பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநர்
பொறியியல் தொழில்நடூபத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநராக விளங்கும் இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 4 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கு¡கத்தில் இயற்பியல் துறைத்தலைவராய்ப் பணியாற்றியவர். ஆயினும் வளர்ந்த சூழல் காரணமாய்த் தமிழ்மீது இளவயது முதலே தீராப் பற்று கொண்டவர். தமிழில் ஏராளமான கட்டுரைகள், கதைகள், நாடகங்கள், கவிதைகள் எழுதிக் குவித்தவர். ஆங்கிலத்தில் கவிதை யாத்தலிலும் புலமை பெற்றவர். ஒன்பதாம் வயதிலேயே மேடையேறி, வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பாராட்டும், பரிசுகளும் பெற்றவர்.
வானொலியில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் நடைபெற்ற 'மானுடம் வென்றது' என்ற அறிவியல் தொடர்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை நாடக வடிவாக்கியவர். இவருடைய தமிழார்வத்தையும், பற்றினையும் அறிந்த அண்ணா பல்கலைக்கழகம் இவருக்குப் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தில் இயக்குநர் பதவியை அளித்தது.
'களஞ்சியம்' காலாண்டிதழ், பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்க மாநாடு - 2004 ஆகியவை இவரது சாதனைகள்.
இவற்றைப் பற்றியும், இன்னும் வரவிருக்கும் முயற்சிகளைப் பற்றியும் 'தென்றல்' வாசகர்களுக்காக நம்முடன் உரையாடுகிறார் முனைவர் சி.சே. சுப்பராமன்.
கேள்வி : பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் எப்போது தொடங்கப்பட்டது?
பதில் : அண்ணாப்பல்கலைக்கழகம் 1984-85-ல் 'வளர்தமிழ் மன்றம்' என்றோர் அமைப்பை உருவாக்கியது. அன்று அண்ணாப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த முனைவர் வா.செ. குழந்தைசாமி போன்ற தமிழ் ஆர்வலர்களின் துணையோடு தொடங்கப்பட்டது இவ்வமைப்பு. தமிழில் அறிவியல் கருத்துகளை வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவான இவ்வமைப்பு பதிவாளரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.
அன்றைய காலக்கட்டத்தில் நிதிச் சுதந்திரம் எங்களுக்கு இருக்கவில்லை. அது மட்டுமல்லாமல் தமிழ்ச் செயல்பாடுகளை விரிவுபடுத்த மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்தும், மற்ற அமைப்புகளிடமிருந்தும் நிதி உதவி பெறுவதற்கும் இது ஒரு தன்னாட்சி பெற்ற மையமாக இருந்தால்தான் சாத்தியம். இதனால் இது ஒரு மையமாக டிசம்பர் மாதம் நடந்த ஆட்சி மன்ற குழுவில் பரிந்துரைக்கப்பட்டது. பிறகு 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் அன்றைய துணைவேந்தர் கலாநிதி அவர்கள் இவ்வமைப்பை ஒரு தன்னாட்சி மையமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தினார். அப்போது தான் தன்னாட்சித் தகைமையுடன் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் உருவாக்கப்பட்டது.
வளர்தமிழ் மன்றத்தின் நோக்கம் என்று எதை சொல்வீர்கள்?
வளர்தமிழ்மன்றம் அண்ணாப்பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆர்வலர்களை ஒன்று திரட்டித் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வருகின்றது. தமிழ் அறிவியல் நூல்களும் 'களஞ்சியம்' இதழும் வெளியிடுதல் மட்டுமின்றி, தமிழ் வளர்த்த சான்றோர்களின் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் தமிழுணர்வை வளர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பொறியியல் தொழில்நுட்ப, அறிவியல் நூல்களை எழுதுகின்ற ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளித்து தமிழ் வளர்ச்சிப் பணியினை மேலும் உயர்நிலைக்கு இட்டுச் செல்வதே இந்த அமைப்பின் நோக்கம்.
களஞ்சியம் காலாண்டிதழ் எப்போது உருவானது? அதைப் பற்றிய விவரங்கள்.
1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதன் முதல் இதழ் வெளியானது. அப்போது அண்ணாப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இதன் முதல் இதழை வெளியிட்டார்.
