நேனோடெக் நாடகம்
முன்கதை: Silicon Valley - இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, பிறகு முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரண். தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், ஆர்வத்தால் சூர்யாவுடன் துப்பறிவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறான்! அவன் சகோதரி ஷாலினி மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். அவ்வப்போது சூர்யாவுக்கு உதவுகிறான்.

மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள ஒரு நோனோடெக் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்பம் ஒன்று காரணம் விளக்க முடியாதபடி தோல்வியடைந்து கொண்டே இருக்கிறது. நிறுவனமே மூழ்கிவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் நிறுவிய பால் ஜென்னிங்ஸ், மற்றும் மூலதனமிட்ட பீட்டர் ஸ்டம்ப் இருவரும பெரும் சோகத்தில் உள்ளனர். அங்கு நிபுணராக அவ்வப்போது யோசனை கூறும் ஷாலினி, விளக்கம் காண சூர்யாவை அழைத்திருக்கிறாள்.

பால், பீட்டர் இருவரும், தாம் கண்டுபிடித்த மருந்து பூச்சி நேனோ காந்தத் துகள்கள் இரத்தத்தில் மிதந்து, உடலெங்கும் வியாபித்து பாதிக்கப்பட்ட ஸெல்களின் மேல் மட்டும் செயலிடுவதைப் பற்றி விவரித்தனர். தம் வழிமுறையில் ஒவ்வொரு படியும் மிகவும் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக தவறிப்போக ஆரம்பித்துள்ளன என்று கூறினர். சூர்யா ஆராய்ச்சி அறையில் இருந்தக் கருவிகளை ஆழ்ந்து நோட்டமிட்டு ஒரு கருவியின் கன்ட்ரோல், தளர்ந்து ஆடிக் கொண்டிருந்ததைக் காட்டினார். தவறுகளுக்கு அதுவோ காரணம். அதை ஜேம்ஸ் என்ற புதுமேனேஜர் தான் செய்திருக்க வேண்டும் என்று பீட்டர் கோபத்துடன் கூறினார். ஆனால்.........!

தவறிப் போய்க் கொண்டிருந்த நேனோ வழிமுறையி முக்கியப் படியில் ஒரு பழுதை சூர்யா கண்டுபிடித்து விட்டதால் அதைச் சரிசெய்து மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்ற உற்சாக ஆவலுடன் பரபரத்த பால், பீட்டர் இருவரும் சூர்யாவின் புன்னகையற்ற முகத்தை உடனே கவனிக்கவில்லை.

ஆனால் சூர்யாவுடன் வெகுகாலமாகத் துப்பறியும் தொழிலில் ஈடுபட்டிருந்த கிரணும் ஷாலினியும் கண்டுபிடித்த விஷயம் சூர்யாவுக்கு முழுத் திருப்தியை அளிக்கவில்லை என்று உடனே உணர்ந்தனர்.

பால், பீட்டர் இருவரும் சூர்யா ஆழ்ந்த யோசனையில் இருப்பதை ஒரு வழியாகக் கவனித்து, பேச்சை நிறுத்தி விட்டு சூர்யா என்ன சொல்லப் போகிறார் என்று குழப்பத்துடன எதிர்பார்த்தனர்.

சூர்யா தன் தியானத்திலிருந்து விழித்துக் கொண்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். "வழிமுறை தவறிப் போனதுக்கு காரணம் தளர்ந்து போன அந்த டயலோ, அதுக்குப் பொறுப்பான மேனேஜர் ஜேம்ஸோ இல்லைன்னு நான் நினைக்கிறேன்."

பீட்டரும் பாலும் அதிர்ந்தே போயினர். பீட்டர் உச்சஸ்தாயில் "என்ன சொல்றீங்க? எப்படித் தெரியும்!" என வீறிட்டார்.

சூர்யா நிதானம் குலையாமல், "பல விஷயங்களை வச்சுத்தான் சொல்றேன். நீங்களே சொன்னீங்க. இந்த எல்க்ட்ரானிக் டிஸ்ப்ளேயில் எது தவறானாலும் தெரியும்னு. ஆனால், இதுவரை யாரும் இந்த டயல் தளர்ந்து ஆடறதால காந்தத் துகள்கள் அளவு மாறினதாக் கண்டு பிடிக்கலை. இந்தக் கருவியைப் பலமுறை ஏற்கனவே சோதிச்சுட்டதாகவும் சொன்னீங்க...."

