இரும்பு குதிரைகள்
பதினைந்து பதிப்புகளுக்கு மேல் அச்சாகி முப்பதாயிரம் நூல்களுக்கு மேல் விற்ற பாலகுமாரனின் சிறந்த படைப்புகளில் ஒன்றான இருப்பு குதிரைகள் என்ற நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி:

"உங்களைத் தாண்டி நான் யோசனை பண்றது உங்களுக்கு அவமானமா, ஈகோ ப்ராப்ளமா இருக்கா?"

"நோ. நோ."

"புடவை நகைன்னு சாதாரணமா பேசற பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும். ·பிலாஸ·பி பேசினா 'போர்' பைத்தியம்னு நகர்ந்துட தோணும். நிறையப் பேர் நகர்ந்தி ருக்கா.''

''எனக்கு உன்னைப் புரியறது காய்த்ரி. என்னா இந்தக் கவலை, பயம் எனக்கும் உண்டு.''

''தேங்க்யூ... விஸ்வநாதன். எங்கப்பாவுக்கப்புறம் நான் அதிகமாப் பேசின ஆண் நீங்கதான்.''

''ஒரு சந்தேகம் காயத்ரி. உன் கல்யாணம் பத்தி நீ யோசிச்சது உண்டா. இவ்வளவு பேசற பெண், குடித்தனம் பண்ண முடியுமா?''

''சிரமம்தான்.''

''ஸோ.. மெல்ல நீ நார்மலுக்கு வந்தா என்ன?''

காயத்ரி வாய்விட்டுச் சிரித்தாள். அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள். ஸோ என்னை அப்நார்மல்னு முடிவு பண்ணியாச்சா? அடி பைத்தியமேன்னு நெனைக்கிறேளா?''

''இல்லை காயத்ரி. இந்த மென்மையான கவலை நிறைஞ்ச மனசோட நீ ஜாக்கிரதையா வளரணுமேன்னு வேதனைப்படறேன். இதெல் லாம் புரியற புருஷன் உனக்குக் கிடைக் கணுமேன்னு கவலைப்படறேன்.''

''எனக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இல்லை விஸ்வநாதன்.''

''ச்சு... எல்லாப் பெண்களும் சொல்ற டயலாக்தான் இது.''

''ஆனா குழந்தை பெத்துக்கணும்னு... ஆசை உண்டு. கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துண்டா என்ன தப்பு?''

''காயத்ரி...''

''ஒரு ஆளுக்கு என்னையும் பங்கு போட்டு எனக்குப் பொறக்கற குழந்தையையும் பங்கு போட்டு என்னுடைய புத்தி கொஞ்சம், அந்த ஆள் புத்தி கொஞ்சம். அப்பா ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம்னு அலைக்கழியறதுக்குப் பதிலா மொத்தமா என் புத்தியை ஆரம்பத்திலேர்ந்து என் இஷ்டமாக் குழந்தைக்கு ஊட்டி வளர்க்க லாமில்லையா?''

''நான்சென்ஸ்''

''இல்லே சென்ஸோடதான் பேசறேன். ஒரு பிள்ளைக்குக் காது குத்தி பூணூல் போட்டு என்.ஸி.ஸி காக்கிச் சட்டை மாட்டி ஹிந்தி சினிமா, டிஸ்கோ டான்ஸ் பாக்க அனுப்பி உருவமே இல்லாத குழப்பமா வளர்க்கறதுக்குப் பதிலா என் குழந்தையைப் புருஷன் ஆக்கிரமிப்பு இல்லாம நானே வளர்த்தா தப்பா?''

''ஒரு குழந்தைக்கு அப்பா வேண்டாமா?''

''பெரியாழ்வார் ஆண்டாளை வளர்த்தாரே, அம்மா எங்கேன்னு கேட்டாளா ஆண்டாள்?''

''என் அப்பா எங்கேன்னு உன் குழந்தை கேட்டா?''

''உன்னைக் கிண்டி பார்க்குல வெண் தேக்கு மரத்தடியிலேருந்து எடுத்துண்டு வந்தேன்னு சொல்றது.''