கணிதம், இயற்பியல், பொறியியல், மருத்துவம் போன்ற அறிவியல், தொழில்நுட்பத் துறைகட்கும் தனி நடை உண்டு. எனவே அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதுவது என்பது தமிழில் அறிவியல் இலக்கியம் படைப்பதாகும். அதற்கான இலக்கணம் உருவாக வேண்டும். அதற்கான பராம்பரியம் உருவாக வேண்டும். இவை பல நூல்கள் வெளிவருவதன் மூலம், பல நூல்கள் வெளிவந்த பின்னர்தான் உருவாக இயலும். இதற்குப் பரவலான முயற்சி தேவை. பலரது ஈடுபாடு தேவை. எழுத, எழுதத்தான், அறிவியல் தமிழ் நூல்கள் எளிமைப்படும். இயற்கையான நடை உருவாகும். அப்படிப்பட்ட முயற்சிகளை ஊக்குவிப்பது களஞ்சியத்தின் முக்கிய நோக்கம். களஞ்சியத்தை மாத இதழாக வெளிக்கொணர வேண்டும் என்பது எதிர்காலத் திட்டம்.
களஞ்சியம் இதழில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களின் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். அவரவர் துறைகளில் திறமையும் தமிழிலே தேர்ச்சியும் உடைய அறிஞர்களால் தமிழிலே எழுதப்படுகின்ற நூல்களை வெளியிட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் பயனை உருவாக்குகிறோம். நிதிக் குறைவினால் தளர்ச்சியடையாத வண்ணம் அதன் வாழ்நாள் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிப் பல முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.
தமிழில் வளர்ச்சி மையம் இதுவரையில் செய்திருக்கிற பணிகள் என்ன?
இம்மையத்தின் மூலம் தமிழ் மொழிக்காக பாடுபட்ட அறிஞர் பெருமக்களின் விழாக்களை, உரிய நேரத்தில் கொண்டாடப்படுகிறது என்பது முக்கியமான ஒன்றாகும். மாணவர்களிடையே போட்டிகள் நடத்திப் பரிசுகளை அளித்து, இதன் மூலம் அவர்களின் தமிழார்வத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், பிற இலக்கிய விழாக்களில் பங்கு பெற பிரும்பும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி பல்கலைக்கழகத்திற்கு இதன் மூலம் பெருமை சேர்க்கிறோம்.
அது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் மாநில அளவிலேயே தமிழக அரசின் பள்ளி இறுதிநிலைத் தேர்வில் தமிழில் முதலாவதாக வருகின்ற மாணவருக்கு நற்சான்றிதழ் வழங்குகிறது.
அறிவியல், பொறியியலில் இதுவரை வெளிவந்த நூல்கள் யாவை?
இதுவரை 8 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறதாம். 'தண்ணீரும் நன்னீரும்' என்ற புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது. திண்மசையியல், பொறியியலின் வரைவியல், பொருள்களின் அறிவியல், கணினி இயலுக்கு அறிமுகம், கணினிக் கலைச்சொல் அகராதி, அடிப்படை மின்னியல், தொலைத்தொடர்பில் சாலிட்டான்கள், படிக வளர்ச்சி அறிவியல் கோட்பாடுகளும் செயல்முறைகளும் ஆகியவை வெளிவந்திருக்கின்றன. தண்ணீரும் நன்னீரும், மண்ணியல் ஆகிய இரு நூல்கள் வெளிவர இருக்கின்றன.
புத்தகங்களை வெளியிடுவதற்காக சில விதிமுறைகள் உள்ளன. இப்போது உதாரணமாக, 'தண்ணீரும் நன்னீரும்' என்கிற புத்தகத்தை எடுத்துக் கொண்டால் இப்புத்தகம் வெளியிடுவதற்கு முன்னால் தண்ணீரைப் பற்றிய வல்லுநரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். பிறகு மொழி வல்லுநர் ஒருவரிடம் புத்தகத்தின் மொழிநடை சுத்தமாக இருக்கிறதா என்று ஒப்புதல் வாங்குகிறோம். இதற்குப் பிறகுதான் நாங்கள் புத்தகத்தை வெளியிடுகிறோம்.
இதுவரை எத்தனை கலைச் சொற்ககளை உருவாக்கியிருக்கிறீர்கள்?