பால் யோசனையுடன், "ஆமாம், ஆனால் .ந்த டயல் முள் ஆடுதான்னு சோதிக்கலையே?" என்றார்.

சூர்யா தலையாட்டி ஏற்றுக் கொண்டார். "ஆனா அது திடீர்னு எப்படி மற்ற வழிமுறைப் படிகள் வெவ்வேறு விதமாகக் கெட்டுப் போக ஆரம்பிச்சதுன்னு விளக்க முடியாது" என்றவர், திடீரென அந்த டயலிடம் ஓடி அதன் கைப்பிடியிலிருந்து ஏதோ வெள்ளைத் துகள்களை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டார். பிறகு, கிரணிடம், "கிரண் அதுக்கு பெளடர் அடிச்சுப் பிரின்ட்ஸ் எடு! அதுக்கு முன்னால முதலில வெளி வழியறையில இருக்கறக் குப்பைக் கூடையில் இருக்கறதெல்லாம் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் எடுத்து வச்சுடு" என்றார்.

பால் ஆவலுடன் "என்ன கண்டுபிடிச்சீங்க?" என்றார்.

சூர்யா தலையாட்டி, "இன்னும் ஒண்ணும் கண்டுபிடிக்கலை. கண்டுபிடிக்க முடியாதபடி யாரோ நம்மைத் தவறான வழியில் செலுத்தறத்துக்கு முயற்சி செய்யறாங்கன்னு சந்தேகிக்கிறேன்" என்றார்.

பீட்டர் "நீங்க அனாவசியமா நேரத்தை வீண் செய்யறீங்கன்னு நான் நினைக்கிறேன். இந்த டயலை சரிசெஞ்சு நாம உடனே ஆராய்ச்சியைத் தொடரணும்" என்றார்.

ஷாலினி, "இல்லை பீட்டர். சூர்யா சந்தேகிச்ச அதுல எதாவது உண்மை இருந்தே தீரும். மேலும் அவர் சொல்ற மாதிரி, இந்த டயல் எல்லாக் கோளாறுகளுக்கும் விளக்கமளிக்கலை" என்றாள்.

அதற்குள் கிரண் ஒரு கருப்பு வர்ண ப்ளாஸ்டிக் நாடாத் துண்டை சூர்யாவிடம் கொண்டு வந்துக் கொடுத்தான். அதை மிகவும் ஜாக்கிரதையாக ஒரு சின்னப் பிளாஸ்டிக் பையில் சூர்யா போட்டு, மிகத் திருப்தியுடன் தலையாட்டிக் கொண்டார். "அப்படித்தான் நான் நினைச்சேன்" என்றார்.

பீட்டர் ஆவலுடன் "என்ன, என்ன கிடைச்சது? நாடால என்ன இருக்கு? சொல்லுங்க!" என்று பரபரப்புடன் வினவினார்.

சூர்யா முறுவலுடன் "ஏன் நாடால ஒண்ணும் இல்லைங்கறதுதான் பிரச்சனை. இது டயலின் கைப்பிடியில் விரல் ரேகைப் பதிவு எடுக்கப் பயன்படுத்திய நாடா. பலரும் தொட்ட கைப்பிடியில் ஒரு ரேகையும் இல்லாதது எப்படி?"

கிரண், "ஊ... ஊ... pick me! pick me! நான் சொல்றேன்!" என்று பள்ளியில் முதல் பெஞ்சில் அமரும் டீச்சரின் செல்ல மாணவனைப் போல் துள்ளினான்.

சூர்யா சிரித்தார். "சரி, சொல்லு" என்றார்.

கிரண், "யாரோ அதை தளர்த்தி விட்டுட்டு ரேகை பதியாம துடைச்சிருக்காங்க" என்றான்.

சூர்யா புன்னகையுடன் "கரெக்ட்! அதைச் சோதனை செஞ்சவங்க ரேகையாவது இருந்திருக்கணும் இல்லையா? அதனால சமீபத்துல, அதைக் கடைசியா சோதிச்சப்புறம் செஞ்சிருக்கணும்னு தெரியுது" என்றார்.

