திண்ணை டாட் காம் - www.thinnai.com
www.thinnai.com

தமிழின் மிகச் சிறந்த இணையத் தளங்களுள் ஒன்று திண்ணை டாட் காம். இதுவரை வணிகப் பத்திரிகைகள் புறக்கணித்து வந்த விசயங்களை மிகவும் ஆழமாக வெளிப்படுத்தும் கட்டுரை களைத் தொடர்ந்து திண்ணை பிரசுரித்து வருகிறது. இலக்கியப் பக்கங்கள் மட்டுமின்றி அரசியல், சமூகம், அறிவியல் தொழில்நுட்பம் எனச் சகல தளங்களிலும் திண்ணை காலூன்றி யிருக்கிறது.

இந்த இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் மிகவும் காத்திரமாக விசயத்தை விளக்க முயல்பவை. ஒவ்வொரு துறைசார் வல்லுனர்களின் பார்வைகளை விரிவாகப் பதிவு செய்கிறது. சமையல் பக்கம், நகைச்சுவைப் பக்கம் என மகிழ்வூட்டும் அம்சத்திலும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறது.

திண்ணை ஒரு இலக்கியப் பத்திரிகை என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த தொடர்புப் பக்கமாகவும் விளங்குகிறது. அரசு நிறுவனங் களின் தனித் தனி இணையத் தளங்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளது. தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் தொடர்பாக இதுவரை வந்துள்ள ஆராய்ச்சிகளையும், அவை உள்ள நூலகங்கள் பற்றியும் தொகுத்துத் தந்துள்ளது.

சமயம் தொடர்பான பக்கங்களுக்கும் முன்னுரிமை கொடுத்திருக்கிறது. சத்ய சாயி பாபா, இராமகிருஷ்ண மகரிஷி, வேதாத்ரி மகரிஷி, ஓங்காரம் ஆசிரமம் போன்ற நிறுவனங்கள் குறித்த தகவல்களையும் இங்கு காணலாம்.

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரங்களைப் பற்றியும், அந்நகரங்களின் சிறப்புப் பற்றியும் பறைசாற்றுகிற இணையத் தளங்களுக்கு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்வி, பொருளாதாரம், இசை, மருத்துவம், அரசியல், விளையாட்டு, வலை நிறுவனங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள்.. என சகல துறைகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், உலகிலுள்ள தமிழ்ச் சங்கங்களைப் பற்றிய தகவல்களையும், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் இந்தத் தளம் விரிவாக எடுத்தியம்பியிருக்கிறது. இதற்கு ஏதுவாக தமிழ் கற்பிப்பு, வலை மூலம் தமிழ் பயிலுங்கள், தமிழ் மின் நூலகம் போன்ற பக்கங்களைத் தந்துள்ளது.

தமிழ் ஆர்வலர்களுக்கும் அனைத்துத் துறை பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களும் பயன்படுத்த வேண்டிய முக்கியமான இணையத் தளம்.

******


thinnai.com சில பகுதிகள்....

"புதுமைப்பித்தன் பதிப்பகம் என்ற பெயருக்குச் சட்ட ரீதியாய் தினகரி அவர்கள் தடை பெற முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை. மேனாடுகளில் உள்ள காப்புரிமைச் சட்டம் பெயர்களைப் பயன்படுத்துவதையும் பாதுகாக் கிறது. நம் நாட்டில் அப்படி இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் புதுமைப்பித்தன் பதிப்பகம் என்ற பெயர் வியாபார நோக்கங் களுக்காக அல்லாமல் வேறு எந்த நோக்கம் கருதி இளையபாரதியினால் பயன்படுத்தப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. சமீப காலத்தில் காலச்சுவடு முயற்சியால் புதுமைப்பித்தன் உணர்வு பரவலாக்கப் பட்டிருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சி இது என்றுதான் தோன்றுகிறது"
கோபால் ராஜாராம்

"ஏழாவது நூற்றாண்டிலிருந்து பதினாலாவது நூற்றாண்டு வரையில் ஒரு சில மருத்துவக் கருத்துக்கள் மட்டுமே வளர்ச்சி பெற்ற சீனாவில், இந்தியப் பாதிப்பினால் பெரிதும் மருத்துவ வளர்ச்சி பெற்றது. யுவான், மிங், சிங் முதலிய அரச குடும்பத்தினர் ஆட்சியின் போது பல மருத்துவ நூல்கள் வெளியிடப்பட்டன."
விஜயா தேஷ்பாண்டே

