பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் (பாகம்- 1)
(சென்ற தவணையில் : கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்; அந்த எழுவரில் முதலாமவளாக ஒரு பத்தினி தன் திருமணச் சான்றாக வன்னி மரத்தையும் மடைப்பள்ளியையும் முன்னே நிறுத்தியவள். அவளைப் பற்றிய நிகழ்ச்சியின் சிலப்பதிகாரத்திற்குப் பின் வந்த ஞானசம்பந்தரை வைத்தே உள்ளதையும் கண்டோம். அவளைப் பூம்புகாரிலிருந்து அழைத்து மதுரைக்குச் சென்ற அத்தைமகன் வழியில் ஒரு கோவிலில் தங்கும்பொழுது பாம்பு கடித்து இறந்து உயிர் மீட்பித்துச் சம்பந்தர் அவனை அங்கேயே மணக்கச் சொல்லினார்.)

வன்னிமரம் முன்னால் கல்யாணம்

ஆனால் அந்த அத்தைமகனோ தயங்கினான்; ஞானசம்பந்தரைப் பார்த்துச் சொல்லினான்; "ஐயனே! எம் குல வணிகர்கள் யாருமில்லாமல் வேறு சான்றுகளும் இல்லாமல் இவளை எப்படி மணம் முடிப்பேன்?" என்று வினாவி வணங்கினான்.

சம்பந்தர் அதற்கு மறுமொழி பகர்ந்தார். "இந்தக் கன்னியைப் பெற்றபொழுதே உனக்கென்று உன் மாமன் கொடுப்பதாக நினைத்ததை உறவினர் அறிவர்; மேலும் இங்கேயே வன்னி மரமும், கிணறும், இலிங்கமும் சாட்சிகளாக உள்ளன; "இந்த நிலையிலேயே எம் பேச்சை மீறாது கல்யாணம் செய்க!" என்று:

"கன்னியை ஈன்ற ஞான்றே உனக்கென்றுன் காதல் மாமன்
உன்னியது உறவின் உள்ளார் அறிவரே; உனக்குஈது அன்றி
வன்னியும் கிணறும் இந்த இலிங்கமும் கரிகள், மைந்தா!
இந்நிலை வதுவை செய்தி! எம்உரை கடவாது!"" என்றார்.
- (திருவிளையாடற்புராணம்:64:8)


[ஞான்று = பொழுது; உன்னியது = நினைத்தது; கரி = சாட்சி; வதுவை = கல்யாணம்; செய்தி = செய்க; கடவாது = மீறாமல்]

அந்த உறுதியான பேச்சைக் கேட்ட அத்தைமகன் அவரைப் பணிந்து "நீரே எமக்கு ஆசிரியரும், பெற்றோரும், நண்பர், தெய்வம்; சுற்றத்தாரும் எல்லாமும். அப்படியே ஆகட்டும்!" என்று சொல்லி அவர் பேசியவாறே கல்யாணத்தை முடித்து அவரைப் போற்றிவிட்டு மதுரை நோக்கிச் சென்றான். அவனுடைய வேலையாட்கள் சூழ மதுரை அடைந்ததும் அவன் சுற்றத்தார் அவன் திருமணத்தைக் கேட்டு மகிழ்ந்தனர்.

பிறகு தான் ஈட்டிய செல்வமும் தன் மாமன்மகளோடு வந்த செல்வமும் சேர நிறைந்த வளமும் இரு மனைவியரும ஈன்ற புதல்வர்களும் மகிழ்ச்சி தர வாழ்ந்து வந்தான்.

மூத்தவளின் முரட்டு மகன்கள்

வணிகனின் மூத்த மனைவியின் பையன்கள் மிகவும் முரடர்கள்; இந்த இளையவளின் புதல்வன் அவர்களோடு சேர்ந்து கடைவீதிக்குபூ போய்த் தெருவில் விளையாடுவது வழக்கம். அப்படி விளையாடும் பொழுது ஒருநாள் அந்த முரட்டுப் பையன்கள் இளையவள் மகனைக் கோபம்பொண்டு அடித்துவிட்டார்கள். அது கண்ட இளையவள் அந்த முரட்டுப்பையன்களை வைதாள்; அது பிடிக்காத மூத்த மனைவி இளையவளை நிந்தித்தாள். அதற்குக் கிடைத்த விசயம் இளையவளின் திருமண நிகழ்ச்சி!

