சிறகுபலம்
மனுபாரதி என்னும் புனைப்பெயரில் எழுதுகிற இவரின் இயற்பெயர் சத்தியநாராயணன். சாண்டா கிளாராவிலுள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியியற் வல்லுனராகப் பணியாற்றி வருகிறார். ஆறேழு வருடங்களுக்கு முன்பாகப் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே எழுத ஆரம்பித்தவர். கடந்த மூன்றாண்டுகளாகத்தான் முனைப்புடன் எழுத ஆரம்பித்திருக்கிறார். ஆறாம்திணை, மின்னம்பலம், திண்ணை போன்ற இணைய இதழ்களில் இவருடைய கட்டுரை களும் கவிதைகள் மற்றும் சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இந்தியா டுடேயில் இவரது சிறுகதையொன்று வெளியானது.

"பெரியப்பா எப்பொழுது விழித்துக்கொள்வார்?"

இந்தக் கேள்வி எங்கிருந்தோ திடீரென்று முளைத்தது. எட்டரை மணி காலை வகுப்பில் நடத்தப் போகும் இன்றைய பாடப்பொருள் மனதில் நடை போட நடக்கையில் பெரியப்பாவின் ஞாபகம்.

பாவம் பெரியப்பா! இங்குள்ள குளிர் அவரை எட்டு எட்டரை மணி வரை போர்வையின் கதகதப்பிற்குள் முடக்கி வைத்திருக்கிறது. எப்பொழுதிலிருந்தோ அழைத்துக்கொண்டிருந்தும் அவரால் பிப்ரவரி பாதியில் தான் கிளம்பி வர முடிந்தது. அதுவும் தனியாக. இப்பொழுது பழக்கமில்லா பனியிலும், குளிரிலும் அவர். அவரது இளமைப் பருவத்தில் வட இந்தியப் பகுதிகளில் எங்கோ வேலை செய்திருக் கிறார். இருந்தும் இந்த ஊர் குளிர் அந்தக் குளிருடன் ஒப்பிடமுடியாத ஒன்று. வெற்றுக்கைவிரல்கள் வெளியில் தெரிந்தால் மரத்து, உறைந்து, எரியவைக்குக்கும் குளிர் இந்த ஊர் குளிர். சை! எண்ணங்கள் கணங்களில் திசை திரும்பி விடுகின்றன.

தெரிந்த, பிடித்த பாடம்தானே இன்றைக்கு என்றொரு எண்ணம் தலைப்பட்டது. இன்னும் வடக்கு வகுப்பறைக் கட்டடம் வரவில்லை. எனக்கு முன்னே நேர்க்கோடாய் நீளும் சாலையின் முடிவில் அது இருந்தது. நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் அதன் சுவர்களில் ஒரு வைராக்கியம் தெரிந்தது.

பளிச்சென்ற சூரியன் இதமான வெப்பம் தராவிட்டாலும் இளம்காலையில் ஒரு தெம்பைக் கொடுத்தது. சாலையின் இரு ஓரங்களிலும் பனிப்பாளங்கள் உடைந்து வடிவம் குறுகி காற்றடங் கும் நுரைகளாக மினுமினுத்தன. வரிசையாய் இருந்த மேப்பில் மரங்களின் கிளைகளில் வசந்தத்திற்கான ஏக்கங்கள். தூரத்திலிருந்து பார்க்கையில் நேர் கோடுகளின் சிக்கலான குவியல்களாய் இலைகளற்று அக்கிளைகள் காட்சியளித்தன.

உருகியும் உறைந்தும் மண்ணுடன் கலந்த பனிக் கட்டிகளின் அசுத்த வெண்மை, நிர்வாண மரங்களின் பழுப்பும், சாம்பல் நிறமும், பனிக்காலத்தின் விளிம்பில் நிற்கும் ஊசியிலை மரங்களின் மங்கிய பச்சை என இயற்கையின் நிறக்கலவையில் ஏதோ ஒரு வெளிறிய உணர்வு. பெருமூச்செறிந்து வாய் வழியே காற்றை வெளிவிட்டபொழுது வெண்புகையாய் எழுந்தது கலைந்தது.

அதிகம் மாணவர்களின் நடமாட்டமில்லை. வெட்ட வெளிக் கூடைப்பந்தாட்டக் களத்தைக் கடக்கையில் அதன் அந்தப்புறம், கீழுள்ள ஐயோவா நதியிலிருந்து சில்லிடும் வேக காற்று வந்து அறைந்தது. என் கையிலிருந்த வண்ணமற்ற வரைபடத் தாள்கள் சடசடத்தன. இறுகப்பிடித்துக்கொண்டு நடந்தேன். இன்றென்னவோ காற்றில் குளுமை அதிகமாக இருக்கிறது.

சில நிமிடங்களில் வடக்கு வகுப்பறைக் கட்டடம் வந்துவிட்டது.

வகுப்பறையில் நான்கைந்து நாற்காலிகளைத் தவிர்த்து மற்றவை நிரம்பியிருந்தன. முதுகலை (Graduate) மாணவர்களுக்குரிய அடக்கத்துடன் ஆவலாய்க் காத்திருந்தார்கள். புன்னகையுடன் உள் நுழைந்து வரைபடத் தாள்களையும் வண்ணமடிக்கும் வரைகோல்களையும் முன்னமர்ந்திருந்த ப்ரையனிடம் பகிர்ந்தளிக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டு ஒளி வுருவப் பெருக்கியை (overhead projector) இயக்கினேன்.

"மாணவர்களே! உங்களுக்கு இனிய காலை அமைவதாக. இன்றைய பாடவேளையில் முதலில் உங்களை சிறிது உங்கள் மழலைப் பருவத்திற்கு அழைத்துப் போகலாம் என்றிருக்கிறேன்." என்றவுடன் புன்னகையொன்று வகுப்பு முழுதும் பற்றிக் கொண்டது.

"உங்களில் பலர் சிறு வயதில் வண்ணமற்ற படங் களுக்கு வண்ணமடித்துப் பழகியிருப்பீர்கள். இப் பொழுது அதைப்போன்ற பயிற்சிதான். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரைபடங்களைப் பாருங் கள்."

ஒளியுருவப்பெருக்கியின் மேல் ஒரு மாதிரி வரை படத்தை வைத்தேன்.

சிரிப்பும் கேள்விக்குறியும் கலந்த பார்வைகள் வரை படத்தின் மேலே.

"பல தேசங்களாய் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு கற்பனைக் கண்டத்தின் வரைபடம் இது. இத்தேசங் களுக்கு நீங்கள் வண்ணமடிக்க வேண்டும். ஒரு நிபந்தனை. ஒரே எல்லைக்கோட்டைப் பகிர்ந்து கொண்டிருக்கும் இரு தேசங்களுக்கு ஒரே வண்ண மடிக்கக்கூடாது. ஒரு புள்ளியில் தொட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஐந்து நிமிடங்கள்."

எலிஸா கையுயர்த்தினாள். கேள்வியைக் கேட்கலாம் என்று சைகை செய்தேன்.

"எத்தனை வண்ணங்கள் உபயோகிக்கலாம்.?"

"நல்ல கேள்வி. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறை வான வண்ணங்கள்."

பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு, கருநீலம், கருப்பு என மாணவர்களின் கைவண்ணத்தில் வரைபடங்கள் வண்ணமயமாகிப் பட்டாம்பூச்சிகள் போல் பிரகாசித் தன.

நான் ஜன்னலுக்கு வெளியே நோக்கினேன். தூரத்தில் ஐயோவா நதி அடர்ந்த பனிப்பொருக்குகள் மூடி மௌனமாய். இன்னும் சில நாட்கள் தான், அது உருகி வழிந்தோட. வரப்போகும் வசந்தத்திற்காக குளிரை சகித்து தவமிருப்பதாய்ப் பட்டது. என்னைப் போல என்று தோன்றியது. எத்தனை வருடங்கள்!

மீண்டும் மாணவர்கள்.

"பயிற்சி எப்படி இருந்தது? கடினமாகவா? எத்தனை நிறங்கள் உபயோகித்தீர்கள்?"

"அவ்வளவாக கடினமாக இல்லை. நான் ஆறு நிறங்கள் உபயோகித்தேன்." - ஸ்டீவ் கையுயர்த்திச் சொன்னான்.

"கொஞ்சம் கடினம்தான். நான் ஐந்து நிறங்கள் பயன்படுத்தினேன்" - என்றாள் எலிஸா.

"எனக்கும் அப்படித்தான் இருந்தது. நான் முயன்றதும் ஐந்து நிறங்களை வைத்துத்தான்." - கேத்ரீன் சிறிது கேள்விக்குறியுடன் அங்கலாய்த்தாள்.

ஐந்து, ஆறு, ஏழு, ஏழு, ஆறு, ஐந்து, ஐந்து ஆறு என்று வரிசையாக பதில்கள்.

முன்னமர்ந்திருந்த ப்ரையன் "நான்கு" என்றான். வகுப்பே அவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தது.

"நான்கு நல்ல பதில். கடினமாக இல்லையா? எப்படி வண்ணம் கொடுத்தாய்?"

"கடினமாகத் தான் இருந்தது. எனது அணுகுமுறை பேராசைதான். முதலில் ஒரு நிறத்தை எடுத்துக் கொண்டு அதை எவ்வளவு முடியுமோ அத்தனை தேசங்களுக்கும் கொடுத்தேன். அடுத்து இன்னொரு நிறம் அதே முறையில். இப்படி செய்து வரும்பொழுது நான்கில் என் வரைபடம் முடிந்துவிட்டது."

"அது ஒரு நல்ல அணுகுமுறை. இன்னும் ஏதாவது பதில்கள்..?"

வகுப்பு சில நொடிகள் அமைதி காத்தது.

எலிஸா கையுயர்த்திக் கேட்டாள், "நான்கைவிட குறைவான வண்ணங்களை வைத்தும் செய்ய முடியுமா?"

"150 வருடங்களுக்கு முன்பு கணித வல்லுநர் டீ மார்கனிடம் கேட்கப்பட்ட கேள்வி அதுதான். நீங்கள் மூன்றை வைத்து முயன்று பாருங்கள். வண்ண மடிப்பதற்குப் பதில் நிறங்களின் முதலெழுத்தைக் குறியுங்கள்"

சிறுவயதில் பெரியப்பாவின் விசைத்தறி ஆலையில், பல வண்ண நூற்கண்டுகளிலிருந்து மெல்ல மெல்ல வண்ணத் துணியொன்று நெய்யப்படுவதை ஆச்சர் யமாக பார்த்திருக்கிறேன். அப்பொழுது, பாவும் நூற்கண்டுகளில் ஒன்றை மட்டும் எடுத்துவிட்டால் முடிவில் வரும் துணியின் வண்ணக்கலவை எப்படி இருக்கும் என்று வினோத கற்பனை செய்திருக் கிறேன். வண்ணங்கள் என்றுமே ரசனைக்குரியவை. மழை நாளின் தார்ச்சாலையில் சிந்திய எண்ணைத் துளியொன்றில் பிளவுபடும் சூரிய ஒளியின் வண்ணங் கள். சாயப்பட்டறைகளின் வினோதக் கலவை வண்ணங்கள். பட்டாம்பூச்சியின் மென்சிறகு வண்ணங்கள்... வாழ்க்கையில் இன்னும் ஆர்வமேற்படுத்தும் விஷயங்கள் உள்ளன என்பதை நினைவுறுத்தும் வண்ணங்கள்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கவேண்டும். மூன்று நிறங்களில் முடியவில்லை என்று பல தலைகள் நிமிர்ந்தன.

"இந்த வரைபடத்தைப் பொறுத்தவரை நான்கு நிறங்கள் நிச்சயம் தேவை. சில வரைபடங்களுக்கு மூன்று நிறங்கள் போதும். இன்னும் சிலவற்றிற்கு இரண்டு கூட போதும்."

