இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் துக்கும், இந்திய விளையாட்டு அமைச்சகத் துக்கும் இடையேயான மோதல் போக்கு முற்றி அறிக்கைப் போராக வெடித்திருப்பது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலை தருவதாக உள்ளது.
''பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்த தெளிவான வழிமுறைகளை அரசு அறிவிக்கும் வரை இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை-2003, ஆசியக் கோப்பை, ஐ.சி.சி நாக் அவுட் போட்டி உள்ளிட்ட சர்வதேசப் போட்டி களில் பங்கேற்காது'' என்று இந்தியக் கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள் ளதாக வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
அவரது அறிவிப்பால் எரிச்சலடைந்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதி, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு தன்னிச் சையானது, பொறுப்பற்றது. அரசின் கொள்கை முடிவுகள் குறித்து வற்புறுத்த வாரியத்துக்கு எந்த அதிகாரமுமில்லை என்று பதிலடி கொடுத் துள்ளார்.
இது குறித்து விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கம்:
கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளபடி, பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசிடமிருந்து விளக்கத்தையோ வழிகாட்டு நெறிமுறைகளையோ வாரியம் கோரவில்லை. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற அரசின் முடிவிற்குப் பின் இவ்வகையில் விளக்கம் ஏதும் கோரி கிரிக்கெட் வாரியத்திடமிருந்து அரசுக்கு வேண்டுகோள் வரவில்லை.
இந்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் அல்லது விளக்கம் எதனையும் அளிக்கும் அவசியம் எழவில்லை. வாரியத்திடமிருந்து கோரிக்கை கிடைக்கப் பெற்ற பின், தேவை யெனில் விளக்கம் அளிக்கப்படும்.
டொரோண்டோவில் கடந்த ஆண்டு செப்டம்பர்- 8 முதல் 21வரை நடைபெறவிருந்த 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ் தானுடன் விளையாட கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அரசிடம் அனுமதி (ஏப்ரல்-2000) கோரியிருந்தது. இக்கோரிக்கையை கவனத் துடன் பரிசீலித்தபின், அப்போது நிலவிய சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்பது உகந்ததாக இருக்காது என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது.
எனினும் பலநாடுகள் பங்கேற்கும் ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்பதற்கான அரசின் ஒப்புதல் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கமான இடங்களல்லாத ஷார்ஜா, சிங்கப்பூர், டொரோண்டோ போன்ற இடங் களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்தது மூன்றாண்டுகளுக்கு இந்திய அணி பங்கேற்பது உகந்ததாக இராது எனும் அரசின் கொள்கை முடிவும் கிரிக்கெட் வாரியத்திடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக டெஸ்ட் பந்தயங்களில் விளையாடு வதற்கென சர்வதேச கிரிக்கெட் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாடுகளுடன் பன்னாட் டுப் பந்தயங்களில் இந்தியா பங்கேற்காது என்று எச்சூழ்நிலையிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அரசு தெரிவிக்க வில்லை.
இச்சூழ்நிலையில் ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்ப தில்லை என்று வாரியம் தன்னிச்சையாக முடிவு மேற்கொண்டுள்ளது வியப்பளிக்கிறது. வாரியத் தின் இம்முடிவு அவசரமானது, சரியற்ற ஒன்று என அரசு கருதுகிறது. அன்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் புதுதில்லி வருகையின் போது 'ஐசிசி நாக்அவுட்-2002' போட்டிகளை இந்தியா வரவேற்பதாக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் ஒருதலைப்பட்சமான முடிவு துரதிருஷ்டவசமானது. அவசியமற்ற காரணங் களின் அடிப்படையில் அல்லாமல் நாட்டு நலன் கருதியே அரசு முடிவு மேற்கொள்கிறது.
மேற்கண்டவாறு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் காட்டமான விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை எத்தகையதாக இருக்கும் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் கவலையுடன் எதிர்பார்க்கிறார்கள்.
வாரியம் - விளையாட்டு அமைச்சகம் இடையிலான மோதல் போக்கு மறைந்து, கிரிக்கெட் விளையாட்டுக்கு நலம் பயக்கும் நல்ல முடிவை எடுக்க இரண்டு அதிகார அமைப்புகளும் முன் வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
பா. சங்கர் |