"குளு குளு" குற்றாலம் போகலாம் வாரீகளா
கருங் கொண்டல் கண்ணுறங்கும் மலையுச்சி - மலையிருந்து
வருந் தென்றல் இதமாய் அசைந்து வீசிடும்;
வெள்ளிக் கற்றையென விரைந்து வீழ்ந்திடும் நீரருவி
அள்ளிக் குடித்தால் அமுதமாய் இனித்திடும்,
தள்ளித் தள்ளி நிற்கும் பாறைகளுடன் பொருதி
துள்ளித் துள்ளி ஓடிப் பரவிவிடும் பூமியின் மேல்;
அருவியின் சிதறலில் ஊடுருவிய கதிரவன் வெள்ளொளி
மருவி வளைந்த வானவில்லாய் விளைந்த ரசவாதம்
வாசம் பரப்பி நேசக்கரம் நீட்டும் பூவினம் - அவற்றில்
வாசம் செய்து தேனை மாற்றிக் குடித்திடும் வண்டினம்;
பாடிக் களித்து சிறகடித்து வானில் பறந்திடும் புள்ளினம்
ஓடிக் களித்து ஒய்யாரமாய் திரிந்திடும் விலங்கினம்;
கட்டிக் கரும்பென தித்திக்கும் கனி தாங்கிய மரங்களில்
குட்டிக் குரங்குகளை மடியில் கட்டித் தாவிடும் மந்திகள்
பட்டுச் சிறகைப் பளீரென விரித்துப் பறந்திடும் வண்ணத்துப் பூச்சிகள்
விட்டு விட்டு ஒளிர் விடும் மின்மினிப் பூச்சிகள்;
விரிந்து பரவிய தெள்ளிய நீர்ப்பரப்பில் ஒய்யாரமாய்
திரிந்து படகு போல் பவனி வரும் வாத்தினம்
ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்களின் இலைப்பற்கள் ஊடுருவி
தாங்கி நிற்கும் நிலத்தின் மேல் புள்ளிக் கோலமிடும் வெய்யில்.
நெஞ்சம் இலாத நகர வாழ்வில் இயந்திரமாய் இயங்கும் நமக்கு
பஞ்சம் இலாமல் இயற்கை அன்னை அளிக்கும் காட்சிகள் பலப்பல.

சு. கோபாலன்
gopalantransport@hotmail.com

© TamilOnline.com