ஆர்த்தி, சேகர் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டோஸ் பகுதியில், தனி வீட்டில், ஒரே மகள் ஸ்வாதியுடன் வாழ்கிறார்கள். சேகருக்கு, சான் பிரான்ஸிஸ்கோவில் வேலை. ஆரம்ப காலத்தில் ஒரு சில இடங்களில் வேலை செய்த ஆர்த்தி, பிறகு சேவை நிறுவனங்களில் காரிய உறுப்பினர் (committee member) வேலைகளை மட்டும் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டாள். ஸ்வாதியை கர்நாடக இசை, பரத நாட்டியப் பள்ளிகளில் சேர்த்து, இந்திய பாரம்பரியத்தை விடாமல் இருக்க முயன்றார்கள். பள்ளிப் படிப்பை இந்த வருடம் தான் முடித்தாள் ஸ்வாதி.
நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய ஸ்வாதி, இந்த வெள்ளிக் கிழமை கேரி (Gary) யுடன் தனக்கு Date இருப்பதையும், பிறகு இருவரும் சேர்ந்து நடனம் மற்றும் இரவு உணவுக்கு போகப்போவதையும் கூறி, தான் வீடு திரும்ப நேரம் ஆகலாம், அல்லது மறுநாள் காலையும் வீடு திரும்ப நேரலாம் என்றதும் ஆர்த்தி செய்வதறியாமல் தவித்தாள். ஸ்வாதி இப்படி கூறுவது முதல் முறை. ஸ்வாதி காண்பித்த, தோள்களை வெளிப்படுத்தும் உடையை கண்டதும் தயக்கத்துடன், பேச்சை ஆரம்பித்தாள்.
"ஸ்வாதி, கண்டிப்பாக நீங்கள் இருவர் மட்டும்தான் போகத்தான் வேண்டுமா...?"
ஆங்கிலத்தில் ஸ்வாதி...
"என்ன சொல்ல வர? இது என்னுடைய முதல் Date. இதற்கு நாங்கள் மட்டும் போகமல் வேறு யார்?..."
"ஆணுடன் நடனமாடுவது, நம் கலாசாரத்தில், கல்யாணமானால் மட்டும்தான் ஸ்வாதி..." ஆர்த்தி மனதில் நடனம் மட்டுமல்ல, வேறொரு பயம்.
"எது நம் கலாசாரம்? இந்திய கலாசாரமா? அது உன்னுடைய கலாசாரம். நாம், இப்போ இருப்பது அமெரிக்காவில். நான், இங்கு இருப்பவர்களைப் போல்தான், இருப்பேன்." ஆர்த்தியின் குறுக்கீடு பிடிக்கவில்லை என்பது ஸ்வாதியின் கோபத்தில் தெளிவாகத் தெரிந்தது.
"உன்னுடைய வழக்கங்களை நம் குடும்பத்தில் ஏற்க மாட்டார்கள் ஸ்வாதி. நான் சொல்வதை இதில் மட்டும் கேள்...", ஆர்த்தி சற்று கெஞ்சும் பாவனையில் கேட்டாள். ஆனால் ஆர்த்தியின் இந்த வார்த்தைகள், ஸ்வாதியின் கோபத்தை அதிகப்படுத்தியது.
"அப்படி என்றால், என் வாழ்க்கை முறை தவறா? எனக்கு நானே தேர்ந்தெடுப்பதை, உன் குடும்பத்தினர் ஏற்காவிட்டால் எனக்கொன்றும் வருத்தம் இல்லை. உன்னையோ அவர்களையோ மாற்றிக் கொள்ள நான் சொல்லவில்லையே. என்னைப் பற்றி பேச, மற்ற யாருக்கும் அவசியமில்லை." என்ற ஸ்வாதி, தன் அறைக்கு சென்று விட்டாள்.
சேகர் நேரம் கழித்து இரவு வீட்டிற்க்கு வந்து, உணவருந்தினான். சப்பாத்தியும் குருமாவும்.
