ஆறடி நிலம்
முன்னொரு நாளில் மன்னவ னொருவன்
நகர்வலம் வருகையில் ஆங்கோர் வயலில்
உழவன் ஒருவன் நாற்றுநடக் கண்டான்
"ஐயா நலமா?" என்றே வினவ,
உழவன் சோர்வுடன் "நலமென்ப தெல்லாம்
செல்வர்க் கன்றோ எங்களுக் கேது?"
என்றே கூறினான் விரக்தி மேலிட
"செல்வந்தனாக ஆசையு முண்டோ?"
என்றே மன்னன் வினவிய போது
"எப்படி முடியும் அதிசயம் ஏதும்
செய்திட உம்மால் இயலுமோ" என்றான்
"உதித்த நேரம் முதலாய்க் கதிரவன்
மறையும் மாலைப் பொழுது வரையிலும்
உம்மால் முடிந்த எல்லையைப் பெரிய
வட்ட மடித்து மீண்டும் திரும்பிட
சம்மதமானால் ஓடிய எல்லை முழுவதும்
உமக்கே சொந்தமாக்கிடச் செய்வேன்"
உழவனும் மறுநாள் காலையில் தொடங்கி

பெரியதொரு வட்டம் போட்டிட ஓடி
இன்னும் இன்னும் இன்னும் ஓடி
கதிரவன் மறையத் தொடங்கிய வேளை
இன்னும் சற்று ஓடிப் பார்த்தால்
நிலமும் சற்று அதிகம் பெறலாம்
என்றே எண்ணி ஓடிட முயன்று
மயங்கிக் கீழே அவனும் விழுந்தான்
பேச்சும் மூச்சும் அடங்கியே மடிந்தான்
"அந்தோ மனிதா! உனக்குத் தேவை
ஆறடி நிலமே அதற்கும் மேலே
எதற் கித்தனை ஓட்டமும் அயர்வும்?"
அவனுள் அடங்கும் சுவாசக் காற்று
பேசிய உண்மை பொதுவில் யாவரும்
அறிய வேண்டும் ஒப்பிலா உண்மை!!

(ரஷ்யக் கதையை தழுவி எழுதியது)

Dr. அலர்மேலு ரிஷி

© TamilOnline.com