பீட்டர் பெருமூச்சுடன் தளர்ந்தார். "ஓ! இப்பப் புரியது. நீங்க சொல்றது சரிதான். யாரோ உங்களைத் திசை திருப்பப் பார்க்கறாங்க." என்றார்.

சூர்யா "ஆனால் அவங்க நமக்கு ஒரு உதவி செஞ்சிருக்காங்க" என்றார்.

பால் ஆவலுடன் "என்ன, என்ன உதவி?" என்று அவசரப்பட்டார்.

சூர்யா தொடர்ந்து விளக்கினார். "சில ஸேம்பிள்கள் முதலில் சரியா வேலை செஞ்சு அப்புறம் கெட்டுப் போச்சுன்னு சொன்னீங்க இல்லையா? அது ஏன் அப்படி ஆகியிருக்கும்னு இந்த விஷயத்திலிருந்து யூகிக்க முடியுது."

ஷாலினி "எப்படி சூர்யா? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? புரியலையே" என்றாள்.

கிரண் களுக்கென்று சிரித்தான். மற்றவர்கள் அவனைப் பார்த்து எதற்கு அசம்பாவிதமாகச் சிரிக்கிறாய்?" என்பது போல் முறைத்துப் பார்க்கவே, காரணம் கூறினான். "ஸாரி, எங்க அப்பா எங்க அம்மாவை அப்பப்பபோ, "ஏம்மா மொட்டைத் தலைக்கும் ழுழங்காலுக்கும் முடிச்சுப் போடறே"ன்னு திட்டறது ஞாபகம் வந்தது. அதுல சூர்யாதான் உலகச் சாம்பியன் சொல்லுவார். பாருங்க என்ன முடிச்சுன்னு!" என்றான்.

சூர்யா விளக்கினார். "அந்த மானிட்டர் டிஸ்ப்ளே திரையில் எச்சரிக்கையா மஞ்சள் அல்லது சிவப்பு விளக்குகள் எரியுதான்னு எப்பவும் கவனிக்கிறாங்கன்னு சொன்னீங்க இல்லையா?"

பால் தலையாட்டினார். "ஆமாம். அதுக்கென்ன இப்போ?"

"அதை 24மணி நேரமும் பாக்கறாங்களா?"

"இல்லை. ராத்திரி 8-மணி வரைக்கும் பாக்கறாங்க. அப்புறம் காலை 8-மணியிலிருந்து திரும்பப் பாக்கறாங்க. எல்லாக் கருவியையும் இரவு 8-மணிக்குள்ள அணைச்சுடுவோம். அதுனால கவனிக்கத் தேவையில்லை."

சூர்யா பாய்ந்தார். "ஆஹா! அங்கதான் பிச்சனையே இருக்கு!"

எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வியைப் பீட்டர் வெளியிட்டார். "என்ன பிரச்சனை?"

சூர்யா விளக்கினார். "மானிட்டர் செய்ய வேண்டிய எல்லாக் கருவியையும் நீங்க 8-மணிக்கு அணைக்கறதில்லை. இந்த டிஷ்யூ ஸேம்பிள்களை எங்க வைக்கறீங்க? அது என்ன டெம்பரேச்சர்ல இருக்கணும்?"

புரிந்து கொண்ட ஷாலினியின் முகத்தில் ஒரு பீதியே பரவியது எனலாம்! "அய்யய்யோ! ஆமாம்! அது அந்த ·ப்ரிட்ஜ்ல இருக்கு. 40 டிக்ரீ ·பாரன்ஹைட்டுக்கு மேல போகக் கூடாது. அதுவும் அந்த டிஸ்ப்ளேல தெரியணும்!" என்றாள்.

சூர்யா மெல்லத் தலையாட்டினார். "அது இரவு 8-மணியிலிருந்து, காலை 8 - மணிக்குள்ள சரியா இல்லைன்னா யாரும் கவனிக்க மாட்டாங்க இல்லையா?"