"ஆர்த்தி, என்ன யோசனையில் இருக்க..."
"ஒன்றும் இல்லை"
"இந்த ஞாயிற்றுக் கிழமை என் நண்பர்களுடன் Ruby Hills-ல் Golf விளையாடப் போறேன். நீயும் ரேவதியும் வந்தால், பக்கத்தில் இருக்கும் பியூட்டி பார்லருக்கு போய், நாங்கள் விளையாடும் போது அங்க இருக்கலாமே?"
"சேகர்... எனக்கு மனசே சரியாயில்லை...", ஆர்த்தி, ஸ்வாதியின் வெள்ளிக் கிழமை திட்டத்தையும், தங்களுக்குள் நடந்த வாக்குவாதத்தையும் சொன்னாள்.
சேகர் தொடர்ந்து சொன்னான், "ஸ்வாதி இந்திய முறைப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், இங்கு இருக்க முடியாது. இந்தியாவில்தான் வாழ வேண்டும். இனிமே அதற்கு வாய்ப்பு இல்லை.".
"அப்ப என்ன செய்யறது?"
"ஸ்வாதியை அவள் இஷ்டப்படி விடு. இதெல்லாம் இங்கு சகஜம். இதற்கெல்லாம் பிறகு, அவளுக்கு ஒரு இந்தியனையும் பிடிக்க வேண்டும் இந்திய கலாசாரத்தையும் பிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இரு". சேகர் தூங்கப் போய்விட்டான்.
எம்.எஸ்.-ன் இசை CD-ல் மென்மையான வால்யூமில் ஒலித்துக் கொண்டிருந்தது. 'குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா' பாடல் ஒலித்தபோது அவளையும் அறியாமல் அவள் கண்களில் நீர் தோன்றியது. ஆர்த்தியின் மனம் பின்னோக்கிப் பயணித்தது...
ஆர்த்தி, சேகருக்கு திருமணம் நடந்தது சென்னை AVM ராஜேஸ்வரியில். அமெரிக்காவிற்கு MS படிக்க வந்து, பிறகு கலிபோர்னியாவில் contractor ஆக வேலைக்கு சேர்ந்து, ஒரு வருடத்தில் நிரந்தர வேலையில் சேர்ந்து, அடுக்குமாடிகுடியிருப்பில் வாழ்க்கையை ஆரம்பித்தபோது ஸ்வாதி பிறந்தாள். ஆர்த்தி, சேகருக்கு தங்களுடைய வாரிசை அமெரிக்காவில் வளர்ப்பதில் நிறைய மகிழ்ச்சி, கொஞ்சம் பயம். முதல் வருட பிறந்த நாளுக்கு அம்மாவும் அப்பாவும் இருந்தனர். தன்னுடைய அம்மா தனக்கு அளித்த தங்க நகையை ஸ்வாதிக்கு அணிவித்து அழகு பார்த்தார் அம்மா. தன்னுடைய அம்மா போலவே இருக்கிறாள் என்று பெருமைகூட. இரண்டு வருடங்களில், லாஸ் ஆல்டோஸ்-ல் வீடு வாங்கி, வாழ்க்கை முறையையும் உயர்த்திக் கொண்டனர். ஆரம்ப காலங்களில் பாட்டி தாத்தாவுடன் நன்கு பழகினாள் ஸ்வாதி. ஐந்து, ஆறு வயதில் பட்டுப் பாவாடையுடன் வலம் வந்த ஸ்வாதி, எட்டு வயதில் தன்னுடன் படிக்கும் அமெரிக்க பெண்களைப் பார்த்து, அவர்களை போல் ஆடை அணிய ஆசை பட்டாள். பிறகு ஸ்வாதி, கொஞ்சம் கொஞ்சமாக பாட்டி இந்தியாவிலிருந்து அனுப்பும் ஆடைகளை தவிர்த்தாள். ஆர்த்தியும் அதை அனுமதித்ததில், ஒரு காலகட்டத்தில், முழு அமெரிக்க சிறுமியாக மாறி, இந்தியாவுக்கு சென்றால், தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியதை அறிந்து, இந்தியாவுக்குச் செல்வதையும் தவிர்த்தாள்.
