கடல்பூக்கள் - திரைப்பட விமர்சனம்
நடிப்பு : முரளி, மனோஜ், உமா, சிந்து, பிரதீயூஷா, ஜோதி, சந்தானபாரதி, வையாபுரி, ஷ்யாம் கணேஷ்.
இயக்கம் : பாரதிராஜா
இசை : தேவா

கடற்கரை பகுதியை மையமாக வைத்துக் கதை பின்னிய பாரதிராஜா, கடலை மையமாக வைத்து எடுத்திருக்கும் படம்.

நட்பின் ஆழத்துக்குக் கடலைத் தொடர் புபடுத்தியிருப்பதில் தொடங்கி, பல ரகசியங்களைத் தம்முள் புதைத்துக் கொண்டு எப்போதும் போல் இயல்பாக இருக்க முடிகிற கடலுக்கும் நண்பனுக்காகத் தன் வாழ்க் கையையே தியாகம் செய்துவிட்டு இயல்பாக இருப்பவனையும் ஓரளவுக்குக் கடல் தன்மைக்கு ஒப்புமைப்படுத்த முடிகிறது.

நண்பர்களாக முரளியும் மனோஜும். முரளியின் தங்கை உமா, மனோஜை ஒரு தலையாகக் காதலிக்கிறார். மனோஜின் தங்கை, சிந்து. 'பதினாறு வயதினிலே' மயில் போல படித்து, நகரத்தில் செட்டிலாக நினைக்கிறார். கிராமத்துக்கு வரும் மீன் ஆராய்ச்சியாளர் ஷ்யாம் கணேஷ், அவரை மெல்ல வசீகரித்து ஏமாற்றிவிடுகிறார்.

இதை அறிந்து கொந்தளிப்போடும் விரக்தியோடும் இருக்கிறார் மனோஜ். இந்த நேரத்தில் அவரைச் சந்தித்துத் தன் தங்கையை மணந்து கொள்ள சம்மதம் கேட்கிறார் முரளி. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு 'என் தங்கையை நீ மணந்து கொள்கிறாயா?' என்கிறார் மனோஜ்.

நட்புக்கான சோதனைக் களம்....

நண்பனின் தங்கை இன்னொருத்தனிடம் கெட்டுப்போனவள் என்ற விவரம் தெரியாமல் தன்னிடம் இப்படி சம்மதம் கேட்பதாக நினைக்கும் முரளி, நண்பனுக்காகவும் தங்கைக் காகவும் திருமணத்துக்குச் சம்மதிக் கிறார்.

தங்கை பாசம் தன்னை நேர்மையற்ற வனாக்கி விட்டதற்காக மனம் புழுங்கும் மனோஜ்.... நண்பனுக்காக எல்லா உண்மை களையும் உள்ளத்துக்குள்ளேயே அடக்கிக் கொண்டிருக் கும் முரளி....

இத்தனைக்கும் முரளி அதே குப்பத்தைச் சேர்ந்த உப்புக்காரியான பிரதியூஷாவைக் காதலித்து வந்தவர். முரளியின் இத்தனைத் தியாகங்களையும் மனோஜின் குற்றம் கொச்சைப்படுத்தியிருந்தாலும் நட்பு மீண்டும் எப்படி எல்லாவற்றையும் ஈடுகட்டி கடலைப் போல பரந்து கிடக்கிறது என்கிறது கதை.

கடல் பயணம், கடலில் முத்துக் குளித்தல், உப்பங்களம், தங்கையின் கல்யாணத்துக்காக உயிரைப் பணயம் வைத்துச் சுறா பிடித்தல் என்று ஏராளமான கடல் பின்னணியைப் பின்னியிருக் கிறார் பாரதிராஜா. படத்தில் நடித்ததாகச் சொல்லப்பட்ட வடிவேலு, ஜனகராஜ் போன்றவர்கள் திரையில் தென்படவே இல்லையே... அவர்கள் திடீரென்று நீக்கப் பட்டதால் படத்தின் ஓட்டத்தில் ஏதாவது தொய்வு ஏற்பட்டிருக்கக் கூடும். பிரதியூஷாவின் காதல் தியாகம் சொல்லும்படியான இரக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தங்கையை ஏமாற்றியவனைக் கல்லைக் கட்டிக் கடலில் போடுவது குறித்து அடுத்தகட்ட விசாரணைகள் இல்லாதது கிளைமாக்ஸை நிறைவு செய்வதாக இல்லை.

உமா, சிந்து ஆகியோரது நடிப்பு அருமை. முரளியும், மனோஜும் மீனவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

''சிலுவைகளே சிலுவைகளே, நாம் பிறப்புக்கு முன்னே எங்கே?'' பாடல்கள் மனத்தில் ரீங்கரிக்கிறது. பின்னணி இசை படத்துக்கு பலவீனம். குப்பத்தைக் காட்டும் போதெல்லாம் 'உப்புக்கருவாடு ஊறவெச்ச சோறு' மெட்டு போடுவது எதில் சேர்த்தி?

உழைப்பாளர்களின் தியாகத்தையும் தீரத்தை யும் சொல்லும் பாரதிராஜா படம்.

தமிழ்மகன்

© TamilOnline.com