'க்ரூயல்''

''அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவே சிக்கிச் சீரழியறதைவிடவா? இரண்டு வெவ்வேறு துருவங்களுக்கிடையே அழுந்தி வேதனைப் படறதை விடவா?''

''உனக்கு அவிட்ட நட்சத்திரம் மகர ராசி, சனி கிரகத்துப் பாதிப்பு நிறையன்னு உங்கப்பா சொல்லியிருக்கார் அதான் பர்வர்டட் இன்டலிஜென்ஸோட தவிக்கிறே.''

''ஸ்டுப்பிட்''

''சரி, வெறும் குழந்தை மட்டும் கொடு. வேறே உறவு வேண்டாம்னு யார்க்கிட்டக் கேட்கப் போறே... யார் புரிஞ்சுப்பா இதை? அசிங்கப் படுத்திட மாட்டாங்களா?''

''உங்கக்கிட்டக் கேக்கப் போறேன். உங்களுக்கு என்னைப் புரியலையா?''

''காயத்ரி...'' விஸ்வநாதன் வேகமாக எழுந்தான்.

''ஏன் இவ்வளவு பதற்றம்...?''

''தாரிணியை மட்டமாப் பேசினது இதுக்குத் தானா?''

''நோ. அது வேற விஷயம். இது வேற விஷயம். நீங்க முடியாதுன்னாலோ சரின்னாலோ என் அபிப்ராயம் மாறாது.''

''நானும் மாறமாட்டேன் காயத்ரி, தாரிணி நல்லவளோ கெட்டவளோ... உசத்தியோ மட்டமோ, நான் மாற மாட்டேன். ஐ லவ் ஹெர் டீப்லி.''

''நீங்க தாரிணியை நேசிக்கிறதுக்கும் நான் கேட்டதுக்கும் சம்பந்தமில்லை.''

''உண்டு காயத்ரி. என்னால் ஏமாத்த முடியாது. அவகிட்ட பொய் சொல்ல முடியாது அவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணோடும் உறவு கிடையாது.''

இவ்வளவு முரட்டுத்தனம் ஏன் உங்க காதல்ல...?''

''நாளைக்கு தாரிணிக்கு யார்கிட்டயாவது போகத் தோணித்துன்னா நீ போனியே காயத்ரிகிட்டே, நான் போறேன்னா...''

''ஸோ உங்க காதல் கடமை, நெறியெல்லாம் மனைவி கற்போட இருக்கணும்னுதான். அவ யார்கிட்டயும் போய்டுவாளோங்கற பயம்தான் உங்களைக் கட்டிப் போட்ருக்கு. இங்க நிறைய பேர் கற்போட இருக்கற காரணம் பொண்டாட்டிதான்''

''ச்சீ... குடும்பம் பத்தி உனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்''

''நாளைக்கு உன் புள்ளை பெரியவனா ஆனா?''

''எனக்குக் குடும்பத்துல நம்பிக்கையில்ல.

"சும்மா நிக்கத் தெரிஞ்ச போது வெளியே போன்னு அனுப்பிச்சுடுவேன். சாகிற வரைக்கும் தனியா இருப்பேன்."

"வெல் ... இது உன் வழி. என் வழி வேறே... எழுந்திரு போகலாம்."

"வெவ்வேற வழின்னு தெரிஞ்ச பிறகு நான் ஏன்? குட்பை."

"இங்கே சீக்கிரம் இருட்டிப்போயிடும் காயத்ரி. இருட்ல ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்ததுன்னா... கெட் அப்..."

"நோ. உங்க அக்கறை தேவையில்லை."

"அடம் புடிக்கிறயா சனியனே... என்ன திமிரு ஒரு பொட்டச்சிக்கு?"

"காலம் காலமாச் சொல்லிண்டு வர வார்த்தை. இனிமே வேகாது. நீங்க சொன்ன திமிர் என்னைக் காப்பாத்தும்... யு கேன் கோ.''

"வரப்போறியா இல்லையா?''

