96-ஆம் ஆண்டைய தேர்தல் முடிவுகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் எதி ரொலித்தது. தமிழகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. தொண்டர்கள் மட்டுமல்லாமல் மக்களும் கூட வெற்றிப் பரவசத்தில் திளைத் திருந்தனர். தி.மு.க அமோக வெற்றி பெற்று புகழின் உச்சியை எட்டியிருந்தது. மாறாக இந்தத் தேர்தல் தி.மு.கவுக்கு சோதனை யாகவும் புரியாத புதிரைத் தோற்றுவிக்கும்படியாகவும் அமைந்துவிட்டது. 'இது எப்படி நடந்தது?' கேள்விகள் தி.மு.கவினரைத் திணறடித் திருக்கின்றன. டீக் கடை மற்றும் மக்கள் கூடும் இடங்களிலெல் லாம்கூட இந்தக் கேள்வி எழுந்தவாறு இருக்கிறது.
அ,தி.மு.கவின் வெற்றி தொண்டர்களைத் தவிர மற்ற எவரையும் கொஞ்சம்கூட சலனப்படுத்தியதாகத் தெரிய வில்லை. மாறாக ஆச்சரியத்தில்தான் ஆழ்த்தி யிருக்கிறது. மக்கள் ஆச்சரியத்தில் இருக்கின் றார்கள் எனில் அப்புறம் யார் வாக்களித்து அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் யாவும் தி.மு.கவின் வெற்றிக்குக் கட்டியங்கூற முயற்சித்தனவே! கருத்துக் கணிப்புகளெல்லாம் மரண அடி வாங்கியிருக்கிறதைப் பார்க்கிற போது யாரைக் குறை சொல்வது.
மரத்தடியில் அமர்ந்து தங்கள் இஷ்டத்திற்கு பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தியதா? இல்லை உண்மையிலேயே மக்களை நேரடியாகச் சந்தித்துக் கருத்துக் கணிப்பை நடத்தியதா? பதிலைப் பத்திரிகைகள்தான் சொல்ல வேண்டும். ஓரளவுக்குக் கூட கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளோடு நெருங்கித் தொட முடியவில்லையே! மக்கள் வாக்களிக்கப் போவதைப் பற்றிப் பொய் சொன்னார்களா? மக்கள் பொய் சொல்வதற்கு ஏதாவது விஷேச காரணங்கள் இருக்கிற மாதிரியாகவும் தெரியவில்லை. அப்படியெனில் தி.மு.கவுக்கு ஆதரவாகக் கருத்துக் கணிப்பை நடத்துவதற்கு பத்திரிகைகளைத் தூண்டியது யார்? இது போன்ற பலவிதமான குழப்பமான கேள்விகளுக் கிடையேதான் இந்தத் தேர்தல் முடிவுகளை அணுக வேண்டியிருக்கிறது.
கருத்துக் கணிப்புகள் வழக்கம்போல முகத்தில் அடி வாங்குவதற்கென்றே நடத்தப்படுபவை. அதனால் அது ஒரு புறமிருக்கட்டும். இரு கட்சிகளுக்கிடையிலும் இருக்கக் கூடிய பலம், பலவீனம் இவற்றை வைத்து மட்டுமே இந்த முடிவுகளை அலச முடியும். தி.மு.கவின் பலம் என்று அவர்கள் நினைத்தது சாதிக் கட்சிகளின் (சாதிக்கும்) கூட்டணியைத்தான். பல்வேறு சாதிக் கட்சிகளை இணைப்பதன் மூலம் சாதி வாக்குகளை எளிதில் பெற்று விடலாமென்பது அவர்களின் கணக்கு.
பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் மிகப் பெரிய கூட்டமொன்று இருப்பதாகவும் தப்புக் கணக்கு போட்டனர் இந்த இரண்டு அம்சங்களின் காரணமாகத்தான் ம.தி.மு.கவைத் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறிகிற தைரியம் தி.மு.கவுக்கு வந்தது. இது ஒரு காரண மென்றால், மற்றொன்று ஸ்டாலினை முதன்மைப் படுத்துகிற போக்கு. இந்தத் தேர்தல் கூட்டணிப் பேரத்தில் முதன்மையாகச் செயல்பட்டவர் ஸ்டாலின். சென்னையில் ஸ்டாலினுக்கு இருக்கக்கூடிய வரவேற்பைப் பார்த்து விட்டு கலைஞர், தமிழகம் முழுக்க ஆதரவு இருப்பதாகத் தவறாகக் கணித்து விட்டார். அதன் காரணமாகவே எதிர்ப்புகளை மீறி ஸ்டாலினை முதன்மைப்படுத்தினார்.