"எவ்வளவு நிறங்கள் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? நீங்கள் கேட்கலாம். அந்தத் தேவையை கணிதம் உங்களுக்கு வைக்கவில்லை."

"நான்கு வண்ணங்களை வைத்து இரண்டு பரிமாணத்திற்குள் அடங்கும் எல்லா வரைபடங் களுக்கும் நிறம் கொடுத்துவிடலாம். ஆம். நான்கு வண்ணங்கள் எல்லா வரைபடங்களுக்கும் போது மானது. இதைத்தான் நான்கு நிறத் தேற்றம் என்று கணித உலகில் குறிப்பிடுவார்கள். சரி, இதற்கும் கோலங்களுக்கும் (Graphs) என்ன சம்பந்தம்? இதைக் கோல உலகில் மொழிபெயர்க்க இயலுமா?"

முடிவில் பாடத்திற்கு வரப்போவதை எல்லாரும் ஒருவாறு அனுமானித்து என் அடுத்த சொற்களுக்காக அமைதி காத்தார்கள்.

"தேசங்களைப் புள்ளிகளாக(Vertices) மாற்றுங்கள். இரு தேசங்கள் ஓர் எல்லைக்கோட்டைப் பகிர்ந்து கொண்டால் அத்தேசங்களுக்கான புள்ளிகளை ஓரு கோட்டால்(Edge) இணையுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் எந்த வரைபடத்தையும் (கோடுகள் புள்ளிகளை இணைக்கும்) ஒரு கோலமாக மாற்ற இயலும். இப்பொழுது பிரச்சனை இப்புள்ளிகளுக்கு வண்ணம் கொடுப்பது தான். ஒரே நிபந்தனை: "

ப்ரையன் முந்திக்கொண்டான், "இரு புள்ளிகளை ஒரு கோடு இணைத்தால் ஒரே நிறம் கொடுக்கக் கூடாது."

நான் புன்னகைத்து ஆமோதித்தேன்.

"கோலத் தேற்றத்தில் பிரச்சனைகள், கேள்விகள் மிக மிக எளிதானவை. சில சமயம் அனுமானத் தேற்றங்களும் (Conjectures). ஆனால் அவற்றிற்கான பதில்கள், நிரூபணங்கள் நூற்றாண்டுகளாய்க் கிடைக்காமல் இருந்திருக்கின்றன."

"இந்த நான்கு நிறத் தேற்றத்திற்கான நிரூபணத்திற்கு 120 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி யிருந்தது. அதுவும் எளிய முறையில் நிரூபிக்கப் படவில்லை. கணினியின் துணைகொண்டு எல்லாவித சாத்தியமான கோலங்களுக்கும் வண்ணமடித்து நிரூபிக்கப்பட்டது." என்றதும் வகுப்பே ஆச்சர்யப் பட்டது.

எலிஸா கேட்டாள், " இந்தத் தேற்றத்தால் என்ன உபயோகம், வண்ணங்களை மிச்சப்படுத்துவதைத் தவிர?"

"கணிதம் எப்பொழுதும் ஒரே ஒரு புதிருக்கு மட்டும் விடை காணாது. ஒரே தன்மையுள்ள பல புதிர்களை தீர்க்கத்தான் எப்பொழுதும் முயலும். அதனால் தான் கோலமாக மாற்றி கோலத்தின் தளத்தில் அதைத் தேற்றப்படுத்தி, விடை காணும் முயற்சி. விடை கிடைத்தால் அந்தப் புதிரின் எந்த அவதாரத்தையும் தீர்த்துவிடலாம். "

"இப்புதிரின் ஓர் அவதாரம் - எங்களைப் போன்ற ஆசிரியர்களின் பாட வேளைகளை அட்டவணைப் படுத்தல். ஒரே ஆசிரியர் இரண்டு வகுப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டியிருக்கும். ஒரே பாட வேளையில் அதைச் செய்யமுடியாது. ஒரு நாளில் எத்தனை பாடவேளைகள் குறைந்தது தேவை என்பது புதிர்"

ப்ரையன் சொன்னான், "ஒரு வகுப்பிற்கு ஒரு புள்ளி. ஆசிரியர்கள் இணைக்கும் கோடுகள். நிறங்கள் பாடவேளைகள்."

"மிகச் சரி. புரிகிறதா மாணவர்களே? இன்னும் சில உதாரணங்கள் - வானொலிகளுக்கு அலைவரிசை களை முடிவு செய்தல், மின்னணு இணைப்புகளை சோதித்தல் என சொல்லிக்கொண்டே போகலாம். உங்களுக்கு இவை சம்பந்தமான பயிற்சிக் கேள்விகள் இதோ. ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்."

"வேறு ஏதாவது சந்தேகங்கள்? .. இல்லாத பட்சத்தில் இன்றைய வகுப்பு இத்துடன் முடிகிறது."

மாணவர்கள் குளிருக்கு அடக்கமான மேலாடையை அணிந்து, தோல் பையைச் சுமந்து கலைந்து கிளம்பினர். நானும்.

எனக்கு இன்றைய பாடத்தில் ஒரு திருப்தி இருந்தது. கணித்த திசையில் சரியாகச் சென்றதில் ஒரு நிறைவு. குறிப்பாக இந்த மாணவர்கள் ஆர்வமாக இருப்பது ஊக்கப்படுத்துகிறது. கற்றுக் கொள்ள உழைப்பதில் இவர்களிடம் ஒரு சோர்வு இல்லை என்பது என்னை அவர்களில் அடையாளம் காணத் தூண்டுகிறது. உற்சாகத்துடன் நடை போட்டேன்.

சிறுவயதில் மார்கழிக் காலையில் தெருவடைத்துக் கோலம் போட்டு, காவி பூசி, பல வண்ணப் பொடிகளைக் கொண்டு படைக்கும் ரங்கோலி என் ஞாபகத்தில் பூத்தது. புள்ளிவைத்துப் போடும் சிக்குக்கோலங்கள் என்னை ஈர்த்த காலம் அது. இன்று வாழ்க்கையே கோலத் தேற்றங்களைச் சார்ந்து.

"வணக்கம் டாக்டர் நிர்..மலா? எப்படி இருக்கிறீர்கள்?" சம்பிரதாயமாக சிரித்துக் கேட்டான் எதிர்பட்ட கார்ல். என் கவனிப்பில் புதிதாக ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறவன். அவனைப் பற்றி அதிகம் தெரியவில்லை. சேர்ந்து இரு மாதங்கள்தான் ஆகின்றன. இன்னும் என்னுடைய இந்தியப் பெயர் அவனுக்குப் பழகவில்லை. அவனது நீலப்பச்சைக் கண்களில் ஓர் அயர்ச்சி.

"வணக்கம் கார்ல். நன்றாக இருக்கிறேன். நன்றி. நீ எப்படி இருக்கிறாய்?"

"மிக நன்றாக. என்ன? இன்று சில பயிற்சிகளுக்கான கெடு. இரவு கண்விழிக்க வேண்டியிருந்தது. சரி, வேலையிருக்கிறது. மீண்டும் சந்திப்போம்."

மெக்லீன் ஹால் வந்துவிட்டது. உள்நுழைந்ததும் இதமான வெப்பம். மேலேறி என் அலுவலக அறையைத் திறந்தேன். டெய்லி ஐயோவன் தினப்பத்திரிக்கை அடி வழியாக தள்ளப்பட்டு தரையில் கிடந்தது. முகப்பில் இருந்த பெரிய படம் ஒரு பட்டாம்பூச்சியினுடையது. பொன்னிற காலைக் கதிர்கள் இடப்புறம் எங்கிருந்தோ வந்து ஒரு பாறையில் விழ, அதன் மழுங்கிய முனையில் அமர்ந்திருந்தது அந்தப் பட்டாம்பூச்சி. அதன் இறக்கைகள் மிக மெல்லமாக மூடி மூடித் திறக்கின்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது. நாள் முழுதும் பறந்து திரிய, உடலுக்குத் தேவையான வெப்பத்தை அந்தப் பாறையிலிருந்து உறிஞ்சிக்கொள்கிறதோ? பெரிய பயணத்திற்குத் தயாராகிறதோ? இந்தக் காட்சியை வரைய அந்த ஓவியன் எவ்வளவு காலைகளில் தவம் கிடந்தானோ. அதே இடம்பார்த்து நிதமும் வந்து அமருமா என்ன? எப்படி சாத்தியமாயிற்று? தத்ரூபமாக வரைந்தது யார்? ஓரத்தில் தாடி வைத்த அந்த இளம் ஓவியர் சிரித்துக்கொண்டிருந்தார். பட்டாம்பூச்சியின் அமைதியான அதிகாலை தருணத்தை வண்ணங்களில் மொழிபெயர்த்துவிட்ட வெற்றிச்சிரிப்போ?

நானும் சிரித்துக்கொண்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்? சிந்தித்துக் கொண்டிருக்கையில் கதவு தட்டப்பட்டது. மனீஷ்..

மனீஷ் என்னிடம் இரண்டு வருடங்களாக ஆய்வு செய்பவன். மிகவும் அமைதியானவன். அதிகம் கவலைப்படுபவன். இந்தக் கணித ஆராய்ச்சிகளின் மூலம் மக்களின் இயல்பான வாழ்வை எப்படி பாதிக்கிறோம், முன்னேற்றுகிறோம் என்றெல்லாம் அவன் கவலைகள் விரிந்துகொண்டே போகும். அறிவு ஜீவி என்றும் சொல்லலாம்.

"என்ன மனீஷ்?"

"அந்த ராக்வெல் கிராண்ட் சம்பந்தமாக ஏதாவது தெரிந்ததா?"

"இல்லை மனீஷ். என் அஞ்சல் பெட்டியை இன்னும் திறக்கவில்லை. பார்த்துச் சொல்கிறேன். முடிவெடுக்க இன்னும் நாட்கள் கேட்பார்கள் என்றுதான் தோன்றுகின்றது. மில்லியன் டாலர் ஆய்வுப் பணி இல்லையா?"

மதியம் அஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தபொழுது ராக்வெல் நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.

"நீ வந்தப் புறவு ஒண்ணா சாப்பிடலாமின்னு காத்துக்கிடக்கேன். இருக்கிறது நாம ரெண்டு பேரு. இதுல தனித்தனியா சாப்புட்டு..."

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மௌனமாக சமையலறையிலிருந்து உணவு வகை களை எடுத்து சாப்பாட்டு மேஜையில் வைத்தேன்.

"உனக்கு போன் மிஸின்ல யாரோ தகவல் விட்டுருக்காங்க. இளுத்து இளுத்து, முளுங்கி முளுங்கி இவங்க பேசற இங்கிலீஸே புரியல.."

மிஸஸ் ஸ்ப்ரிங்ஸ்டர் தான் விட்டிருந்தார்கள். என்னை சந்தித்து பேசி நாளானதால் வரும் நாட்களில் சந்திக்கலாமா என்று கேட்டிருந்தார்கள்.

"இத்தனை நேரம் களிஞ்சு வந்து சோறு பொங்கி சாப்பிடுவியா நீ?" என்றபடி வந்தமர்ந்தார்.

"இல்லங்க பெரிப்பா. நிறைய ஐட்டங்கள வாரக்கடைசில ஒரு நாளு பண்ணி ப்ரிட்ஜில வெச்சிருவேன். சோறாவறதுக்கு எத்தன நேரம்? அத மட்டும் வெச்சி...."

"சாப்புடுவியா? என்ன வாழ்க்கையோ போம்மா. ஒண்ணும் நல்லால."

"என் வேலை அப்பிடிங்க பெரிப்பா. பாடம் நடத்தறதோட முடிஞ்சிடாது. ரிசர்ச் வொர்க்கு, டெக்னிகல் பேப்பர், க்ராண்ட் ப்ரொபோசல்.... னு இதுல வேலைங்க ரொம்ப ஜாஸ்திங்க. இதுல நிதமும் சமைக்கறது... என் ஒருத்திக்குத் தானே... ஏதாச்சும் பாத்துக்குவேன்."