பல்கலைக்கழகத்திற்கு ஒவ்வொரு துறையாக தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றுக்கும் மொத்தம் 2 லட்சம் சொற்கள் கொடுத்தார்கள். தமிழக அரசு எங்களுக்கு அளித்த திட்டப் பணிகளில் ஒன்றான இந்த பொறியியல் தொழில்நுட்பக் கலைச்சொல் அகராதிப் பணியில் இதுவரை ஏறத்தாழ 50ஆயிரம் சொற்களை உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம். இன்னும் 6 மாதத்தில் எங்களுக்கு அளித்த மொத்த சொற்களையும் நாங்கள் முடித்துவிடுவோம். இதுவரை உருவாக்கியவற்றை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளோம். இன்னும் 75ஆயிரம் சொற்கள் வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏட்டுச்சுவடிகளை அழிவிலிருந்து காப்பாற்ற உங்கள் மையம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லுங்கள்.
எங்கள் மையத்தின் தலையாய பணி இது. அழிந்து கொணடிருக்கும் ஏட்டுச் சுவடிகளை எண்ணியப்படுத்திக் கணினியில் பதிவு செய்ய வேண்டும். பொதுவாகவே ஒரு ஏட்டுச்சுவடி 400 வருஷம் தான் இருக்கும். அழிந்து போனவை ஏராளம். இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஏட்டுச்சுவடிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இவற்றை எல்லாம் எடுத்துக் கணினியில் பதிவு செய்து வைத்தால் எல்லாத் தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன்படும். எங்கள் செயல்பாடுகளில் முக்கியமான செயல்பாடு இதுதான்.
எங்களுக்கு இந்த விஷயத்தில் மிகவும் உதவியாக இருப்பவர் முதுபெரும் புலவர் மு.கோ. இராமன் அவர்கள். இவரது துணையுடன் தமிழ் ஏட்டுச் சுவடிகளை எண்ணியப்படுத்திக் கணினியில் பதிவு செய்து வருகிறோம். இதுவரை நாட்டுப் பாடல்களிலிருந்து 'பகவத் கீதை', 'மயில் இராவணன் கதை' மற்றும் சில மருத்துவக் குறிப்புகள் போன்றவற்றைப் பதிவு செய்துள்ளோம். இத்திட்டத்தில் மேலும் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் - வருங்காலத்தில் பயனின்றிப் போகவிருக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை கணினியில் பதிவு செய்து அவற்றை வல்லுநர் குழுவின் துணையோடு நூல்களாக்கும் திட்டம் ஒன்றைத் தயாரித்து தமிழக அரசிற்கு அளித்திருக்கிறோம்.
எங்களின் இத்தகைய முயற்சியை நாங்கள் நம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்குக் கடிதம் மூலமாக தெரிவித்தோம். எங்களின் இத்தகைய முயற்சியைப் பாராட்டி அவரும் கடிதம் எழுதியிருந்தார். இவையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் நிறையச் செலவு ஆகும்.
மயிலை, திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவற்றோடு இணைந்து நடத்திய பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்கின் முக்கியத்துவம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் 16 ஆண்டுகளாக திருக்குறள் நெறியைப் பரப்பி வருகிறது. உலகத் தமிழரோடு தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அனைத்து ஆராய்ச்சியினை உலகெங்கிலுமுள்ள தமிழ் மீது ஈடுபாடு கொண்ட ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நடத்தி வருகிறது.
நாங்கள் இவர்களுடன் இணைந்து பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்கு மாநாட்டைக் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி முதல் நான்கு நாட்கள் நடத்தினோம். இதற்குக் காரணம் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தான். திருக்குறளில் எல்லாத் துறைகளுக்குமான கருத்து இருக்கிறது. அதை வெளிக்கொணர வேண்டும் என்று அவர் துணைவேந்தரிடம் சொல்ல, துணைவேந்தர் எங்களிடம் சொல்ல, நாங்கள் பெரிய அளவில் மாநாட்டை நடத்தினோம்.
