நிவாரண நிதி
அன்புள்ள தென்றல் வாசகர்களே,

ஜூலை 16 ஒரு கொடிய நாள். அன்று கும்பகோணம் பள்ளி ஒன்றில் கோரத் தாண்டவமாடியது தீ. தமிழ் வழி வகுப்புகளின் ஓலைக்கூரை பற்றி எரிய, அதன் அடியில் சிக்கிய மாணவர்களில் 92 குழந்தைகளும், அவர்களைக் காப்பாற்ற முயன்ற ஒரு இளைஞரும் உயிரிழந்தார்கள். 15 குழந்தைகள் மருத்துவமனையில் தீக்காயக் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், திரைப்பட நடிகர்கள், மற்றும் பலர் பண உதவி தந்திருக்கிறார்கள். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ஆறுதல் உதவியாக தமிழக அரசு வழங்கியுள்ளது. சான்·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையோடு இணைந்து கும்பகோணம் தீவிபத்து நிவாரண நிதி முயற்சியைத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவெங்கும் உள்ள பல தமிழர்கள் அனுப்பியுள்ள நிதி ஒரே வாரத்தில் $3000 ஐ எட்டியுள்ளது.

என்ன தேவை?

  • உடனடி மருத்து உதவி

  • தீப்புண் பட்ட குழந்தைகளுக்கு நெடுநாள் மருத்துவ உதவி

  • பாதிக்கப்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கு நிதிஉதவி

  • பொதுஇடங்களில் தீ விபத்துத் தடுப்பு முயற்சி

  • பாதுகாப்புப் பழக்கங்களைக் கண்காணிக்கத் தனியார் அமைப்பு

  • தீயணைப்புப் படைகளுக்குப் பயிற்சி, எந்திர உதவி

  • சிற்றூர் மருத்துவமனைகளுக்கு அவசரச் சிகிச்சை உதவி


என்ன செய்கிறோம்?

  • சான்·பிரான்சிஸ்கோ தமிழ்மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, மற்ற தமிழ்ச் சங்கங்களோடு சேர்ந்து செயல்படுகிறது.


  • தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர், கும்பகோணம் லயன்ஸ், ரோட்டரி சங்கங்களோடு தொடர்பு கொண்டுள்ளது.


  • செஞ்சிலுசைச் சங்கம், தேசியத் தமிழ் இளைஞர்கள் அமைப்பு, தமிழ்நாடு அறக்கட்டளை, எய்ம்ஸ் இந்தியா, எல்லைகளற்ற மருத்துவர்கள் போன்ற அமைப்புகளுடன் தொடர்பு.


  • மற்ற அமெரிக்க, உலக அமைப்புகளோடு இணைந்து இந்தியாவெங்கும் இது போன்ற விபத்துகளைத் தடுக்குமூ முயற்சி.


தீக்காயங்களால் ஏற்படும் வடுக்கள் புண்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை மிகவும் பாதிக்கக்கூடும். பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தலாம். ஒவ்வொரு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக்கும் ஏறத்தாழ 4 லட்சம் ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தமிழர்கள் உதவியால் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.

நிதி உதவி தர விரும்புபவர்கள், FETNA அமைப்புக்குக் காசோலை எழுதி, கும்பகோணம் தீவிபத்து நிவாரண நிதி என்று குறிப்பிட்டுக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

Mani M. Manivannan
President, Bay Area Tamil Manram, 38871, Jonquil Drive, Newark, CA 94560
நிவாரண நிதி அனுப்புபவர்களுக்கு வரி விலக்குச் சலுகை உண்டு. வளமான எதிர்காலத்தை நோக்கிப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வாழ்க்கையை மேம்படுத்துவோர் வாரீர்.

இங்ஙனம்,
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
[http://www.bayareatamilmanram.org]

© TamilOnline.com