சேகர், ஸ்வாதியை பள்ளியில் விடுவது, மற்ற நண்பர்களின் குழந்தைகளின் பிறந்தநாள் விருந்திற்க்கு அழைத்துச் செல்வது, ஸ்வாதியுடன் அமெரிக்க ஆங்கிலத்தில் உரையாடுவது என்று இருந்தான். சேகருடைய அப்பா, அம்மா தங்களுடைய பேத்தி அமெரிக்க முறையில் வளர்ந்ததை வரவேற்று ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஒன்பதாவது வருட பிறந்த நாளுக்குப்பிறகு, ஸ்வாதி அவள் நண்பர்களை மட்டும் அழைத்தால் போதும் என்று சொல்லி விட்டாள். சேகர், ஆன்லைனில் ஸ்வாதிக்கு மலர் கொத்து அனுப்பிவிட்டு வேலைக்குப் போய் விடுவான்.
ஆண்டிற்கு ஒரு முறை இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்த ஆர்த்தி, சேகர், ஸ்வாதி பிறந்து வளரும் வருடங்களில், இரண்டு ஆண்டிற்க்கு ஒரு முறை, பிறகு மூன்று, நான்கு என அவர்கள் இந்தியப் பயண எண்ணிக்கை குறைந்தது. அப்பா இறந்த போது, ஆர்த்தி மட்டும் இந்தியா சென்று வந்தாள். பல முறை அழைத்தும், அம்மா இந்தியாவில் இருப்பதையே விரும்புவதாக கூறியதால், இப்போதெல்லாம், Net Meeting-ல் பார்ப்பது மட்டும்தான். ஸ்வாதி பேசும் பாஷை பாட்டிக்கு புரிந்து பல காலமாகிவிட்டது.
ஸ்வாதியிடம் காலத்தின் மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. தன்னுடைய பதிமூன்றாவது வயதில், பிரிட்னி ஸ்பியர்ஸ் நிகழ்ச்சிக்கு அழைத்துப் போகச் சொன்ன போது, முதலில் சேகர் மறுத்தான். பிறகு வேறு வழியின்றி, ஸ்வாதியை அவள் நண்பர்களுடன் உள்ளே அனுப்பி, வெளியில் காத்திருந்தான். அன்றுதான், ஆர்த்தி முதல் முறையாக சேகரிடம், ஸ்வாதியைப் பற்றி தன் கவலையை வெளியிட்டாள்...
சிந்தனைப் பறவையை கூட்டுக்குள் அடைக்க முயற்சி செய்து, நீ£ண்ட நேரம் ஆர்த்தி விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்து பிறகு தூங்கினாள்.
மறுநாள், 'Family Affairs' சம்பந்தப்பட்ட blog-ல் ஒரு மணி நேரம் உலா வந்த ஆர்த்தி, ஸ்வாதியைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். சன்னிவேல் வரை சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டாள். திரும்பும் வழியில் மவுண்டன் வியு 'Walgreens'-ல் நுழைந்தாள்... சேகர் செல் போனில் அழைத்தான்.
"சொல்லுங்க சேகர்... ஆபிஸில் வேலை செய்ய முடிந்ததா?"
"ம்..ம்... ஏதோ வேலை செய்தாலும், ஸ்வாதியைப் பற்றிய நினைவு தான். நீ என்ன செய்யற?"
"இப்பதான் மளிகை சாமான்கள் வாங்கி முடித்து, Walgreens-க்குள் நுழைந்தேன். உங்களுக்கு மூக்கில் வேர்த்திருக்கு."
"ஆர்த்தி, நல்லா யோசிச்சயா, என்ன பண்ணப்போற?"
"ம்.."
