aidindia.org/atlanta
தொடர்பு கொள்ள : 770.517.2752 மற்றும்atlanta@aidinida.org
சுமித்ரா ஸ்ரீநிவாசன் |