வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) மாபெரும் பதினேழாவது தமிழர் திருவிழா 2004 ஜூலை 2 முதல் 5 வரை கார்ல் ஜெ. மர்·பி நுண்கலை மையம் (மார்கன் ஸ்டேட் பல்கலைக்கு¡கம்) பால்டிமோர், மேரிலாந்தில் நடைபெற்றது.
கோலம், மாவிலைத் தோரணம், கலைமாமணி என்.எஸ். சுந்தரம் அவர்களின் நாதஸ்வர இசை, இப்படிப் பல .... தமிழ் இதயங்களுக்குள் தாய் மண்ணின் மணத்தைத் திரும்பக் கொணர்ந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற இச்சங்கமம் 1400 தமிழர்களை இணைத்தது.
ஜூலை 2அன்று இரவு உணவில் தமிழ் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தமிழர்கள் கலக்க, கோலாகல கோலத்தின் முதல் புள்ளி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தோரைச் சந்தித்தனர்.
ஜூலை 3 அன்று அமெரிக்க தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இத்திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் மற்றும் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் சிவராமன் வரவேற்புரை வழங்கினர். தொடக்கவுரை ஆற்றிய சிவகாமி அவர்கள் சிந்திக்கவும் வைத்தார். பின்னர் வடஅமெரிக்காவின் நாற்பது தமிழ்ச் சங்கங்கள் வழங்கிய நிகழ்ச்சிகள் பகல் நேரத்தில் விழிக்கும் செவிக்கும் விருந்தளித்தன.
தமிழ்க் கவிதைகளை ஒரு புதிய வடிவில் கவிஞர் சேரன் அவர்கள் 'கவிதை நிகழ்வாய்' நிகழ்த்தினார். தொடர்ந்து அவர் தலைமையில் 'காலம்( என்ற தலைப்பில் ஓர் கவியரங்கம் நடைபெற்றது. 'பன்னிரு மாத பவனி' என்னும் கண்ணைக் கவரும் நாட்டிய நடனத்தை அமைத்து வழங்கினார் ரேவதி குமார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் கதைகளை கதைத்துச் சிந்தையைத் தூசு தட்டினார்.
இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். குழுமியிருந்தோரை வரவேற்று வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு நன்றி பாராட்டினார் பால்டிமோர் மேயர் மார்டின் ஓ. மாலி அவர்கள்.புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி அவர்களின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி அரங்கை சில நேரங்களில் அதிர வைத்தது. சில சமயங்களில் சிரிப்பால் குலங்க வைத்தது. பல நேரங்களில் சிந்திக்க வைத்தது. ராகங்கள், கீர்த்தனைகள் மீது அவர்கள் செலுத்திய ஆளுமை, பட்டிதொட்டியில் மட்டும் பரவிய கிராமிய இசை அமெரிக்கத் தலைநகர்ப் பகுதியிலும் பரவச் செய்தது.
ஜூலை 4 ஞாயிறன்று நர்த்தகி நடராஜின் 'தமிழமுது' என்ற நாட்டிய நிகழ்ச்சி, சுந்தர ஆவுடையப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிரிப்புப் பட்டிமன்றம், நடிகர் விவேக் அவர்களின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி, தமிழ் இளைஞர் கூட்டமைப்பு வழங்கிய 'பால்டிமோரில் பாஞ்சாலி' என்ற நகைச்சுவை நாடகம், 'தமிழ்க் கலாச்சாரம் உயர தமிழனின் பங்கு' என்ற அக்னி இசைக்குழவுடன் (கனடா) தரைப்படப் பின்னணி பாடகர்கள் சுஜாதா, ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் இசைநிகழ்ச்சி எனப் பல்வேறு நிகழ்ச்சிகளால் கலகலத்தது.
முதன் முறையாய் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சிறந்த பத்து தமிழ் தொழில்நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு கெளரவித்தது.
ஜூலை 5 (திங்கள்) காலை 'தமிழ்ச் சமூகத்தில் இலக்கியத்தின் பங்கு' என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலாச்சாரம், சமூகம், இலக்கியம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிவகாமி இ.ஆ.ப., பிரபஞ்சன், சுந்தர ஆவுடையப்பன், மறைத்திரு ஜெகத் காஸ்பர் ராஜ் ஆகியோர் விடையளித்தனர்.
நான்கு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் சிறப்பம்சம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் திட்டமிட்ட நேரப்படி வரையப்பட்டதால் விழா பேரழகாய்க் காட்சியளித்தது.
வ.செ. பாபு |