"வேலை பாக்குறதுலாம் வாய்க்கு ருசியா சாப்பிட, ஆரோக்யமா இருக்கத்தான்...."

"வேலையே ரொம்ப புடிச்சிப் போயிட்டா, இதுக்கெல்லாம் சில சமயம் முக்கியத்துவம் போயிடுது. உங்களுக்குத் தெரியாதா? எத்தன நாளு கம்பெனிலேயே கதியா கிடப்பீங்க?"

அவர் பெரும்மூச்செறிந்தார். "சரிதான். இப்போ வயசாயிட்டுது. முக்கியத்துவம் மாறுது..."

ஒரு நிமிடம் அமைதியாகப் போனது. பெரியப்பா ஏதோ எதிர்பார்க்கிறார்.

"சாம்பார் நல்லாயிருக்குங்க பெரிப்பா."

ஒரு நிமிடம் பூரிப்புடன் பெருமையாக உணர்ந்தார்.

"இதுல என்னம்மா இருக்கு? நமக்கெல்லாம் சமைக்கச்சொல்லித் தரணுமா? என் சின்ன வயசுல..." என்று நிறுத்தி எதையோ யோசித்தார்.

"ஒருத்தர்தான் பள்ளிக்கூடம் போவலாம்ன்னு அப்போ நிலம. உங்கப்பார வீட்டுல விட்டு, எங்கம்மா ஓட்டல் வேலைக்கு என்னை இளுத்துக்கிட்டுப் போயிருவாங்க. அங்க கத்துக்கிட்டதுதான். உங்கப்பாரு அப்போ ரொம்ப சின்னப் பையன். அவனுக்கு ஆமைவடை ரொம்ப உசிரு அப்போலாம். கூட வேலை செய்யறவங்களுக்கு கொடுக்கற சாப்பாட்டுல கட்டாயம் ஒரு வடை இருக்கும். அப்பிடியே அந்தச் சாப்பாட்ட எடுத்துட்டுப் போய் அவனுக்குக் குடுத்துருவேன் நிர்மலா."

பச்சாதாபத்தை எதிர்பார்த்தன அவர் கண்கள்.

"பசியோட இருக்கிறவன் கண்ணு விரிய எடுத்துச் சாப்புடுவான். ஆனா அது சின்ன வயசு வரைக்கும் தான். ஒரு சமயம் ஏதோ கோவத்துல "நீ சம்பாரிச்சதா இது?" ன்னு கேட்டேன். அதுக்குப் புறவு, யார் எது குடுத்தாலும், நானே குடுத்தாலும் வாங்கமாட்டான். தன் உளைப்புல வாராதத அவன் தொட்டதேயில்லை. சொந்தக்கால்ல நிக்கணு மின்னு விடாம படிச்சான். "வந்தாம்மா நிர்மலா எங்கள்ளேயே ஜாஸ்தி படிச்சான். பாவி, அல்பாயுசுல போய்ச்சேர்ந்துட்டான்."

எங்கோ ஆரம்பித்த பேச்சு எங்கேயோ எதிர்பாராத இடத்தில் வந்து முடிந்துவிட்டது. மெளனத்தைத் தவிர இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

இதை நிறைய முறை சொல்லியிருக்கிறார். அனுபவங்களை நினைவு கூறுதல் அலுப்பதில்லை எவருக்கும். சொல்லும் தொனி தான் மாறுகிறது ஒவ்வொரு முறையும்.

"உங்கப்பார படிக்க வக்க எத்தன நாளு நான் வேலைக்குப் போயிருக்கேன் தெரியுமா? ஹோட்டல்ல மாவாட்டியிருக்கேன். தறியில உக்காந்து நூல் விட்டிருக்கேன். வடக்கே போற வண்டியில டிக்கெட் எடுக்கக் காசில்லாம தொங் கிட்டு, லெட்ரின் ரும்ல உக்காந்துகிட்டுலாம் போய், பாஸை புரியாத எடத்துலேயும் குளிருலேயும் வேலை பாத்துருக்கேன். இரும்பாலைல இரும்படிச்சிருக் கேன். உழைக் கறதுக்கு சோம்பேறித்தனப் படற வயசா இது. உன்ன ராணி மாதிரி நடத்த உங்கப்பனும் ஆயியும் பெரிய சொத்த வாரிக் கொடுத்துட்டுப் போயிடல. எங்களுக்கும் இங்க பணமா கொட்டல. அழுவாச்சி யெல்லாம் நிறுத்திப்பிட்டு உன் பெரிம்மாக்கு எடு புடியா இரு. படிப்பெல்லாம் எப்ப வேணா படிச்சுக்குலாம்." - சோம்பேறித்தனமில்லை, களைப்பு என்று தெரிந்தும் அதே வார்த்தையால் அடிக்கடி விழுந்த சவுக்கடிகளில் கூட அவர் அனுபவங் களைத்தான் உரத்துப் பேசுவார். அந் நாட்களில் வீட்டு வேலைகளுக்குப் பின், கண்விழித்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம். மின்சார விளக்கு, செலவு அதிகமாகி விடும் என்பதால் பத்து மணிக்கு மேல் எரியக் கூடாது. தூங்கும் நேரங்கள் குறைவு. பெரியப்பா விசைத்தறி வாங்குவதற்குமுன் பல நாட்கள் தறியில் கூட அமர நேர்ந்திருக்கிறது.

"இதோ பாரு நிர்மலா. ஏதோ நல்லா மார்க்கு வாங்கின, கவர்மெண்டுல உன் படிப்புக்கு ஏதோ குடுத்தாங்க. சரி போவட்டுமின்னு இஞ்சினியரிங் காலேஜுக்கு அனுப்பினோம். உங்கப்பார அத்தன படிக்க வச்சதுக்கு, ஒரு வீட்ட மட்டும் தான் மிச்சம் வச்சிட்டுப் போனான். உன்ன நாலாங்கிளாஸ்லேந்து படிக்க வச்சிருக்கேன். இனி மேலும் படிக்க அனுப்புங்க, அமெரிக்கா போறேன்னு சொன்னா எனக்கு அந்த அளவுக்கு வசதி இல்ல புள்ள" என்று வாழைப்பழத்துள் ஊசியாய் என் தந்தையைப் பற்றிக் குத்திக்காட்டியிருக்கிறார்.

அமெரிக்கா வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோள் உந்து சக்தியாகி, அதற்காக மென்பொருள் நிறுவனம் ஒன்றில் சேர்ந்து வெறியுடன் உழைத் திருக்கிறேன். இன்று அமெரிக்காவில் என் முன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இவர் அதே பெரியப்பா தானா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அவருடன் நிகழும் இந்த உரையாடலில் அவருக்கும் எனக்கும் இடையில் மங்கலாக உள்ள அந்நியத் தன்மையை வெளிக்காட்டாமல் இருவரும் நடிக் கிறோமோ என்றும் தோன்றியது.

"என்ன யோசனை அம்மா? ரொம்ப தொலைவு போயிட்டாப்பல இருக்கு.."

"ஒண்ணுமில்லைங்க பெரியப்பா."

"பாடத்தப் பத்தி யோசனையா? எப்பிடி நடக்கு தம்மா உன் வேலை?"

"வேலை சரியா இருக்குங்க பெரிப்பா. ஒண்ணு முடிஞ்சா இன்னொண்ணு. இப்போ புது ப்ராஜெக்ட் ஒண்ணு ஆரம்பிக்க முயற்சி செய்யறேன். ஒரு மில்லியன் டாலர் ப்ராஜெக்ட். ராக்வெல்ன்னு ஒரு கம்பெனிகிட்ட ப்ரொபோசல் அனுப்பியிருக்கேன். அது சம்பந்தமா ஆயிரம் கேள்விங்க. கிடைக்கு மான்னு தெரில."

"கிடைச்சா..?"

"என்னோட டென்யூர் ட்ராக் முடிய இன்னும் கொஞ்சம் மாசம் தான் இருக்கு. புரியறமாதிரி சொல்லணுமின்னா இது தற்காலிக உத்யோகத்துல ட்ரெய்னிங் பீரியட் மாதிரி. நாலரை வருஷம் முடிஞ்சாச்சு. இனி பெர்மெனண்ட்டா ஆக்க வேண்டியதுதான். இது மாதிரி நிறைய க்ராண்ட் வாங்கினா, நிறைய ஆய்வறிக்கைலாம் தயாரிச்சா தான் பெர்மெனண்ட் பண்ணுவாங்க."

"இதுல இவ்ளோ விசயமிருக்கா? ம்.... நீ இங்க மில்லியன் டாலர் ப்ராஜெக்டுக்கு உளைக்கற. எனக்குன்னு வந்து பொறந்தது அப்பா கம்பெனிய எடுத்து நடத்தற ஆசை கூட இல்லாம பொறுப்பு கெட்டு சுத்திக்கிட்டிருக்கு."

அவருக்கும் எனக்கும் வயதில் உள்ள வித்தியாசம் இது போன்ற புலம்பலுக்கு என்னிடமிருந்து பதிலின் மையத்தான் வெளிப்படுத்தியது.

கோபம் மறைந்து திடீரென்று அவர் குரலில் ஒரு குழைவும், கெஞ்சலும், " இங்க நம்ம மனோக்கு ஏதாச்சும் வேல கிடைக்குமாம்மா? என் கம்பனிய எடுத்து நடத்த அவனுக்கு இஸ்டமில்லன்னு ஆயிப்போச்சு. அவனோட ஆர்ட்ஸ் காலேஜ் படிப்பும் தம்பிடிக்கும் உபயோகமில்ல. ஏதோ கம்யூட்டர் கிளாஸ¤னு போயிட்டு வந்தானே. அத வச்சி இங்க வந்து வேல பாக்க முடியாதா?"

"பெரிப்பா, இங்கலாம் வேலை கிடைக்கறது அவ்வளவு சுலபமில்லங்க. நிஜமாவே திறமையிருக் குன்னு நிரூபிக்கணும். அந்தத் திறமை இவங்களுக்கு தேவையா இருக்கணும். அதுக்கு ஆளு இங்க கிடைக்காம இருந்தாத்தான் மத்த நாட்டுலேந்து எடுக்கறத பத்தி யோசிப்பாங்க."

"மூணு லட்சம் குடு, நாலு லட்சம் குடு ன்னு சொல்லி துபாய் வேலைக்கு ஆளெடுக்கறமாதிரி இங்க இருக்கா? இருந்தா சொல்லு, காசு பத்திக் கவலையில்லை. புரட்டிப்புடலாம். அவனுக்கு ஒரு வளி அமைய வேணும்மா."

"அது மாதிரி ஆட்களாமும் இருக்காங்க. ஆனா நம்பமுடியாது. காச வாங்கிட்டு நட்டாத்துல விட்டுட்டுப் போற ஆளுங்க அதிகம். மனோ பத்தி உங்களுக்குத் தெரியாதது இல்ல. நீங்களே யோசிச்சு பாருங்க அவனுக்கு இது ஒத்து வருமா அப்பிடின்னு."

"என்னாவாச்சும் அவனுக்கு ஒரு விடிவு வராதான் னுதான் என் கவலை. கல்யாணம் பண்ணி வச்சா பொறுப்பு வருமின்னு பார்த்தா, புள்ள கூட பொறந்தாச்சு. இன்னும் தறுதலையா சுத்திக் கிட்டிருக்கான். அவன்கிட்ட நயமா சொல்லியாச்சு, இறைஞ்சு சொல்லியாச்சு. நேரா சொல்லியாச்சு. மத்தவங்க மூலமா சொல்லிப் பாத்தாச்சு. இப்போ உங்க பெரிம்மா வேற அவனுக்கு வக்காலத்து. 'உங்க சொத்தெல்லாம் யாருக்கு? அவனுக்குத்தானே. எதுக்கு அவன வேலை பாருன்னு வைஞ்சு கிட்டே இருக்கீங்க?' ன்னு அவன வச்சிகிட்டே பேசுறாங்க. அவனுக்கு எப்படி பொறுப்பு வரும்? அந்த மருமக புள்ள எப்படி மதிக்கும்? பொறந்த புள்ள நாளைக்கு பெரிசானா 'சீ நீயும் ஒரு அப்பனா?'ன்னு கேக்காது?"

