சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்து முதல் கல்வி அமைச்சராகும் பேறு பெற்ற தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார். இவர் அமைச்சர் பொறுப்பில் வீற்றிருந்த போது ஆற்றிய பணிகள் வரலாற்றுச் சிறப்புடையவை. குறிப்பாகத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் அவர் காட்டிய ஆர்வம் அவரது தமிழ் அபிமானத்தையே காட்டுகிறது.
செட்டியாரின் தமிழார்வம் வெறும் உணர்ச்சிமயமானது மட்டுமல்ல. அறிவியல் பூர்வமானதும் கூட. ஆங்கிலமொழிப் பராம்பரியத்தில் உள்ள வளங்கள் போல் தமிழ்மொழியிலும் இருக்க வேண்டுமெ உறுதியுடன் நம்பியவர். அதனைச் செயற்படுத்த முற்பட்டவர். தாய்மொழிப்பற்றால் பள்ளிகளில் தாய்மொழியின் அவசியத்தையும் புரிந்துகொண்டு செயல்பட்டவர். குறிப்பாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாநில மொழிகளைப் பயிற்று மொழியாக்குவதற்கு முனைந்து செயற்பட்டார்.
இத்தனைக்கும் மேலாக ஆங்கில மொழியில் உள்ள கலைக்களஞ்சியம் போன்று தமிழில் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிவிட வேண்டுமென, உள்ளார்ந்த ஆர்வத்துடன் சட்டப்பேரவையில் குரல் கொடுத்து செயல்படுத்திய வீரர். ஆரம்பம் முதல் செட்டியாருக்கு கலைக்களஞ்சியம் உருவாக்குவதைத் தனது பணிகளில் முதன்மைப் பணியாகக் கருதியவர். கல்வி அமைச்சராக வந்தவுடன் இப்பணியை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆர்வம் அதிகப்பட்டது.
"நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்பத் தமிழ் ஒரு சிறந்த நவீன அறிவியல் மொழியாகவும் வளர்வது இன்றைய தேவையாக உள்ளது. இதனால் சாதாரண மக்களும் பல்வேறு அறிவுத்துறைகளின் கருத்துக்களைத் தங்கள் தாய் மொழியிலேயே அறிந்து கொள்ள முடியும். இந்த எண்ணம் தான் தமிழில் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற ஆர்வத்தை எனக்கு அளித்தது. எத்தகைய பெரும்பணியாக இருந்தாலும், எவ்வளவு தொகை செலவாயினும், தமிழ்க் கலைக்களஞ்சியதை உருவாக்கியே ஆக வேண்டும்" என்று சட்டப்பேரவையில் உறுதியுடன் கருத்துத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சராக இருந்தாலும் தமிழ், தமிழர் பற்றிய சரியான சிந்தனையுடன் புதிய வளங்களைக் கொண்டுவந்து சேர்க்கத் தனது பதவியைத் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டார். இதனொரு கட்டமாகவே தமிழ் வளர்ச்சிக் கழகம் என்னும் அமைப்பை 1946 ல் தொடங்கி அதன் மூலம் தமிழுக்கு ஊட்டமளிக்கப் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டார்.
கலைக்களஞ்சியப்பணி 1948 ஆம் ஆண்டு தொடங்கி, 1968 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. "இருபது ஆண்டுகள் இடையறாது பணியாற்றிப் பத்துத்தொகுதிகள் தமிழ்க்கலைக்களஞ்சியம் வெளியாயின. இது போல் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியம் உருவாக்கச் செயல்வடிவம் கொடுத்தார். முதல் தொகுதி 1968 ஆம் ஆண்டிலும் பத்தாவது தொகுதி 1975 ஆம் ஆண்டிலும் வெளியிடப்பெற்றன. ஆங்கில மரபு வழிவந்த கலைக்களஞ்சியப் பாரம்பரியம், அறிவூட்டு தமிழ்ப்பாரம்பாரியத்திலும் நிலைபேறாக்கம் அடைய அவினாசிலிங்கம் செட்டியாரின் தொலைநோக்குப் பார்வை, விடாமுயற்சி தமிழின் பால் உள்ள ஈடுபாடு. அறிவியற் கண்ணோட்டம் ஆகியன பின்புறமாக அமைவதைக் காணலாம். தமிழ்மொழி புதுவளம் பெற்றுச் செழுமைப்படக் கலைக்களஞ்சியம் ஆற்றுப்படையாகவே திகழ்ந்தது. இதனாலேயே தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் தந்தை எனப் போற்றப்படுகின்றார்.
மேலும் இவருக்கு திருக்குறள் மீது ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. குறளின் கருத்துச் செறிவு, அதன் வீச்சு எல்லோருக்கும் சென்றடையும் வகையில் ஓர் பதிப்பைத் திட்டமிட்டார். அதாவது குறளுக்கு அதுவரை செய்திராத பொருள் அகராதியும், உரைகள் பலவற்றையும் இணைத்து ஓர் ஆராய்ச்சிப் பெருநூலை வெளியிட்டார். கி.வா. ஜகந்நாதனைக் கொண்டு 1020 பக்கங்கள் கொண்ட குறள் ஆராய்ச்சிப் பதிப்பை சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழா நினைவுப் பதிப்பாக வெளியிட்டார்.
