ராஜாவின் பார்வை
நெடிய உருவம், நிறையத் தன்னடக்கம், சரளமான தமிழ், இதயம் மலர ஹாஸ்யம் - இவர்தான் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா. ஜூலை 10, 2004 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'நகைச்சுவை விருந்து' நிகழ்ச்சியில் மதுரைத் தென்றலாக வீசியது சிம்சன் ராஜா அவர்களின் நகைச்சுவை நிறைந்த, ஆனால் பொருள் பொதிந்த இரண்டு மணி நேரப் பேச்சு.

பேரா. சாலமன் பாப்பய்யா அவர்களின் பட்டிமன்றங்கள் அனைத்திலும் பங்கேற்கும் ராஜா, ஜூலை 2, 3 தேதிகளில், கவிப் பேரரசர் வைரமுத்து அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்நாடு அறக்கட்டளையின் முப்பதாவது ஆண்டு விழாவில் (சிகாகோ) கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக எண்பதாயிரம் டாலர்கள் குவித்த இந்த மாபெரும் வெற்றிவிழாவின் களிப்போடு டெட்ராய்ட் வந்த ராஜா அவர்கள், அந்தக் குதூகலத்தை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

முதலில் எப்படி மேடையேறினா என்பதைக் கூறுகையில், பாப்பய்யா அவர்கள் தலைமையேற்கும் எல்லா பட்டிமன்றங்களுக்கும் உடன் சென்ற ராஜாவை, பேச்சாளர் ஒருவர் வராத சந்தர்ப்பத்தில் மேடையேற்றினாராம் பேராசிரியர்.

ஒருமுறை, பூனா ரயிலில் இளம் பெண்ணொருத்தி பூனா எப்போது வரும் என்று இவரிடம் கேட்க அதிகாலையில் அவளை எழுப்ப வேண்டுமே என்று இவர் உட்பட மூன்று பேச்சாளர்கள் இரவெல்லாம் விழித்திருந்தார்களாம்.

எழுப்பியதும், அவள் சாவகாசமாக, ''நான் இறங்குவதற்காக கேட்கவில்லை, ஒரு செல்போன் கால் செய்ய வேண்டும்'' என்றாளாம்.

பொதுவாக மேடையில் பேசுபவர்கள் ஏதோ வேற்று கிரக மொழியில் பேசுகிறாரோ என்று குழம்பிப் போய் விழிக்கும் கேட்கின்ற கூட்டம். ஆனால் ராஜா நம்மில் ஒருவாராக, நம் உணர்வுகளைப் பிரதிபலித்து, சராசரி ரசிகர்களுக்குப் புரியும் வகையில், பெரிய விஷயங்களை எளிமையான மொழியில் பேசுவது பாராட்டுக்குரியது.

சொந்த ஊ¡ன மதுரை மீது அலாதியான பிரியம் வைத்திருக்கும் ராஜா அவர்கள், மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் உள்ள சுவர் கழிப்பிடமாகப்பட்டிருக்கும் கொடுமையை நினைத்து வருந்தினார். இது நம் நாடு, நமது ஊர் என்ற உணர்வு இல்லையே மக்களுக்கு கவலைப்பட்டார்.

கடல் கடந்து இத்தனைத் தொலைவில் வசித்தாலும், அமெரிக்கத் தமிழ் மக்களுக்குத் தாய்மொழியின் மீது இருக்கும் பாசமும் ஈடுபாடும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இல்லை என்றார். அங்கே குழந்தைகள் ''தாத்தூஸ்'' என்று அழைப்பதும், தாத்தாக்கள் பேரன்களை ''மண்டூஸ்'' என்று அழைப்பதும் பெரிய வேடிக்கைதான் என்றார்.

தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பது பொதுவான ஒரு விஷயம். அமெரிக்காவுக்கு வந்த பிறகும் இந்த ஒற்றுமையில்லாமை என்கிற மூட்டையைச் சுமக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். தனது நகைச்சுவை மழையால் டெட்ராய்ட் தமிழ் இதயங்களை மகிழ்ச்சியில் நனைத்த ராஜா அவர்கள், தவறாமல் நமக்குள் சில சிந்தனைச் சுடர்களையும் ஏற்றி வைத்திருக்கிறார்.

கற்பகம்

© TamilOnline.com