பால் ஓடிப் போய் அந்தக் குளிர்ப் பதனப் பெட்டியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் கருவியைச் சோதித்தார். அது 45 டிகிரியைக் காட்டிக் கொண்டிருந்ததது. பால் திகீரென்ற உணர்வுடன் எச்சரிக்கைத் திரையைப் பார்த்தார். ஆனால் அது எல்லாம் பச்சை விளக்குகளே காட்டிக் கொண்டிருந்தது. புரியாமல் "எப்படி" என்று தலையைச் சொரிந்தார்.

சூர்யா, "நீங்க என்ன நினைக்றீங்கன்னு புரியுது. அந்த எச்சரிக்கை விளக்கு எந்த டெம்பரேச்சருக்கு மஞ்சளாகற மாதிரி வச்சிருக்குன்னு பாருங்க" என்றார்.

பீட்டர் முதலில் அங்க ஓடி பார்த்தார். அது 48 டிக்ரீக்கு வைக்கப்பட்டிருந்தது! "ஓ, நோ! இதையும் யாரோ கெடுத்திருக்காங்க" என்றார்.

பால் கவலையுடன், "அப்போ இவ்வளவு நாள் செஞ்ச ஸ்லைட்கள், டிஷ்யூ எல்லாம்?" என்றார்.

சூர்யா தலையசைத்து ஆறுதலளித்தார். "முதல்லயே செஞ்சு குறிப்பெடுத்ததையெல்லாம் திரும் செய்ய வேண்டியதில்லையே. இதெல்லாம் சமீப நடப்புதானே?"

பால் மிகுந்த நன்றியுடன், "ஆமாம். நீங்க சொல்றது சரி. நான் கவலையில மூழ்சி சரியா யோசிக்கலை!" என்றார். பிறகு, திடீரெனத் தோன்றிய புதுக் குழப்பத்துடன் "·ப்ரிட்ஜ், எச்சரிக்கைத் திரை ரெண்டுலயும் டெம்பரேச்சர் எவ்வளவுல வச்சிருக்குன்னு சோதிச்சிருக்கமே!" என்றார்.

பீட்டர், "பால், எனக்கென்னவோ ஜேம்ஸ் மேலதான் ரொம் சந்தேகம். அவரை நான் இங்கயும் பார்த்தேன்" என்றார்.

சூர்யா மறுத்தார். "இல்லை பீட்டர், இதை நீங்க சோதிச்சப்ப எல்லாம் சரியாத்தான் இருந்திருக்கும். இதை செஞ்சவங்க நம்மை வேணும்னே தவறான பாதையில செலுத்தப் பாக்கறாங்க. காட்டறேன் பாருங்க. கிரண், இந்த ·ப்ரிட்ஜ்டைய டயல், கைப்பிடி எல்லாத்துலயும் கைரேகை எடு."

கிரண் விடுவிடுவென அவற்றின் மேல் ஒரு வெள்ளைத் தூளைத் தூவி, கருப்பு நாடாவை அழுத்தி ஒரு நிமிடத்துக்குள் பல ரேகைப் பதிவுகளை எடுத்து, மற்றவர்களிடம் காட்டினான்.

சூர்யா, "பார்த்தீங்களா?" என்றார்.

பீட்டர் முகத்தைச் சுளித்தார். "என்ன பார்க்கறது?! அதுல ஒண்ணுமேயில்லையே!" என்றார்.

கிரண் குதூகலத்துடன், "அதுதானே விஷயமே! ஒரு ரேகையும் இல்லாதததால்தான் ரொம்ப சமீபத்துல நடந்ததுன்னு சூர்யா யூகிச்சிருக்கார். இது ஒரு நாள் முன்னால நடந்திருந்தாக் கூட நேத்து இந்த ·ப்ரிட்ஜ் கதவையோ உள்ள இருக்கற டயல் கன்ட்ரோலையோ தொட்டு அது மேல அவங்க ரேகை இருந்திருக்கணும். இல்லையா? அப்படி இல்லாம, இன்னிக்கு அதை மாத்தி வச்சுட்டு, யாரோ சுத்தமா ரேகை பதியாம துடைச்சு வச்சிருக்காங்க" என்றான்.

