ஜூன் ஜூலை - திரைப்பட விமர்சனம்
எங்கள் கதாநாயகனின் கேரக்டர் பெயர் ஜீவா. கல்லூரி விடுமுறை விட்டவுடன் ஜீவா தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்குக் போகிறான். நண்பர்கள் அனைவரும் நன்றாகப் போர்வையைப் போர்த்தி யபடி தூங்கிக் கொண்டிருக்க, ஜீவா மட்டும் கையில் காமிராவுடன் விடியற்காலை ஆறு மணிக்கே மலைப் பகுதியைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறான்.

கண்ணில் கண்ட இயற்கைக் காட்சிகளையெல்லாம் தனது காமிரா மூலம் படம் பிடித்துக் கொண்டே வந்தவன் கண்களில், இளமை ததும்பும் அழகிய பெண்ணொருத்தி தென்படுகிறாள்...

அவளுடைய நடவடிக்கைகள் அவனுக்கு வினோதமாக இருக்கிறது. மரம், செடி, கொடி மற்றும் இயற்கையான இடங்களிலெல்லாம் போய், ஏதோ புலம்புகிறாள். சற்றே நெருங்கி என்னவென்று உற்றுக் கேட்கிறான் ஜீவா.

''உங்களையெல்லாம் விட்டுட்டு நான் ஊருக்குப் போறேன். ஆனால் கண்டிப்பா திரும்பி வருவேன். அதுவரைக்கும் நீங்க என்னை மறக்கக் கூடாது. இதப் பாரு பிள்ளையாரப்பா! உனக்கு எத்தனை நாள் தேங்காய் உடைச்சி ருக்கேன். எத்தனை முறை தோப்புக் கரணம் போட்டிருக்கேன். என்னை மறந்துடாதே'' என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய அழகு, இயற்கையுடன் பேசுகிற தோரணை, பிள்ளையாரிடம் எடுத்துக் கொண்ட உரிமை, எல்லாவற்றையும் பார்த்த ஜீவா அவளிடம் இதயத்தைப்பறி கொடுக்கிறான். காமெராவில் பதிந்த அவளுடைய முகம் அவனுடைய மனத்திலும் பதிந்தது.

இதுதான் படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சந்தித்துக் கொள்ளும் காட்சி. மீண்டும் அவர்கள் எப்படி சந்திக்கிறார்கள். ஜூன் ஜூலை விடுமுறையில் எற்படும் அவர்கள் சந்திப்பு பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை'' என்றார் 'ஜூன் ஜூலை' படத்தின் இயக்குநர் கே.ஆர். ஜெயா

கோபுரத் திங்கள் பிலிம்ஸ் தயாரிக்கும் 'ஜூன் ஜூலை' படத்துக்கான இக் காட்சியில் ஜீவாவாக புதுமுகம் ஜீவா, பிரியாவாக புதுமுகம் அபர்ணா நடித்தனர். இவர்களுடன் மெளலி, பாத்திமா பாபு, வையாபுரி, பாலாஜி, சாப்ளின் பாலு, ராதா பாய், காகா ராதாகிருஷ்ணன், மாஸ்டர் சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் நெடுமுடி வேணு, பிஜூமேனன் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு: ஆர். செல்வா, பாடல்கள்: வாலி, இசை: தேவா, வசனம்: பாலகுமாரன், கதை-திரைக்கதை-இயக்கம்: கே.ஆர். ஜெயா.

தமிழ்மகன்

© TamilOnline.com