விழிப்புணர்வுள்ள மக்களால் செய்ய முடியும்
மெல்லிய ஊருணிக் காற்று, நெருடலற்ற மணல் தரை, ஓலைக்கீற்றுக் கொட்டகை நிழல், பள்ளியை ஒட்டியிருக்கும் சத்திரத்து அடுப்பறைச் சமையல் வாசனை, சிலப்பதிகாரத்தையும், ரென் அண்ட் மார்ட்டின் இலக்கணதையும் கற்பித்த ஆசிரியர் - இவை எவை எனது இனிமையான பள்ளி நினைவுகள். சத்திரத்து அடுக்களைத் தீப்பொறி எங்கள் பள்ளியின் கீற்றுக் கொட்டகையை எரிக்கக்கூடும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. தொலைக்காட்சியில் கும்பகோணப் பள்ளித் தீ விபத்தைப் பார்க்கும் வரை. இந்தத் தீ விபத்து நம்மில் பலரை உலுக்கி விட்டிருக்கிறது. ''ஏதோ கடவுள் புண்ணியத்தில் நானோ எனக்குத் தெரிந்தவர்களோ அங்கு இல்லை'' என்று எண்ணம் தோன்றி குற்ற உணர்வில் ஒளிகிறது. அம்மா, அப்பா, ஆசான், ஊரார், அரசு, தெய்வம் என்று அந்தக் குழந்தைகள் நம்பிய எல்லோருமே கைவிட்டிருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது நெஞ்சு பொறுக்காமல் துடிக்கிறது.

தமிழகத்தில் ஓலைக் கொட்டகை இல்லாத ஊரில்லை. தெருவை அடைத்துக் கீற்றுப் பந்தல் போடாத திருவிழா இல்லை. தீப்பொறி பறக்கும் அடுப்படியும், கீற்றுப் பந்தல்களும், எண்ணைக் குத்து விளக்குகளும், ஒலி பெருக்கிகளும், உபய எழுத்துக்களில் மங்கிப் போன குழல் விளக்குகளும், மின்சாரப் பிணைப்புகளும், மக்கள் நெரிசலும் ஆபத்து, ஆபத்து என்று அறைகூவினாலும் அதைக் கண்டும் காணாமல் போகும் சமுதாயம். பொது இடங்களில் மக்களைப் பாதுகாக்க ஏற்படுத்திய சட்டங்களை மாதக் கடைசி மாமூல் மிரட்டலுக்கு மட்டுமே பயன்படுத்தும் அதிகார வர்க்கம். இந்த ஒரு விபத்து நடந்தது அதிசயமில்லை. இன்னும் இதுபோல் பல விபத்துகள் நடக்காமல் இருப்பதுதான் அதிசயம்.

''ஆறிலும் சாவு. நூறிலும் சாவு, வருவது வரட்டும்' என்று மெத்தனமாக இருக்கும் தமிழ்ச் சமுதாயமே இந்த விபத்தால் அதிர்ந்திருக்கிறது. மூன்றாம் உலக ஏழ்மை நிலையிலிருந்து முதல் உலக முன்னேற்றத்துக்கு நடைபோடும் நாட்டுக்கு இது பேரதிர்ச்சி. நடந்ததற்கு யார் பொறுப்பு என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்க, இனிமேல் இவ்வாறு நடப்பதைத் தவிர்ப்பது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அண்மையில் நடந்த மற்ற தீ விபத்துகள் போலல்லாமல், இந்த விபத்து சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. வருமுன் காப்பதுதான் அறிவு என்றாலும். வந்ததை உணர்ந்து இனி இதுபோல் ஏதும் நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற உறுதி அரசின் நடவடிக்கைகளில் தெரிகிறது. மாவட்ட, மாநில, மத்திய அரசு அமைப்புகள் உடனடியாக நிவாரண வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளும், திரைக்கலைஞர்களும், உலகத் தமிழர் அமைப்புகள் பலவும் உதவ முன் வந்துள்ளன.

மாற்றங்கள் தொடங்க வேண்டும். பொது இடங்களில் மக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்புள்ள அரசு சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவரசச் சிகிச்சை நிலையங்கள் பள்ளிகளுக்கு அருகில் இருக்க வேண்டும். தீயணைப்புப் படையினருக்கு நல்ல பயிற்சியும், கருவிகளும் தர வேண்டும். அடுப்பு வெடிப்பு விபத்துகள் நிறைந்த நாட்டில், தீப்புண்களைக் குணப்படுத்தும் திறனை எல்லா மருத்துவமனைகளிலும் உயர்த்த வேண்டும். இவையனைத்தும் விழிப்புணர்வுள்ள மக்களால் மட்டுமே நிலைநாட்ட முடியும்.

