விரிகுடா பகுதி மக்களின் இசை ஆற்றலை ஊக்குவிக்கும் லோட்டஸ் நிறுவனம் பிப்ரவரி 1999'ல் தோன்றி, மாதாமாதம் மூன்றாவது ஞாயிறன்று, இசை நிகழ்ச்சிகளை 2 பிரிவுகளாக நடத்தி வருகின்றது. இவ்வகையில், முதல் பிரிவு வளரும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், இரண்டாவது பிரிவு, மேடை அனுபவம் நிறைந்த கலைஞர்களைத் தழுவியதாகவும், அமைக்கப் பட்டு ஆற்றல் நிறைந்த பல புது முகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கனம், லோட்டஸ் நிறுவனத்தின் 15'ஆவது இசை நிகழ்ச்சி, ஸன்னிவேல் இந்து கோயிலில், மே-13 அன்று நடைபெற்றது. முதல் பிரிவில், (30 நிமிடம்) கிடார் வாஸித்த அணில் நரசிம்மன், நவ ராகங்களைக் கொண்ட, 'வலசி வச்சி' என்ற வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். இரண்டாவதாக, சித்தி விநாயகம் என்ற தீக்ஷதர் க்ருதியை, விருவிருப் பான ஸ்வரக்கோர்வைகளுடன் அளித்தார். மூன்றாவதாக, பரமாத்முடு என்ற பாடல் முறையான சங்கதிகளோடு வழங்கப்பட்டது. நான்காவதாக அமைந்த சங்கராபரண ராகம் - 'மனஸ¥ ஸ்வாதீன' என்ற த்யாகையர் கீர்த்தனையில் - அமைந்த நிரவல் - ஸ்வர வரிசைகள் - தனி ஆவர்த்தனம், ஆகிய அனைத்துமே இந்நிகழ்ச்சிக்கோர் ஆபரணம். பின்னர், 'கேலனே' ஹரி' என்ற புரந்தரதாஸர் க்ருதியோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தார் அணில். வயலின் வாசித்த அஜய் நரசிம்மன் மற்றும் மிருதங்கம் வாஸித்த வாதிராஜா பட், அணில் கச்சேரிக்கு அணி சேர்த்தனர்.
இரண்டாவது பிரிவில், பெங்களூர் இசைக் கல்லூரி ஆசிரியையான, டி.எஸ். ரமா அவர் களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, தர்பார் வர்ணத் துடன், லோட்டஸ் நிறுவனத்தை கௌரவிக்கும் வண்ணம், தொடங்கியது. நல்ல முறையில் தர்பாரை இயங்கியவாறு, சக்ரவாகம் என்ற ராகத்தைத் தழுவிய கஜானனயுதம், 'சக்கரத்தை உடைய வாகனம் போன்று' துரிதகால ஸ்வரக் கோர்வைகளோடு தொடர்ந்தது. இதனை அடுத்து, திருமதி. ரமா மற்றும் ஸ்ரீ. ஸ்ரீவட்ஸன் அடுத்தடுத்து வழங்கிய ஓர் சிறிய ஆலாபனை, பந்துவராளியின் விரிவான ராகலக்ஷணங்களை உணர்த்தியது. கோர்வையாக, ராமநாதம் என்ற பாடல் தொடங்கி, குமார குருகுஹ மஹாதம் என்ற வரியில் வெளிவந்த நிரவல் சஞ்சாரங்கள் மற்றும் ஸ்வரங்கள், ரசிகர்களின் செவிக்கோர் விருந்து. 'அனாதநு நானு' என்ற பாடல் யதுகுலகாம்போஜியின் ராக பாவம் வெளிப்படும் வகையில் அமைந்து, நாற்காலியின் முனையில் அமர்ந்தோரை சீர்படுத்தியது. இவ்வாறு கச்சேரியின் முக்கிய கட்டத்தை எட்டிப் பிடிக்கும் தருணத்தில், தீர்க்கமான ப்ரயோகங்கள் நிறைந்த அழகிய பைரவி, ஜனரஞ்சகமாக வெளிவந்தது. ஸ்ரீ. ஸ்ரீவட்ஸனும், தனது பாணியில், ஒவ்வொரு ஸ்வரங்களுக்கும் உயிரூட்டி அருமையான ஓர் பைரவியை வழங்கினார். பின்னர், 'ஏநாடி நோமு பலமே' என்ற பாடல், 'ஸ¤ந்தரேச ஸ¤குண ப்ருந்த தசரதா' என்ற வரியில் அமைந்த நிரவல், கற்பனை வளமிக்க ஸ்வரங்கள், மற்றும் ஸோமஸ்கந்தன் அளித்த தனி ஆவர்த்தனம் - இம்மேடைக் கலைஞர்களின் இசை அனுபவத்தை நிரூபித்தது. இதனைத் தொடர்ந்த துக்கடா பாடல்களின் ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு உணர்ச்சியை உணர்த்தியதோடு, மங்களம் பாடியவாறு கச்சேரி முடிவடைந்தது. ரசிகர்கள், இசை விருந்தை அனுபவித்த திருப்தியுடன் வெளியேறினர்.
லோட்டஸ் நிறுவனத்தில் நீங்களும் ஓர் கலைஞர் மற்றும் ரசிகராக கலந்து கொள்ளலாமே! விவரங்களுக்கு அனுகுங்கள்: www.svlotus.com
யோகாம்பாள் குமார், நந்தினி ராமமூர்த்தி. |