மாநாட்டில் ஹாங்காங், மலேசியா முதலிய நாடுகளின் பிரதிநிதிகளும், பார்வையாளர்களாக ஹாலந்து போன்ற நாட்டினரும் பங்கேற்றனர். பல மொழி வல்லுநர்கள் வந்திருந்தனர். இந்திய மொழிகளிலலே வடமொழிகள் என்னும் ஒரியா, சிந்தி, ஹிந்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி போன்ற மொழிகளில் திருக்குறளின் கருத்துக்களை அவர்களுடைய கவிஞர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள், அதைப்போலவே தென்மொழிகளிலேயே கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அவர்களுடைய கவிஞர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பதையொல்லாம் சொல்கிற போது, இந்திய அளவில் தேசிய நூலாக அறிவிக்கக்கூடிய தகுதி உடையது திருக்குறள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அனைத்துப் புலவர்களும் வந்தார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இதன் கருத்து இருக்கிறது என்றால் இதைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற தகுதி உடையது என்றே பொருள். அந்த மாநாட்டின் நோக்கமே திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதே.
அது மட்டுமல்லாமல், தமிழைத் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும். திருக்குறள் பெயரில் விருது ஒன்றைத் தேசிய அளவில் அறிவிக்க வேண்டும் என்றும். அதில் திருக்குறள் விருதைத் தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் மற்ற இரண்டையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன், முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்மொழிந்தோம். இம்மாநாட்டினுடைய நூல்களுடன் சேர்த்து இதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம்.
பாராளுமன்றத்தில் நமது குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தமிழ் செம்மொழியாக்கப்படும் என்று கூறியுள்ளார்? ஒரு மொழி செம்மொழியாவதற்கு என்ன தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன?
செம்மொழி என்று சொல்லக்கூடிய மொழி தனித்து இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதாவது எந்தவிதக் கலப்பும் இல்லாமல் இயங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த மொழியிலிருந்து பல மொழிகள் பிரிந்திருக்க வேண்டும். அதாவது அந்த மொழி பலமொழிகளுக்குத் தாய்மொழியாக இருக்க வேண்டும். அம்மொழியில் இலக்கிய வளம் இருக்க வேண்டும். முக்கியமாக அந்த மொழி தொன்மொழியாக இருக்க வேண்டும். எந்த மொழிக்கு மேற்கூறிய தகுதிகள் இருக்கிறதோ அந்த மொழி செம்மொழியாகும் தகுதி பெற்றது எனலாம். அந்த வகையில் தமிழுக்கு அந்தப் பெருமை இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் தென்மொழிகள் அத்தனையும் தமிழில் இருந்து பிரிந்தவைகள் தாம். தனித்தனியாக அவைகள் இயங்கினாலும் அவை தமிழிலிருந்து பிரிந்தவை தாம். இன்னும் சொல்லப்போனால் அந்த மொழிகள் எல்லாம், எப்படி திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் போன்ற இடங்களில் பேசப்படுகிற தமிழ் எப்படி வித்தியாசமான வட்டார மொழியாக உள்ளதோ, அதைப்போல் தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் வட்டார மொழிகளாகத் தெலுங்கு, மலையாளம், ஆகியவை இருந்திருக்கலாம். ஆனால் வேற்றுமொழிகளுடைய தாக்கம் அதிகமாய் இருக்கின்ற போது அது சற்று வேறுபட்டு இருக்கும். அதனால் அவர்கள் ஒத்துக் கொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் இவையெல்லாமே தமிழ் மொழியிலிருந்து பிறந்தவை. தமிழ்மொழி தான் நேர்மொழியாக இருக்கிறது என்பதே உண்மை.
செம்மொழியானால் தமிழுக்கு என்ன பலன்?
இதைப் பல்கலைக்கழக மானியக்குழு உடனடியாக ஏற்றுக் கொள்ளும் மானியக்குழு ஏற்றுக்கொண்டால் கல்லூரிகளிலும் அல்லது பல்கலைக்கழகமும் இதைத் தங்கள் மொழியாக வைத்துக் கொள்ள அங்கீகாரம் கிடைக்கும். மானியக் குழு ஏறூறுக் கொள்கின்ற எல்லாவற்றையும் AICTE தொழிற்நுட்பக் குழு ஏற்றுக் கொள்ளும். இதன் மூலம் பயிற்றுமொழியாகத் தமிழ்மொழி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
செம்மொழியாக ஏற்றுக் கொள்கின்ற மொழி, அந்த மொழி மேன்மேலும் வளர்வதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். அப்படிச் செய்தால் இம்மொழியின் மேல் பலருக்கு ஈடுபாடு உண்டாகும். இதன் மூலம் இம்மொழியில் உள்ளே இருக்கின்ற வளமைகளை வெளிக்கொண்டு வரலாம். ஆக, தமிழ் செம்மொழி என்பது தமிழுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான்.