பிறகு சூர்யா சொல்லாமலேயே, எச்சரிக்கை விளக்குப் பலகையின் டயல்களிலிருந்தும் சில ரேகைப் பதிவுகளை எடுத்துக் காட்டினான். பிறகு வெற்றிப் புன்னகையுடன், "நான் நினைச்ச மாதிரிதான் இருக்கு! இங்க பாருங்க. மத்த டயல்களின் ரேகைப் பதிவுகள் இருக்கு. ஆனா ·ப்ரிட்ஜ்க்கு எச்சரிக்கை குடுக்கறதுக்கு டெம்பரேச்சர் வைக்கற டயல் மட்டும் துடைச்சிருக்காங்க!" என்றான்.

சூர்யா சிலாகித்துக் கொண்டார். "பிரமாதம் கிரண், நல்லாவே தேறிட்டு வரே."

பால் சிலாகிக்கும் மனோநிலையில் இல்லை. கொதித்துப் புழுங்கினார். "யார் இப்படி செய்யறாங்க? இப்படி செஞ்சு அவங்க என்ன எதிர்பார்க்கறாங்க. கண்டு பிடிச்சிக் குடுங்க சூர்யா...." என்று கெஞ்சினார். குரல் தழுதழுத்து, கண்ணில் நீர் தளும்பவே ஆரம்பித்து விட்டது. ஷாலினி மீண்டும் அவர் அருகில் சென்று முதுகில் தட்டிக் கொடுத்துக் கையை அழுத்தி ஆதரவளித்தாள்.

சூர்யா திடீரென்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்! "இதை யார் செய்யறாங்க, ஏன் செய்யறாங்கன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு! இதெல்லாம் ஒரு நாடகம்".

கிரணைத் தவிர மற்ற மூவரும் திடுக்கிட்டனர். "என்ன, எப்படி, யார்?" என்று ஒரே மூச்சில் பல கேள்விகள் எழுந்தன.

கையைத் தூக்கி அவர்களை அமைதிப்படுத்திய சூர்யா குறுக்கும் நெடுக்கும் உலாவியபடி விளக்க ஆரம்பித்தார். "இந்த வழிமுறைகள் சரிவராமப் போனா என்ன விளைவு? நிறுவனத்துக்கு அடுத்த சுற்று மூலதனம் கிடைக்காது. அதனால அதன் மதிப்பு மிகக் குறைஞ்சு போய் திவாலாகக் கூடிய நிலைக்கு வரும். அதனால யாருக்கு லாபம்?"

ஷாலினி விளங்காமல் விழித்தாள். "லாபம் எங்கே? நஷ்டந்தானே!"

கிரண் குதித்தான். "ஹே. ஷால்! உனக்கும் பண விஷயத்துக்கும் காத தூரம்! எனக்குப் புரிஞ்சு போச்சு. அந்த திவால் நிலைமை வந்துட்டா, ரொம்பக் குறைச்சல் விலைக்கு யாராவது அடிச்சுக் கிட்டு, இந்த அசம்பாவிதத்தையெல்லாம் நிறுத்திட்டு, வழிமுறைக்கு FDA அங்கீகாரம் வாங்கி கஜில்லியனேர் ஆயிடுவாங்க!"

சூர்யா முறுவலித்தார். "புடிச்சான் பாரு சரியான ஸ்டாக் ப்ரோக்கர் புடி! ஆமாம். அடிப்படியேதான்."

பால் ஆத்திரம் கலந்த குழப்பத்துடன், "அப்ப அந்த மாதிரி செய்ய யாரோ ஒரு முதலீட்டார் ஒரு களவாணிப் பயலை இங்க §லைக்கு வச்சிருக்கங்காளா?! ஒரு வேளை பீட்டர் சொல்றா மாதிரி அது ஜேம்ஸாவே இருக்கலாமோ?" என்று வினாவினார்.

பீட்டர் மெல்லத் தலையாட்டி ஆமோதித்தார். "பால் நீங்க சொல்ற மாதிரிதான் இருக்கக் கூடும். சூர்யா நீங்க ரொம்ப நல்லா இதுவரைக்கும் யூகிச்சிருக்கீங்க. இது யாருன்னு தெரியும்னீங்களே, யார்? சொல்லுங்க. அவங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன்!"

சூர்யா "செஞ்சவங்களைப் பார்க்க எங்கெல்லாமோ தேடி ரொம்ப அலச வேண்டியதில்லை. இங்கயே இருக்காங்க" என்றார்.

