தமிழ் நாடு அறக்கட்டளை தமிழ் பள்ளி இரண்டாவது ஆண்டு விழா
"வண்மை சேர் தமிழ் நாடெங்கள் நாடு வாழ்த்துவோம் அன்போடு" என பாரதி தாசன் வரிகள், நித்யஸ்ரீயின் குரலில் ஒலிக்க, California, Mountain View Community Centerல் நுழைந்தோம். ஜூன் 10, காலை 10.30 மணியளவில், தமிழ் நாடு அறக்கட்டளை தமிழ் பள்ளி இரண்டாவது ஆண்டு விழா ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 100 பேர் அடங்கியிருந்த அந்த கூட்டத்தினை வரவேற் றவர் அனிதா வெங்கடேசனும், சபரீஷ் பாபுவும். பள்ளித் தலைவி திருமதி. செல்வியின் உரையை தொடர்ந்து, கண்ணகி சிலம்பினை சிதறடித்த வேகத்தில், சிலப்பதிகாரத்தினை பற்றி சிங்க மென முழங்கி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியினை துவக்கி வைத்தது அறிவன் தில்லை குமரன். தொடர்ந்து வகுப்பு வாரியாக மாணவ, மாணவியர் தங்களது தமிழாற்றலை வெளிப்படுத்தினர்.

திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் விக்னேஷ் மற்றும் அரவிந்தும் எடுத்துரைத்தனர். மூத்த மாணவர்கள் அறிவுள்ள காக்கைகள் என்ற நாடகத்தினையும், தெனாலி திரைப்படத்தின் பகுதிகளை நாடகமாகவும் நடத்தினர். கமலின் வேடத்தினை செய்த ரகு வருங்காலத்தில் கமலை மிஞ்சுவது போல் நடித்தார். இவ்விழாவிற்கு தமிழ் மன்றம் தோற்றுவித்து முதல் தலைவராக இருந்த திரு. மாறன் தமிழன், தென்றல் பத்திரிகை நிறுவனர் திரு. C.K. வெங்கட்ராமன் மற்றும் 90.1 பண் பலை Mostly Tamil நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு. சுதா சிவசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்து அனைத்து மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் புத்தகங்களையும் வழங்கினர். திரு. தமிழன் தமிழரின் பெருமை பற்றி உரையாற் றினார். பள்ளியின் எதிர்பார்ப்புகளை பற்றி திருமதி. ஹேமா ராஜூ விளக்கி கூற, திரு. கணேஷ் பாபு நன்றியுரை கூற விழா முடிவுக்கு வந்தது. விழா முடிந்ததென நினைத்து கொண்டிருக்கையில் அனைவருக்கும் விருந்து காத்துக் கொண்டிருந்தது. பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் அன்போடு சமைத்து கொண்டு வந்த உணவு மேசைகளில் பரிமாறப்பட்டு இருந்தது. வயிறு நிறைய உணவருந்தி விட்டு, விழாவினை தொகுத்தளித்த பொன்னியிடம் விடை பெற்று திரும்புகையில் "செல்லத் தமிழிங்கு வளரும்' என்று எண்ணத் தோன்றியது.

© TamilOnline.com