தமிழில் புதுமைப்பித்தன் எனும் கதைசொல்லி!
ஜூன் 30 - புதுமைப்பித்தன் நினைவு நாள்

''பொதுவா என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு செளகரியம் பண்ணி வைக்கும் இன்சூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்து கொண்டு சிரிக்கிறார்கள். இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் இன்னும் கோபிக்க வைத்து, முகம் சிவப்பதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாகயிருக்கிறது.''

இவ்வாறு தன்னைத் தமிழ்ச்சூழலில் அடை யாளப்படுத்திக் கொண்டவர் சொ. விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன் (1906-1948). இவர் தமிழ் வாசகர்களுக்குப் புதுமைப்பித்தனாகவே நன்கு அறிமுகமானார்.

''ஒருவர் என்னுடைய புனைபெயரை வைத்துக் கொண்டு என்னை விமரிசனம் செய்தார். பித்தமும், இடையிடையே புதுமையும் காணப்படும் என்றார். வாஸ்தவம்தான். பித்தா, பிறைசூடி, பெருமானே என்ற உருவகத்தில் பொதிந்துள்ள உன்மத்த விகற்பங்களை அவர் குறிப்பிடுகிறார் என்று பொருள் கொண்டு, அவ்வளவும் நமக்குண்டு என ஒப்புக் கொள் கிறேன்; அவரவர் மனசுக்குகந்த ரீதியில் இருப்பவைகளே புதுமை எனக் கொள்ளப் படுகின்றன. நான் பொருள் பித்தன்தான். அதுவே புதுமை. என் கதைகளில் புதுமை அதுதான்'' என கூறிச் செல்கிறார் புதுமைப்பித்தன்.

இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் நாற்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்ப் புனைகதை மரபில் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் காட்டியவர். தமிழில் சிறுகதை அறிமுகமாகித் 'தமிழ்ச்சிறுகதை' என தனித்து வகைமைப்படுத்தி நோக்குவதற்கான வளங்களைக் கொடுத்தவர். சம கால எழுத்தாளர்களைத் தவிர்த்து, பிந்தைய தலைமுறை எழுத்தாளர்களிடம் கணிசமான தாக்கம் செலுத்தியிருப்பவர். சம காலத்தில் வெளிப்படும் கதை சொல்லல் மரபுக்கு - எடுத்துரைப்புக்கு மூலக்கூறுகள் புதுமைப் பித்தனின் எழுத்துக்களில் விரவிக் கிடைக்கிறது.

தமிழில் பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா போன்றோரால் தொடங்கி வைக்கப்பட்டு மெல்ல மெல்ல வளர்ந்த சிறுகதை, புதுமைப்பித்தனால் தனிச் சிறப்புக் குரிய எழுத்தாக்கப்படும் முறைமையாகத் தோற்றுவித்து வளர்க்கப்பட்டது. தமிழில் சிறுகதை பூரண வடிவம் பெற்றது. இதைச் சிறப்பாகத் தன் பங்குக்கு 'மணிக் கொடி'முன்னெடுத்தது. இக்காலத்தில்தான் சிறுகதைக்கு இலக்கிய அந்தஸ்தும் ஏற்பட்டது.

இதனைப் புதுமைப்பித்தன் ''வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பித்தது. 'பரமசிவன் வந்து வந்து வரம் கொடுத்துப் போவார். பதிவிரதைக்கு இன்னல் வரும்; பழையபடி நீளும்' என்றிருந்த நிலைமை மாறி; நிலாவும், காதலும் கதாநாயக னுமாகச் சோபித்த சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர் நின்று நோக்க ஆரம்பித்தன'' என்பார்.

ஐரோப்பிய ஆங்கில இலக்கியப் பரிச்சயமும் தமிழிலக்கியப் பரிச்சயமும் கொண்டவராகவும் அவற்றின் வீரிய வளங்களை சுவீகரித்துக் கொண்டவராகவும் வெளிப்பட்டார். இதுரை யான தமிழ்ச்சூழலில் கதையென வழங்கிய ஒரு வகை எழுதுதல் முறையில் வித்தியாசங்களையும் மாறுதல்களையும் கொண்டு வந்தார்.