பால் குழம்பினார். "அதான் ஏற்கனவே நிறுவனத்திலயே இருக்காங்கன்னு சொல்லிட்டீங்களே? இன்னும் அலசாம யாருன்னு எப்படிக் கண்டு பிடிக்கறது?"

பதிலுக்கு சூர்யா இன்னொரு அணுகுண்டை வீசினார். "இங்கேன்னு நிறுவனத்தைப் பத்தி சொல்லலை. நம்மோடயே, இப்பவே, லேப்லயே இருக்காங்க" என்றார்.

பால், ஷாலினி, பீட்டர் மூவரும் கோரஸாக, "என்ன? யார்? எங்கே?" என்று கேட்டனர். பால் ஒரு பெரிய கேபினெட்டுக்குப் பின்னால் யாராவது ஒளிந்திருக்கிறார்களா எனச் சோதிப்பதற்காக நகர்ந்தார்.

சூர்யாவின் அடுத்த வார்த்தைகள் அவரை இழுத்து நிறுத்தின. "அங்கே யாருமில்லை, பால். நான் குறிப்பிடறது பீட்டரை. இதெல்லாம் அவர் ஆடிய லீலைகள்தான்!"

சில நொடிகள் ஆராய்ச்சி அறையில் மயான அமைதி நிலவியது. அது சூறாவளிக்கு முன் நிலவும் அமைதி! பிறகு பால், பீட்டர், ஷாலினி மூவரும் ஒரே சமயத்தில் உச்சக் குரலில் வெவ்வேறு வார்த்தைகளை அள்ளி பட படபடப்புடன் வீசியதால் ஆராய்ச்சிக் கூடமே அதிர்ந்தது.

முதலில் பீட்டர்தான் தனிப்பட்டு பேசுவதில் வெற்றி பெற்றார். அவர் முகம் கருத்து, கோபம் கொந்தளித்துப் புயலாக வீச, "என்ன சொல்றீங்க? உமக்கு என்ன பைத்தியாமா?! நான் எதுக்க அந்த மாதிரி செய்யணும்? பால் என் நெருங்கிய நண்பர். அது மட்டும் இல்லாம நானே அவரோட சேர்ந்து இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சு தொழில்நுட்பங்களை உருவாக்கி, இந்த அளவுக்கு வளர்த்திருக்கேன். உம்மால கண்டுபிடிக்க முடியலைன்னா சொல்லிட்டு நடையைக் கட்டுங்க. முட்டாள்தனமா யார் மேலயோ பழியைச் சுமுத்தி முகத்துல கரி பூசிக்க வேண்டாம்".

ஷாலினியும், "ஆமாம் சூர்யா, உங்க திறமையைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச எனக்கும் அதிர்ச்சியாத் தான் இருக்கு. ஏதோ தவறாயிருக்கணும். மீண்டும் யோசித்துப் பாருங்க" என்று கெஞ்சினாள்.

அதிர்ச்சியால் வாயடைத்துப் போயிருந்த பால் சிலிர்த்துக் கொண்டு அடக்க முடியாத கோபத்தால் உடல் அதிர, "கெட் அவுட்! வெளியில் போங்க. பீட்டரைப் பத்தி இந்த மாதிரி அவதூறு பேசறதை என்னால் தாங்கிக்க முடியாது. அவர் எதுக்கு இந்த மாதிரி செய்யணும். அவர் போட்ட முதலீட்டுப் பணமே போயிடுமே. அதை யோசிச்சீங்களா?" என்றார்.

