திண்டாடும் மாணவர்கள்!
தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒருபுறம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் நடத்தும் நுழைத்தேர்வு மறுபுறம். இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவிக்கின்றனர். மாணவ, மாணவியர். எந்த நுழைவுத் தேர்வு எழுதினால் தாங்கள் சேர்க்கப்படுவோம் என்ற குழப்பத்தில் மாணவர்களைக் கலங்க வைத்துள்ளது.

மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்குச் சேர்க்கைக் குழு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. அதுபோல் பொறியியல் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் மூலம் ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தியது.

தனியார் கல்லூரிகள் தங்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை இருவிதமாக அமைத்துக் கொண்டன. ஒன்று இலவச இடம் அதாவது நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்து குறைந்த கட்டணம் செலுத்துவது. மற்றொன்று நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்ப்பது. இந்த இரண்டு பிரிவுகளில் அனைத்து இடங்களுக்கும் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கை நடத்திக் கொண்டு வந்தன.

தனியார் கல்லூரிகள் கட்டண இடங்களை (payment seats) அதிகப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தனர். தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து அதிகப்படியான கட்டணங்களை வசூல் செய்ததாலும் மற்றும் முறையற்ற வகையில் மாணவர் சேர்க்கை செய்ததாலும் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுப்பிரமணி அவர்களின் தலைமையில் நால்வர் குழுவொன்றை அமைத்தது.

இக்குழுவின் அதிரடியாக பல நிபந்தனைகள் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் முறையற்ற மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்தியுள்ளது. இனி நன்றாகப் படிக்கும் மாணவர்களே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும். இதனால் கல்வித் தரம் பாதுகாக்கப்படும்.

ஒரு மாணவன் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர வேண்டும் என்று நினைத்தால், மருத்துவ நுழைவுத் தேர்வையும், பொறியியல் நுழைவுத் தேர்வையும் தனித்தனியாக எழுத வேண்டும் என்கிற நிலை தற்போது உள்ளது. அது மட்டுமல்லாமல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டுக்கு என்று ஒரு கலந்தாய்வு, அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அதன் மூலம் வரும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் மற்றொரு கலந்தாய்வு. தனியார் சங்கங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதற்கென்று கலந்தாய்வு என்று மூன்று கலந்தாய்வுகளை மாணவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

இதே நிலைதான் பொறியியல் கல்லூரியில் சேர்க்கையிலும். அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத்தேர்வை நடத்தி முடித்து விட்டது. தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் ஒரு நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வு முடிந்த பின்பு மூன்று கலந்தாய்வுகள் நடைபெறவிருக்கின்றன.

இதற்கிடையில் சுயநிதித் தொழில் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக நீதிபதி எஸ்.எஸ். சுப்பிரமணியம் குழு பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த இடைக்காலத் தடையில்லாமல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது.

தொகுப்பு :கேடிஸ்ரீ

© TamilOnline.com