''என் கதைகளில் எதையாவது குறிப்பிட்டு அது பிறந்த விதத்தைச் சொல்லுவது என்றால் ரிஷிமூலம், நதிமூலம் காண்கிற மாதிரிதான். சில ஆபாச வேட்கையில் பிறந்திருக்கலாம். வேறு சில குரோத புத்தியின் விளைவாகப் பிறந் திருக்கலாம். சில, அவை சுமக்கும் பொருளுக் குச் சற்றும் சம்பந்தமேயில்லாத ஒரு காரியம் கைகூடாதபோது எழுதப்பட்டிருக்கலாம்.''

''என் கதைகளில் தராதரத்தைப் பற்றி எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும். இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவமிருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இரு நூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கில் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கர வட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டுக் கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களரியையும், மனக் குரூரங்களையும் விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால் ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப் போகப் போகிறது? இற்றுப் போனது எப்படிப் பார்த்தாலும் நிற்கப் போகிறதா? மேலும், இலக்கியமென்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரம்மநாயகம். இத்தியாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றுமில்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவுமில்லை.''

இவ்வாறு புதுமைப்பித்தன் எழுத்து பற்றிய முன் தீர்மானத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு முழு வீச்சோடு எழுத்து என்கிற செயல் முறையில் தீவிரமாக ஈடுபட்டார். மொழியின் தீவிரச் சாத்தியப்பாடுகளை புரிந்து கொண்டு தனது கதை சொல்லல் மரபை உருவாக்கிக் கொண்டார். இதனாலேயே இவரது கதைகளில் புதுமையும் பித்தமும் சாத்தியப்பட்டது. மொழி, நடை பற்றிய ஏற்கனவே உள்ள கருத்தாக் கங்களைக் கேள்விக்குட்படுத்தி மாற்றிய மைக்கும் விதத்தில் தனது எழுதுதல் எனும் செயற்பாட்டை வடிவமைத்துக் கொண்டார். வேறு யாரும் செய்யாத காரியங்களை - சொல்லாத விஷயங்களைச் சொல்பவராகப் புதுமைப்பித்தன் வருகிறார்.

புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரத்யேகமான மொழி அமைப்பில் கட்ட மைக்கும் போக்கு உள்ளது. இதை யதார்த்தம், எதிர்-யதார்த்தம், சொல்லுதலில் உள்ள கிண்டல் எனப் பிரித்தறிய முடியும்.

''இந்தக் கதைகள் யாவும் கலை உதார ணத்துக்கு என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சேவையல்ல. இவை யாவும் கதைகள், உலகை உய்விக்கும் நோக்கமோ, கலையை எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள் தாம் இவை. பொதுவாக நான் கதை எழுதுவதன் நோக்கம் கலை வளர்ச்சிக்குத் தொண்டு நினைப்பில் பிறந்ததல்ல'' என்பார்.

புதுமைப்பித்தன் தான் புரிந்து கொண்ட கலைப்பிரக்ஞை வழியேதான் தமிழில் சிறுகதை என்ற இலக்கிய வகைமை வளருவதற்குப் புதுமைப்பித்தனின் ஆளுமை விகசிப்பு தக்க தளத்தை அமைத்துக் கொடுத்தது. வளர்த்துச் சென்றுள்ளது.

கூர்மையான விமரிசன நோக்கு, எதையும் கதைப் பொருளாக்க முடியும் என்ற துணிவு, சாதாரண நிகழ்வுகள், மாந்தர்கள் யாவும் இவரது பார்வையில் முக்கியமானவையாகி விடுகின்றன. எப்போதும் வாழ்க்கையோடு முரண்டு பிடித்த உளத் திறனும் சிந்தனைப் பாங்கும் இவரது எழுத்தாளுமையைக் கூர்மையாக்கிக் கொண் டிருந்தன.

கசப்புக் கலந்த சிரிப்பு, நம்பிக்கை வறட்சிக் கொள்கை - கட்சி - சமூக முன்னேற்றம் பற்றிய அவநம்பிக்கை, பெண்கள், குழந்தைகள், நாகரிக வாழ்வால் நசுக்கப்பட்டவர்கள், ஏகாந்திகள், பரதேசிகள், நாடோடிகள், சித்தர்கள் ஆகியோர் மீது கொண்ட பற்று. மேற்கத்திய அறிவியல் தர்க்கம், நாத்திகம் பற்றிய கேள்வி, மனங்களின் விசித்திர விபரீத ஓட்டங்கள் பற்றிய புரிதல், சமூகக் கொதிப்பு, மனிதர்கள் மீதான வெறுப்பு போன்றவை புதுமைப்பித்தன் கதைகளில் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கேலியும் கிண்டலும் வெளிப்படும் விதத்தில் வெளிப்படுபவை. தேர்ந்த சொற்கள் மூலம் தமக்குப் பிடித்தவர்களையும் பிடிக்காதவர்களையும் கேலி செய்வார். இதற்காகப் பகடி செய்யும் பாத்திர உருவாக்கத்தின்போது, இன்னொருவரின் பேச்சாக்கி விடுகிறார். இதுவே புதுமைப் பித்தனின் தனிச்சிறப்பு எனக் கூறலாம். புதுமைப்பித்தனின் நடை என்று தனித்து அடையாளம் காட்டக்கூடிய அளவுக்கு வீரியமும் ஆழமும் விரிவும் கொண்டவை.