எங்கிருந்தோ பேச்சு எங்கேயோ போய்க் கொண்டி ருந்தது. இனி மீட்டெடுக்க முடியாத திசையில் அவர் சென்றுவிடுவார். இருப்பது மூன்று பேர். பெரியப்பா, பெரியம்மா, மனோ. இவர்களுக்குள் எத்தனை பிரச்ச னைகள். எத்தனை பிரச்சனை யில்லாத பிரச்சனைகள்.

உறவுகளை எல்லாம் மனிதப்புள்ளிகளை இணைக் கும் கோடுகளாக்கி, இப்பிரச்சனைகளுக்கு கோல உலகில் தீர்வுகளை கண்டுபிடிக்கலாமா என்ற அபத்தமான கேள்வியை கேட்டது அறிவு. பெரியப்பா, பெரியம்மா, மனோ மூவரும் இணைக்கும் கோடு களின்றி தனித் தனித் தீவுகளாய் நின்று கொண்டி ருக்கும் புள்ளிகள். அல்லது இயல்பான கோடு களிலேயே பெரும் சிக்கல்களை தங்களுக்குத் தாங்க ளே ஏற்படுத்திக்கொண்டு திணறிக் கொண்டிருப் பவர்கள்.

"இன்னைக்குப் பெரிய சண்டையாப் போச்சும்மா. சொல்ல வெக்கமாயிருக்குத்தான். அதான் ஆத்தா மை. உங்கிட்டக் கொட்டறேன்."

நடுவில் கவனிக்கவில்லை என்ற குற்றவுணர்வு ஆட்கொண்டது.

"எல்லாம் சரியாயிடும் பெரிப்பா." - பொய்யான நம்பிக்கை தான். தீர்வுகளைத் தேடுவதாய் பாவனை செய்தபடி நகரும் வாழ்க்கையில் பொய்யான நம்பிக்கைகள் தான் மிதக்கும் கட்டைகள்.

"இவ்ளோ தூரம் தாண்டி வந்திருக்கீங்க. எதையும் போட்டு மனச உளப்பிக்காம கொஞ்சம் ஓய்வா இருக்கப் பாருங்க. இன்னிக்கு எப்படி பொழுத ஓட்டினீங்க?'

பெருமூச்சொன்று கிளம்பியது அவரிடமிருந்து.

"காத்தால எளுந்தது லேட்டு. வெளில எல்லாம் மாவுக்கட்டி கணக்கா பனி. குளிரு வெடவெடக்குது. குழால சுடு தண்ணியும், அறையில சூடும் இல்லாங் காட்டி அவ்ளோதான். ஏதோ பேப்பரு தினம் வருதே, டெய்லி ஐயோவன், அதக் கொஞ்சம் நேரம் புரட்டி னேன். உங்க ஊர் நியூஸ் பேப்பருல லோக்கல் விசயங்கதான் ஜாஸ்தி. இங்க உங்க யூனிவர்சிட்டில படிச்ச பையன் ஒருத்தன் - மாக்கான் கணக்கா இருக் கான், தாடியும் மீசையும். அவன் ஓவியத்துக்கு பரிசு கொடுத்துருக்காங்களாம். இதான் பெரிய நியூஸ். டிவிய திருகினா இவங்க உச்சரிப்பே புரியல. என்ன பேசறாங்கன்னு சப்டைட்டிலு போட்டு பாத்து கிட்டிருந்தேன். புருசனும் பொஞ்ஜாதியும் கோர்ட்டு மாறி ஒண்ணுல நின்னுக்கிட்டு விவாகரத்து பத்தி வாதாடறாங்க. ஜட்ஜ் ஒருத்தர் தீர்ப்பு சொல்றாரு. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் திட்டிக்கிறாங்க, சொல்லக்கூசற வசைங்க. மதியம் சாப்புட்டு ஒரு தூக்கம். சாயற நேரம் நடக்கலாமன்னு தோணிச்சு. ஆனா "ஷ¤வு, தொப்பி, ஜாக்கெட்ன்னு கவசங்களா போட்டுக்கணுமேன்னு வீட்டிலேயேக் கிடந்தேன். காயரிஞ்சு சாம்பார் வச்சேன். திரும்பவும் டிவி. அவ்ளோதான்..."

"இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கங்க பெரிப்பா. வெதர் மாறிடும். பனி உருகி கொஞ்சம் டெம்பெ ரேச்சர் ஏறும். அப்போ நடக்கலாம். வெளில போவலாம்."

பொன்னிற காலைக்கதிர்களின் ஒளியில் பாறை மேல் அமர்ந்து, இதமான வெப்பத்தை அந்த ஓவியப் பட்டாம்பூச்சியைப் போல் அனுபவிக்க ஓர் ஏக்கம் பிறந்தது என்னுள்.

ஜன்னலுக்கு வெளியே மேப்பில் மரங்களின் குச்சிக் குச்சியான கிளைகளில், இலைகளைக் கருக் கொண்ட முடிச்சுக்கள் தோன்றத் தொடங்கியி ருந்தன. பனியுருகித் தெரியும் மண் திட்டுக்களில் சிறிது சிறிதாக வெடிப்புகள் - மஞ்சள் டா·படில் கிழங்குகளின் முளைப்பதற்கான போராட்ட அறிகுறிகள். ஊசியிலைப் புதர்களிலிருந்து பதுங்கி பதுங்கி வெளியே வந்து குட்டி முயல்கள் பாய்ச்ச லெடுத்து ஓடுகின்றன. இவற்றுக்குள்ளும் ஓடுகின்றன காலத்தைப் பற்றிய கணிப்புகள். அதை ஒட்டிய முஸ்தீபுகள், முதலடிகள்.

கோலத்தேற்றம் (Graph Theory) என்னுடைய பொறியியற் கல்லூரி படிப்பில் கடைசி வருடம் எடுத்துக்கொண்ட விருப்பப்பாடம். அதைச் சொல்லிக்கொடுக்க இருந்த வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர், தண்டிக்கக்கூடியவர் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தினர் மற்ற மாணவர்கள். ஆனால் அவரைப் பார்த்தவுடன் அப்படியில்லை என்று தோன்றிவிட்டது. ஏதோ உள்ளுணர்வு. கண்டிப்பையும் கறாரையும் மீறி அவரிடம் ஒரு தாய்மை தெரிந்தது. புதிய களத்தில் கைப்பிடித்து, நடக்கக் கற்றுக் கொடுக்கும் பொறுமை தெரிந்தது. எனக்கு ஆர்வ மேற்படுத்தும் வகையில் அதை அறிமுகப்படுத்தியது, ஊக்குவித்தது, உழைக்க வைத்தது, எல்லாம் அவர்தான். எப்படிப்பட்ட முக்கியமான திருப்பம் என் வாழ்வில்! என் எதிர்காலமே இந்தக் கணக்கியலில் தான் என்று புலப்பட்ட காலம் அது. முதலடியை எடுத்து வைத்தது அப்பொழுதுதான். இத்தனை வருடங்கள் கழித்து இன்றும் மானசீக குருவாய் அவர்.

தொலைபேசி அழைத்தது. உணவு வேளையில் யாராக இருக்கும்?

"ஹலோ... மிஸஸ் ஸ்ப்ரிங்ஸ்டர்..?... நலமாக இருக்கிறேன். நீங்கள்?....மிஸ்டர் ஸ்ப்ரிங்ஸ்டர்..? நானே கூப்பிட வேண்டும் என்றிருந்தேன். கொஞ்சம் வேலை அதிகம். உங்கள் செய்தி கிடைத்தது.... அவரா...? நன்றாக இருக்கிறார். நான் அலுவலகம் செல்லும் நேரம் சிறிது வெறுமையாக உணர்கிறார்... உங்கள் பட்டாம்பூச்சிகள் எப்படி இருக்கின்றன? ... காத்துக்கொண்டிருக்கிறீர்களா?... பார்க்கலாம், எனக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது... கட்டாயம் சந்திக்கலாம். இந்த மாத இறுதிவரை வேலை இருக்கிறது. அடுத்த மாதம் எப்படி?.. கூட்டி வருகி றேன். நேரே சந்திக்கலாம். மிஸ்டர் ஸ்ப்ரிங்ஸ்டரை விசாரித்தேன் என்று சொல்லுங்கள்... அழைத்ததற்கு நன்றி."

தொலைவுகளுக்கு அப்பால் சம்பந்தமே இல்லாத ஒரு வயோதிக தம்பதியின் அன்பில் ஆறுதலும், அருகாமையும். இது போன்ற அரிய தூறல்களின் மண்வாசனையுடன் வாழ்க்கை.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

கார்லும் மனீஷ¤ம் நின்றிருந்தார்கள்.

"சாப்பிடப்போகிறோம். உங்களையும் அழைக் கலாம் என்று தோன்றியது. சேர்ந்துகொள்ள விருப்பமா?" என்றான் மனீஷ்.

கார்லின் நீலப்பச்சைக் கண்களில் ஒரு "லட்சியம் தெரிந்தது. நான் தலையாட்டி அவர்களுடன் கிளம்பினேன்.

அந்த வங்கியின் பெயர்ப்பலகையில் வானிலை வெப்ப அளவு 55 F என்று காட்டியது. குளிர் குறைந்திருந்தது. நடந்துபோகும் மக்களிடம் மலர்ச்சியும் சுறுசுறுப்பும் தெரிந்தன.

"அடுத்த வாரத்தில் இன்னும் வெப்பம் ஏறும் என்று சொல்கிறார்கள். மாதங்களாக தூங்கும் என் மிதிவண்டிக்கு விடுதலை..." என்றான் கார்ல்.

"உனக்கு மிதிவண்டி ஓட்டுதல் பிடிக்குமோ?"

"நிறைய.. மெக்ப்ரைட் ஏரி அருகே ஒரு மேட்டு பாதை இருக்கிறது. ஓட்டுவதற்கேற்ற பாதை."

"மெக்ப்ரைட் ஏரியே மிகவும் ரம்மியமான இடம். போன கோடையில் கடைசியாக சென்றது.." என்றேன்.

மனீஷ் மிகவும் மௌனமாக வந்தான்.

"ஆழ்ந்த சிந்தனையோ?"

"இல்லை." என்று சிரித்தான்.

சீன வேக உணவகம் ஒன்றில் நுழைந்தோம். சிறிது நேரம் உணவு பற்றி பேச்சு சுழன்றது. சீன உணவு, இந்திய உணவு, இத்தாலிய உணவு வகைகள் என கார்ல் பலவற்றையும் பற்றிப் பேசினான். மனீஷ் அதிகம் பேசவில்லை. பேச்சு ராக்வெல் நிறுவனத் திற்கான ஆராய்ச்சியில் வந்து நின்றது.

"ஆராய்ச்சிக்கான திட்டத்தை அவர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் தற்போதைய நிலைமை."

"ஏன் இத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கிறார் கள்?"

"ஒரு மில்லியன் டாலர் கார்ல். முதல் முறையாக நான்கு நிறத் தேற்றத்தைப் பயன்படுத்தி அவர்கள் பிரச்சனைக்குப் புதுமையான தீர்வைத் தேட முனைகிறோம் இல்லையா? மேலும் எத்தனை மிண்ணனு சாதனங்கள் தேவை... எத்தனை மாணவர் கள்... சாதாராண ஆராய்ச்சி இல்லை."