காயத்ரி மெளனமாய் உட்கார்ந்திருந்தாள்.

விஸ்வநாதன் அவள் தோளைப் பிடித்து முரட்டுத்தனமாக உலுக்கினான்." நான் கிளம்பிப்

போய்டுவேன் காயத்ரி."

"போங்களேன் உங்க காலைப் பிடிச்சு தமிழ் சினிமா மாதிரி என்னைக் கைவிட்டுடாதீங்கன்னு கதறணுமா? கோ கெட் லாஸ்ட் "

"நீ போற வழி தப்பு காயத்ரி. சொன்னா ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கற?"

"உங்களுக்குப் புரியலை விஸ்வநாதன். மரபும் விஞ்ஞானமும் எதிர் எதிரா நிக்கறது தெரியலை? பரஸ்பரம் டாமினேட் பண்ணத்தான் இத்தனை வளர்ச்சியும்னு புரியலை? பயமுறுத்தல் தான் இத்தனை கண்டு பிடிப்பும்னு தெரியலை? காடோ மிருகமோ மின்னலோ இடியோ என்னைப் பயமுறுத்தலை. மனுஷன் தான் ரொம்ப பய முறுத்தறான். லிவ் மி அலோன்."

விஸ்வநாதன் சட்டென்று வெளியேறினான் பின்னால் நடந்து வருகிறாளோ என்று திரும்பித் திரும்பிப் பார்த்தான்.

காயத்ரி வரவேயில்லை. ஆட்டோ பிடித்து அடையாறு போய்த் தன் வீட்டுக்குப் போன் செய்தான்" நாணுசார் இருக்காரா கூப்பிடு தாரிணி"

நாணு ஐயரிடம் சுருக்கமாய் விஷயம் சொன்னான்.

இருட்டத் துவங்கி விட்ட நேரத்தில் கிண்டி பார்க்கில் நுழைந்த நாராயணசாமி ஐயர் தம் மகளின் தலையைத் தடவி," எழுந்து வா, காயத்ரி என்றழைத்தார். அவள் தோல்பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டதும் பெண்ணின் விரலை மெல்லப் பிடித்துக் கொண்டு நடந்தார்.

" இதெல்லாம் யாரும் தாங்க மாட்டா காயத்ரி உன் பேச்சு எடுபடற நேரம் இல்லை இது. நிஜமான கவலை இவா யாருக்கும் கிடையாது. எதிர்காலம் பற்றியெல்லாம் யோசிக்கத் தெரியாது. வாழைப்பழம் தின்னுட்டுத் தெருவுல தோல போட்டுப் போறவாதாம்மா இவாள்ளாம். அடுத்த தலைமுறைக்கு ஒரு மரம் கூட நடாத மனுஷர்கள், ஒரு புஸ்தகம் கூடப் போடாத ஜனங்கள். உன் கவலை சரியாயிடும் காயத்ரி.''

மாம்பலம் ஸ்டேஷன் - அப்பாவும் பெண்ணும் உட்கார்ந்திருந்தார்கள்.

''இதோ பார். நான் நெறையபட்டிருக்கேன் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்திரண்டோ, முப்பத்தி மூணுலயோ 'இப்ப வேண்டாம். இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துச் சுதந்திரம் வாங்கலாம்'னு ஒரு காங்கிரஸ் மீட்டிங்கில பேசினேன். கழுத்தப் பிடிச்சு மேடைலேர்ந்து தள்ளிட்டான். ஜனமெல்லாம் சிரிச்சுது பன்னாடைன்னு திட்டித்து, வெத்தளை பாக்குகூட வாங்க விடாம ஊர் ஜனம் ஒதுக்கி வச்சுது. ரொம்ப குழம்பினேன். பேசினது தப்போன்னு நெனச்சேன். சுதந்திரம் கெடைச்ச ரெண்டே வருஷத்துல, அடடா சரியாத்தான் பேசியிருக்கோம்னு தோணித்து.

