ஏ.கே. ராமாநுஜம்
பண்பாட்டு பரிவர்த்தனையாளர்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நவீன வளர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்டவராகவே ஏ.கே.ராமாநுஜம் வளர்ந்து வந்தார். இவர் மைசூரில் 1929 ல் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை மேற் கொண்டவர். பின்னர் மொழியியல் துறையின் பிடிப்பு ஆர்வம் கொண்டு தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் தெற்காசிய மொழிகள் மற்றும் பண்பாடு, மொழியியல் துறைகளில் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். இதன் பின்னரே ஏ.கே.ஆரின் ஆர்வத்துக்கும் விருப்பத்துக்கும் அமைய அவரது புலமையும் ஆளுமையும் தக்கவாறு இணைந்து புதுப் பரிணாமங்கள் துலங்க வெளிப்பட்டது. மேலும் ஹார்வர்ட், கலிபோர்னியா, மெக்ஸிகன், பெர்கிலியே, பரோடா, விஸ்கான்ஸின் ஆகிய பல்கலைக் கழகங்களில் வருகைதரு பேராசிரி யராகவும் இருக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். ஆங்கிலம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள புலமை அவரது பன்முக ஆற்றல் மேலும் சிறப்புற்று விளங்க காரணமாயிற்று.

தமிழை தமிழரல்லாதோர் மத்தியில் அறிமுகம் செய்யும் ச்£ரிய பணியை புலமை உணர்வுடனும் படைப்பாக்க உந்துதலுடனும் மேற்கொண்டு வந்தார். இதனை அறிவியல் நோக்கில் தர்க்க ரீதியாக புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துப் பேசியும், எழுதியும் வந்தார்.

இவர் நாட்டார் வழக்காற்றியல் இந்திய இலக்கியம், மொழியியல் ஆகிய துறைகள் சார்ந்து எழுதியிருக்கும் கட்டுரைகள் பல்வேறு ஆராய்ச்சி இதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழ் கன்னட மொழிகளின் ஆக்கத் தன்மைகளை அவற்றின் படைப்பியல் நுணுக்கங்களை வெளிப்படுத்தும் விதத்தில் இம் மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த் தார். இதனால் ஐரோப்பிய சிந்தனை கலாசார மரபுகளுடன் ஊடாட்டம் ஏற்படுத்துவதற்கான வாயில்கள் திறக்கப்பட்டன. ஆங்கில இலக்கியத்தில் உள்ள புலமை, அனுபவம், யாவும் ஆங்கிலத்தில் 'இந்திய இலக்கியம்' என்பதாக அதனது வீச்சுடன் தனித்தனமை துலங்க அறிமுகம் செய்யும் வாய்ப்பு இவருக்கு இயல்பாக அமைந்தது. அதாவது பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு முந்திய கால கட்டத்து இலக்கியத்தின் வீரியம் என்ன என்பதை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்.

நாட்டார் வழக்காற்றியல் மற்றும் இந்திய இலக்கியம் குறித்துத் தெற்காசிய ஆய்வு மையம் வெளியிட்ட தொகுதிகளின் இணைப் பதிப்பாசிரியராக இருந்து தொகுதிகள் வெளிவர காரணமாகியுள்ளார். 'இந்திய நாட்டுப்புறக் கதைகள்' தொகுதியும் ஆங்கிலத்தில் வெளி வருவதற்கும் முயற்சி மேற்கொண்டார்.

தமிழின் சங்ககாலக் கவிதை மொழிபெயர்ப்பு, இரண்டாயிரம் வருடத்துக்கும் மேற்பட்ட தமிழ்க் கவிதை மரபின் செழுமையை இருபதாம் நூற்றாண்டின் சமகாலக் கவிதையாக்கமாக புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளமை தனிச்சிறப்பு. அகம்/புறம் என்னும் சிந்தனையை வாழ்க்கையின் கருத்துநிலை சார்ந்து அறிமுகப் படுத்தும் பாங்கில் இது வெளிப்பட்டுள்ளமையை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். குறிப்பாக சமூகவியல், மானுடவியல் துறைகளை உள் வாங்கி இலக்கியத்தை ஆராய, கற்பிக்க முற்பட்டமை இவரது சிறப்பு.