"இது யோசனைக்கான தாமதமாக மட்டும் தெரியவில்லை." என்றான் மனீஷ்.

அவனை ஏறிட்டுப் பார்த்தேன். அவன் சிரிக்க வில்லை. முகத்தில் சிரத்தை காட்டினான்.

"நீ கணித்தது சரி மனீஷ். இன்னும் உழைக்க வேண்டும். முன்மாதிரி(Prototype) கேட்கிறார்கள்."

கார்லிடம் மெல்லிய அதிர்வு. சில நிமிடங்கள் மௌனம்.

"அதற்குத்தான் திட்டம் போட்டுக்கொண்டிருக் கிறேன். நாம் ஆராய்ச்சிக்காக கூடும் பொழுதில் பேசலாம்."

மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தோம். மெக்லீன் ஹால் வரும் வரை ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

"எனக்கு நூலகத்தில் வேலை இருக்கிறது. பிறகு சந்திப்போம்" என்று விடைபெற்றுக்கொண்டான் மனீஷ்.

நானும் கார்லும் மேலேறினோம்.

"பிறகு சந்திக்கலாமா?" என்றேன் அலுவலக வாயிலில் நின்றுகொண்டு.

"சரி டாக்டர் நிர்..மலா." என்றவன் வகுப்பறைகளை நோக்கி நகர்ந்தான்.

"டாக்டர்..."

குரல் கேட்டுத் திரும்பினேன்.

"என்னுடைய மாமா..."

கேள்விக்குறியுடன் கார்லைப் பார்த்தேன்.

"என்னுடைய மாமா ராக்வெல் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையின் இயக்குனர்." என்றான்.

பனியுருகி வெப்பம் ஏறிக்கொண்டிருப்பதன் அறிகுறியாய் மழை நீர் போல் பழுப்பு நிறத்தில், ஐயோவா நதியின் பிரவாகம். பனிக்கால நீள்தூக்கம் கலைந்து வெளிவரும் உயிரினங்களின் புத்துணர்ச் சியுடன் மனிதர்கள். மொட்டை மரங்களிலெல்லாம் பூமொட்டுக்கள், வசந்தத்தை அவிழ்த்துவிட காத்தி ருந்தன. டா·ப்டில்களின் பசும்மஞ்சள் மொட்டுக்கள் வான் நோக்கி துருத்திக் கொண்டிருந்தன. இயற் கையே புதியதொரு வண்ணக்கலவைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. காற்று மிக லேசாக வருட, நானும் பெரியப்பாவும் சூழ்நிலையின் ரம்மியத்தில் மயங்கி நதியை ஒட்டிய பாதையில் நடந்துகொண்டிருந் தோம்.

"இரண்டு வாரம் முன்ன ஊசிக்குத்தறாப்பல குளிரிகிட்டிருந்த ஊரா இது? நம்பவே முடியல நிர்மலா."

நான் பதிலுக்குப் புன்னகைத்தேன்.

எனக்குக்கூடத்தான் நம்பமுடியவில்லை. பத்து வருடங்களுக்குமுன் நான் பார்த்த பெரியப்பாவா இவர்? பெரியப்பாவின் கூட எடுபிடியாய், கூப்பிட்ட குரலுக்கு ஏவலாளாய் நான் கூடவே நிற்கவேண்டும். தறியில் அமரவேண்டுமா, நூற்கண்டுகளை சுமக்க வேண்டுமா, மளிகை வாங்கவேண்டுமா, கொல்லைப் புறம் சுத்தம் செய்ய வேண்டுமா, சுவற்றைப் பூசும் கொத்தனாருக்குத் துணை நிற்க வேண்டுமா, பரண் ஒழிக்க வேண்டுமா, வீட்டு வேலைகளா எல்லா வற்றிற்கும் கூப்பிடு நிர்மலாவை. "மனோ எதுக்கு? நிர்மலா எங்க?.... இந்தப் புள்ள படிச்சு என்ன செய்யப்போகுது? ஒளிஞ்ச நேரத்துல படிச்சுக் கட்டும்." என்றெல்லாம் சொன்னவர்.

"எங்கிருந்து இப்படித் தண்ணி ஓடி வருதம்மா? மள பெய்யுதா எங்கனாச்சும்?"

"எத்தன மாசமா பனி கொட்டிக்கிட்டிருந்திச்சி. எல்லாம் உருகுதுங்க பெரிப்பா."

உறைந்து போன என் நினைவுகளும் கூட.

"இரண்டு மூணு வாரமா ஒரே வேலை வேலைன்னு போயிட்டருந்தியேம்மா. முடிஞ்சிடிச்சா? உன்ன பாக்குறதே அபூர்வமா போச்சம்மா. அப்பிடி என்னாத் தான் வேலையோ.. எனக்குப் பொளுதத் தள்ள முடியல."

"இல்லங்க பெரிப்பா. இன்னும் நடந்துகிட்டுத்தான் இருக்கு. மில்லியன் டாலர் க்ராண்டு. இது கிடைச்சு துன்னா.... அதுக்குத்தான் ஒரே வேலை. முடியறாப்பல தான். பசங்க மூணு பேரு என்னோட சேர்ந்து வேலை செய்யறாங்க. நடுவுல பாடங்க வேற.... தவறா நினைக்காதீங்க பெரிப்பா."

"எனக்குப் புரியுதம்மா. பவர் லூம் மிஸினுங்க வாங்கிப் போடணுமின்னு ஒரு காலத்துல பேயா உளச்சிருக்கேன். அத வாங்கினப்புறவும் ஒத்த ஆளா தொண்டாமுத்தூருக்கும் டவுனுக்கும் எத்தன தடவ அலஞ்சிருப்பேன். அதெல்லாம் ஞாபகம் வருது நிர்மலா. அந்த மாதிரி வயசுல உளச்சாத்தான் உண்டு. இல்லாங்காட்டி இன்னிக்கு அத்தினி விசத் தறிங்க நமக்குச் சொந்தமாயிருக்குமா சொல் லும்மா?"

நான் இல்லையென்று தலையாட்டினேன்.

சொந்தமாயிருக்காதுதான். இவரை ஒப்பிடும் போது மனோ.... அவனுக்குப் பள்ளி நாட்களிலேயே அனேக செல்லம். பரீட்சைகளில் அவன் தோற்கும் பொழுதெல்லாம், வாத்தியாருக்கு இலவச துணி போகும். தேவாங்கா பள்ளியின் வகுப்பறைகளில் அவன் இருந்ததைவிட ஆர்.எஸ் புரத்தின் குறுகிய சந்தொன்றின் டீக்கடையில் வேலையற்ற இளைஞர் களின் கூட்டத்திலும் அங்கிருக்கும் பெண்கள் மேனிலைப் பள்ளியின் வாயிலிலும் இருந்தது தான் அதிகம்.

அவனுக்கும் எனக்கும் ஒரு வகுப்பு தான் வித்தி யாசம். அவனது வீட்டுப் பாடங்களை செய்துதரும்படி மிரட்டுவான். இல்லையெனில் என் முடிக்கற்றை அவன் கைகளில் இழுபடும். நாள்பட நாள்பட வெறும் வார்த்தை மிரட்டல்களே என்னை பயமுறுத்தி அவனுக்கான பாடங்களைச் செய்துதர வைத்துவிடும்.

பெரிம்மா 'எங்கே போகிறாய்?' என்று கேட்ட தில்லை அவனை. பெரியம்மா கேட்கிறார்கள் என்று பெரியப்பா போலிச் சமாதானத்துடன் தன் கம்பெனி யில் மூழ்கியவர். புகைப்பழக்கம், மது என்று அவனது சகவாச தோஷங்கள் மெல்ல மெல்ல தெரியவந்த பொழுது முதலில் நம்பாமல், தாங்களே கண்ட பொழுதும் காணாதது போல் நடிக்க ஆரம்பித்தனர். படிப்பு ஏறவில்லை என்று தெரிந்தும், எப்படியோ அரசாங்கக் கலைக்கல்லூரியில் சேர்த்து விட்டனர். ஒரு பி.காம் படிப்பை ஐந்து வருடங்கள் படித்தான். முடித்தானா இல்லை அங்கேயும் காசு கொடுத்துச் சான்றிதழ் வாங்கப்பட்டதா தெரிய வில்லை.

தண்ணீரில் மிதந்து வந்து கொண்டிருந்த ஒரு காய்ந்த மரக்கிளையை அவர் கண்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. பக்கத்தில் இருந்த பெஞ் சொன்றில் அமர்ந்துகொண்டோம். எங்கிருந்தோ ஒரு வாத்துக்கூட்டம் நீரில் மிதந்து வந்து கரை யேறியது. பழுப்பு நிறத்தில் வெள்ளையும், மஞ்சளும், கருப்புமாய்ப் புள்ளிகள். கழுத்தில் மினிமினுக்கும் பச்சை. சத்தமிட்டுக்கொண்டு வந்து எங்களைச் சுற்றி அமர்ந்துகொண்டன. எழுந்து கொண்டால் ஓடிவிடும் போலிருந்தது. குளிர் காலத்தில் எங்கே இவை யெல்லாம் மறைந்திருந்தன? இறகுகளுக்கு அடியில் சூட்டை சேமித்து வைத்திருந் திருக்குமோ? சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம்.

"எப்படிலாமோ அடிச்சிக்கிட்டு வந்து கரை சேர்ந்துருக்கேன்ம்மா. இப்போ அதெல்லாம் நினச்சா.."

இவருக்குள் கூட உருவகங்களா?

"குடும்பமா உக்கார்ந்துகிட்டு அவளோடையும், மனோவோடையும், அவன் பொண்ஜாதி எல்லாரோ டவும் இந்தப் பழங்கதையெலாம் பேசி, சிரிச்சு சாப்புட்டு... ஆசைங்க நிறையத்தான் இருக்கு."

"நான் வீட்டுல இருந்தா மனோ இருக்கறதில்ல. அவளுக்கும் எனக்கும் இந்த விசயத்துல வாய் வார்த்தைப் பேச்சு சச்சரவா போச்சு. அவளும் முன்ன மாதிரி பேசறதில்ல. யாருகிட்ட சொல்லி அளுவற துன்னு ரொம்ப வெறுத்துப்போய் இருந்தேன். நீ மட்டும் கூப்பிடாம இருந்தா, மூள கலங்கிப் பைத்தி யமாயிருப்பேன் நிர்மலா.."

அழுகிறாரா? இல்லை பச்சாதாபத்தை எதிர்பார்க் கும் முகத்துடன் வாத்துக்களை கவனித்துக் கொண்டி ருந்தார்.

"நீ அமேரிக்கா வந்தப்புறவு ஒரு சுமை ஒளிஞ்சு துன்னு உங்க பெரிம்மா இருந்தாங்க. ஆனா ரொம்ப பெரிய சுமை பொறுப்புக்கெட்ட ஒரு புள்ளதாம்மா."

வழக்கம்போல் நான் அமைதி காத்தேன்.