''விஸ்வநாதன் மாதிரி சிலர் உன்னைப் புரிஞ்சுப்பான்னு நெனைச்சதுகூட தப்பு. கவிதை எழுதறது கதை எழுதறது எல்லாம் உலக அக்கறையினால் வர்றதில்லைம்மா. நெறைய பேருக்குத் தன் பேருக்கு முன்னாடி வெறும் இனிஷியல் போறலை, ஒரு டைட்டில் வேணும். அதோ பார்ன்னு அடையாளம் காட்டணும். கவிஞர், கதைஞர்னு போட்டுக்கணும். நடிகனைப் பார்த்துக் கிராப்பு, மீசை வச்சுக்கற மாதிரி யாராவது எழுதினதைப் படிச்சுட்டுத் தானும் எழுத ஆசைப்படறா.

''ஒரு தமாஷ் தெரியுமா காயத்ரி. வாலிபமா இருக்கறச்சே ஒழுக்கம் பத்திதான் ரொம்பப் பேசுவோம். கடைசிவரை பிரம்மச்சாரியா இருக்கணும்னு நெனைச்சுப்போம். சாமியாராப் போறதுக்கு ஆசைப்படுவோம். எங்க ஊர் பையன் ஒருத்தன் ஹிமாச்சலம் ஓடிட்டான். அந்த ஊர் பையன் பத்ராசலம் ஓடிட்டான்னும் பெருமையா பேசுவோம். ஓடிப்போனவனை நெனைச்சுப் பொறாமைப்படுவோம். நமக்கு ஓடறதுக்கு தைர்யம் இல்லையேன்னு வேதனைப்படுவோம். அப்ப ஓடினவனெல்லாம் இப்ப கை நெறைய சம்பாதிச்சுப் பேரன் பேத்தியோட இருக்கான். எதுக்கு சொல்றேன் ஒவ்வொரு கால கட்டத்துல ஒவ்வொரு சிந்தனை - இளமையா இருக்கிற வாளை அலைக்கழிக்கிறது. கல்லோ மண்ணோ எனக்குப் புருஷன்னு ஒருத்தன் கிடைக்க மாட்டானான்னு பெண் குழந்தைகள் ஏங்கின காலம் ஒன்று உண்டு. இன்னிக்குப் புருஷனே வேண்டாம்னு நெனைக்கிற காலம் துளிர் விட்டிருக்கு''.

''விஸ்வநாதன்கிட்ட நீ கேட்டது தப்பேயில்லை காயத்ரி.'' - நாணு ஐயர் மெல்லத் திரும்பித் தன் பெண்ணைப் பார்த்தார்.

காயத்ரி முகம் கல்லாயிருந்தது.

''என்னம்மா இன்னும் வருத்தமா இருக்க தோத்துப் போய்ட்ட மனநிலை ஜாஸ்தியாறதா? என்ன குழப்பம் உனக்குள்ள, சொல்லு? நான் உதவி பண்ண முடியுமா, சொல்லு?''

காயத்ரி மெல்ல திரும்பினாள். 'உன்னுடைய வாஞ்சைக்கூட சிரமமா இருக்குப்பா. உன்னையும் விட்டு நகர்ந்துடணும்னு தோண் றது. உன் நிழல்கூட இல்லாம தனியா இருக்கணும்னு தோண்றது என்னைத் தேடிண்டு இருட்ல கிண்டிக்கு நீ ஓடி வந்தது சிரமமா இருக்குப்பா.''

நாணு ஐயர் ஒரு கணம் உள்ளே துவண்டார். பெரியாழ்வாரின் வேதனை மனசுள் புரண்டது.

ஒருமகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண் மால்தான் கொண்டு போனான்.

