உங்கள் முடிவு சரியே...
அன்புள்ள சிநேகிதியே,

எங்கள் குடும்ப நண்பரின் மகன், சிறு வயது முதல் பழக்கம். அவர் கல்யாணத்திற்குக் கூட இந்தியா சென்றபோது நானுமூ என் கணவரும் போய்விட்டு வந்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ஏதோ தொழில் ஆரம்பித்திருப்பதாகவும், அதற்கு இங்கு ஏதேனும் சாத்தியங்கள் இருக்கிறதா என்று பார்க்க விரும்புவதாகவும், 2 வாரம் எங்களுடன் தங்க இயலுமா என்று கேட்டு எழுதியிருந்தார். பிறகு எங்களுடன் வந்து தங்கி இரண்டு வாரம் ரொம்பவும் சுறுசுறுப்பாக இருந்தார். அதன் பிறகு வீட்டைவிட்டு எங்கும் போகாமல் இருந்தார். ஒரு மாதம், 2 மாதம் என்று ஓடிப்போய்விட்டது. பாவம் குடும்பத்தை விட்டு வந்திருக்கிறார். வியாபாரம் இன்னும் பிடிக்கவில்லை இங்கே. நாம்தான் கொஞ்சம் அனுசரித்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை.

ஒருநாள் நான் வேலையிலிருந்து திரும்பிய போது என் 5 வயது பையன் ஒரு பாதி சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு எங்கள் வேலைக்காரர் மூலம் தெரிந்து கொண்டேன். இவர் நிறைய சிகரெட் பிடிக்கிறார் என்று. எங்கள் வீட்டில் எங்களுக்கு பிடிக்காத பழக்கம் இது.

முதலில் தொலைபேசி அட்டை (·போன் கார்டு) வாங்கி தனக்கு வேண்டியவர்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தவர், மெல்ல எங்கள் வீட்டுத் தொலைபேசியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுவும் அதில் ஒரு நபருக்கு மட்டும் தினம் இரவில் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார். அடிக்கடி அந்த எண்ணிலிருந்தும் அழைப்பு வர ஆரம்பித்தது. என் கணவர் சாதாரணமாகக் கேட்ட போது "அவள் என் உறவு" என்று சொல்லியிருக்கிறார். வார இறுதியில் இந்த உறவினர் வீட்டிற்கு போவதாக சொல்லிவிட்டு போயிருக்கிறார். என் கணவர் சந்தேகத்தின் பேரில் அவருக்கு தெரிந்தவர் மூலமாக அந்தப் பெண்ணை பற்றி விசாரிக்க அவள் 'உறவு' இல்லை, வேறு ஜாதியை சேர்ந்தவள் என்றும் தெரிய வந்தது.

இந்தச் சின்னச் சின்ன பொய்கள் என் கணவருக்கு வெறுப்பைத் தந்தது. நாங்கள் விடுமுறையில் வெளியூர் போகிறோம் என்று சொல்லி அந்த விருந்தினரை எப்படியோ திருப்பி அனுப்பிவிட்டோம். அவரிடம் எங்கள் சந்தேகத்தை தெரிவிக்கவில்லை. இப்போது அவருடைய மனைவிக்கோ, பெற்றோர்களுக்கோ இதைப் பற்றி தெரிவிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. நான் சொல்லிவிட வேண்டும் என்கிறேன். ஆனால் என் கணவர் வேண்டாம் அவனும் இந்த வீட்டுக்குத் திரும்பி வரவேண்டாம் என்கிறார்.

உங்கள் பதில் என்ன?

இப்படிக்கு........

அன்புள்ள,

ஒரு 10, 12 வருடங்களுக்கு முன்பு தொலைபேசி அட்டை, மின்னஞ்சல், இந்தியச் சாப்பாடு எல்லாமே அரிதாக இருந்த காலம். நம் உறவினர், நண்வர்கள் இங்கே வந்து தங்கும்போது நிறையச் சலுகைகள் எடுத்துக் கொள்வார்கள். எதிர்பார்ப்பார்கள் என்று நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போதெல்லாம் அந்த நிலை மாறி நம் சுமை கொஞ்சம் குறைந்துதான் போயிருக்கிறது. இளம் தலைமுறையினர் அழகாகச் சூழலுக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கின்றனர். அவர்களுக்கு வேண்டியது இணைய வலைத்தளங்கள் தாம். பெரியவர்களும் ஒருமுறை வந்துவிட்டுப் போனால் இங்கே இருக்கும் கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியது சன் தொலைக்காட்சி.

உங்கள் நண்பரின் மகனும் படித்தவர், இளைஞர். பண்போடு இருக்குத் தெரியும். ஆனால் அவர் அப்படி இல்லை. படிப்பைச் சொல்லித் தரலாம். ஆனால் பண்பை வளர்க்க வேண்டும். அந்தச் சிறுவயதில் அவர் இல்லை. அவருடைய நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் இனிமேல் அவரை உபசரிக்கப் போவதில்லை என்று நீங்கள் முடிவெடுத்தது சரியென்று தோன்றுகிது. அதற்காக 'இனிமேல் யாரையும் வீட்டில் தங்கவிடப் போவதில்லை' என்றோ, இல்லை 'தங்கும் ஒவ்வொருவரையும் சந்தேகப் பா¡வையால் பரிசோதிக்க வேண்டும்' என்கிற நினைப்பையோ தயவு செய்து வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

அது நமக்கும் நல்லதல்ல; நம்முடைய விருந்தினருக்கும் நல்லதல்ல. சிறிது முன்ஜாக்கிரதையாக இருந்து, வருபவர்களிடம் சூசகமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள். நம்பிக்கை மிகவும் முக்கியம்.

இரண்டாவது, ஆதாரபூர்வ தடயங்கள் இல்லாமல், தங்கியிருந்த நண்பரின் மனைவியிடம் சந்தேகத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளும்போது, அந்தப் பெண்ணிற்கு நாம் பெரிய உதவு எதுவும் செய்துவிடப் போவதில்லை. அந்தத் தொலைபேசி எண் - இது வெறும் ·போன் தொடர்பா அல்லது பெண் தொடர்பா என்பதற்கு உண்மையான ஆதாரம் இல்லாவிட்டால் அது சந்தேகம் என்ற தலைப்பின்கீழ் வந்துவிடுகிறது. எந்த மனிதர் இதுபோன்ற உண்மைகளை, தன் மனைவியிடம் ஒத்துக் கொள்வார். படித்த இளம் மனைவி, கணவரின் சபலங்கள் தெரியாமல் இருக்காது. ஆகவே, உங்கள் கணவரின் முடிவு சரி என்றே நினைக்கத் தோன்றுகிறது.

உங்கள் கணவர் வயதில் பெரியவராக இருந்து, அந்த மனிதரிடம் மிகவும் அன்னியோன்யமாக பழகியிருந்தால், அந்த உரிமையில், ஏதேனும் அறிவுரை வழங்க வாய்ப்பிருக்கிறது. அதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதும் சந்தேகம் தான்.

வாழ்த்துக்கள்.
சித்ரா வைத்தீஸ்வரன்
மீண்டும் சந்திப்போம்,

© TamilOnline.com