மேற்கு கவிதைப் பாரம்பரியத்துக்கு தமிழ்க் கவிதையில் விரவியுள்ள சில தனிச்சிறப்புக்களை எடுத்துக் காட்டும் விதமாகவே இவரது தமிழ்க் கவிதைகளின் மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. 'ஸ்பீக்கிங் ஆ·ப் சிவா' பத்தாம் நூற்றாண்டின் பக்திக் கண்டன இயக்கத்தைச் சேர்ந்த நான்கு கன்னட கவிஞர்களின் மொழிபெயர்ப்பு. இந்த ஆக்கம் மூலம் ஆங்கில இலக்கிய வாசகர் களுக்கு இதுவரை அவர்கள் காணாத புதிய இலக்கியச் சாளரங்கள் திறக்கப்பட்டது.

ஏ.கே.ஆர். ஒரு பேராசிரியராக ஆராய்ச்சி யாளராக மட்டும் இருந்தவர் அல்ல. நுண்ணிய உணர்வுப் பாங்கு மிக்க கவிஞராக தினமும் ஒரு கவிதையாவது எழுதாமல் தூங்குவதில்லை என்னும் மனநிலைக்குள் இயங்கிக் கொண்டிருந் தவர். இதனால்தான் இவரது மொழிபெயர்ப்பு படைப்பு மனநிலை சார்ந்த, அவற்றின் தொழில்நுட்பத்துடன் இசைந்ததாக இருந்தது. இதுவரை இவரது எழுத்துக்கள் யாவும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என அறுபது தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

வெறுமனே சமஸ்கிருதத்தில் இருந்த பல்கலைக்கழகத்தை மற்றைய இந்திய மொழிகளை நோக்கி திசை திருப்பியதில் ஏ.கே. ஆரின் பங்கு அளப்பரியது. இந்த முயற்சிகள் ஒரு தனிமனிதச் சாதனை என்னும் நிலைக்கும் அப்பால் இன்று நாம் செய்ய வேண்டிய அவசிய அவசரப் பணி இவைதான் என்பதை தனது செயற்பாடுகள் மூலம் உணர்த்தி உள்ளார்.

ஏ.கே. ஆருக்கு பல்வேறு விருதுகளும், கெளரவங்களும், அவர் வாழ்ந்த காலத்திலேயே கிடைத்துள்ளன. குறிப்பாக 1976 இல் இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்து கெளரவித் துள்ளது. 1999 ஆம் ஆண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கான 'சாகித்ய அகாதமி விருது' 'தி கலெக்ஷன் ஆ·ப் போயம்ஸ்' புத்தகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இதைவிட தமிழ், கன்னடம் போன்ற மொழி வழி இலக்கியங்களின் வீரியம் ஐரோப்பியச் சூழலில் புரிந்துகொள்ளும் விதத்தில் இடம்பெற செய்தமைதான் அவர் தனக்குத் தானே தேடிக் கொண்ட மிகப் பெரிய விருது.

இந்திய சிந்தனை மரபுக்கும் கலாசார மரபுக்கும் புத்துயிர் ஊட்டும் வகையில் இவரது மொழிபெயர்ப்பு முயற்சிகள் யாவும் கலாசாரப் பரிவர்த்தனையாகவே இருந்தன. இதன் தொடர்ச்சி அறாமல் இருக்கும் வரை ஏ.கே.ஆரின் பெயரும் அவரது புலமையும் படைப்பு உந்துதலும் என்றும் புத்துயிர்ப்புக்கு உள்ளாகும்.

******


அவரது சில நூல்கள்:

  • The Striders (Oxford 1966)
  • Hokkulalli Huvilla (No Lotus in the Novel, Dharwar 1969)
  • Relations (Oxford 1971)
  • Speaking of Siva (Penguin Classics 1973)
  • Selected Poems (Oxford 1976)
  • Samkskara (Oxford 1976)
  • The Interior Landscape (Indiana 1977)
  • Mattu Itava Padugalu (And other Poems Dharwat 1977)
  • Hymns for the Drowning (Princeton 1981)
  • Poems of Love and War (Columbia Lunesco 1985)
  • Second Sight (Oxford 1986)


தெ. மதுசூதனன்

© TamilOnline.com