இயற்பியலைத் தமிழுடன் இணைத்து 'ஒளிநூறு' என்ற நூலை உருவாக்கி வருகிறீர்கள். அதைப் பற்றி விவரமாகச் சொல்லுங்கள்?
வருகிற ஜூலை மாதம் அறிவியல் தமிழ் மாநாட்டில் இந்நூலை வெளியிடவிருக்கிறேன். இது என்னுடைய மிக முக்கியமான முயற்சி. இயற்பியலைத் தமிழுடன் இணைத்து நான் எழுதும் இந்நூல் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று கருதுகிறேன்.
சந்திரக்கிரகண நிகழ்வைப் பற்றி 'ஒளிநூறு' நூலில் நான் பின்வருமாறு கூறியுள்ளேன்.
செங்கதிரும் தண்ணிலவும் தம்முருவம் மாறுபட பங்கமுற கேதுராகு கவ்விடுதாம் - இங்கிவையே நேர்கோட்டில் செல்லுமொளித் தத்துவத்தால் நேருதென ஊர்கூட்டி சொல்வாய் உரத்து (8ஆ)
சொற்பொருள்
செங்கதிரும் - சிவந்த சூரியனும் தண்ணிலவும் - குளிர்ச்சியான நிலவும் தம்முருவம் - தம்முருவங்கள் மாறுபட - மாறும்படியாக பங்கமுறு - உருவத்தில் குறைவுற்ற கேதுராகு - கேதுவும் ராகுவும் கவ்விடுதாம் - கவ்வுகின்ற எனச் சொல்வார் இங்கிவையே - இங்கு சூரியனும் நிலவும் தம்முரு மாறுபடல் நேர்கோட்டில் - நேரான திசையில் செல்லுமொளி - செல்லும் ஒளி என்ற தத்துவத்தால் - தத்துவத்தால் நேருதென - ஏற்படுகின்றன என்று ஊர்கூட்டி - ஊரைக் கூட்டி உரத்து - வலிமையோடு சொல்வாய் - சொல்வாய்
இப்படி பல இயற்பியல் வெண்பாக்களை இந்நூலில் எழுதியுள்ளேன்.
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ்வளர்ச்சி மையத்தின் குறிக்கோள்கள்
- தமிழில் அறிவியல், தொழில்நுட்பவியல் இலக்கியம் உருவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல். அதற்குத் துணையான முயற்சிகளை ஊக்குவித்தல்.
- அனைத்து நிலை மக்கள் மத்தியில் அறிவியல் அறிவு பரவவும், அறிவியல் மனப்பான்மை வளரவும் உதவும் பணிகளை, அதற்கான வழிவகை காணும் ஆய்வுகளை, சோதனை முயற்சிகளை ஊக்குவித்தல்.
- தமிழின் தொன்மை, செம்மை, தமிழ்ப் பண்பாட்டின் தனிச்சிறப்பு ஆகியவற்றை மற்ற மொழிக் குடும்பத்தினர் அறியும் வகையில் ஆங்கிலத்தில் வெளியிட உதவுவதல். அதுபோல் ஆய்வுநூல்கள் வெளியிட உதவுதல்.
- களஞ்சியம் என்றொரு காலாண்டிதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் வளர்தமிழ் மன்றத்தின் பொறுப்புகளில் ஒன்றான அறிவியல் இலக்கியத்தை தமிழில் வளர்த்துக் கொள்ள முடிகிறது.
- களஞ்சியத்தில் நம் நாட்டிலுள்ள அல்லது வெளிநாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்களின் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பக் கட்டுரைகள் முழுக்க முழுக்கத் தமிழிலேயே எழுதி வெளிவந்தது. இவ்விதழைத் தொடர்ந்து செம்மையாக நடத்த வேண்டும் என்பதும் முக்கியமான குறிக்கோளாகும்.
|