வருமுன் காப்போமே....
வருமுன் காப்போம் என்ற பழமொழி உடல்நலத்தைப் பொறுத்தவரை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு நீங்கள் துவக்கநிலை மருத்துவரை (Primary Care Doctor) ஆண்டுக்கு ஒருமுறை அணுக வேண்டியது கட்டாயம். ஏன் தெரியுமா? மேலே படியுங்கள்.

இராமச்சந்திரன் தன் அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான். இலட்சுமிப் பாட்டிக்கு ஒரே பயம். வெள்ளைக்கார ஊரில் தஸ்புஸ் என்று ஆங்கிலம் பேசும் மருத்துவரிடம் உடலைக் காட்ட வேண்டிய அவசியம் வந்து விட்டதே என்ற வருத்தம் வேறு.

துவக்கநிலை மருத்துவர் (அல்லது Intermist) இலட்சுமிப் பாட்டியைப் பரிசோதிக்க வந்தார். பெயர், வயது போன்றவற்றைச் சரிபார்த்த பின்னர் இராமச்சந்திரன் மொழி பெயர்க்க உரையாடல் தொடங்கியது.

"உங்களுடைய மருத்துவர் யார்"?

"எனக்கு என்று மருத்துவர் யாரும் கிடையாது. பகவான் புண்ணியத்தில் இதுவரை நோய் ¦¡டி இல்லாமல் இருக்கிறேன். இப்பத்தான் இந்த மூட்டுவலி வந்து ஒரே கஷ்டமாய் இருக்கிறது. "

"நீங்கள் கடைசியாய் ஒரு மருத்துவரைப் பார்த்தது எப்போது?"

பாட்டி நீண்ட யோசனைக்குப் பின் தன்னோட கடைசிப் பெண் பிறந்த போது வீட்டில் பிரசவம் பார்க்க முடியாத சூழல். அதனால் அப்போது தான் மருத்துவமனைக்குச் சென்றதை நினைவு கூர்ந்தாள்.

"அது எந்த வருடம்?"

"ஆச்சு, நாற்பது வருடம்."

மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம்.

"அதற்குப் பிறகு நீங்கள் மருத்துவரைப் பார்த்ததேயில்லையா?" என்று கேட்டுக் கொண்டே பாட்டியைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.

பாட்டியின் இரத்த அழுத்தம் 180/100 என்று காட்டியது. இருதயப் பரிசோதனையில் ஒரு முணுமுணுப்பு (murmur) கேட்டது. முட்டிகள் இரண்டும் தேய்மானம் ஆகியிருந்தது. அமெரிக்க வந்ததிலிருந்து பாட்டிக்கு மலச்சிக்கல் இருப்பதும் தெரிய வந்தது. ECG எடுத்ததில் பாட்டியின் இருதயம் பாதிக்கப்பட்டது தெரிந்தது. இராமச்சந்திரனுமூ இலட்சுமிப் பாட்டியும் இதை ஏற்றுக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். தனக்கு மாடிப்படி ஏறினால் மூச்சு வாங்குவது வயதானதால் என்று ஏற்றுக்கொண்ட பாட்டி இப்போது மெளனமாய் இரத்த அழுத்தமும், இருதய நோயும் தாக்கியிருப்பதாக மருத்துவர் கூறியதை ஏற்க மறுத்தாள். தலைசுற்றல், மயக்கம், நெஞ்சு வலி என்று பாட்டி ஒருநாள் கூட படுத்ததில்லை. இது எப்படி சாத்தியம் என்று வியந்து போனாள்.

மருத்துவர் பின்வருமாறு தொடர்ந்தார். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி உடலைப் பரிசோதித்தல் அவசியம். எந்த ஒரு நோயும் இல்லாது போனாலும் கூட ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொண்டால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் போன்றவற்றை ஆரம்பக் கட்டத்திலே கண்டுபிடிக்க முடியும். இதனால் உடல் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். வயதானதால் உடல்நிலை பாதிக்கப்படுவதில்லை. நல்ல உணவுப் பழக்க முறையும், உடற்பயிற்சியும் மேற்கொண்டு, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் இல்லாது வாழ்ந்தால் நூறு வயதில் கூட ஓடியாடலாம்.

"ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வதினால் வேறு என்ன நன்மை?" இராமச்சந்திரன் கேட்டார். மேற்கூறிய நோய்களைத் தவிர முக்கியமாகப் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப் பரிசோதனைகள் பல உள்ளன. தங்களுக்கென்று ஒரு மருத்துவர் இருந்தால் அவர் வயதிற்குத் தகுந்த பரிசோதனைகளைச் செய்ய ஏதுவாய் இருக்கும்.

இளவயதினோர் (20-30) Pap Smear எனப்படும் பரிசோதனை வருடா வருடம் செய்து கொள்ள வேண்டும். இதை Intermist அல்லது கருப்பை மருத்துவரிடம் (Gynecologist) செய்து கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் Cervix புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியும். அதிவேகமாகப் பரவக்கூடிய புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் சில சமயம் முற்றிலும் குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

30 வயதிற்கு மேற்பட்டோர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச் சத்து நோய் ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

40-50 வயதுப் பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பரிசோதிக்க "Mammogram" எனப்படும் பரிசோதனையை ஆண்டுக்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது. 50 வயதுக்கு மேற்பட்டோர் இந்த Mammogram பரிசோதனையை ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாகச் செய்து கொள் வேண்டும். இது தவிர, தங்கள் மார்பகங்களை மாதம் ஒரு முறை தாங்களே பரிசோதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மார்புப் புற்றுநோயை மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க இயலும்.

50 வயதிற்கு மேற்பட்டோர் Colonoscopy என்று சொல்லப்படும் பெருங்குடல் பரிசோதனையை பத்து வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வதின் மூலம் பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துச் சிகிச்சை பெறமுடியும்.

50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், குறிப்பாகக் குடும்ப வரலாறு உடையவர்கள் PSA எனப்படும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் Prostate புற்று நோயைக் கண்டுபிடிக்க முடியும். இது பற்றிய கருத்துக்களை மருத்துவரை கலந்துலோசித்தல் நல்லது. Digital Rectal Examination எனப்படும் விரல் கொண்டு ஆசனவாய்ப் பரிசோதனை மூலமும் பெருங்குடல் மற்று பிராஸ்டேட் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க இயலும்.

ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரைப் பரிசோதிப்பதினால் சிறுநீரக நோய் மற்றும் புரத நீரிழிவு போன்றவை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துத் தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் சிறுநீரக நோய் முற்றாமல் தடுக்கலாம்.

இத்தனை இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்ட இராமச்சந்திரன் தன் குடும்பத்தினருக்கு வருடாந்திரப் பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய முடிவு செய்து விடைபெற்றார்.

இதுவரை வழங்கப்பட்ட வரைமுறைகள் வேறு எதுவும் நோய் நொடி இல்லாதவர்களுக்குப் பொருந்தும். இதைத் தவிர, குறிப்பிட்ட நோய்கள் உடையவர்களுக்கு மேலும் பல சோதனைகள் மருத்துவரின் தீர்ப்புக்கு ஏற்றபடி தேவைப்படலாம்.

ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்தால்:

1. நோய் முற்றாமல் தடுக்கலாம்.
2. அதனால் மருத்துவச் செலவு குறையும்.
3. முற்றிலும் குணமாகக் கூடிய சாத்தியக் கூறுகள்
4. அதி தீவிர மருந்துகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் குறையலாம்.

என்ன வருமுன் தடுப்பதுதானே நல்லது?

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com