ஆர்த்தி, தன் முடிவைக் கேட்டால் சேகர் நிச்சியம் அதிர்ந்து போவான் என்று நினைத்துக் கொண்டாள். வட்ட வடிவில் இருந்த அந்த மருந்து டப்பாவை வாங்கிக் கொண்டு, Toyota Highlander-ல், El Camino Real-ல் வீட்டை நோக்கி பயணித்தாள். CD ப்ளேயரில், சுசீலா 'நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா' என்று ஆர்த்திக்காகவே பாடுவது போலிருந்தது.
மீண்டும், நினைவுகளில் பயணித்தாள் ஆர்த்தி.
இரண்டு மாதங்கள் முன்பு ஸ்வாதியின் பதினைந்தாவது பிறந்த நாள். ஸ்வாதி அன்று, ஒரே ஒரு நண்பரைத்தான் அழைத்திருப்பதாக சொன்னபோது, ஆர்த்தி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆர்த்தி வரப்போகும் ஸ்வாதியின் நண்பருக்காக, தன்னால் முடிந்த அமெரிக்க-இத்தாலி உணவை செய்து காத்திருந்தாள். ஆனால், வந்தது கேரி என்ற பதினாறு வயது இத்தாலியன் மட்டும் என்றவுடன், சிறிது கவலையடைந்தாள். தன்னுடைய அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், இன்முகமாக இருந்து, கேரி போனவுடன், அவனைப் பற்றி விசாரித்தாள். கேரியை உயர் நிலைப் பள்ளியில் இறுதி வருடம் முதல் தெரியும் என்பதையும், தனக்கு நல்ல நண்பன் என்பதையும் ஸ்வாதி சொன்னாள். ஸ்வாதி இல்லாத போது அவள் அறைக்குச் சென்ற ஆர்த்தி, ஸ்வாதியின் டைரியில் கேரியின் புகைப்படம் இருப்பதையும், கேரி தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அளித்திருந்த வாழ்த்து அட்டையையும் பார்த்து, சேகரிடம் கூறினாள். சேகர் ஆர்த்தியிடம் அதை கேட்க, தன்னுடைய அறைக்கு ஆர்த்தியும், சேகரும் தான் இல்லாத போது வருதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னாள். தன் தேவையை தான் அறிவதாகவும், ஆர்த்தியிடம் இப்படிப்பட்ட நாகரீகக்குறைவான செயலை எதிர் பார்க்கவில்லை என்றும் சொன்னாள். சேகரும், ஆர்த்தியிடம், "இதெல்லாம், இங்கு ஏற்கப்பட்ட கலாசாரம். பயப்படாதே. ஸ்வாதி நம்மை மதிக்க வேண்டுமென்றால், நாம் அவளை அவள் இயல்பிற்கு விடத்தான் வேண்டும்", என்று கூறிவிட்டான்.
பிறகு அவ்வப்போது, கேரி ஸ்வாதிக்கு போன் செய்வான்; இருவரும் ஓரிருமுறை ஞாயிற்றுக் கிழமை மாலைகளில் Shopping Mall-க்கு சென்றார்கள். கேரியுடைய High School Prom-மிற்கு ஸ்வாதி அவனுடன் ஜோடியாக இருந்தாள். ஆர்த்தி, ஸ்வாதியின் வெறுப்புக்கு ஆளாவதற்கு பயந்து, அதனை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டிருந்தாள்...
