இந்த வருடம் எங்களுடைய 50வது திருமண ஆண்டு. எங்களுக்கு ஐந்து குழந்தைகள். எங்களின் இரண்டு பிள்ளை மற்றும் இரண்டு பெண்கள் அமெரிக்காவிலும், ஒரு பிள்ளை ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறார்கள்.
மூன்றாவது மகன் சீனப் பெண்ணை மணம் புரிந்து கொண்டுள்ளான். அவன் எங்கள் திருமண ஆண்டிற்கான பரிசாக எங்களை சீனாவிற்கு அழைத்து போவதாக சொன்னதால், நாங்கள் போக சம்மதித்தோம்.
கடந்த 1990ல் அவனுடைய திருமணத்தை சிகாகோவில் உள்ள கோவிலில் வைத்து நடத்தினோம். அவர்களுக்கு 14 வயதில் ஒரு சீனா/இந்திய ஜாடையில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறாள்.
மும்பையில் வசிக்கும் நாங்கள் அமெரிக்கா வருவதற்கு முன் சீனாவிற்கான விசா வாங்கிக் கொண்ட வந்துவிட்டோம். விசா வாங்குவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. நான்கு நாட்களில் கிடைத்துவிட்டது. என் மருமகள் சீனாவில் வியாபாரம் வைத்துக் கொண்டு இருப்பதால் அவள் அனுப்பிய கடிதம் உதவியாக இருந்தது.
அவன் ஷான்ஷங்கில் (Shanguai) 18 வது மாடியில் இரண்டு படுக்கை அறை கொண்ட ப்ளாட் ஒன்று வைத்திருக்கிறான். நாங்கள் சைவம் ஆனதால் சாப்பாடு பிரச்சனை இருக்குமோ என்று எதற்கும் கையில் ரெடிமேட் உணவு பொட்டலங்கள், அப்பளம், ஊறுகாய் போன்றவைகளை எடுத்துச் சென்றோம். நாங்கள் அங்கிருந்த 18 நாட்களும் பொழுது போனதே தெரியவில்லை. சான்பிரான்சிஸ்கோவி லிருந்து ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி கிளம்பி 22ம் தேதி மாலை சரியாக ஆறேகால் மணிக்கு Shaghai, Podang விமானநிலையம் போய்ச் சேர்ந்தோம். எங்களுடைய மருமகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தாள். காரில் ஒன்றரை மணி நேரத்தில் வீடு போய் சேர்ந்தோம். விமானநிலையம் பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது. வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் அகலமான பாதைகள், மேம்பாலங்கள், அடுக்கு மாடிவீடுகள், கலர்கலராக நியான் விளம்பரப் பலகைகள், டாக்சிகள், பஸ்கள் எல்லாமே வெகு வண்ணமயமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் ஜனங்களும், மோட்டார் கார்களும், பஸ்களுமாக இருந்தன.
மறுநாளிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் பார்த்தோம். நாங்கள் பார்த்த இடங்கள் 1. Century Park, 2. Malls (Carrefour) 3. International School Campus, 4. China Handicraft Shopping Place 5. பெரிய புத்தகக்கடைகள். 6, shopping Places (மும்பையில் இருக்கம் காந்தி மார்க்கெட் மாதிரி. Bund என்கிற இடத்தில் (மும்பையின் David Sasson ஆல் 100 வருடங்களுக்கு முன்னால் கட்டினது. இப்போதும் மிகவும் அழகாக இருக்கிறது.
ஷான்கேயில் இருந்து காரில் இரண்டரை மணி நேரத்தில் ஹான்சு (Hanzhau) என்ற இடத்திற்குப் போனோம். அங்கு ஒரு பெரிய ஏரி இருக்கிறது. ஏரியைச் சுற்றி அழகான புல் தரை, செடிகள், மரங்கள், கட்டிடங்கள், ஹோட்டல்கள். கடைகள் என்று நிறைய இருந்தன. ஏரியில் மக்கள் படகில் செல்கிறார்கள். ஏரியைச் சுற்றி வர Golf Cart கிடைக்கின்றன. மிகவும் பார்க்க வேண்டிய இடம்.