சூர்யா சோகமாகத் தலையாட்டினார். "யோசிச்சேன். அதுவே ஒரு மூல காரணம். பீட்டர் அந்த நஷ்டத்துக்காகவும் அதுக்குப் பிறகு வரக்கூடிய பெருத்த லாபத்துக்கான பேராசையினாலுந்தான் செஞ்சிருக்கார். அவர் நஷ்டத்தைப் பத்தி முதல்ல குறிப்பிட்டவுடனேயே நான் இது மாதிரியிருக்கலாமோன்னு சந்தேகிச்சேன். தன் பணத்தால் வளர்ந்த தொழில்நுட்பம், பின்னால் வந்த முதலீட்டாருக்கு பெருத்த லாபம் கொடுப்பதை அவரால் தாங்கிக்க முடியலை. தனக்கே பெரும் பங்கு வேணும்னு திட்டம் போட்டார். இதுவரை போட்ட பணம் நஷ்டமானா அது பெரிய வருமான வசி சலுகையாயிடும்னு கணக்குப் போட்டார். அவர் இட்ட இன்னொரு மூலதனம் லாபம் கொடுத்திருக்கணும். அதுக்கு இந்த நஷ்டம் கழிச்சு சரிக்கட்டிடும். பிறகு அவரே இந்த நிறுவனத்தை மிகக் குறைச்சல் விலைக்கு வாங்கிட்டு மீண்டும் வளர்த்து பெரிய லாபம் அடிச்சுடலாங்கறது அவர் கணக்கு".

பீட்டர் ஏளளமாகச் சிரித்தார். "சும்மா பிதற்றாதீங்க. நான் இந்த நிறுவனத்தோட போர்ட்ல இருக்கேன். நீங்க சொல்ற காரணம்னா அதை செய்யறத்துக்கு எனக்கு பல வழிகள் இருக்கு. என் பணத்தையே இழந்துட்டு மீண்டும் முயற்சி செய்யற பைத்தியம் இல்லை நான். பால், எனக்கு நிறையத் தலைபோற அவசரமான காரியங்கள் இருக்கு. இங்க இருந்து இந்த ஏசலைக் கேட்டுக்கிட்டு வீணடிக்க முடியாது. இவருக்குச் சேர வேண்டிய காசைத் தூக்கி எறிஞ்சிட்டு வாங்க. யார் இதை செய்யறாங்கன்னு விசாரிக்கலாம்; இவர் சொல்ற ஒரு ஆதாரமுமில்லாத வெறும் யூகங்களை வச்சுக் குழம்பாதீங்க".

வார்த்தைகளை நெருப்பாக அள்ளி வீசிவிட்டு நடந்த பீட்டரை சூர்யாவின் வார்த்தைகள் எமனின் பாசக் கயிற்றில் சிக்கிய உயிரைப் போன்று இழுத்து நிறுத்தின. "ஆதாரங்கள் நிறைய இருக்கு பீட்டர் நீங்க இருக்கறதும், போகறதும் உங்க விருப்பம்".

பால் குரல் நடுங்க, "ஆதாரம் இருக்கா, எங்கே?" என்று வினவினார்.

பீட்டர் உள்ளே வளர்ந்த பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் இளக்காரமாக, "பால், நீங்க அவர் சொல்றத கேட்காதீங்க. சும்மா அளந்து விடறார்", என்றார். ஆனால் நகரவில்லை.

சூர்யா ஒரு ப்ளாஸ்டிக் பையிலிருந்த ஒரு வெள்ளைக் காகிதத்தைக் காட்டினார். "பீட்டர், நீங்க எல்லா டயல்களையும் மாத்திட்டு ரொம்ப சாமர்த்தியமா இந்தக் காகிதத் துவாலையால துடைச்சுட்டீங்க. ஆனா ஒண்ணை மட்டும் மறந்துட்டீங்க. உங்க கை ரேகை இந்தக் காகிதத் துவாலைலயே பதிஞ்சுருக்கு!".

பீட்டர் கொஞ்சம் அதிர்ந்து போனார். ஆனாலும் உடனே சுதாரித்துக் கொண்டு "என் ரேகை இருந்தாலென்ன? எவ்வளவோ காகிதத்துல நான் கையைத் துடைச்சுக்கிட்டு போடறேன். அதைப் போய் என்னவோ பெரிசா.......".

சூர்யா இடைமறித்தார். "உண்மை தான். ஆனா இது எதுவோ காகிதம் இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீங்க லேபுக்கு வெளியில இருக்கற குப்பைக் கூடையில போட்டது. நான் கிரணை எடுத்து வரச் சொன்னேன். இதுல இருக்கிற தூசும் கறைகளும் டயல்கள் மேல இருக்கிற தூசிக்கும் எண்ணைக்கும் பொருந்தும். இதுல கிழிஞ்சிருகூகிற முனைகள் நான் டயல்கள் மேலிருந்து எடுத்து காகிதத் துகள்களுக்கும் பொருந்தும். நீங்க இதை மறுக்க முடியாது".