"எந்தவூர்? எந்தச் சாதி? யார்மகள்? யாவர் காணச்
செந்தழல் சான்றா எம்கோன் கடிமணம் செய்து வந்த
கொந்தவிழ் கோதை நீ? என் கொழுநனுக்கு ஆசைப் பட்டு
வந்தவள் ஆன காமக் கிழத்திக்கு ஏன் வாயும் வீறும்!"
-(திருவிளையாடற்புராணம்:64:14)


[தழல் = தீ, ஓமத்தீ; கோன் = கணவன்; கடி = புது; கொந்து = கொத்து; காமக்கிழத்தி = ஆசை நாயகி, வைப்பாட்டி; வீறு = பெருமை, கருவம்]

"நீ எந்த ஊர்? எந்தச் சாதி? யார் மகள்? யார் காண ஓமத்தீச் சாட்சியாக என் கணவனைத் திருமணம் செய்து வந்த மலர்க்கொத்து அவிழும் மாலையணிந்த மணப்பெண் நீ? என் புருசனை ஆசைப்பட்டு வந்தவள்; நீ அவன் ஆசை நாயகி! உனக்கேன் இந்த வாயும் பெருமையும்?" என்றாள்!

என்ன கடுசொற்கள்! அவை போதாமல் மூத்தவள் இன்னும் கொட்டினாள்:

"உரியவன் தீ முன்னாக உன்னை வேட்டதற்கு வேறு
கரிஉள தாகில் கூறிக் காட்டு!"
- (திருவிளையாடற்புராணம்:64:15)


[வேள் = மணம் புரி; வேட்டதற்கு = மணம்புரிந்ததற்கு; கரி = சாட்சி]

"எனக்கு உரிய நாயகன் தீ முன்னால் உன்னை மணம்புரிந்ததற்கு வேறு சாட்சி உள்ளதாகில் கூறிக் காட்டு" என்றாள் அந்த மூத்தமனைவி!

இதைக் கேட்ட இளையவள் நெருப்புச் சுடு வாடிச் சாய்ந்த பூங்கொத்துப் போல் நாணத்தால் மெலிந்தாள். மனைவியாகிய என்னை ஆசைநாயகி என்று வைகிறாளே! உள்ளத்திற் புகுந்த முதல்வனோடு அன்பால் வாழாத குலமகளாய் இல்லையாம்; காமத்திற்கும் பொருளிற்கும் ஆசைப்பட்டு அதைத் தருபவர் எவராயிலும் அவரோடு சேரும் பொதுமகள் என்று பழிக்கப் பார்க்கிறாளே! என்று வெம்பினாள்.

பிறகு மறுமொழி சொல்லினாள். "அவரைப் பாம்பு கடித்தபொழுது உயிர்மீட்ட ஞானசம்பந்தர் புறம்புயக் கோவிற் சிவ இலிங்கமும் வன்னிமரமும் கிணறும் காண எங்களைத் திருமணம் செய்வித்தார். அவை மூன்றும்தாம் சாட்சிகள்" என்றாள் அந்தக் கற்பிற் சிறந்த நங்கை. அதைக் கேட்டவள் மூத்தவளோ நகைத்து "அப்படியா! நல்லது! நல்லது உன் கல்யாணம்! அந்தக் கலியாணத்திற்கேற்ற அந்த மூன்று சான்றுகளும் இங்கே வருமேல் அது உண்மைதான்!" என்று கிண்டலாகச் சொல்லினாள்.

சிவனே! சாட்சியை நிறுதூது அல்லது சாகிறேன்!

பூம்புகார்ப் பத்தினியோ அது கேட்டு வீட்டுக்குள் சென்று செய்வதறியாது இருந்தாள்; கைவிரலை நெறித்தாள்; வயிற்றைப் பிசைந்தாள்; கண்ணீர் பொழிந்தாள்; உதடுகள் துடித்தாள்; வெட்கத்தாள் நலிந்தாள்; கூசினாள்; "தெய்வமே! என்ன செய்வேன் சிறியவளாகிய நான்!" என்று அரற்றினாள். மதுரைச் சிவனை நினைந்து "தந்தை தாய் இறந்தபொழுதே தனியளாக இங்கே வந்துவிட்டேன்! உன்னை அன்றி வேறு யார் எனக்குத்துணை? முன்பொருநாள் வணிகன் ஒருவனுக்கு அவன் பங்காளிகளோடு நடந்த சொத்து வழக்கில் அவன் மாமனாக வந்து தோன்றி வழக்குரைத்து அவன் உரிமையைக் கொடுத்த இறைவனே! என் மாற்றாள் வாய் சொல்லும் பழியைப் போக்கி என்னையும் காப்பாய்" என்று வேண்டினாள்.

இவ்வாறே இரவுமுழுதும் உணவும் உறக்கமும் இன்றி மறுநாள் சோமசுந்தரக் கடவுள் கோவில் முன்பிருந்த தாமரைத் தடாகத்தில் குளித்துக் கோவிலில் நுழைந்து அங்கே கோவாக வீற்றிருக்கும் சிவனின் திருவடிகளை வணங்கிக் குறைகூறினாள்:

"அன்றெனைக் கணவன் வேட்ட இடத்தினில் அதற்குச் சான்றாய்
நின்றபைந் தருவும் நீயும் கிணறும்அந் நிலையே இங்கும்
இன்றுவந்து ஏதிலாள்வாய் நகைதுடைத்து எனைக் காவாயேல்
பொன்றுவல்!" என்றாள் கற்பின் புகழினை நிறுத்த வந்தாள்.
- (திருவிளையாடற்புராணம்:64:21)