செட்டியாருக்கு சுவாமி விவேகானந்தர் மீது, அவரது சிந்தனைத்தளம் மீது அளவற்ற ஈடுபாடு உண்டு. குறிப்பாக சுவாமியின் கல்வி பற்றிய சிந்தனை செட்டியாரின் ஆளுமை உருவாக்கத்தில் முதன்மையான பங்கு வகித்துள்ளது. கல்வி என்பது வெறும் செய்திகளை மூளையில் திணிப்பது அன்று. கருத்துக்களைத் தன்வயப்படுத்துவதே. கல்வி, கல்விப் பயிற்சி ஆகியவற்றின் முடிவான நோக்கம் - மனிதனை மனிதனாக்குவதே! ஒழுக்கத்தை, ஆன்மீக எழுச்சியை தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை, அறநெறியை, ஆளுமையை ஊட்டுவதற்குரிய கருவியே கல்வி என்ற விவேகானந்தரின் சிந்தனை நோக்கு செட்டியார் கல்வி அமைச்சராக வந்த பொழுது மேலும் புதிய வீச்சுப் பெற்றது. கல்வியின் பயன்பாடு பற்றி சமூகப் பொறுப்பு கல்விக்கு உண்டு என்பதைத் தெளிவாக உணர்ந்து செயல்பட்டார்.
செட்டியார் கல்விச் செல்வத்தை இளமையிலேயே கற்கக் கூடிய வசதி மிக்க குடும்பத்தில் பிறந்தவர். திருப்பூரில் இவர்களது குடும்பம் வசதியானது. 1903ஆம் ஆண்டு மே ஐந்தாம் நாள் அவினாசிலிங்கம் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்திலேயே காந்தியின் கருத்துகளால் கவரப்பட்டவர். தேசப்பற்றும் சமூக உணர்வும் மிக்க மாணவராகவே வளர்ந்து வந்தார். மாணவப் பருவத்திலேயே கதராடை அணியும் வழக்கத்தை கைக் கொள்ளத் தொடங்கினார். வழக்குரைஞர் பட்டம் பெற்றார். ஆனாலும் அத்தொழிலில் ஈடுபட மனம் ஒப்பவில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் காந்தி பக்தராகப் புடம் போட்டு வளர்ந்தார்.
வழி வழிவந்த குடும்பச் சொத்துக்களை சமூகப் பணிகளுக்குச் செலவிட்டார். 1934 ஆம் ஆண்டு காந்தி அடிகளாரை அழைத்து வந்து கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள பெரிய நாயக்கன் பாளையத்தில் கல்வி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கு அடிக்கல் நாட்டச் செய்தார். இவ்வாறு வளர்ந்த நிறுவனம் தான் 'ஸ்ரீராமகிருஷ்ண வித்தியாலயம்'. 1957-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் மனையியல் கல்லூரி ஒன்றையும் தொடங்கினார். கல்விச் செயற்பாட்டில் அவினாசிலிங்கம் செட்டியாரின் முயற்சிகள் போற்றத்தக்கதாகவே இன்றுவரை உள்ளன.
தமிழ் மொழி செழுமை பெற ஆரவாரமில்லாத நிலையான அரிய பணிகள் ஆற்றினார். அரசியல் துறை தொழிலாக இல்லாமல் தொண்டராகப் பேணப்பெற்ற காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழகக் கல்வி அமைச்சராகவும் வீற்றிருந்தார். இன்றைய அரசியல்வாதிகள் போல் வெற்றுக் கோஷங்கள் போட்டுத் தமிழை, தமிழரை வைத்து பிழைப்புச் செய்த பெருந்தகை அல்ல. கலைக்களஞ்சியம் தந்து தமிழின் வளம் பெருகக் காரணமாக இருந்த முன்னோடி இவர். 1991 நவம்பர் 21 இல் மறைந்தாலும் அவரது பணிகள், சிந்தனைகள் எப்போதும் அவரை நினைவுபடுத்தும். தமிழ் பற்றிய அவரது கண்ணோட்டம் இன்னும் விரிவு பெறவேண்டியதன் தர்க்கத்தையும் நமக்கு அவர் விட்டுச் சென்றுள்ளார்.
கலைக்களஞ்சியம், அகராதிகள் போன்றவை மொழியின் புதுமையாக்கத்தை வேண்டி நிற்பன. அதற்கேயுரிய அறிவியல் பண்புகளை வெளிப்படுத்துபவை. தமிழும் புதிய காலத்தில் வழங்கும் தமிழ் என்று உணர்ந்து செயற்பட வேண்டும். இந்தப் பண்பைத் தான் செட்டியார் கலைக்களஞ்சியம் மூலம் தமிழில் வெளிவரச் செய்திருக்கிறார்.
தெ. மதுசூதனன் |