அஷ்ட போக பாக்கியங்களை வரமாகப் பெற...
ஜூலை 27 - வரலக்ஷ்மி விரதம்

புது வருடம் பிறந்தவுடன் சிறுவர் முதல் பெரியோர் வரையில் பெரும்பான்மையோரின் கவனத்தை ஈர்ப்பதில் புதுசாய் அச்சிடப்பட்ட காலண்டருக்கு அதிகமான மவுசு உண்டு. அவரவர்களின் தேவைக்கேற்ப புரட்டியெடுத்து விடுவார்கள். எந்தெந்த பண்டிகை எப்போதெல்லாம் வருகிறது என்பதை அறிந்து கொள்வதில் எப்போதும் ஆர்வம் இருப்பதுண்டு அனைவருக்கும். அதில் பெரும்பான்மையான பண்டிகைகள் பொதுவானதாய் இருக்க, குறிப்பாய் பெண்களுக்கான விசேஷ பண்டிகையாய் குறிப்பிடப்பட்டோரால் கொண்டாடப்படுவது 'வரலக்ஷ்மி விரதம்'.

வரலக்ஷ்மி விரதத்தை மேற்கொள்வதில் பெண்கள், அதிலும் முக்கியமாய் திருமணம் ஆகியோர் தனக்கான கடமைகளுள் ஒன்றாகவே கருதுகின்றனர். அப்படிப்பட்ட விரதத்தை பின்பற்றுவதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகத்தானே இருக்கிறது.

பத்ரசிரவஸ் என்றொரு அரசன் இருந்தான். பத்ரசிரவஸ் தீவிரமான ஸ்ரீஹரியின் பக்தன். அரசனின் மனைவி சுரசந்திரிகா. பத்ரசிரவஸ் சுரசந்திரிகா என்பவர்களுக்குப் பிறந்த அருந்தவப் புதல்வியே சியாமபாலா என்பவள்.

குறித்த பருவத்தில் சியாமபாலாவின் பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்ய நினைத்தார்கள். அதனால் மாலாதரன் என்ற மன்னனுக்கு திருமணம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு நாள் மகாலக்ஷ்மி பக்தர்களின் நலம் கருதி, ஒரு வயதான சுமங்கலி வேடத்தில் சுரசந்திரிகாவை சந்தித்தாள். சுமங்கலி வேடத்திலிருந்த மகாலக்ஷ்மி, சுரசந்திரி காவிடம் 'வரலக்ஷ்மி விரதம்' இருந்தால் நாட்டை ஆள மகன் பிறப்பான்' என்று கூறினாள். உண்மையை அறிய முடியாத அரசி ஒரு பணிப்பெண்ணை அழைத்து 'இந்த மூதாட்டிக்கு அரிசியோ, பருப்போ, சாப்பாடோ, புடவையோ என தேவைப்பட்டதைக் கொடுத்தனுப்புக என்று ஆணையிட்டாள். பிறகு சுரசந்திரிகா, தனக்குள் 'வரவர பிச்சைக்காரர்களெல்லாம் உபதேசம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்' என்று முணுமுணுத்துக் கொண்டாள். இதைக் கேட்ட மகாலக்ஷ்மி வருத்தத்துடன் 'என்னையா யாசகியாக நினைத்துவிட்டாய்? நானே அனைத்திற்கும் காரணமானவள் என்றாள்! இதைக் கேட்டுக்கொண்டிருந்த சுரசந்திரிகா வுக்கு மிகுந்த கோபம் வரவே லக்ஷ்மியை கன்னத்தில் அறைந்துவிட்டாள். சுரசந்திரிகா பணிப்பெண்ணை அழைத்து 'திமிர்பிடித்த இந்தக் கிழவியை வெளியே விரட்டு' என்று கத்தினாள்.

அந்த சமயம், தாய் வீட்டிற்கு பல்லக்கில் வந்து இறங்கிய சியாமபாலா பணிப்பெண்ணால் விரட்டி துரத்தப்பட்ட வரலக்ஷ்மியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தாள். பிறகு நடந்ததை அந்த வயதான சுமங்கலியிடம் கேட்டறிந்து சமாதானப்படுத்தினாள்.

தாயின் செய்கையால் கோபம் அடைந்த சியாமபாலா அரண்மனைக்குள் போகாமல் வந்த பல்லக்கிலேயே வரலக்ஷ்மியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தாள். பிறகு வரலக்ஷ்மியிடம் உபதேசம் பெற்றுக் கொண்டு விரதத்தை மிகச் சிறப்பாகச் செய்தாள். சியாமபாலா வந்திருப்பது மகா லக்ஷ்மி என்று தெரியாமலேயே மதித்து விரதம் மேற்கொண்டதோடு புடவை, வளையல் என மங்கலப் பொருட்கள் கொடுத்து நமஸ் கரித்தாள்.

வரலக்ஷ்மியை வணங்காத காரணத்தால் பத்ரசிரவஸ் மன்னனின் அரசு எதிரிப் படைகளால் கவரப்பட்டது. தோல்வியடைந்ததால் செய்வத றியாது மனைவியோடு சுரங்கப் பாதை வழியாக தப்பிவந்த மன்னன், தன் மகளான சியாமபாலா வீடு செல்ல கூசி காட்டில் வசித்தான்.