ஆண்டாள் சூரத்தனம் செய்தாளா? குழந்தைகள் பெற்றாளா? சோறு ஊட்டி வளர்த்துப் பள்ளிக்கு அனுப்பினாளா? இந்த வருஷம் கார்த்திகைக்குக் கூடப் பத்து ரூபாய் சீர் அனுப்பு என்று கடுதாசி எழுதினாளா? ஸ்ரீரங்கம் போனதும் காணாமல் போய் விட்டாள். எங்கேயோ ஓர் ஒளிப்பிழம்பில் ஐக்கியமாகிவிட்டாள். சட்டென்று பெரியாழ்வார் வாழ்க்கையிலிருந்து உயிரோடு உடலோடு மறைந்துவிட்டாள். எத்தனை தவிப்பு தவித்திருக்கும் அந்தப் பெரியாழ்வார் நெஞ்சு? பெத்த நெஞ்சு எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? அப்படிச் சட்டென்று என் பெண்ணும் என்னை விட்டு நகர்ந்து விடப் போகிறதா? ஆனால் இது நெற்றிக்குள் என்ன சுடர் விடுகிறதோ, எதோடு கலக்க இப்படி முரட்டுத்தனம் காட்டுகிறதோ, எந்த வேள்வியில் குதிக்க இப்படி மறுகித் தவிக்கிறதோ? இழுத்து அதட்டி அடக்கலாம். என்ன பயன்? அடக்கி அடக்கி வளர்க்கப்பட்ட நான் என்ன சாதித்து விட்டேன்? சகலமும் இந்தக் குழந்தைக்குப் போதித்தது தவறோ? இணையாய் உட்கார்ந்து என் அறிவை ஊட்டியது பிசகோ? உன் தேடலை நான் ஏன் வழிமறித்து மடக்க வேண்டும்? உன் செய்கை எனக்கு அவமானம் என்று என் சுயநலத்துக்காக உன்னை ஏன் நசுக்க வேண்டும்? உன் வாழ்க்கை உன்னுடையது காயத்ரி. உனக்குப் பறக்க நம்பிக்கை இருப்பின், வலுவு இருப்பின், பற பற மேலே மேலே. அப்படி முடியாது சிறகு முறிந்து விழுந்தால் தெரியப்படுத்து. காயத்ரி. நான் வருவேன். இதம் சொல்லுவேன். நான் வளர்ந்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அப்படியிருக்க அவ்விதமே நீ வளர வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. போய் வா காயத்ரி, போய் வா.

நாணு ஐயர் மெல்ல எழுந்து நின்றார். காயத்ரி புரிந்து கொண்டாள்.

''என் பெட்டிய நாளைக்கு ஆபீஸ¤க்குக் கொண்டு வந்து குடுத்துடுப்பா. ஹாஸ்டல்லே எங்கியாவது தங்கிக்கிறேன். இன்னி ராத்திரிக்க எங்க ஆபீஸ் டெலிபோன் ஆப்ரேட்டர்கூட தங்கிடுவேன். நீ மன்னார்குடி போயிடு. நான் மாசா மாசம் பணம் அனுப்பறேன். நா அங்க வரலப்பா. நீயே எனக்கும் சேர்த்து சொல்லிண்டு வந்துடு. நிச்சயம் வேற கம்பெனியில் வேலை கிடைக்கும்.''

''என்ன நாணு சார். காயத்ரி கெடைக் கலையா?'' - தோட்டக் கதவு திறந்த சப்தம் கேட்டதும் விஸ்வநாதன் ஓடி வந்தான். தாழ்ந்த குரலில் பேசினான்.

நாணு ஐயர் விஷயம் சொன்னார்.

''அவதான் மடத்தனமா பேசறான்னா நீங்களும்... நீங்களும் என்ன சார் இது...'' பதறினான்.

''விஸ்வநாதா இந்தத் தேசத்துப் பெண்களுக்கு ஆண்கள் மேல நம்பிக்கை கொறைஞ்சுண்டு வரது. அவளுக்கு உன் மேல கோபம் இல்லை விஸ்வநாதா. அதுவெறும் பொம்மனாட்டி கோபம் இல்லை. இன்னிய சகல நடவடிக்கையையும் எதிர்க்கிற கோபம். இன்னிக்கு இது அதிசயமாக இருக்கலாம். பின்னால் இப்படி நடக்கத்தான் போறது. உன் பொண்ணும் உன் பேத்தியும் இப்படித்தான் இருக்கப்போறா. முன்னோடியா இருக்கிறதால காயத்ரிக்குச் சிரமம் அதிகம். பின்னால இதுவே வாழ்க்கை யாவும்போயிடும்''

''இப்படித் தனிச்சுப் போறது தப்பில்லையா?''

