திரைகடலோடியும் திரவியம் தேடு என்கிற தமிழ் வாக்கிற்கு ஏற்ப தொன்று தொட்ட காலம் முதலே தமிழர்கள் உலகம் முழுவதும் சென்று சிறப்பாக பொருள் ஈட்டினர் என்பது உண்மை மட்டுமல்லாமல் வரலாறும் கூட. எங்கு சென்று வாழ்ந்தாலும் நம் தாய் மொழியாம் தமிழை நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமும் நம் தமிழினத்திற்கே உரிய சிறப்பாகும். சான்பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் இச்சிறப்பு எப்படியுள்ளது?
தமிழ்நாடு அறக்கட்டளை தமிழ்ப் பள்ளி
வடஅமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான தமிழர் தொண்டு நிறுவனங்களில் தமிழ்நாடு அறக்கட்டளை ஒன்றாகும். தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட தொண்டு திட்டங்களை செய்து கொண்டி ருக்கும் தமிழ்நாடு அறக்கட்டளையின், வடஅமெரிக்க தொண்டு திட்டங்களில் முதல் இடம் வகிப்பது, தமிழ்நாடு அறக்கட்டளை தமிழ் பள்ளி.
வடஅமெரிக்காவின் அன்றாட வாழ்வில் இருக்கும் ஆங்கில ஆதிக்கத்தினால் சிறுவயது முதலே இங்கு வளரும் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி பேச, கற்க இயலாமல் போய்விடுகிறது. இக்குறையினை போக்கி இங்குள்ள இளம் பிள்ளைகளுக்கு நல்லமுறையில் தமிழ் பேச, படிக்க, எழுத கற்றுக்கொடுப்பதோடு மட்டு மல்லாமல், தமிழ் உணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு அறக்கட்டளை தமிழ் பள்ளியின் தலையாய குறிக்கோள்.
தமிழ்நாடு அறக்கட்டளை தமிழ் பள்ளி 1999 ஜனவரி மாதம் Fremont நகரத்தில் 13 மாணவர்களுடன் துவங்கப்பட்டது. இப்பள்ளி யினை உருவாக்குவதில் தில்லைகுமரனின் முயற்சியும், உழைப்பும் குறிப்பிடத்தக்கது. அதிக மாணவர்கள் வராத காரணத்தினால் இப்பள்ளி Fremont ல் மூடப்பட்டு, வெற்றிச் செல்வி ராஜமாணிக்கம் அவர்களின் ஆர்வத்தினாலும், அதீத முயற்சியாலும் 2000ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கூபர்டினோ, டீ அன்சா கல்லூரி வளாகத்தில் மீண்டும் 15 மாணவர்களோடு துவங்கப் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கல்வியாண்டைத் துவக்கும் இந்த தமிழ்ப் பள்ளியில் வாரந்தோறும் வகுப்புகள் ஞாயிறன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அறக்கட்டளை தமிழ்ப் பள்ளியில் தமிழ் மூன்று நிலைகளில் கற்றுக் கொடுக் கப்படுகிறது. தமிழ் எழுத, படிக்க ஆரம்ப நிலை, சற்று அறிந்த நிலை, நன்கு பரிச்சயமான நிலை மற்றும் பேசுவதில் தேர்ச்சி (Communication) என்று ஆறு பிரிவுகளை கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு பாடத்திட்ட புத்தகங்களை கொண்டும், சிங்கை கல்வித் துறையின் சிங்கை தேசிய பல்கலைக்கழக வழிகாட்டுதலை கொண்டும், சொந்த முயற்சி யால் பல ஏடுகளை உருவாக்கியும் சீரிய முறை யில் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக் கப்படுகிறது. வகுப்புகளில் அடிக்கடி திருக் குறளும், தமிழ் பழமொழிகளும் சரளமாக ஆசிரியர்கள் உபயோகம் செய்வது ஒரு சிறப்பு அம்சம் என்றே கூறலாம்.
தமிழ் பள்ளி மாணவ, மாணவியர் தமிழ் கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் நடனம், நாடகம் மற்றும் மேடைப் பேச்சிலும் தாங்கள் திறமை பெற்றவர்கள் என்பதை நிரூபித்து கொண்டு ள்ளனர். வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழாவான, தில்லானாவின் தமிழ் இசை நிகழ்ச்சியில் ''தமிழா, தமிழா...'' திரைப்பாடலுக்கு நம் இந்திய சுதந்திர போராட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் Live Music ற்கு நடனமாடிக் காட்டினர். சிறு பிள்ளைகளின் இந்த நடனத்திற்கு அரங்கமே அதிரும் வகையில் கரகோஷத்தினை பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மன்றத்தின் சிறுவர் நிகழ்ச்சியிலும், பள்ளி மாணவர்கள் அநேகமாக அனைவரும் பல ஆடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பினை பெற்றனர் என்று கூறினால் அது மிகையாகாது எனலாம்.
பள்ளியின் இரண்டாவது ஆண்டு விழா ஜூன் மாதம் 10 ஆம் நாள், Mountain View Community Centre-ல் சிறப்பாக செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவி யர் தங்களது பேச்சுத் திறமையினை வெளிப் படுத்தவும், நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடத்தவும் பயிற்சிகள் செய்து கொண்டு வருகிறார்கள். விரிகுடா பகுதியில் வாழும் சிறப்பு மிக்க தமிழர்களில் சிலர் இந்த தமிழ் பள்ளி ஆண்டு விழாவில் தலைமை தாங்கவும் சான்றிதழ் வழங்கவும் இருக்கின்றனர்.
உலகின் மிகவும் சுறுசுறுப்பான இந்த பகுதியில் தமிழ் பிள்ளைகளுக்கு மொழி உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கையோடு இந்தப் பள்ளியினை தலைமை தாங்கி நடத்தி வருவது, தமிழ்நாடு அறக்கட்டளை - வடக்கு கலிபோர்னியா பிரிவுத் தலைவி வெற்றிச் செல்வி ராஜமாணிக்கம் அவர்கள். இந்த தூய பணியில் இவருக்கு உற்ற துணையாக ஹேமா ராஜீவும், கணேஷ் பாபு அவர்களும் இருந்து வருகிறார்கள். உடன் நிர்மலா தில்லை, லக்ஷ்மி கோதண்டபாணி மற்றும் சுமதி விஜயகுமார் அவர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்கிற பாரதி தாசனின் வரிகளுக்கேற்ப வளர்ந்து வரும் தமிழ் பள்ளி மாணவர்கள் வட அமெரிக்காவில் ஒரு புதிய வரலாறு படைப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
மேலும் விவரங்களுக்கு: வெற்றிச் செல்வி ராஜமாணிக்கம் - (408) 7410612 ஹேமா ராஜீ - (408) 9967466 கணேஷ் பாபு - (408) 2609721 |