[வேட்ட = மணந்த; தரு = மரம்; ஏதிலாள் = மாற்றாள்; பொன்றுவல் = சாவேன்]

"அன்று என்னைக் கணவன் மணந்துகொண்ட இடத்தில் அந்தத் திருமணத்திற்குச் சான்றாக நின்ற பசுமையான வன்னிமரமும், நீயும், கிணறும் அப்படியே இங்கும் இன்றே வந்து என்ற மாற்றாள் வாய் சொல்லும் இகழ்ச்சியைத் துடைத்து என் மானத்தைக் காக்க மாட்டாயேல் நான் சாவேன்!" என்று சூளுரைத்தாள் கற்பின் புகழினை நிறுத்த வந்த அந்தப் பூம்புகார்ப் பத்தினி.

வன்னிமரமும் இலிங்கமும் கிணறும் வந்தன!

அவள் நிலைகண்டு புரிந்த உடனே அச்சிவனும் கோவிலின் வடகிழக்கு மூலையில் புறம்புயச் சிவ இலிங்கத்தையும் வன்னிமரத்தையும் கிணற்றையும் நிறுத்தினான். அது கண்டு மூத்தாளை வரவழைத்துச் சிவனை வணங்கி அந்தச் சான்றுகளைக் காட்டினாள்; மூத்தாளும் வெட்கித் தலைகுனிந்தாள். உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெய்வமும் இந்தத் திருமகளாகிய நங்கையின் கைவசப்பட்டது என்றால் கற்பினால் அடைய முடியாதது எதுதான் என்று உலகம் வியந்தது.

ஊராரும் அவள் கற்பையும் ஈசன்மேல் அவள் அன்பும் ஈசனின் அருளுமூ கண்டு மகிழ்ந்தனர். சுற்றத்தாரோ மூத்தமனைவியைப் பொல்லாத பாதகி என்று பழித்தனர்; அவள் கணவனும் அவளை "நீ குற்றமற்றவளைக் குற்றம் சாற்றிக் குடும்பத்தையும் பழித்தாய்! நீ என் மனைவியில்லை!" என்று ஒதுக்கினான்.

ஆனால் பூம்புகார்ப் பத்தினியோ கணவன் காலில் வீழ்ந்து "ஐயா! இவள்தான் என் கற்பை நிறுத்தினாள்! அன்னை இல்லாத எனக்கு இவள் அன்னை ஆயினாள். இவளும் நானும் உயிரும் உடலும்போல் இனி ஒற்றுமையோடு வாழ்வோம்! " என்று வேண்டினாள். பிறகு இருவரும் நட்பாகிப் போட்டி பொறாமையின்றி வாழ்ந்தனர்; அவர்கள் மக்களும் பகை நீங்கி ஒற்றுமையோடு வாழ்ந்தனர்.

சீரும் செல்வமும் தரும் பத்தினி

இவ்வாறு தன் கற்பிற்கு இழுக்கு நேர இருந்தபொழுது அந்தப் பழியை உயிரையும் கொடுத்து நீக்க முயன்றாள் இந்தப் பத்தினி. அவள் கற்பிற்கு இலக்கணமான அருந்ததி விண்மீன் போல் தன் கணவனுக்கும் குடும்பத்திற்கும் எல்லாச் செல்வமும் தவற்பேறுமூ அளித்துத் திருமகள் போல் வீற்றிருந்தாள்.

அருந்ததி அனையாள் கேள்வதற்கு ஆயுளும் ஆனாச் செல்வமும்
பெருந்தன நிறைவும் சீரும் ஒழுக்கமும் பீடும் பேறு
தருந்தவ நெறியும் குன்றாத் தருமமும் புகழும் பல்க
இருந்தனள் கமலச் செல்வி என்ன வீற்றிருந்த மன்னோ.
- (திருவிளையாடற்புராணம்:64:29)


[அனையாள் = போன்றாள்; ஆனா = முடியாத; பீடு = பெருமை; பல்க = பெருக; கமலச் செல்வி = திருமகள், இலக்குமி]

சிலப்பதிகாரத்தில் வன்னிமரமும் சமையற்கட்டும்தான் சான்றாக வரவழைத்ததைச் சொல்லியுள்ளது. ஆனால் அடிப்படையில் இரண்டும் ஒரே நிகழ்ச்சியின் வெவ்வேறு கூற்றுகள்தாம் என்பது தெளிவு. ஆகமொத்தம் நாம் கண்ணகி பாண்டியன் அவையில் புகழ்பாடிய பூம்புகார்ப் பத்தினிகள் எழுவரில் முதற் பத்தினியின் பெருமையைக் கண்டோம்.

அடுத்துக் காவிரிக்கரையில் தோழிகளோடு மணற்பாவை செய்து விளையாடும் பத்தினியைக் கண்டோம்.

பெரியண்ணன் சந்திரசேகரன், அட்லாண்டா.

© TamilOnline.com