கடந்த வாரம் 'தென்றல்' இதழின் பிரதி ஒன்று கிடைக்கப் பெற்றேன். இதழின் தரம் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அடுத்த 'தென்றலின்' வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
தங்களின் பாராட்டத்தக்க இந்த முயற்சி வெற்றி அடைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்றல் இதழுக்கு எனது படைப்புகளை அனுப்ப விரும்புகிறேன்.
கார்த்திக், karthikraju@yahoo.com
*****
மே மாத இதழில் ரேகா ராகவன் எழுதியுள்ள 'அம்மா' என்னும் கவிதை அருமையான ஓர் உணர்ச்சிப் பிழம்பு. திருமணமாகி பெண்கள் பிறந்து பேரக் குழந்தைகளும் பிற்ந்துள்ள காலகட்டத்திற்கு வந்த பிறகும், 45 ஆண்டுகளுக்கு முன்னால் காலமாகிவிட்ட என்னுடைய தாயாரின் பரிவையும் பாசத்தையும் நினைவில் கொணர்ந்து என் கண்களைக் குளமாக்கி விட்டன அந்தக் கவிதையின் வரிகள்; அவருக்கு என் பாராட்டுக்கள்.
டாக்டர் அலர்மேலு ரிஷி, கலிபோர்னியா.
*****
அமெரிக்காவில் தமிழ்த் தென்றல் மாத இதழினைப் படைத்து வெளியிட்டு வரும் தங்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் உளங்கனிந்த பாராட்டுக்கள். 'தென்றல்' என்றும் குளிர்ச்சியைப் பரப்பிக்கொண்டிருக்க இறைவன் அருள்வாராக.
டாக்டர் ஒ.ர். கிருஷ்ணசாமி, சான் ஓஸே, கலிபோர்னியா.
*****
வணக்கம். தங்கள் ஜனவரி மாத "தென்றல்" இதழைப் பார்க்க நேரிட்டது. அதன் சிறப்பையும், தமிழ்த்தொண்டினையும் கண்டு வியப்புற்றேன்! தமிழகத்தில் சென்னை பெஸண்ட் நகரிலிருந்து வந்த எனக்கு இது ஒரு சிறப்பான தமிழ் விருந்தாக அமைந்தது.
ஜெ. இலக்குமி தேவி, சான் ஓஸே, கலிபோர்னியா.
*****
வணக்கம். கடந்த நான்கு மாதங்களாகத் 'தென்றல்' படித்து வருகிறேன். மிகவும் நன்றாக இருக்கின்றது. Congrats. வாழ்த்துக்கள்.
அகிலா கிருஷ்ணன், சான் ஓசே, கலிபோர்னியா.
*****
சுஜாதாவின் 'திமலா' சிறுகதை சூப்பர். பட்டினத்தார் பற்றிய கட்டுரை மிகவும் அற்புதம். உயிரின் விலை சிறுகதை படிக்கும் போது மனதில் சிறிய வலி ஏற்பட்டது உண்மை. மொத்தத்தில் கலிபோர்னியாவின் கொளுத்தும் வெயிலில் ஒரே குளுமையான விஷயம் தென்றல் மே மாத இதழ்.
கணேஷ் பாபு, கலிபோர்னியா |