''தப்போ, சரியோ, பயமுறுத்தலை எந்த உயிரினமும் விரும்பாது. கல்யாண உறவு பயமுறுத்தலா இருக்கிற இன்னிய நிலை இப்படித்தான் மாத்தும். இந்த மாதிரி போக வைக்கும். கூட்டுக்குடும்பம் எப்படி உடைஞ்சுது. நம்ம கண் முன்னாடி? அது மாதிரி குடும்பங்கற இடமும் மெல்லச் சிதையும்.''

''நானும் தாரிணியும் சந்தோஷமா இல்லையா சார்.''

''உன்னாலே இதைக்கூடத் தாழ்ந்த குரல்ல தான் கேட்க முடியறது விஸ்வநாதா.''

''நீங்க அவளுக்கு அப்பா இல்லையா? அவள் மேல் அக்கறையில்லையா?''

''வெறும் அப்பனாயிருந்தா அறைஞ்சு இழுத் துண்டு வந்திருப்பேன். நா அவளுக்கு நல்ல ஸ்நேகிதன். ரொம்ப அக்கறைன்னு சொல்லி என் வாழ்க்கையை அவளுக்கும் விதிக்கணும்னு அழுத்திச் சொல்றதைவிட அவளா புரிஞ்சுக் கட்டும்னு விட்டுட்டேன்.''

''நாளைக்கு ஒரு குழந்தையோட வந்து நின்னா...''

''குழந்தை, குழந்தைதானே விஸ்வநாதா. அது காயத்ரி பெத்த குழந்தையானா என்ன? வேறு யார் கிட்டேயாவது வாங்கிண்டு வந்தா என்ன? பொறந்த பிறகு இழிவு என்ன இருக்கு?''

''அப்பா இல்லாமல் குழந்தை பெத்தா நல்லதா? என்ன சார் சொல்றீங்க நீங்க?''

''ஒரு அம்மாவே அப்பாவோட வலிவோட இருக்கறச்சே குறை என்ன வந்துடும்?

''சரி. அதுக்கு நீங்க ஏன் தவிக்கிறேள். அப்பாவும் பொண்ணும் சரியான பைத்தியம். இதுக்கு நீங்க போட்டு ஒழட்டிப்பானேன். இன்னிக்கு ஆபீஸ் போலையா? லீவா? நிம்மதியாப் போச்சு பரபரன்னு ஆட வேண்டாம்...'' தாரிணி அவன் தலையைக் கோதிவிட்டு உள்ளே போனாள். பிற்பகலில் சாப்பிட்டு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த தாரிணியிடம் விஸ்வநாதம் சகலமும் சொன்னான்.

''அடி குடிகேடி. இதென்ன கிரகாச்சாரம். பார்க்குல உட்கார்ந்து குழந்தை கேக்கற கூத்து. பார்க்குக்குக் கூட்டிண்டு போனது உங்க தப்பு. எனக்குப் புரியறதுன்னா, படிக்கறதுனால வந்த வினை. நான் எதுக்கு சமைக்கணும். நான் எதுக்குப் பாத்திரம் தேய்க்கணும்னு ஆரம்பிச்சு, ஆப்பிளை எதுக்கு குடித்தனம் பண்ணன்னு முடிஞ்சிருக்கு. பத்து தேய்க்கறது இழிவுன்னு தோணி, குடும்பம் நடத்தறதுக்கும் சோம்பல் வந்துடுத்து. வீடுன்னா சாக்கடை இருக்கும். யாராவது ஒருத்தர் அலம்பத்தான் வேணும். எல்லாரும் சாக்கடை அலம்ப உக்காரவும் முடியாது. அலம்பாம இருக்கவும் கூடாது. வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே வேணும்னு யார் கேக்க முடியும்? ச்சே... ஒரு கெட்ட நேரம் நீங்க நெகிழ்ந்திருந்தா என்ன ஆயிருக்கும். ஈஸ்வரா... பெரிய விலங்கா மாட்டிண்டு வீடே தவிச்சிருக்கும்.''