இந்த நிலையை அறிந்த சியாமபாலா, பெற்றோர்களின் வருத்தம் தீர வரலக்ஷ்மியின் அருளால் பெற்ற தங்கக்காசுகளை ஒரு குடம் நிறைய கொண்டு போனாள். வறுமையில் இருந்த சியாமபாலாவின் தாய், அந்த தங்கக் காசைத் தொட்டதும் அது கரித்துண்டாகியது. இதைக் கண்ட மன்னன் அதிர்ச்சியுற்று 'ஏன் இப்படி நடந்ததென்று' வருத்தமடைந்தான். இதற்கு சியாமபாலா முன்னொரு சமயத்தில் தாயார் சுமங்கலியை மதியாது அடித்து விரட்டியதே காரணம் என்று கூறினாள். பெற்றோரை சமாதானப்படுத்தி, தன் அரண் மனைக்கு அழைத்து வந்தாள் சியாமபாலா.

தான் பெற்ற செளகரியத்தை தனது பெற்றோர்களும் பெற வரலக்ஷ்மி விரதத்தை செய்யும்படி வேண்டினாள்.

அப்படியே சியாமபாலாவின் பெற்றோர்களும் வரலக்ஷ்மி விரதத்தை மேற்கொண்டனர். கொஞ்ச நாளிலேயே எதிரி அரசன் திடீரென்று மாண்டு போகவே, அமைச்சர்கள் மாலாதரனின் நாட்டுக்கு வந்து சகல மரியாதைகளுடன் பத்ரசிரவஸை அழைத்துச் சென்றனர். பலன் கைமேல் கிடைக்க அதுமுதல் தாயும் மகளும் தொடர்ந்து வரலக்ஷ்மி பூஜை செய்து நோன்புக் கயிறு கட்டிக்கொள்ள இருவருக்கும் ராமலக்ஷ்மணர்கள் போல் இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும் அதற்கான தேவை, நோக்கம் என்பது கண்டிப் பாய் இருக்கத்தான் செய்யும்.

வரலக்ஷ்மி பூஜை செய்தால் அஷ்டபோக பாக்கியங்களையும் வரமாகப் பெறலாம். லக்ஷ்மி அவதரித்த துவாதசி வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி பூஜை செய்வதால் மாங்கல்ய பலம் கூடும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக் குத் திருமணம் நடக்கும். கடன் தொல்லைத் தீரும். செல்வ வளம் பெருகும்.

வரலக்ஷ்மி விரதம் மேற்கொள்ளும் பெண்கள் பூஜை முடியும் வரை உபவாசம் இருந்து தேவிக்கு மாவிலைத் தோரணங்கள் அலங்கரித்து, மகாலக்ஷ்மியின் உருவம் தாங்கிய கலசத்தை பச்சரிசி மேல் அமர்த்தி வணங்குதல் வேண்டும். மகாலக்ஷ்மிக்கு அப்பம், உளுந்து வடை, பச்சரிசியால் செய்த பட்க்ஷணத்தை படையலிட்டு கிடைக்கும் அனைத்து விதமான மலர்களைக் கொண்டும் பூஜை செய்யலாம். பூஜையின்போது முதலில் விநாயகர் துதிபாடி பின் வரலக்ஷ்மி விரதப் பாடலை மந்திரமாய் சொல்லிக்கொண்டே வழிபட்டால் மிகுந்த பயன் கிட்டும். பொழுது சாயும் நேரத்தில், விரதம் மேற்கொண்ட பெண்கள் சுமங்கலிப் பெண் களை பூஜைக்கு அழைத்து வசதிக்கேற்ப பிரசாதம் அளித்து, புடவை, வளையல் போன்ற மங்கல பொருட்களை கொடுத்து சுமங்கலிகளுக்கு கையில் மஞ்ச சரடு கட்டி நமஸ்கரித்தல் புண்ணியம் தரும். விரதம் மேற்கொண்ட பெண்களின் திருமாங்கல்யத்திற்கு பலம் கூடும். பிறகு மூன்றாம் நாள், விரதம் முடிக்க வரலக்ஷ்மி அருளால் சகல வளங்களும் தம்மிடம் தங்க வரலக்ஷ்மி அமர்ந்திருக்கும் கலசத்தை வடக்கே திருப்பும் வகையில் இலேசாக நகர்த்திவிட்டு, பூஜையை முடித்தால் சிறந்த பயன் தரும். இவ்வாறு மேற்கூறிய வகைகளில் வரலக்ஷ்மி விரதம் மேற்கொண்டு வழிபடும் தன்மை அறிந்து முழு மனதுடன் வரலக்ஷ்மியை பூஜை செய்தால் அனைவரும் அஷ்ட போக பாக்கியங்களையும் வரமாகப் பெற்று மகிழ்வோடு வாழலாம்.

ஜானகி

© TamilOnline.com