கேரட் சாதம்
தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
பெரிய கேரட் - 3
பெரிய வெங்காயம் - 2
வறுத்த வேர்க்கடலை - 2 மேஜைக்கரண்டி (தோல் நீக்கிப் பொடி செய்துக் கொள்ளவும்.)
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
பட்டை - 1 அங்குலத்துண்டு
லவங்கம் - 3
உப்பு - தேவைக்கேற்ப

மசாலா பொடி செய்யத் தேவையானவை:

தனியா - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - 3/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கொப்பரைத் துருவல் அல்லது தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை

அரிசியை உதிரியாக வேகவைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் ஆறவிடவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி சூடான தண்ணீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து பின்பு துருவி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெயைச் சூடாக்கி தனியா, சீரகம், மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ளவும்.

கடைசியாக தேங்காய்த்துருவலைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து சூடு ஆறிய பின் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பட்டை, லவங்கம், வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் துருவிய கேரட்டை சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

தேவையெனில் தண்ணீர் சிறிது தெளித்துக் கொள்ளவும். அத்துடன் சூடு ஆறிய சாதம், உப்பு, வறுத்து பொடி செய்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்துக் கிளறவும்.

அடுப்பில் தீயை பெரிதாக்கிக் கொண்டு சாதத்தை நன்கு கிளறவும்.

அடுப்பிலிருந்து இறக்கும் முன் வறுத்த வேர்க்கடலை மற்றும் கொத்தமல்லித் தழையைத் தூவி சூடாகவேப் பரிமாறவும்.

வசந்தா வீரராகவன்

© TamilOnline.com