"மோட்டெருமைக் கவிராயன் முக்காரம் கேட்டால்தான் நாட்டமுள்ள பாட்டின் நயம் தெரியும்" - என்பார் புதுமைப்பித்தன்
அத்தகைய நாட்டமுள்ள நாடகத்தை நம் வடைகுளா தமிழர்களுக்கு ஜூலை 16ல் ஸான்ஹோஸே சி.இ.டி அரங்கில் வழங்க வருகிறார் 'நாடகத் திலகம்' திரு. ஒய்.ஜீ. மகேந்திரன் - "தந்திரமுகி", "காதலிக்க நேரமுண்டு" என்னும் பிரபலமான இரு கலக்கல் நாடகங்கள் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியை நமக்கு அளிக்கவுள்ளார். விவரங்களுக்கு, www.designmavericks.com/ygm2006sj என்னும் வலைத்தளத்திற்குச் செல்லவும். அதற்கு முன்தினமும் (ஜூலை 15) லேக்வுட் ஹூவர் அரங்கிலும் இந் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒய்.ஜீ.எம்மின் யு.ஏ.ஏ. நாடகக் குழு 55 நாடகங்களை அரங்கேற்றியுள்ளது. 56வது நாடகமான 'தந்திரமுகி'யில், எந்தப் பிரச்னையானாலும், அதற்கு வித்தியாசமான கருத்துக்களால் வழிகாட்டும் 'சொல்யூஷன் சுந்தரமாக, 'தந்திரமுகி'யாக மகேந்திரன் வந்து காமெடியில் அசத்துகிறார். பல நூறு நாட்களைத் தொட்ட சந்திரமுகியின் பூர்வஜன்ம தாக்கத்தில் தந்திரமுகி உருவாகியிருக்கலாம். ஆனால், தனித்தன்மை வாய்ந்த கதையும், வசீகர நடைப்போக்கும், வயிறு குலுங்கவைக்கும் வசனங்களும் குடும்பத்தினர் அனைவருக்கும் சிறந்த நகைச்சுவை விருந்து படைக்கின்றன. தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சினிமாக்களுக்கு ஏற்ப மகேந்திரன் தேர்ந்தெடுத்திருக்கும் வசனங்கள் நாடகத்திற்கு சுவை கூட்டுகின்றன.
நாடகக் காவலர் ஆர். எஸ். மனோகரை நினைவூட்டும் சில தந்திரக் காட்சிகளும் உண்டு.
ஹரியின் கல்யாணத்திற்கு பெண் பிடிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட அவைகளை தகர்த்தெறிய ஏடாகூடமாக பல வழிகளில் முயல்கிறார் சொல்யூஷன் சுந்தரம். ஒவ்வொரு வழியிலும் அவரது முயற்சிக்கு சிக்கல்கள் பல ஏற்பட அவைகளை சமயோசிதமாக சமாளித்து பிரச்னையை தீர்த்து, ஹரிக்கு கல்யாணத்தை நடத்தி வைக்கிறார். காட்சிகளும், தேர்ந்த நடிகர்களின் நடிப்பும் கைதட்டல் ஆரவாரத்தை அள்ளிக்கொள்கின்றன. எக் காரணம் கொண்டும் கடைசிக் காட்சியைத் தவறவிட வேண்டாம்.
மற்றொரு முழு நீள நகைச்சுவை நாடகமான "காதலிக்க நேரமுண்டு" 100 நாட்களைத் தாண்டி, பெரிய திரைக்கு வரவிருக்கிறது. இதில் வரும் 'மசால் வடை' பாத்திரம் மிகப் பிரபலம். ஸூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் மிகவும் விரும்பிப் பார்த்த நாடகமிது. பிரபலமான பழைய படங்களான காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம் இவற்றிலிருந்து சில நகைச்சுவைகள் அழகாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன. பார்ப்பவர்களை இருக்கையில் கட்டிப் போடும் பலப்பல காட்சிகளால் நாடகக் களம் சூடுபிடிக்கிறது.
நாடகங்கள் துவங்கியதிலிருந்து முடியும்வரை அத்தனை காட்சிகளும் சிரிப்பு மயம். ரசனைமிக்க கதையமைப்பாலும், எழில்மிக்க நடையமைப்பாலும், அறிவார்ந்த சிறந்த நாடகங்களாய் 'தந்திரமுகி', 'காதலிக்க நேரமுண்டு' இரண்டும் ஜொலிக்கின்றன.
கலிஃபோர்னியாவில் உள்ள சில தமிழ் ஆர்வலர்களால், நாடகக் கலையை வளர்க்கவும், அம்முயற்சியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நல்வழியில் பயன்படுத்தவும் இந் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. வளைகுடா தமிழ் மன்றமும், தெ.கலிஃபோர்னியா தமிழ் மன்றமும், இதற்கு சிறந்த ஆதரவு அளித்துள்ளன.
இரண்டு நாடகங்களும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக் கூடிய சிறந்த நகைச்சுவை நாடகங்கள்.
ஒரு நாடகத்தின் நுழைவுச் செலவிலே இரண்டு நாடகங்களையும் நீங்கள் கண்டு களிக்கலாம்.
சி.இ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் சேரும் வருமானத்தில் ஒரு பகுதி, சேவை நிறுவனமான விபாவிற்கும் (www.vibha.org) மற்றவை இந்தியத் தொண்டு நிறுவனங்களுக்கும் நேரடியாகச் சென்றடையும்.
வாருங்கள், குடும்பத்துடன் வந்து சிரித்து மகிழுங்கள். இதுபோன்ற கலாட்டா காமெடிகள் இங்கு திரும்பிவர பல வருடங்களாகலாம்.
இந் நிகழ்ச்சி, ஸான்ஹோஸே சி.இ.டி. அரங்கில், ஜூலை 16, மதியம் 3 மணிக்கு நடைபெறும். தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கு, 10% சலுகை உண்டு. ஆன்லைனில் டிக்கெட் பெறுபவர்க்கும் (www.designmavericks.com/ygm2006sj) சலுகை உண்டு.
இதே நிகழ்ச்சி, தெ. கலிஃபோர்னியாவில், எக்தா செண்டர் நிறுவனம் மூலமாக, ஜூலை 15, மதியம் 3.30க்கு ஹூவர் அரங்கம், லேக்வுட்டில் நடைபெறவிருக்கின்றது. விவரத்திற்கு: 949.495.2765 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
மற்ற நகரங்களுக்கு, www.ragachitra.org என்னும் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். |