கிரண் மேலும் விவரித்தான். "அது மட்டுமில்லை பால்! நான் சூர்யா சொன்னபடி உங்க டெம்பரேச்சர் லாக் ·பைல், அப்புறம் லேபுக்குள்ள நுழையறதுக்கான பேட்ஜ் லாக் ·பைல் ரெண்டையும் காபி எடுத்துட்டேன். ரெண்டையும் சேர்த்துப் பார்த்ததுல, பீட்டர் லேபுற இருக்கறப்ப மட்டுமே இந்த டயல்கள் மாத்தப்பட்டிருக்குன்னு 100% டேட்டா இருக்கு!".

பீட்டரின் முகத்தில் படர்ந்த குற்ற பாவம் அவரை இன்னுமூ முழுவதும் காட்டிக் கொடுத்து விட்டது.

பால் விம்மினார். "ஏன், பீட்டர்?! ஏன் இப்படி? என் வாழ்நாள் பூரா நான் செஞ்ச ஆராய்ச்சி வீணாயிருக்குமே? நான் தற்கொலை கூடு செஞ்சுக்கத் தயாராயிருந்தேன் தெரியமா?"

பீட்டர் வெறுப்புடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார். "பால், பணத்தோட அருமை உனக்கு என்ன தெரியும். ஒரு ஸென்ட் முதலீடு போட்டிருக்கயா நீ? அந்த அளவுக்கு வாழ்க்கையில் பணத்தைப் பார்த்த கூட இல்லையே?! உனக்குத் தெரிஞ்சதெல்லாம் டெஸ்ட் ட்யூப்தான். எல்லாம் என் பணம். அதை மத்தவங்க அடிச்சுக்கிட்டு போறதை நான் தாங்கிக்க முடியாது".

பால் திடீரென ஆக்ரோஷத்துடன் பீட்டர் அருகில் தாவி அவர் கழுத்தைப் பிடித்தார். "உன்னை.... என்ன செய்யலாம்? என் கையாலேயே...... "

சூர்யா, கிரண், ஷாலினி மூவரும அவரைப் பிடித்து இழுத்து விலக்கினர். ஷாலினி மென்மையாக, "வேண்டாம் பால். விட்டுடுங்க. வழிமுறையில கோளாறு இல்லைன்னு தெரிஞ்சிடுச்சி இல்லை? இனிமேல் ஆராய்ச்சியில் மேல் வெற்றி அடைய ஆக வேண்டியதுல கவனம் செலுத்துங்க." என்றாள்.

பாலும் அடங்கி, "பீட்டர், இவ்வளவு நாள் இருந்த நட்பை மதிச்சு விடறேன். இனிமேல் இந்த லேப்ல நீ காலடி கூட வைக்கக் கூடாது. போலீஸ் புகார் குடத்துடுவேன். கெட் அவுட்!" என்றார். பீட்டர் கறுத்த முகத்துடன வெளியேறியதும் பால் சூர்யாவையும் கிரணையும் பார்த்து, "உங்களுக்கு எப்படி நன்றி செலுத்தறதுன்னே தெரியலை...." என்று குரல் தழுதழுக்க விம்மினார்.

சூர்யா மெளனமாகத் தலைகுனிந்து புன்னகையுடன் பாராட்டை ஏற்றுக் கொண்டார். கிரண் கண் சிமிட்டி, "கவலைப்படாதீங்க, உங்க நிறுவனம் IPO போகறச்சே உங்களுக்கு எப்படி நன்றி செலுத்தறதுன்னு நிச்சயமா தோணும்!" என்றான்.

பால் அட்டகாசமாகச் சிரித்தபடி, "ஸ்டாக் ப்ரோக்கர் புத்தியைக் காட்டிட்டயே?! நிச்சயமா செய்யறேன் கிரண். நிச்சயமா" என்றார்.

ஷாலினி நேசத்துடன் தன் சூர்யாவைப் பார்த்துப் பெருமையாகப் புன்னகைத்தாள்!

கதிரவன் எழில்மன்னன்
(முற்றும்)

© TamilOnline.com