சாதிக் கட்சிகள் மற்றும் ஸ்டாலினை முதன்மைப்படுத்தும் போக்கு இவைகளையே எதிர் கட்சிகள் பிரச்சார ஆயுதமாகக் கையிலெடுத்தன. இதற்கு வரவேற்புச் சேர்க்கும் வகையில் மாறனின் தற்காலிக பல்டி, ம.தி.மு.கவின் விலகல், தமிழ்க் குடிமகனின் தாவல் ஆகியன உதவி புரிந்தன. கலைஞரின் நோக்கதை வெளிப்படையாக விமர்சிக்க ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தன. அதற் கேற்றாற் போல கலைஞரும் ஸ்டாலின் முதல்வராவது குறித்து மறைமுகமான இலக்கியத் தோரணையிலமைந்த அறிக்கை களை ஆங்காங்கே உதிர்த்தார். கலைஞரி டமிருந்து விலகிய ராமதாஸ¤ம் இத்தகைய குற்றச் சாட்டுகளை வைக்கத் தவறவில்லை.
சாதிக்கட்சிகளின் கதம்பமாகக் காட்சியளித்த தி.மு.க, பா.ம.கவையும் சாதிக் கட்சிதானென சுட்டிக் காட்டியது. ஆனாலும் பா.ம.க அதன் சாதி வாக்குகளைப் பெறுவதில் உறுதியாக இருந்ததினால் அ.தி.மு.கவுக்கு மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. மாறாக கலைஞரின் அணியில் புதிய புதிய மக்களுக்கு அறிமுக மில்லாத சாதிக் கட்சிகள் இருந்ததால், அதன் வெற்றி ஒரு அம்சத்தில் கேள்விக்குறியானது.
அ.தி.மு.க அணிக்கு வெற்றிக்கான பலங்கள் என்று வரும் போது, மாற்றத்தை விரும்பிய மக்கள், மத்தியத் தரமக்களின் வாக்குகள் பதிவாகாமை, மூப்பனாரின் உடல்நிலை, ராமதாஸின் செல்வாக்கு போன்றவைகளைக் காரணமாகச் சொல்லலாம். மாற்றத்தை விரும்பிய மக்கள் தி.மு.கவுக்கு எதிராக இருந்த ஒரே பலமான அணி என்ற காரணத்தால் மட்டுமே வாக்களித்தனர். ஒருவேளை மூப்பனார் மற்றும் இதரக் கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை அமைத்திருந்தால் மிகச் சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றிருக்க முடியும். அப்படி அமையவிடாமல் தன்னுடைய கூட்டணிக்குள் இழுத்ததில்தான் ஜெயலலிதாவின் வெற்றி அடங்கியிருக்கிறது.
ஜெயலலிதா கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் வெற்றியை நோக்கி ஒரே அணி யாகச் செயல்பட்டதுகூட அதன் வெற்றியைத் தீர்மானித்திருக்கிறது. தமிழக மெங்கும் பிரச்சாரம் மிகச் சரியாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவைத் தேர்தலில் நிற்கத் தடை விதித்ததை அடுத்து கிராமப்புறங்களில் தி.மு.கவுக்கு எதிரான மனநிலை வளர ஒரு காரணமாக அமைந்தது. ஜெயலலிதாவின் பிரச்சாரப் பீரங்கிகள் அதை முன்னிறுத்தியே தங்களது வாக்குகளைச் சேகரிக்க முயன்றனர்.
தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்ய அதிக அளவிலான தொண்டர்கள் முன் வரவில்லை. இதற்குக் காரணம் தீப்பொறி ஆறுமுகத்தின் விலகலும் அதைத் தொடர்ந்த அவரது அறிக்கையும் காரணமாக அமைந்தன. தி.மு.க முதன் முறையாகத் தனது அடித்தள ஓட்டு வங்கியை இந்தத் தேர்தலில் இழந்திருக்கிறது. அடிமட்டத் தொண்டர்களிடையே கலைஞ ருக்கு எதிரான ஒரு மனநிலை வளர்ந்தது. இதைத் தெரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, பிரச்சாரப் பயணத்தின் போது, தி.மு.கவின் அடிமட்டத் தொண்டர் ஒருவருக்குப் பண உதவி செய்தார். தி.மு.கவின் தொண்டர்களுக்குத் தேர்தல் செலவுகளுக்குச் சரிவர பணம் தரப்படவில்லை. இதனால் தேர்தல் பணியாற்ற எவருக்கும் ஆர்வமில்லாமல் போனது.
அடுத்ததாக, தி.மு.கவின் பிரச்சார உத்தி. மிதமிஞ்சிய தைரியத்தில் வழக்கம்போல அடுக்கு மொழி வசனங்களைப் பேச தி.மு.க மறந்து போனது. சாதனைகளைச் சொல்வதால் மட்டுமே வாக்குகளைப் பெறமுடியுமென தவறாகக் கணித்தது. சென்னையில் கட்டிய மேம்பாலங்களைப் பற்றி செக்கானூரணியில் பொதுக் கூட்டம் போட்டு முழங்கியது. ஆனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கான காரணம் பற்றி மக்களிடம் தெரிவிக்க மறந்து போனது. இதைத் தங்களுக்குச் சாதகமாக ஜெயலலிதா அணியினர் பயன்படுத்திக் கொண்டனர்.
தி.மு.கவின் திட்டங்கள் யாவும் எதிர்கால நோக்கிலமைந்த திட்டங்கள் என கிராமப்புற மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போனது. ப.சிதம்பரத்தின் அறிவுப்பூர்வமான பேச்சு அறிவுஜீவிகள் மத்தியில் மட்டுமே போய்ச் சேர்ந்தது. உணர்வுகளை அது தட்டியெழுப்பி மக்களை வாக்களிக்க நிர்பந்தப்படுத்தவில்லை அது. தமிழக மக்களை உணர்வுப் பூர்வமான பேச்சுக்கள் மட்டுமே கவரும். அந்த வகையில் அ.தி.மு.க அணி உணர்வுப் பூர்வமான பேச்சுக்களில் தூள் கிளப்பியது.
பெரும்பாலான மத்தியத்தர மக்கள் வாக்க ளிக்க மறந்து போனது தி.மு.கவுக்கு மிகப்பெரிய இழப்பு. குறிப்பிட்ட சம்பவமொன்றைச் சொல்ல வேண்டுமெனில், 30 பேர் பணியாற்றும் சென்னை அலுவலகமொன்றில் 27பேர் தி.மு.க அனு தாபிகள். 3 பேர் அ.தி.மு.க அனுதாபிகள். இந்த 27 பேரில் ஒருவர்கூட வாக்களிக்கச் செல்லவில்லை. ஆனால் அந்த மூன்று பேரில் இருவர் வாக்களித்துள்ளனர். இது மாதிரியே தி.மு.க வின் வாக்கு வங்கி மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருந்துள்ளது. ஆனால் ஒரு சாதகமான அம்சம் குறிப்பிட்ட அளவு பெண்களின் ஆதரவு தி.மு.கவின் பக்கமாகச் சாய்ந்துள்ளது. ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதுகூட தி.மு.கவுக்குப் பேரிழப்பு. சென்னை தி.மு.கவின் கோட்டை என்ற நிலையும் இந்தத் தேர்தலில் தகர்ந்திருக்கிறது. வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள்கூட மிகக் குறைந்தளவு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளனர். நடிகர்களின் ஆதரவு பொய்த்துப் போனது. இதைத் தெரிந்துதான் அ.தி.மு.க நடிகர்களின் ஆதரவை நாடவில்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு வரத் தயாராகயிருந்த நடிகர்களையும் கழற்றி விட்டார் ஜெயலலிதா.
மாற்றத்தை விரும்பிய மக்கள், தி.மு.கவின் பலவீனங்கள், அ.தி.மு.கவின் பலம் ஆகிய அம்சங்கள் சேர்ந்தே இந்த வெற்றியை அ.தி.மு.கவுக்குப் பெற்றுத் தந்துள்ளன.
சரவணன் |