மர்பி சாலை சிக்னலில் தான் இருப்பதை உணர்ந்தாள். தெருவின் ஓரமாக இருந்த பூக்கடை கண்ணில் பட்டது. El Caminio Real-ன் மாலை நேர போக்குவரத்து நெரிசலில், வழக்கத்தைவிட பயண நேரம் அதிகமானது. சாலை ஒர பூக்கடையில், மலர்கள் வாங்குபவர்களுக்காக, வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஸ்வாதி சிறுமியாக இருந்தபோது, அம்மா வந்திருந்தாள், இங்கு வளரும் மல்லிகையில் பூ தொடுத்து அதை ஸ்வாதிக்கு அணிவித்து, ஸ்வாதி பள்ளியிலிருந்து திரும்பும் போது, அழுது கொண்டே பள்ளியில் மற்ற அமெரிக்க சிறுமிகள் தனிமைப் படுத்தி கேலி செய்ததை கூறி இனி தனக்கு இந்திய முறைப்படி எதுவும் செய்ய வேண்டாம் என்றதை அம்மா அதை ஏற்க முடியாமல் இரவு அழுதது ஆர்த்திக்கு இப்போது நினைவுக்கு வந்தது.
El Monte சாலையில் நுழைந்து, சாலையின் இறுதியில் இருந்த தன்னுடைய பெரிய ரான்ச் வகை வீட்டில் டொயோட்டா-வை நிறுத்தி அதிலிருந்து வெளியே வந்தாள் ஆர்த்தி. ஜூலை மாதத்தின் மாலைப்பனி லாஸ் ஆல்டோஸ் பகுதியில் மெல்லிய குளிரை படரவிட்டிருந்தது. வாசலில் நடப்பட்டிருந்த மலர் செடிகள் வீட்டின் முன் பகுதியின் அழகை மேலும் கூட்டின. தானாக இயங்கும் Sprinklers அப்போது தான் நின்றிருக்கும். சிறிது தண்ணிர், கோலம் போடுவதற்கு முன்னிருக்கும் இந்திய வீட்டு வாசல்களை நினைவூட்டின. அவள் செய்யப் போகும் காரியத்தை மனம் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டாள். ஸ்வாதி வந்து விட்டாள் போலிருந்தது. அவள் அறையிலிருந்து போனில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.
அவள் பேசி முடித்தபின் உள்ளே போகலாம் என்று நினைத்தாள். இண்டெர்னெட்டில் படித்து செய்த ஜிகிர்தண்டா பானத்தை ஐஸ் கட்டியின் மேல் ஊற்றி, குடித்து, அது தொண்டையில் இறங்கும் போது ஏற்படும் குளிர்ச்சியை ரசித்தாள். போன் பேச்சின் சப்தம் நின்றதும், ஸ்வாதியின் அறைக்கு சென்று, கதவைத்தட்டினாள்.
"உள்ளே வா அம்மா.." ஸ்வாதியின் குரலில் எவ்வித கோபமும் தென்படவில்லை.
உள்ளே நுழைந்த ஆர்த்தி, ஸ்வாதியிடம் Wallgreens-ல் வாங்கிய, 'Morning After' மாத்திரை பெட்டியை தந்தாள்.
"உனக்கு எது புத்திசாலித்தனமாக தோன்றுகிறதோ அதைச் செய்", என்று கூறி, ஸ்வாதியின் கண்களில் தெரிந்த கேள்வியுடன் கூடிய ஆச்சரியத்தை கவனித்தவாறே, ஸ்வாதியின் பதிலுக்குக் காத்திராமல், வெளியே வந்தாள்.
வெள்ளிக் கிழமை...
தன் மனநிலையை தானே அறியாதவளாக ஒரு வித இயந்திர கதியில் மாலையில், புதிதாக வாங்கிவைத்திருந்த ஆடையை அணிந்தாள் ஸ்வாதி. ஏன் இப்படி ஒரு குழப்பமான குடும்ப சூழ்நிலை, என் வீட்டில் மட்டும், இல்லை பிற இந்திய பெண்களின் வீட்டிலுமா, என்று யோசித்தபடியே கேரியின் வருகைக்காக காத்திருந்தாள். அம்மாவைப் பார்த்தால் பாவமாகவும் இருந்தது; அதே சமயம், என்னிடம் எந்த தவறும் இல்லையே என்ற எண்ணமும் மேலோங்கியது. கேரியை பிடித்திருக்கிறதா, இல்லை அவன் தன்னை கேட்பதனால், பிற அமெரிக்க தோழிகளின் செய்கையால் உந்தப்பட்டு தானும் இதை செய்கிறோமா என்ற குழப்பத்தில் இருந்தாள். 'Morning After' மாத்திரைப் பெட்டியைப் பார்த்து, எனக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பது போல், தள்ளி வைத்தாள். வாசலில் மாஸ்டா Sports Model வாகனத்தில் கேரி வந்து இறங்குவது தெரிந்தது. அவன் கையில் அவளுக்கு பிடித்த ஒரு மலர் கொத்தும் இருந்தது.