மறுநாள் ரொம்ப பழமையான புத்தர் கோயில் போய்ப் பார்த்தோம். மலைகளை குடைந்து புத்தருடைய சிலையை அமைத்து இருக்கிறார்கள். அங்குள்ள பெரிய புத்தர் கோவிலில் பக்தர்கள் ஊதுவத்தி கொளுத்தி வழிபடுகிறார்கள். அங்கு இருக்கும் சில்க் மியூசியம் வெகுவாக கவர்ந்தது.
மே மாதம் 3ம் தேதி Shanghai லிருந்து Beijing போனோம். ஒன்றரை மணிநேரத்தில் பெல்ஜியன் விமானநிலையத்தை அடைந்தோம். இங்கு நாங்கள் சீன பெருஞ்சுவர், தியான் மென் சதுக்கம், Forebiddencity போன்ற இடங்களை எல்லாம் போய் பார்த்தோம். சீன பெருஞ்சுவரின் நீளம் 4600 மைல். பெல்ஜியன் பக்கத்தில் Badaling என்ற இடத்தில் நாங்கள் கேபிள் கார் மூலமாக மேலே போய் அதற்கும் அப்புறம் சில படிகள் ஏறி பார்த்தோம். அந்த இடத்தில் இருந்து வெகுதூரம் பார்க்க முடிந்தது. இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்னால் எப்படி இம்மாதிரி கட்டினார்கள் என்று யோசித்தால் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே கூட்டம். நான் உடுத்தியிருந்த புடவையை வெகு அதிசயமாக அங்கு பார்த்தார்கள். சில பேர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். பெல்ஜினிலிருந்து திரும்பி Shangahiக்கு ரயிலில் வந்தோம். கிட்டத்தட்ட 800 மைல் நாங்கள் 12 மணி நேரத்தில் வந்து அடைந்தோம்.
இந்திய உணவுவிடுதிகள் மூன்று இடங்களில் இருந்ததால் எங்களுக்கு சாப்பாடு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஹோட்டல்களை நடத்துபவர்கள் நம் நாட்டவர்கள். வேலை செய்பவர்கள் பஞ்சாபி உடையணிந்து நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்ட சீன பெண்கள். தனிரக சீனா மொழி பேசுகிறார்கள். இங்கு சீனமொழி தெரியாமல் ஒன்றும் செய்ய முடியாது.
பெல்ஜின்/Shanghai முழுவதும் கட்டிட வேலைகள் அதிகம். ஏகப்பட்ட கிரேன்கள் வேலை செய்து கொண்டு இருந்தன. அவர்கள் தமாஷாக அவர்களுடைய நாட்டுப் பறவை கிரேன் என்று சொல்கிறார்கள். அங்கேயும் சில இடங்களில் பிச்சை எடுப்பவர் களை பார்க்க முடிகிறது. கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்றாலும் ஏற்ற தாழ்வுகள் கண்ணில் படுகிறது.
என் மகனுக்கு முதுகுவலி வந்ததால் ஆஸ்பத்திரிக்கு செக்அப் செய்யப் போனோம். டாக்டர் மிகவும் நட்புடன் நடந்து கொண்டார்கள். சீன மொழியில்தான் பேசுகிறார்கள். அவர்களில் ஒரு சீனியர் டாக்டர் ராஜ்கபூர் படத்தில் வரும் 'ஆவாராஹ¥ம்' பாட்டை பாடிக் காண்பித்தார். மிகவும் தாமாஷாக இருந்தது. சீனாக்காரர்கள் நம்முடைய ஹிந்தி படங்களை மிகவும் ரசித்து பார்க்கிறார்கள்.
நாங்கள் கற்றுக் கொண்ட ஒரே சீன வார்த்தை Bu yao. அதற்கு அர்த்தம் 'வேண்டாம்'. நம்மை பின் தொடர்ந்து வரும் விற்பனை யாளர்களை தடுப்பதற்கு இது ஒரே வழி.
மொத்தத்தில் சீனா பார்க்க வேண்டிய இடம். நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவித்துவிட்டு வந்தோம். அங்காங்கே சில குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் நம்மை போல் தான் இருக்கிறார்கள். இன்னும் எழுத எவ்வளவோ இருக்கின்றன.
சரோஜா வெங்கடசுப்பிரமணியன் |