காஷ்மீர் புலாவ்
தேவையான பொருட்கள்:

புலாவ் அரிசி - 1/2 கிலோ
பச்சை பட்டாணி - 200 கிராம்
கேரட் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
பீன்ஸ் - 100 கிராம்
முந்திரி பருப்பு - 50 கிராம்
உலர்ந்த திராட்சை - 50 கிராம்
டுட்டி ப்ரூட்டி - 50 கிராம்
பால் ஏடு - 1/2 கோப்பை
லவங்கப் பட்டை - 2
லவங்கம் - 6
ஏலக்காய் - 4
நெய் - 2 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கேரட், பீன்ஸ் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியை தோலை உரித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உப்பு சேர்த்து கேரட், பீன்ஸ், பட்டாணி இவற்றை வேக வைக்கவும்.

அரிசியை களைந்து ஒன்றுடன் ஒன்று ஓட்டாத பதத்தில் வடித்துக் கொள்ளவும். சாதத்தில் உப்பு சேர்த்து வடிக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு, முதலில் முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு நீளவாட்டில் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், ஏலக்காய், பட்டை, லவங்கம் முதலியவற்றை வதக்கவும். வெங்காயத்தை பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பின்னர் வேக வைத்த காய்கறி வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

வாணலியில் நெய் விட்டு, அதில் வடித்த சாதத்தை போட்டு இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும்.

இதனுடன் வேக வைத்த, வதக்கிய காய்கறிகளைப் போட்டுக் கலந்து கொள்ளவும். பால் ஏடையும் சேர்த்துக் கொள்ளவும். சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் முந்திரி, திராட்சை, டூட்டி-ப்ரூட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பரிமாற நெய் தடவிய புட்டிங் பாத்திரத்தில், தயாரித்த புலாவைப் போட்டு அழுத்தி விடவும். சூடான தண்ணீரில் பாத்திரத்தை வைக்கவும். சாதம் சூடாக ஆனவுடன் ஒரு தட்டில் திரும்பவும். நடுவில் உருளைக் கிழங்கு சிப்ஸ் வைத்து பரிமாறவும்.

பின்குறிப்பு

நெய் தடவினால் தான் புட்டிங் பாத்திரத்திலிருந்து புலாவை வெளியில் எடுக்க முடியும்.

லஷ்மி ஜெகதீஷ்,
ரான்சோ கோர்டோவா, கலிபோர்னியா

© TamilOnline.com