புதுமைப்பித்தன் மறைந்த பின்பும் ஐம்ப தாண்டுகளில் நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் புதுமைப்பித்தனின் இடம் மேலும் உறுதிப்படவே செய்கிறது. இக் காலத்திலும் புதுமைப்பித்தன் உயிர்ப்புடன் இயங்கக்கூடிய அளவுக்குத் தன்னளவில் பன்முகச் சாத்தியங்களைக் கொண் டிருப்பவர். அவரளவுக்குத் தம் காலத்தின் தமிழர் வாழ்வியலின் பல்பரிமாணங்களையும் அனுபவங் களையும் புதுமைகளையும் படைப்புத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் புகுத்தியோர் வேறு யாருமில்லை என்றே கூறலாம்.

தமிழ்ச் சிறுகதையின் சொல்லுதலின் மொழியை தன்னால் இயன்றவரை புதுமை யாக்கம் செய்து, யதார்த்த வகை எழுத்துக்குப் புதிய கதை சொல்லல் போக்கைக் கொண்டு வந்து நுட்பமாக எதிர்-எதார்த்த போக்கின் புனை கதை மரபு தோற்றுவிப்புக்கும் புதுமைப்பித்தன் காரணமாகின்றார். இந்தப் போக்குதான் தொடர்ந்து தமிழின் கதை சொல்லியை, அடுத்தடுத்த வித்தியாசமான கதை சொல்லல் முறைக்கு நகர்த்துகிறது. புதிய எழுத்து செயல்பாடு தோற்றுவிக்கப்படுகிறது.

''தமிழில் இல்லாததில்லை'' என்று சொல்லிக் கொண்டு தங்கள் சோம்பேறித்தனத்தை மறைத்துத் திரியும் போலிகள் மீது புதுமைப் பித்தனுக்கு அளவற்ற ஆத்திரம். இப்பொழுது இலக்கியத்தின் பெயரால் நடக்கும் ஆராய்ச் சிகள் முதல் குரங்கு தமிழனாகத்தான் மாறியதா? என்பது முதல், கம்பன் சைவமா, வைணவனா, தமிழ் எழுத்துக்கள் ஓம் என்ற முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவந்த வரலாறு வரையிலுள்ள, இலக்கியத்துக்குப் புறம்பான 'தொண்டுகளை' எல்லாம் அப்படியே மூட்டை கட்டி வைத்துவிட்டு இலக்கியத்தை அனுப விக்கும் முறையை உணர்த்த முன் வர வேண்டும்'' என்பார்.

புதுமைப்பித்தனின் சிந்தனை, தேடல் சமூகம், இலக்கியம் பற்றிய அவரது புரிதல், விமரிசன நோக்குகள் யாவும் இன்னும் ஐம்பது ஆண்டுகளின் பின்பும் இக்காலப் போக்குகளைப் புரிந்து கொள்வதற்கு எச்சரிக்கை செய்யும் எதிர்காலவியல் நோக்கு சார்ந்தவையே. இவரது புதுமையும் பித்தும் தமிழ்ச் சமூகத்தின், தமிழ்க் கலாசாரத்தின் சகல தளங்களையும் ஊடறுத்துக் கிண்டிக் கிளறிப் பார்க்கும் துணிந்த மனநிலையின் வெளிப்பாடே.

நவீன தமிழிலக்கியப் பயில்வில் புதுமைப் பித்தன் பயில்வும் தவிர்க்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் நவீனத் தமிழ் பிரக்ஞையின் - தமிழ்ப் புனைகதையின் புதிய கதைசொல்லி புதுமைப்பித்தன் எனின் மிகையல்ல.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com