''இந்த மாதிரி விலங்குல நான் மாட்டிக்க மாட்டேன் தாரிணி.

''எனக்குத் தெரியுமே.''

''ஆனால் எனக்கு ஆபீஸ்தான் விலங்கா இருக்கு''

''ஏன் இதைவிட நல்ல உத்தியோகம் எங்க கிடைக்கும்?''

''எனக்குப் பிடிக்கலை தாரிணி. சினிமாவில் நுழையணும்னு சின்ன வயசிலேர்ந்தே ஆசை.''

''சின்ன வயசிலேயே ஆரம்பிச்சிருக்கணும். இப்ப ஆசைப்படடா எப்படி...?''

''இப்ப நம்மகிட்ட இருக்கிற ஸேவிங்ஸ் போதும். மூணு நாலுவருஷங்கள் கஷ்டப்பட்டா ஓஹோன்னு வந்துட முடியும்.''

"ஒண்ணும் வேண்டாம். மேலே ப்ரமோஷன் வரதாப் பாருங்கோ.''

''ப்ரமோஷன் வரும் காயத்ரி. ஆனால் எனக்குப் பிடிக்கல.''

''சுதந்திர உணர்ச்சியா? ஏத்திவிட்டுட்டுப் போயிருக்காளா மகராசி இதோ பாருங்கோ சினிமால்லாம் நமக்குச் சரிப்படாது. நேரம் காலம் இல்லாம... வேளா வேளைக்குச் சோறு தண்ணியில்லாத வேலை... பத்து மணிக்குப் போய்ட்டு ஆறு மணிக்கு வந்த செளகர்யம் கெடையாது.''

''எனக்கு அந்தச் செளகர்யம் வேண்டாம்.''

''எனக்கு வேணும். சாயங்காலம் ஆறு மணிக்கு புருஷன் வீட்டுக்கு வந்துடணும்.''

''என்னைக் கட்டிக் கட்டியே சுருக்கிப் போட்டியோன்னு பயமா இருக்கு''

''செய்வேன். நிச்சயம் செய்வேன். என்னோட சுயநலத்துக்கு இல்லை. இந்தக் குழந்தைகள் எதிர்காலத்துக்கு நிச்சயம் உங்களைக் கட்டிப் போடுவேன். என்னை எது கட்டிப்போட்டிருக்கு? இந்தக் கயிறா? இல்லை, என் குழந்தைகள், உங்களைப் பிடிக்கலேன்னு நான் நகர்ந்துட்டா இதுகள் கதி என்ன?''

''எத்தனை நாட்கள் இப்படி யாருக்கோ வேலை செஞ்சு அல்லாடறது?''

''ம்... உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும், இந்த மாதிரி ஆபீஸ்தான். இந்த மாதிரி குடித்தனம்தான். இந்த மாதிரி வாழ்க்கை தான். நமக்கெல்லாம் இதுதான் சரி, இதுதான் மதிப்பு''

விஸ்வநாதன் அயர்ந்தான். கண்கள் மூடிக் கொண்டான். டெலிபோன் ஒலித்தது.

''என்னா துரை. ஆளைக் காணோம். தலைவலியா? இங்கு திருகுவலி வந்திருக்குப்பா. பாய்லர் ஒண்ணு புடிங்கிச்கிச்சு. திருச்சி பாய்லர் கம்பெனிக்குப் போய் ஸபேர்ஸ் வாங்கிகினு வரணும். ஒரு தூக்கம் போட்டு எழுந்திரு - சாயங்காலம் கார் அனுப்பறேன்'' அப்படியே ·பாக்டரிக்குப் போய் விவரம் கேட்டுத் தெரிஞ்சுக்க. நேரா திருச்சி போக நாளைக்கே வந்துடணும் என்ன...''

இந்த மாதிரிதான் வாழ்க்கை. இதுதான் சரி. இதுதான் மதிப்பு.

பாலகுமாரன்

© TamilOnline.com