முள்ளங்கி காரபுட்டு
தேவையான பொருட்கள்:

வெள்ளை அல்லது சிவப்பு முள்ளங்கி - 250 கிராம்
கடலைப்பருப்பு - 200கிராம்
மிளகாய் வற்றல் - 12
இஞ்சி - 1 சிறு துண்டு
வெங்காயம் - 3
பூண்டு - 8 பல்
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
கொத்தமல்லித் தழை நறுக்கியது - 1 மேஜைக்கரண்டி

பச்சடி செய்யத் தேவையான பொருட்கள்:

தக்காளி - 2
வெங்காயம் - 2
கேரட் - 1
உப்பு - 1/2 சிட்டிகை

செய்முறை

கடலைப்பருப்பை சுத்தம் செய்து அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். முள்ளங்கியை தோல்சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த கடலைப்பருப்பு, முள்ளங்கி, மிளகாய் வற்றல், உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடைக்கு மாவு அரைக்கும் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதக்கிய பின் அத்துடன் உப்பு மற்றும் அரைத்த கடலைப்பருப்பு விழுதையும் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும். நன்றாக வெந்தவுடன் உதிரி உதிரியாக வந்த பின் கொத்தமல்லித் தழைத் தூவிப் பரிமாறவும்.

அடுப்பிலிருந்து இறக்கும் போது கெட்டியாக இருந்தாலும் ஆறியவுடன் உதிர்ந்து புட்டு பதத்திற்கு வந்து விடும்.

தேவையெனில் எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறலாம். முள்ளங்கி காரப்புட்டுடன் இந்தப் பச்சடியைச் சேர்த்துப் பரிமாறலாம்.

பச்சடி செய்முறை:

இரண்டு வெங்காயம், இரண்டு தக்காளி, ஒரு கேரட்டை பொடியாக நறுக்கி கெட்டியானத் தயிரில் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கலக்கி முள்ளங்கி காரப்புட்டுடன் பரிமாறலாம்.

வசந்தா வீரராகவன்

© TamilOnline.com