"முன்னமாதிரி உனக்கும் எங்களோட ஒட்டுதலும் உறவும் இப்போ இருக்கறதில்ல." ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம். பத்து வருடங்களுக்கும் மேலான பிரிவு. இந்தத் தூரத்திற்கும், வருடங்களுக்கும் முன் பழைய உறவுகள் என்ன செய்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்? அதிலும் சுமுகமற்ற உறவுகள் என்றால்? முதல் தடவையாக அமெரிக்க விற்கு விமானமேறியபோது விமானத்துடன் சேர்ந்து என் மனமும் விடுதலை உணர்வில் பறந்தது எத்தனை பசுமையாய் நினைவில். இனி இவர்கள் உறவே வேண்டாம் என்று உதறும் மனப்பான்மையில் தான் அன்றெல்லாம் இருந்தேன். திரும்பிச் செல்லவே கூடாது என்ற வைராக்கியம். ஆனால் வாழ்வில் விருப்பங்களும், ஆசைகளும் மாற, இதே தூரமும் வருடங்களும் எல்லாவற்றையும் மன்னிக்கும் பக்குவத்தையும் கொடுத்துவிட்டது. ஒரு பற்றற்றத் தன்மை தலைக்கேறிவிட்டது. 'எனக்கென்று இருப்பது இவர்கள்தான், தனிமையில் எத்தனை நாட்கள்' என்றெல்லாம் சமாதானங்கள். அப்பொழுது கூட பெரியம்மாவிற்கு வர இஷ்டமில்லை என்பது கொஞ்சம் வருத்தத்தை அளித்தது. பெரியப்பா மட்டும் வந்தார். அவரும் வர மறுத்திருந்தால்... என்ன செய்திருப்பேன்? சிறகு முளைத்துப் புலம் பெயர்ந்து வெகு தொலைவு பறந்து வந்தாகிவிட்டது. ஒன்றும் பெரிய இழப்பில்லை. பெரியப்பா சொல்வதுபோல் ஒட்டுதலும் உறவும் இப்பொழுது இல்லைதான் என்று புரிகிறது. நான் இப்பொழுது உணரும் அந்நியத் தன்மைகூட இதனால்தானோ?

வாத்துக்களின் மீதான என் நிலைக்குத்திய பார்வை யும், என் மௌனமும் அவரை கலங்கடித் திருக்க வேண்டும்.

"எங்களலாம் விட்டு நீ ரொம்ப தூரம் போயிட்ட நிர்மலா."

"எங்கியும் போயிடலைங்க பெரிப்பா. இங்கதான் உங்க பக்கத்துல தான் இருக்கேன். ஊரப் பத்தின கவலையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வையுங்க. வாங்க எழுந்து நடப்போம்."

பெருமூச்சுடன் அவர் எழுந்தார். வாத்துக்கூட்டம் சிறகடித்து நகர்ந்து சென்று தண்ணீரில் இறங்கியது. எனக்குப் பேச்சை மாற்ற வேண்டும் என்று தோன் றியது.

"இங்க படிக்க வர்ற வெளிநாட்டு மாணவங்களுக்கு, யூனிவர்சிட்டில ஹோஸ்டு ·பேமிலின்னு ஒரு குடும்பத்தை தேர்வுபண்ணி சேர்த்துவிடுவாங்க. வீட்டையே நினச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு இந்த ·பேமிலி ஒரு ஆறுதல் மாதிரி. இது நம்ம கலாச்சாரத்தப் பத்தி அவங்களும், அவங்களப் பத்தி நாமளும் தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு மாதிரியும். எங்கேயாச்சும் மாணவன கூட்டிக்கிட்டுப் போவாங்க. இல்ல டின்னர் குடுப்பாங்க. இப்படி ஒண்ணு இல்ல இரண்டு மாசத்துக்கு ஒரு தடவ நடக்கும்."

அவர் பேசாமல் கேட்டுக்கொண்டு வந்தார். முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது.

"அது மாதிரி எனக்கு ஒரு குடும்பம் எட்டு வருசத்துக்கு முன்னாடி இங்க கிடச்சுது. அன்னிக்கு நம்ப ஆன்ஸரிங் மிஸின்ல தகவல் விட்டிருந் தாங் களே... அவங்கதான். மிஸஸ். ஸ்ப்ரிங்ஸ்டர். உங்கள மாதிரி அறுவது வயசாவுது அவங்களுக்கு. ரொம்ப வித்தியாசமான பொம்பள. பட்டாம் பூச்சின் னா அவங்களுக்குக் கொள்ள உசிரு. அவங்களும் சரி, அவங்க வீட்டுக்காரரும் சரி, ரொம்ப ரொம்ப நல்ல மனுசங்க. என்னை சொந்த பொண்ணு மாதிரி பாத்துப் பழகறவங்க."

"எதுக்கு சொல்ல வர்றேன்னா அவங்கள சந்திச்சு நாளாச்சு. இந்த "ஞாயித்துக்கிளமை கூப்பிட்டுருக் காங்க. உங்களையும் கூட்டிக்கிட்டு வரச் சொல்லி யிருக்காங்க. வர்றீங்களா பெரிப்பா?"

ஏதோ புதுமையாக இருக்கிறதே என்ற வியப்பு அவரது முகத்தில் தெரிந்தது. மெல்ல தலை யாட்டினார்.

கார் நிறுத்தியிருந்த இடம் வந்து விட்டது. ஏறி அமர்ந்தோம். வண்டியை கிளப்பியவுடன் பெரியப்பா கேட்டார்.

"இந்தக் குடும்பம் கிடச்சதும் எங்கள மறந்துட்டாப் பலயா? எங்களவுட்டுப் போயிராத நிர்மலா. நான் உன்னத்தான் மலைபோல நம்பியிருக்கேன். மனோ வுக்கு எதுனாச்சும் வளிபண்ணனும். பண்ணுவி யாம்மா?"

வெண்பனிப்போர்வைக்கடியில் பலநாட்கள் சிறைப்பட்டிருந்து, நீண்ட பிரிவுக்குப்பின் நீலவானம் பார்க்கும் பூமி. மஞ்சள் டா·போடில் மலர்களில் சந்தோஷத்தைக் காட்டும் பூமியின் புன்னகைகள் என்னையும் பற்றிக்கொண்டன. வழி நெடுக சாலை ஓரங்களில் இருந்த வெற்று மரக்கிளைகளில் எல்லாம் அடை அடையாய் பிங்க் நிறப் பூக்கள். பூவிதழ்களின் மென்மைக்கு மதிப்பளிக்கும் இதமான சூரியகதிர்கள். இயற்கையின் வசந்த கால கலவையில் பளீரிடும் வண்ணங்கள். இடம்பெயர்ந்து காணாமல் போயிருந்த பறவைகளிடம் பிறந்த வீடடைந்த குதூகலம். கார் கதவின் கண்ணாடியைத் திறந்தேன். வேகமாய் வந்தறைந்த காற்றில் தூக்கலாய் மகரந்த வாசம். மிஸஸ். ஸ்ப்ரிங்கஸ்டருக்கு மிகவும் பிடித்த பருவம் இது என்பது ஞாபகம் வந்தது.

"என்னங்க பெரிப்பா, பேசாம வர்றீங்க?"

"ங்ங்..." - ஏதோ சிந்தனையில் இருந்தவர் சுதாரித் துக்கொண்டார்.

"ஒரே பூவுங்களா பூத்திருக்குப் பாத்தீங்களா பெரிப்பா?"

"ம்ம்... பார்த்தேன்மா."

ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தேன். வயது ஏற ஏற ரசனை மரத்துவிடுகிறதோ?

முகத்தில் அறைந்த காற்றின் ஓசை அதிகரிக்க நான் கார் கதவின் கண்ணாடியை ஏற்றினேன். காருக்குள் மீண்டும் அமைதி. புல்வெளிகளும், மரங்களும் பின் னோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. சில நிமிடங்கள் கழித்து, இருமருங்கிலும் சோளவயல்கள் தெரிய ஆரம்பித்தன.

"இன்னும் தொலைவு போகணுமாம்மா.?"

"இங்கதான் இன்னும் பதினஞ்சு நிமிஷம். பக்கத்துல வந்திட்டோம்."

சிறிது நேரம் கழிந்தது.

"உன்னோட க்ராண்ட் விசயம் என்னாச்சு நிர்மலா?'

"ஒரு முன்மாதிரி தயாரிக்கறதுல முனைஞ்சிருக் கோம் பெரிப்பா. நிறைய வேலை இருக்கு அதுக்கு."

"யாரோ உங்கீழ படிக்கறானியே. அவங்க உறவுக் காரவங்க கூட அங்க இருக்கறதா.... அவன்கிட்ட அப்பிடி இப்பிடி சொல்லி.."

நான் மௌனமாக இருந்தேன்.

என்னைச் சில கணங்கள் உற்றுப் பார்த்தார்.

"உங்கப்பன போலம்மா நீ.." என்று சொல்லிவிட்டு ஜன்னலுக்கு வெளியே தூரத்துச் சோளப் பயிர்களை நோக்கினார். பச்சைப் பசேலென்றிருந்த அதன் நாற்றுக்களில் இளமைத்துள்ளல் மிடுக்காய்த் தெரிந்தது.

என் அப்பா என்ன செய்திருப்பார் என்று யோசித் தேன். கார்லைப் பயன்படுத்தும் எளிதான பாதையைத் தேர்ந்தடுத்திருப்பாரா? இல்லை உழைத்திருப்பாரா? என் வாத்தியார் - மானசீக குரு என்ன செய்திருப் பார்?

வயல்களுக்கு நடுவில் அந்த வீடு தெரிந்தது. மண்வகிடு போன்ற சாலையில் திரும்பி வீட்டருகில் சென்று நிறுத்தினேன்.

"இதுதாங்க பெரிப்பா.."

இறங்கி நடந்தோம். வாசலில் பலவித வண்ணங் களில் குவளை குவளையாய் டூலிப் மலர்கள். சூரியனைப் பிரகாசமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தன.

இரண்டு மேப்பில் மரங்களை இணைக்கும் ஒரு நூல்வலை ஊஞ்சலில் மிஸ்டர் ஸ்ப்ரிங்ஸ்டர் ஆடிக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்க முன்வந்தார்.

"ஹலோ நிர்மாலா. எப்படி இருக்கிறாய்? ஹலோ, என் பெயர் எட்வர்ட் ஸ்ப்ரிங்ஸ்டர்..." என்று பெரியப்பா விற்க்குக் கைகொடுத்தார்.

"நான் நன்றாக இருக்கிறேன். இவர்தான் என் தந்தையின் சகோதரர்." என்றேன்.

"மருதமுத்து செல்வம்." என்றபடி பெரியப்பா பதிலுக் குக் கைகுலுக்கினார்.

"எப்படி இருக்கிறீர்கள்? நிர்மாலா உங்களைப் பற்றிச் சொன்னாள்."

"நன்றாக இருக்கிறேன். நீங்கள்?"

"நானும் நன்றாக இருக்கிறேன். நன்றி. உங்கள் ஆங்கிலம் வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் பெயர் கூட.." என்றென் பெரியப்பாவைப் பார்த்துச் சொன்னார்.

"எங்களை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட பிரிட்டிஸாரின் ஆங்கில மிச்சங்கள் எங்களிடம் எஞ்சியுள்ளது." என்றேன் நான்.

"எனக்கும் கூட நீங்கள் உச்சரிக்கும் விதம் சிறிது கடினமாக இருக்கிறது. " என்றார் பெரியப்பா.

நான் ஆங்கிலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கத் தயாரானேன் என் பெரியப்பாவிற்காக.

"வாருங்கள். பின்பக்கம் தோட்டத்தில் இருக்கி றாள். அவளை சந்திப்போம்." என்று அவர் எங்களை பின்புறம் அழைத்துப்போனார்.

பூக்கள், பூக்கள், பூக்கள் - எங்கு திரும்பினாலும் பூக்கள். பல வண்ணங்களில், பல வடிவங்களில், பல உயரங்களில், அடுக்கடுக்காய்க், கொத்தாய், தனித் தனியாய் என பற்பலவித பூக்கள். வசந்தமே திரண்டி ருந்தது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில். வரிசையாக மேப்பில் மரங்கள். அளவாக சரைக் கப்பட்ட புல்வெளிகள்.

கற்களாலான ஒரு ஒற்றையடிப் பாதையில் நடந்தோம். முடிவில் பலவித சிறு சிறு செடிகள். அவற்றின் மேலெல்லாம் பழுப்பு நிறத்தில் கோடுகள். தடித்தக் கோடுகள். மெலிந்த கோடுகள். குட்டை யான கோடுகள். உற்றுப்பார்க்கையில்...

