கொத்தமல்லி படோலி
தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி - 1கட்டு
கடலைப்பருப்பு - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி பெரியது - 4
பூண்டு - 8 பல்
கரம்மசாலா தூள் - 2 தேக்கரண்டி (கரம்மசாலா தூள் இல்லையெனில் பட்டை, லவங்கம், சோம்பை பொடி செய்து கொள்ளவும்)
மிளகாய் வற்றல் - 10 (அதிக காரம் விரும்புபவர் பச்சை மிளகாயைச் சேர்த்துக் கொள்ளலாம்.)
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1ஆர்க்கு

செய்முறை

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடவும்.

கொத்தமல்லியை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். இரண்டு தக்காளிப் பழத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லியை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள இரண்டு தக்காளிப் பழங்களை சூடான தண்ணீரில் போட்டு தோலுரித்து தக்காளி சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு, பாசிப் பருப்புடன் உப்பு, மிளகாய், சேர்த்து அதிகம் தண்ணீர் சேர்க்காமல் இட்லிக்கு மாவு அரைக்கும் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

அத்துடன் கடைசியாக கொத்தமல்லித் தழை, தேங்காய், பூண்டு போட்டு அரைத்தெடுக்கவும். குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளிப் பழத்தைச் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உப்பு, மிளகாய் மற்றும் கொத்தமல்லி விழுதைச் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கிளறவும்.

தக்காளிச் சாறை ஊற்றிக் கிளறி கரம் மசாலாத் தூள் தூவிப் பரிமாறலாம்.

இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பூரி, சப்பாத்தியுடனும் பரிமாறலாம். ரொட்டியில் தடவி சாண்ட்விச்சாகவும் பரிமாறலாம்.

வசந்தா வீரராகவன்

© TamilOnline.com