ஸ்வாதி வாசலுக்குச் சென்று, அவனை வரவேற்றாள். மனதை திடப்படுத்தி கொண்டிருந்த அம்மாவிடம், அவனை அறிமுகப் படுத்தினாள். கேரி இந்திய முறையில், ஆர்த்தியிடம் 'நமஸ்தே' என்றான்.
பின் ஸ்வாதியிடம், "நான் உன்னிடம் சற்று தனியாக பேசலாமா?". என்றான். "கண்டிப்பாக. உள்ளே வா கேரி, என்று, அவன் கையைப் பற்றி, அழைத்தாள் ஸ்வாதி.
"நான் குடிப்பதற்கு எதாவது கொண்டு வருகிறேன்", என்று ஆர்த்தி, அவர்களின் தனிமையை புரிந்து கொண்டு உள்ளே சென்றாள்.
உள்ளே வந்த ஆர்த்திக்கு, மனம் பட பட வென்று அடித்துக் கொண்டது. திடீரென்று எதற்கோ தான் பன்னிரண்டாவது படிக்கும் போது, பள்ளியில் படித்த ரவி ஒரு நாள் புத்தகம் கேட்டு வீட்டிற்க்கு வந்ததும், அப்பா, அவன் போன பிறகு அதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. சமையல் அறையின் ஒரு அலமாரியில் இருந்த மாங்காடு காமாஷி அம்மன் படத்தைப் பார்த்து எல்லாம் நல்லதாக நடக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டாள். அவர்கள் இருவருக்கும், டீ தயார் செய்து விட்டு, சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்தாள்.
கேரியும், ஸ்வாதியும் வந்தனர்.
"நீங்களும் எங்களுடன் வருகிறீர்களா?" கேரி கேட்டான்.
ஆர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. ஸ்வாதியை ஒரு கண்ணால் பார்த்தவாரே, "நான் எப்படி, எதற்கு..."
"நேற்று நான் ஒரு நூலகத்தில், இந்திய கலாசாரத்தைப் பற்றி படித்துக் கொண்டி ருந்தேன். அப்போதுதான், எனக்குத் தெரிந்தது, திருமணத்திற்கு முன் பண்டைய இந்தியாவில் ஆணும் பெண்ணும் சேர மாட்டார்கள் என்று, இன்றும் பரவலாக அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஸ்வாதியிடம் அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்திய கலாசாரத்தை மதிக்கிறேன். நீங்களும் இன்று எங்களுடன் வரலாம்."
ஆர்த்தியின் மனதில் இறுக்கம் தளர்ந்தது.
"இன்று நீங்க இரண்டு பேரும் போங்க. மற்றொரு முறை, சேகருடன், நான் வருகிறேன்", என்றவாறே ஸ்வாதியின் கையை பிடித்து அன்புடன் அழுத்தினாள். ஸ்வாதியின் கண்களில் தெளிவு தெரிந்தது.
ஸ்வாதியும் கேரியும் வெளியே சென்றதும், ஸ்வாதியின் அறைக்கு சென்று, 'Morning After' மாத்திரை பெட்டியை நம்பிக்கையுடன், குப்பையில் போட்டாள்.
சேகரை போனில் அழைத்து, "ஸ்வாதியைப் பற்றி பயப்பட வேண்டாம், சேகர்...", என்றாள்.
சிவன் |