1984ல் நடந்த போபால் யூனியன் கார்பைடு விபத்தின் இறுதித் தீர்ப்பு இருபது ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறது. 89லேயே யூனியன் கார்பைடு இழப்பீடுக் கட்டணத்தை அரசிடம் ஒப்படைத்த போதிலும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிக்க முயன்றவர்கள் இத்தனை நாள் இழுத்தடித்திருக்கிறார்கள். இந்தியர்களின் உயிரை இந்தியர்களே மலிவாக எண்ணும் கொடுமை இது. கன்னை இழந்த பசு ஆராய்ச்சி மணி அடிக்க அதற்கு நீதி வழங்கி சோழநாட்டில் இன்று மீண்டும் ஆராய்ச்சி மணி அடித்திருக்கிறது. குழந்தைகளைப் பறி கொடுத்தவர்கள் நீதி கேட்கிறார்கள். ஆனால், இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும். ஈமச்சடங்குகளுக்குப் பணம் கொடுத்து ஆறுதல் தெரிவித்தால் போதாதா என்று ஆசிரியருக்குக் கடிதம் ஈவிரக்கமற்றவர்களுமூ இருக்கிறார்கள். இழப்பீடு 1 லட்சம் போதுமா? இறந்த குழந்தைகளில் பலர் இன்னும் சில ஆண்டுகளில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கக் கூடிய திறமை உள்ளவர்களாக உயர்ந்திருக்கக் கூடும். அவர்கள் குடும்பத்துக்கு இது பொருளாதாரத்திலும் பேரிழப்பில்லவா?

*****


தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்ற மத்திய அரசு உறுதிமொழி சில சலசலப்புகளைத் தூண்டியிருக்கிறது. கன்னட அறிஞர்கள் சிலர் கன்னடமும் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும்போதே தமிழையும் சற்று மட்டம் தட்டிப் பேசியிருக்கிறார்கள். செம்மொழி அறிவிப்புப் போராட்டம் வேண்டாத வேலை என்கிறார் பேரா. இந்திரா பார்த்தசாரதி. செம்மொழி அறிவிப்பைத் தொடர்ந்து செம்மொழி ஆராய்ச்சி நிதி வரும் என்கிறார் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. இந்தியாவின் இன்னொரு செம்மொழியான சமஸ்கிருத ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ஆண்டு தோறுமூ 140 கோடி ரூபாய் செலவிடுவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழக அரசும் செம்மொழித்தமிழ் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும். பல அரிய தமிழ் நூல்கள் மறுமதிப்பு காணாமலேயே மறைந்து விடுவதைப் பற்றிப் பேரா. ஜார்ஜ் ஹார்ட் வருத்தப்படுகிறார். எந்தெந்த நூல்கள் மீண்டும் அச்சிடப்பட வேண்டும் என்று அவர் ஒரு பட்டியலே வைத்திருக்கிறார். ஆராய்ச்சியாளர்களுக்கு திருத்திய ஆராய்ச்சிப் பதிப்புகள் தேவை என்கிறார் ஹார்ட்.

தமிழ் செம்மொழி அறிவிப்பு பற்றிப் பெருமைக் கொள்ளும் அமெரிக்கத் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்கிறார்களா? ஆங்கில மழலைப் பாடல் பாடுவது போல், தமிழில் ஓரிரு பாடல்களாவது பாடுகிறார்களா? பர்க்கெலியிலும், பென்சில்வேனியாவிலும், தமிழ் வகுப்புகள் இருந்தாலும், அங்கிருக்கும் தமிழ் மாணவர்களில் எத்தனை பேர் தமிழ் படிக்கிறார்கள்? இல்லையென்றால் ஏன்? உங்கள் பிள்ளைகள் தமிழ் படிக்கவில்லை என்றால் அவர்களுக்குப் பேரா. ஏ.கே. ராமானுஜன் எழுதிய "Interior Landscapes", "Poems of Love and War" என்ற இரண்டு நூல்களைப் பரிசாக வாங்கிக் கொடுங்கள். தமிழின் செவ்விலக்கிய மரபுகளையும், சங்கத் தமிழையும் அறிமுகப்படுத்த இவற்றை விடச் சிறந்த நூல்கள் இருக்க முடியாது. நம் வேர்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நம் மொழியைக் கற்க வேண்டும்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com