"ஐய்ய... ஒரே கம்பளிப் புழுவுங்க. என்னம்மா இது..?" என்று பயம் கலந்த குரலில் பெரிப்பா அறிவித்தார். ஆமாம். நகரும் கோடுகள். வரி வரியாய் இருந்த பழுப்பு உடம்பில் மஞ்சள் புள்ளிகள். நூலை செலுத்தும் ஊசியாய் மடங்கி மடங்கி நெளிந்து நகரும் முட்டைப் புழுக்கள். பற்பல இலைகள் கடிபட்டிருந்தன. அவை தான் சாப்பிட்டிருக்கவேண்டும்.

"பயப்படாதீர்கள். இவை எதுவும் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பவையல்ல. உருவம்தான் பயமுறுத் தும். உண்மையில் மிகவும் சாதுக்கள் இவை." என்று பயம் விலக்க முயன்றார் மிஸ்டர் ஸ்ப்ரிங்ஸ்டர்.

"நான் சொல்லியிருக்கிறேனே பெரியப்பா, மிஸஸ். ஸ்பிரிங்ஸ்டருக்குப் பட்டாம்பூச்சி வளர்ப்புதான் பொழுதுபோக்கு என்று"

அவற்றையெல்லாம் கடந்து நடந்தோம். பாதை முடிவில் ஒரு தாழ்ந்த மரக்கிளை ஒன்றின் பக்கத்தில் ஒரு நாற்காலியில் மிஸஸ் ஸ்பிரிங்ஸ்டர் எங்களுக்கு முதுகைக் காண்பித்து அமர்ந்துகொண்டிருந்தார்கள்.

பின்புறமாகச் சென்று நாங்கள் நின்றோம். அவர் கள் கவனம் அந்தத் தாழ்ந்த கிளையிலேயே இருந்தது. மிஸ்டர் ஸ்பிரிங்ஸ்டர் அவர்களின் தோள் தொட்டார். திரும்பிய அவர் எங்களைக் கண்டதும் ஆச்சர்யப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

"வாருங்கள்! எப்பொழுது வந்தீர்கள்? நலமாக இருக்கிறீர்களா?" என்றபடி எழுந்து என்னைக் கட்டித் தழுவிகொண்டார். ஹா! என்ன சுகமான அரவ ணைப்பு. சில நொடிகள் அவர்கள் கைக்குள்ளே அடங்கி நின்றேன். பிறகு என்கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் கண்களில் கள்ளமில்லாத ஒரு பாசம் தெரிந்தது.

நான் பெரியப்பாவையும் அவர்களையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.

"என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டேன். அவர்கள் அந்தக் கிளையை காண்பித் தார்கள்.

சாம்பல் நிறக் கிளையில் அப்படி என்ன இருக்கிறது என்று உற்று கவனித்தோம். முதலில் ஒன்றும் புலப்பட வில்லை. பிறகு உத்திராட்சக் கொட்டை போல் ஓர் உருண்டை, மரக்கிளையின் நிறத்திலேயே ஒட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதன் மேல் பகுதியில் ஒரு சிறு மணித்தக்காளியளவு உருவம் ஒன்று அசைந்தது. அப்படியும், இப்படியுமாக அது அசைந் ததில் அந்த உருண்டைக் கூடு மிக மெல்லிதாக விரிய ரம்பித்தது. அந்தச் சிறு தலையுருவம் முட்டி மோதி யது. கூட்டின் சுவர்கள் சற்று வலுவாக உள்ளனவோ? அது போராட முனைந்தது. தலை முன் தள்ள தள்ள உடலின் மேற்பகுதி தெரிய ஆரம்பித்தது. உடல் இயல்புக்கு மீறிய பருமனாக தெரிந்தது. அந்த உடம்பில் ஒட்டியபடி மடங்கியிருந்த அதன் இறக்கை கள் சிறிது நேரத்தில் தென்பட்டன. அதன் முக்கால் வாசி உடல் கூட்டுக்குள் சிக்கிக்கொண்டிருந்தது.

"இந்த வசந்தத்தில் என் தோட்டத்தில் ஜனிக்கும் முதல் பட்டாம்பூச்சி இது" என்று சிலாகித்துச் சொன்னார்கள் மிஸஸ். ஸ்பிரிங்ஸ்டர்.

"இனி இது மெல்ல மெல்ல கூட்டைக் கிழித்து கொண்டு வெளிவரவேண்டும். அரை மணி நேரத்திற் கும் மேல் இதன் போராட்டம் நீடிக்கும்."

பெரியப்பாவிற்கு இதெல்லாம் முதலில் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். பட்டாம் பூச்சியின் வளர்சிதைமாற்றத்தை (metamorphosis) முதல் முறையாக அவர் பார்க்கிறார் என்றும் தோன்றி யது. அதன் போராட்டம் அவரிடம் ஒரு பச்சாதா பத்தை ஏற்படுத்தியதை அவர் கண்கள் காட்டின.

சிறிது நேரம் முன்பு பார்த்த முட்டைப் புழுக்கள்தான் நன்கு உண்டு கொழுத்தவுடன் தகுதியான ஓரிடத் தைத் தேர்ந்தெடுத்து தன்னைச் சுற்றிக் கூடொன் றை வளர்த்துக்கொண்டு மற்றொரு மாற்றத்திற்குத் தயாராகும் என்று மிஸ்டர்.ஸ்பிரிங்ஸ்டர் என் பெரி யப்பாவிற்கு விளக்கினார்.

"நம்ப ஊருங்கள்ல பட்டுப்புழு வளப்பாங்களே... அது மாதிரி தானே..?" என்று அவர் என்னிடம் கேட்டதை நான் அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அவர்கள் ஆமோதித்தார்கள்.

"நாம் உள்ளே செல்லலாமா?" என்று கேட்டார்.

எனக்கு அந்தப் பட்டாம்பூச்சி வெளிவருவதைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வம் பிறந்தது. மிஸஸ். ஸ்ப்ரிங்ஸ்டருக்குக் கூட இருந்து கவனிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அவர்கள் நிறைய முறை இப்பிறப்பைத் தன் தோட்டத்திலே பார்த்திருக் கிறார். எத்தனை வசந்தங்களை அவர் அனுபவித் திருப்பார்!

"இருந்து இதப் பாத்திட்டு.. " நான் சொல்லி முடிப்பதற்குள் பெரியப்பா குறுக்கிட்டார்.

"இல்ல நிர்மலா. அது போராடறத எதுக்குப் பாத்துக்கிட்டிருக்கணும். இதெல்லாம் இயற்கையில சகஜம் தான்மா. நாம வயித்துக்குள்ளேயே பத்து மாசம் கிடந்து வெளிய வாரோம். இதுங்க முட்டை யிலேந்து வெளியேவந்து சாப்பிட்டு திரும்பவும் கூட்டுக்குள்ளாற போய் வளர்ந்து வெளிய வருதுங்க. நமக்கும் பிரசவத்துல போராட்டம் தானே... இதுங்க மாதிரி."

நான் அவர்களுக்கு மொழிபெயர்த்தவுடன், மிஸஸ். ஸ்ப்ரிங்ஸ்டர் பதிலளித்தார்கள்.

"நீங்கள் சொல்வது உண்மைதான். நமக்கும் அதற்கும் நிறைய ஒற்றுமைகள் பிறப்பில் இருக்கின் றன." என்றார்.

நாங்கள் திரும்பி வீட்டிற்கு நடந்தோம்.

எட்வர்ட் ஸ்பிரிங்ஸ்டர் கால்பந்தாட்ட மைதான மேற்பார்வையாளாராக இருந்து ஓய்வு பெற்றதையும், மிஸஸ். ஸ்பிரிங்ஸ்டர் விமானப் பணிப்பெண்ணாக இருந்து ஓய்வு பெற்றதையும் பெரியப்பாவிற்குச் சொன்னேன். அவர், தான் விசைத்தறி நூற்பாலை வைத்து நடத்தி வருவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்.

பேச்சு தொழில், வேலை, சென்ற இடங்கள் என்று சுழன்றது.

வீட்டை ஒட்டித் தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒரு குடையின் கீழ் அமர்ந்து கொண்டோம்.

"உங்கள் மனைவி..?" என்றுபெரியப்பாவை நோக்கிக் கேட்டார் மிஸ்டர் ஸ்பிரிங்ஸ்டர்.

"இல்லை. அவளை வேலைக்கு அனுப்பவில்லை. அவளுக்கு ஆர்வமும் இல்லை."

"நீங்கள் தான் நிர்மாலாவை வளர்த்துப் படிக்க வைத்ததாக பெருமையாக சொல்லுவாள் இவள். இது போன்று உறவுகளை விட்டுக்கொடுக் காமல் இருக்கும் பண்பு இந்தியர்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது."

பெரியப்பா ஒரு நிமிடம் புகழ்ச்சியில் திக்கு முக்காடினார். குற்றவுணர்விலும் என்றுகூட சொல்ல லாம். எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்த அவரின் குற்றவுணர்வு.

"என் அப்பா கூட எனக்குப் பதினெட்டு வயதாகும் பொழுது இறந்துபோய்விட்டார். எங்களுக்கு என்று யாரும்... என் அம்மா பிறகு ஒரு வேலைக்கு போக ஆரம்பித்தாள். நான் அப்பொழுதுதான் அவளுக்குப் பாரமாக இருக்கவேண்டாம் என்று முடிவுசெய்து தனியே வந்து, மிக மிக கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறேன்." என்றார் எட்வர்ட் ஸ்ப்ரிங்ஸ்டர்.

"எட். நம் கலாச்சாரத்தில் இது வழக்கம்தானே. நான் கூட என் தாய் தந்தையை இருபது வயதில் பிரிந்தேன்."

ஆமாம், உங்களது இந்த வழக்கம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் பிள்ளைகளை பெண்ணாக இருந்தாலொழிய நாங்கள் பிரிவ தில்லை. என் காலத்தில் பொருளாதார நிலை சரியில்லை என்ற நிர்பந்தத்தில்தான் இளமையில் நான் தனியேசென்று வேலை பார்த்திருக்கிறேன். என் பிள்ளைக்கு அப்படி ஒரு நிலை இருக்கவில்லை." என்றார் என் பெரியப்பா.

இது போன்ற சந்திப்புகளில் கலாச்சார ஒப்பீடுகள் தவிர்க்க இயலாதவை போலும். பெரியப்பா மேலும் தொடர்ந்தார், "பெற்றோர்-பிள்ளை உறவு அப்பொழுது எப்படி நிலைக்கும்?"

"பெற்றோர்-பிள்ளை உறவு நிலைப்பதைவிட சுயமாக தன்கையை நம்பியிருக்கும் குணத்திற்கு அதிக மதிப்பளிக்கிறோம் என்று நினைக்கிறேன்."

"அப்படி ஒரேயடியாக முடிவுக்கு வந்துவிட முடியாது. நம் மகன் பில்லி, நம்மிடம் பாசமாகத்தானே இருக்கின்றான் எட்."

"அவன் எங்கிருக்கிறான்?"

"சிகாகோவில் வக்கீலாக இருக்கிறான். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?'

"ஒரே ஒரு பையன்." என்றார் பெரியப்பா.

"என்ன செய்து கொண்டிருக்கிறான்?'

பெரியப்பா சில நொடிகள் தயங்கினார். அவர் தலை குனிந்தது. "அவன் காமர்ஸ் படித்துவிட்டு எனது கம்பெனியைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்." என்றார் என் கண் களைத் தவிர்த்தபடி.

"இன்னும் முழுமையாக அவன் வியாபாரம் கற்றுக் கொள்ளவில்லை. நான் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்." என்று சேர்த்துக் கொண்டார்.

"நிர்மாலாவைப் பார்க்கும்பொழுது உங்கள் மகனும் கெட்டிக்காரானாகத்தான் இருக்கவேண்டும். "

"நிர்மாலா கெட்டிக்காரி மட்டுமல்ல எட். மிகவும் நல்லவள் கூட. என்ன நான் சொல்வது? உங்களை எத்தனைமுறை ஐயோவா மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்று உதவியிருக்கிறாள்" என்றார் மிஸஸ். ஸ்பிரிங்ஸ்டர்.