" 'தேர்தல் வெற்றிக்குப் பிறகு நான் நகைகளை மீண்டும் அணிவேன் என்று பேசவில்லை. நான் நகைகளையெல்லாம் விற்று தான தருமம் செய்வேன்' என்கிறார் ஜெயலலிதா. ஏன் ஜெயித்த பின்புதான் தானம் செய்ய வேண்டுமா? இப்போதே செய்யலாமே? ஒருவேளை ஜெயித்தால் (யோசிக்கவே கஷ்டமாக இருக் கிறது) நான் தானம் செய்துதன் இருக்கிறேன். ஆனால் அது மன்னார்குடி குடும்பத்தின் ஏழ்மையைப் போக்க உதவியிருக்கிறது என்பாரோ!"
மஞ்சுளா நவநீதன்

"இந்தியர்கள் சச்சின் மேல் வைத்திருக்கிற பாசமும் அன்பும் அளவற்றது. அவர் ஒவ்வொரு முறை விளையாடும்போதும் அவருக்காக பிரார்த்திக்கிறவர்கள் தேசம் முழுதும் இருக் கிறார்கள். ஒரு விளம்பரப்படத்தில் ஒரு சிறிய பெண் குழந்தை கடவுளிடம் தனக்காகவும் தன் பெற்றோருக்காகவும் வேண்டிக் கொண்ட பிறகு 'சச்சின் இன்றைக்கு செஞ்சுரி அடிக்க வேண்டும்' என்றும் வேண்டிக் கொள்ளும். இது வெறும் கற்பனை என்று ஒதுக்கி விடுவதற்கில்லை. நிஜமாய் அப்படிப் பிரார்த்திப்பவர்கள் இருக்கி றார்கள் நான் உட்பட.."
லாவண்யா

"சாகித்ய அகாதமி பரிசு இலக்கிய படைப்புகளுக்கும், அசலான இலக்கிய ஆய்வு களுக்கும் தரப்படுவது. தன்னை ஒரு மார்க்சிய விமரிசகராகச் சொல்லிக் கொள்ளும் தி.க.சிக்கு மார்க்சியம் பற்றி ஏதாவது தெரியுமா? அதற்கான சிறுதடயமாவது அவரது அபிப்பிராய பிரகடனங் களில் உண்டா? கட்சியின் ஆயுதமாக இலக்கியவாதிகளை வசைபாடியதுதானே அவரது சாதனை? தமிழின் மார்க்சிய விமரிசனம் என்று இவரது குறிப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தால் என்ன சித்திரம் நம்மைப் பற்றி ஏற்படும்?"
எழுத்தாளர் ஜெயமோகன்

"ஜூலை 7- இன்று உடன் பிறவா சகோதரி யான சசிகலாவின் பிறந்தநாள். இதனால் டில்லி கல்கத்தா சென்னை, பம்பாய் போன்ற நகரங்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன. அமெரிக்க அதிபர் கிளிண்டன், செர்பிய அதிபர் மிலாசவிக், ரஷிய அதிபர் போன்ற அனைத்து உலகத் தலைவர்களும் வந்திருந்து சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்கள் வராவிட்டால் இந்தியா தூதரகங்களை மூடி உறவுகளை முறித்துக் கொள்ளும் என்று மிரட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. விழாவுக்கு வந்த உலகத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இந்திய ஜெட் பரிசாக அளிக்கப்பட்டது. மற்றவர்களுக்குச் சாப்பாடும் ஒரு கிலோ தங்கமும் வழக்கப்பட்டதாக விழாக் குழுத் தலைவர் சரத்பவார் கூறினார்"
தின கப்ஸா

"கடவுளைப் பார்த்து ஆண் கேட்டான் 'ஏன் பெண்களைப் அழகாகப் படைத்திருக்கிறீர்கள்?' கடவுள் சொன்னார் 'நீ பெண்ணைக் காதலிக் கத்தான்' ஆண் கேட்டான் 'அப்புறம் ஏன் அவளை முட்டாளாகப் படைத்து விட்டீர்கள்?' கடவுள் சொன்னார் 'அவள் உன்னைக் காதலிக்கத்தான்'
நகைச்சுவைப் பக்கம்

சரவணன்

© TamilOnline.com