"பெரிப்பா. அதெல்லாம் பெரிசில்லைங்க. நான் ஜுரத்துல ஒரு மூணுவாரம் படுத்துக்கிட்டுருந்தப்போ இவங்க ரெண்டு பேரும் இல்லாட்டி.." என்று மறுத்தேன் நான்.

"பேசிக்கொண்டேயிருக்கிறோம். சாப்பிடலாம் வாருங்கள்" என்றார் மிஸஸ்.ஸ்பிரிங்ஸ்டர்.

அமெரிக்க உணவுவகைகள்- பிரட், பன், ஸாலட், ஆப்பிள் என பலதும் தயாரித்திருந்தார்கள். பெரியப்பா சிறிது கஷ்டப்பட்டுதான் சாப்பிட்டார்.

மீண்டும் நிறைய கலாச்சார, தொழில்நுட்ப ஒப்பீடுகள்- திருமணம், விவகரத்து, பிள்ளைப்பேறு, பொது இடத்தில் நடத்தை, விருந்தோம்பல், பயணம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி,... விரிந்து கொண்டே போனது பேச்சு.

நடுவில், "எட் எனக்குக் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்தான். என் பணியில், குறுக்கிடாத, என் எண்ணங்களுக்கும் ஆர்வங்களுக்கும் மதிப்பளிக்கும் ஒரு நல்ல கணவர் அவர்." என்று எதற்கோ சொன் னார்கள் மிஸஸ்.ஸ்ப்ரிங்ஸ்டர். பெரியப்பாவின் முகம் சிறிது மாறியது. பெரியம்மாவை நினைத்துக் கொள்கிறார் என்று ஊகித்தேன்.

சாப்பிட்டுவிட்டு மீண்டும் காலாற தோட்டத்தில் நடந்தோம். இன்னும் சில நாட்களில் நெளியும் முட்டைப்புழுக்கள் எல்லாம் பட்டாம்பூச்சிக்களாய் மாறிவிடும் என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

நடந்து வருகையில் அந்தத் தாழ்ந்தகிளையருகில் வந்தோம்.

பட்டாம்பூச்சயின் முக்கால் உடம்பு வெளிவந்து விட்டது. இறக்கைகளை அடிக்க முயன்று படபடத்துக் கொள்ள அந்தக் கூட்டின் சுவர் அகண்டுக் கிழிகிறது. சிறிது நேரம் படபடத்துப் பின் சோர்ந்து அமைதியாய் ஒரு கணம் இளைப்பாறுகிறது. மீண்டும் படபடப்பு. இன்னும் சிறிய பகுதிதான் மிச்சம்.

"நீங்கள் அப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தீர் களே, நமது பிரசவமும் அதன் பிரசவமும் ஒரே மாதிரிதான் என்று. ஆனால் முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது." என்று சொல்லி நிறுத்தினார் மிஸஸ்.ஸ்பிரிங்ஸ்டர்.

ஆவலாகப் பார்த்தேன் நான்.

"இந்தப் பட்டாம்பூச்சியின் உடம்பு.. இதோ தெரிகிறதே.. பாருங்கள். எப்படி இருக்கிறது? முன்பு பார்த்த அளவுக்கு இயல்புக்கு மீறிய பருமனாக இல்லை. இல்லையா? வெளிவருவதற்கு முன் அதன் உடலில் இப்படித்தான் நீர்கோர்த்துக் கொண்டி ருக்கும். இப்படிச் சேர்ந்திருக்கும் திரவம் அனைத்தை யும் அது தன் இறக்கைகளுக்குத் தள்ள வேண்டும். இந்தப் போராட்டத்தின் பின்விளைவாக நிகழப் போவது அதுதான். அப்பொழுதுதான் முழு வதும் கிழித்து வெளிவருகையில் அதன் உடம்பு மெலிந்து, இறக்கைகள் பலத்துப் பறக்கமுடியும். இந்தப் போராட்டம் மிகவும் அவசியம்" என்றார்.

நாங்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருக் கையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

முழுவதும் கிழிப்பட்டுக், கால்களால் கிளையைப் பற்றி, இறக்கைகளைப் படபடத்துப் பறக்க யத்தனித் தது. ஈரமாக இருந்த அதன் சிறகுகள் சிறிது நேரத் தில் காற்றில் உலர, அதன் வண்ணங்கள் தெளிந்து மிகப்பிரகாசமாகியது. (இயற்கைக்கு என் கோலக் கணிதத்தைப் போன்று நிபந்தனைகள் இல்லை போலும். அதன் சிறகுகள் வண்ணமயம்.) ஒரு எம்பல், ஒரு வேகப் படபடப்பு. அடுத்த கணத்தில் அது வானில். அதன் சிறகுகளின் வண்ணக்கோலங்கள் நீல வானின் பின்புலத்தில் மிகவும் ரம்மியமாகத் தெரிந்தது. ஹா! போராட்டத்திற்குப்பின் வரும் சுதந்திரம் அற்புத உணர்வு.

மெக்ப்ரைட் ஏரி மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. கோடை வெயிலின் சூடு தெரியவில்லை. மிக மெல்லிய அலைகள் காற்றினால் கரைமோதிக் கொண்டிருந்தது. சிறு குழந்தைகள் நீரிலும், படுகை மணலிலும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெரியப்பாவும், நானும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தோம்.

என் மனம் மகிழ்ச்சியாகவே இருந்தது. ராக்வெல் நிறுவனத்தினர் கேட்டிருந்த முன்மாதிரி போனவாரம் ஒருவிதமாய்த் தயாராகிவிட்டது. மனீஷ் தான் பாவம். என்னுடன் கடைசி வரை இருந்து உழைத்திருக் கிறான். அவனுக்கு 'இந்த ஆராய்ச்சியின் மூலம் மனித சமுதாயத்திற்கு நேரடி பயனில்லை' என்ற "திருப்தி இருந்தாலும் எனக்காக இணங்கிச் செய்திருக் கிறான். அவனது தார்மீகச் சமுதாயக் கனவுகள்/ குறிக்கோள்களுக்கு என் கோலக்கணிதத்திடம் நேரடி பதிலில்லை. என் கணிதம் சந்திக்கும்/சிந்திக்கும் பிரச்சனைகள் சமூகத்தின் ஏதோ ஒரு நுண்ணியக் கூறில் அடங்கிவிடுகின்றன. அவனிடம் நான் இதை ஒத்துக்கொண்டிருக்கிறேன். மனீஷ் போன்று கவலைப்படும் அறிவுஜீவிகள் என்னை எப்பொழுதும் வியப்பிலாழ்த்துகிறார்கள். சிணுங்கும் குழந்தையைச் சமாதானம் செய்வது போல் இவர்களுக்கு ஆறுதலளிக்கவேண்டும் என்று சில சமயம் தோன்றுகிறது.

மாறாக பெரியப்பா மாதிரி ஆட்கள் சிலசமயம் நடந்துகொள்வது எரிச்சலேற்படுத்துகிறது. மனோ வை எப்படியாவது பேச்சில் கொண்டுவந்துவிடுவது, பழைய பெருமை பேசுவது என எல்லாம் எரிச்சல். என்னைச் சிறுவயதில் ஆட்டிப்படைத்ததையெல்லாம் மறந்துவிட்டுப் பேசுகிறாரா? ஆனால் அப்படியும் குற்றம் சொல்லிவிட முடியாது. பெரியப்பா சிறு வயதில் அப்படி என்னைக் கஷ்டப்படுத்தியிருக்கா விட்டால், எனக்கு அந்த உத்வேகம், உழைக்கும் வெறி மற்றும் பொறுப்பு வந்திருக்குமா என்பது சந்தேகமே. எனக்கு ஸ்பரிங்ஸ்டர் வீட்டுத் தோட்டத் தில் பார்த்த பட்டாம்பூச்சி ஞாபகம் வந்தது.

ஒருவேளை பெரியப்பாவை நான் இங்கு கூப்பிட்டதே அதைப் பறைசாற்றத்தானா? "எப்படியெல்லாம் கஷ்டப்ப்படுத்தினாய்? பார் நான் இன்று எப்படி வந்திருக்கிறேன்" என்று பெருமையடித்துக் கொள்ள வா? அதைக்குறித்துத்தான் இந்த அழைப்பா? தனிமையை விரட்ட என்று எண்ணியதெல்லாம் மேல்பூச்சா?

ஒரு நிமிடம் அதிர்ந்தேன். சிறிது நேரம் மௌன மாக அவரைப் பார்த்தேன். அவர் தூரத்தில் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தார். அப்படியே பெருமை யடித்துக்கொள்வதிலும் என்ன தவறு? என் சொந்த உழைப்பு தானே இந்த உயர்வைக் கொடுத்தது?

இருந்தாலும் அவர் மேல் ஒரு பச்சாதாபம் தோன் றியது. என்னைப் போல் அவர் மகனுக்கும் இதைக் கற்றுகொடுத்திருக்கலாம்.

"பெரியப்பா எப்பொழுது விழித்துக்கொள்வார்?" என்ற கேள்வி மீண்டும் தோன்றியது.

அங்கே தூரத்தில் யாரோ ஒரு பையன் மிதி வண்டி யில் வந்துகொண்டிருந்தான். எங்களைப் பார்த்ததும் நின்றான்.

"வணக்கம் டாக்டர் நிர்..மலா. இனிய ஆச்சர்யம். எப்படி இருக்கிறீர்கள்?"

ஒரு நிமிடம் தடுமாறினேன்.

"நன்றாக இருக்கிறேன் கார்ல். என் பெரியப்பா விற்கு இந்த ஏரியைக் காட்டலாம் என்று.."

அவன் என் பெரியப்பாவிற்குக் கைகொடுத்தான்.

வண்டியை நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் எங்களுடன் வந்து அமர்ந்துகொண்டான். மிதிவண்டியில் இந்த இடத்தில் சுற்றுவது தனக்கு மிகவும் பிடித்தப் பொழுதுபோக்கு என்று அவரிடம் சொன்னான்.

இளைப்பாறும் பட்டாம்பூச்சியின் ஓவியம் என் நினை வில் வந்தது. அதன் மனநிலை ஓய்வுக்காக ஏங்கும் என்னிடம் இப்பொழுது இருப்பதாகத் தோன்றியது.

"பொழுதுபோக்கிற்கு ஊட்டிக்கு எப்பொழுதாவது போவதுண்டு. அதுவும் இப்பொழுதெல்லாம்...." என்று அவர் அவனுக்கு ஏதோ பதில் சொல்ல முனைந்தார்.

நான் ஊட்டிக்குப் போவதை மட்டும் அவனுக்கு அமெரிக்க உச்சரிப்பில் சொல்லிப்புரிய வைத்தேன்.

எனது செல்·போன் கிணுகிணுத்தது. எடுத்துப் பேசினேன். மனீஷ்தான்.

பேசிவிட்டு செல்போனை அணைத்துவிட்டு பெரியப்பாவை நோக்கிச் சொன்னேன், "பெரிப்பா நல்ல நியூஸ். அந்த கிராண்ட்... மாம் கிடச்சாப்பல..."

ஒரு நிமிடம் அவரும் சந்தோஷத்தைக் காட்டினார். அடுத்த நிமிடம் அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.

"உங்கப்பன போலம்மா நீ" என்றார்.

"கார்ல், நாங்கள் தயாரித்திருந்த முன்மாதிரியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். மனீஷ¤க்கு மின்னஞ் சல் வந்திருக்கிறதாம். அந்த கிராண்ட் கிடைத்து விட்டது."

கார்லின் முகத்தில் அதிர்ச்சி. அவனது நீலப்பச்சைக் கண்களில் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

என் மனதில் கூட...

மனுபாரதி

© TamilOnline.com