டாக்டர் ஜெகதீசன் ஓய்வு பெற்ற, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர்
ஓய்வு பெற்ற, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் ஜெகதீசன் அவர்களுடன் 'தென்றல்' கைகுலுக்கிய ஒரு சந்திப்பு.

பொறியியல் படிப்பை, குறிப்பாக மெக் கானிக்கல் பிரிவை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம்?

என்னுடைய குடும்பத்தில் மூன்று தலை முறைகளாக எல்லோருமே காவல்துறையில் பணி புரிந்தவர்கள். சின்ன வயதிலேயே கார் ஓட்டக் கற்றுக் கொண்ட எனக்கு மெக்கானிக் துறையில் இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டு விட்டது. எனவே அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தேன்.

மெக்கானிக்கலில் எந்தப் பிரிவில் சிறப்புக் கவனம் செலுத்தினீர்கள்?

Internal Combusiton Engineering பிரிவுதான் எனக்குப் பிடித்தது. ஆனால் பட்டப் படிப்பில் எதையும் Specialise செய்ய முடியாது. முதுகலை வகுப்பில்தான் முடியும்.

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டதா?

வேலை மாணவர்களைத் தேடி வரும் காலம் அது. எனக்கு நெய்வேலி அணுமின் நிலையத் தில் வேலைக்கான உத்தரவு வந்தது. ஆனால் எனக்கு ஆசிரியர் வேலையில்தான் ஆர்வ மிருந்தது. அந்தக் காலத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வேலை தேடி வெளியே சென்று விடுவார்களே தவிர பொறியியல் கல்லூரியிலேயே பாடம் கற்பிக்க யாரும் விரும்புவதில்லை. இதைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசு, 'Technical Training Programme Scholar' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின்படி நானும் அதற்கு விண்ணப் பித்தேன். அதன் மூலம் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இங்கு படித்து முது கலைப் பட்டமும், Internal Combustion Engineering துறையில் M.S. பட்டமும் பெற்றேன். படித்து முடித்து கிண்டி பொறியியல் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.

அந்தக் காலத்தில் ஆசிரியர் பணியில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Ph.D. வாங்கி யிருந்தால்தான் பதவி உயர்வு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு பெற முடியும். எனவே நான் University of Michigan, ஆன்ஆர்பர் போன்ற பல்கலைக் கழகங்களில் Ph.D. சேர விண்ணப்பித்தேன். எனக்கு அங்கெல்லாம் இடமும் கிடைத்தது. ஆனால் என்னுடைய சகோதரரின் மறைவால் என்னுடைய பயணம் தடைபட்டுப் போனது. எனவே ஐ.ஐ.டி. யில் பணியிலிருந்த Michigan பட்டதாரியான பி.எஸ். மூர்த்தி என்பவரிடம் Ph.D. செய்து முடித்தேன். Michigan செல்ல முடியாத எனக்கு அங்கு படித்த ஒருவரின் கீழ் Ph.D. செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

உங்களுடைய ஆய்வுகளைப் பற்றி....

டெட்ராய்டில் ஒவ்வொரு ஆண்டும் 'Society of Automobile Engineers' என்னும் அமைப்பு 'International Congress' என்ற பெயரில் உலக நாடுகளிலிருந்து பொறியியல் அறிஞர்களைக் கூட்டி மாநாடு நடத்துவது வழக்கம். அம் மாநாட்டிற்கு என்னுடைய ஆய்வுக் கட்டுரையை அனுப்பி வைத்தேன். தமிழ்நாட்டில் அதுவரை அரசாங்கம் எந்தப் பேராசிரியரையும் கட்டுரை படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததில்லை. நேரில் வந்து கட்டுரை படிக்கு மாறு அழைப்பு வரவே, அரசாங்கத்துடன் போராடி அனுமதி பெற்று டெட்ராய்டில் என்னுடைய கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.

இதன் பின்னர் என்னுடைய முதுகலை வகுப்புகளிலும் என்னிடம் ஆய்வு செய்யும் மாணவர்களிடமும் என்னுடைய ஆய்வின் அடிப்படையில் பாடம் கற்பிக்கவும், செயல் திட்டங்களை மேற்கொள்ளவும் செய்தேன்.

அந்தச் செயல் திட்டங்கள் தொழில் நிறுவனங்களின் சார்புடையனவா?

துரதிர்ஷ்டவசமாக அப்போதெல்லாம் தொழில் நிறுவனங்கள் எந்தத் திட்டத்துடனும் எங்களை அணுகியதில்லை. எல்லாமே அரசு சார்பு டையன.

Dual Degree போன்ற திட்டங்களை நீங்கள் தான் கொண்டு வந்தீர்களா?

அப்படியேதுமில்லை. நிறைய Electives கொண்டு வந்தோம். நாங்கள் படித்த காலத்தில் இருந்த Fixed syllabus என்றில்லாமல் நாங்கள் பல புதிய பாடங்களைச் சேர்த்ததால், மாணவர்கள் Combustion Industrial Engg, Production என்று தேர்ந்தெடுக்கும் துறைகளில் அவற்றிற்குத் தொடர்பான பாடங்களைத் தேர்ந்தெடுக்க அவை உதவின.

நீங்கள் உருவாக்கிய புதிய செயல் திட்டங்களில் எதையாவது தொழில் நிறுவனங் கள் ஏற்றுக் கொண்டனவா?

முழுவதுமாக ஏற்றுக் கொண்டதாகக் கூற முடியாது. நம்முடைய நாட்டிலுள்ள குறைபாடு என்னவெனில், எந்த ஆய்வும் அரசு ஆதரவு இருந்தால்தான் செயல்படுத்த முடியும் என்ற ஒரு துரதிஷ்ட நிலைதான். திட்டம் எதுவானாலும் அதை அமுல்படுத்துவதில் கொள்கை அளவில் மத்திய அரசாங்கம்தான் கன்ட்ரோல் செய்ய முடியும். நம்முடைய அரசாங்கத்தைப் பொறுத்த வரை முன்னுரிமை வழங்குவதில் தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டுள்ளது.

1979 இல் தமிழக அரசு அளித்த ரூ. 5 லட்சம் நிதி உதவியுடன் Ethanol பயன்படுத்தி பெட்ரோல் உபயோகத்தைக் குறைக்கும் வழிமுறைகளை ஆய்வு செய்தேன். சர்க்கரை உற்பத்தி செய்யும்போது கிடைக்கும் கழிவுப் பொருளாகிய கரும்புச் சக்கையிலிருந்து கிடைக்கும் பொருள் Ethanol. இதனால் கச்சாப் பொருள் செலவும் குறைவு. மேலும் பிரேஸில் நாட்டில் Ethanol பயன்படுத்தி பெட்ரோல் செலவைக் குறைத்துள்ளனர். கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்த நிலையிலி ருப்பது நம் நாடுதான். இந்த முறையைப் பின்பற்றுவதால் பின்தங்கிய கிராமங்களும் பயனடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நம்முடைய அரசாங்கம் பெட்ரோல் விலை உயர்வின்போது மட்டும் இதுபற்றி நினைக் கிறதே தவிர, செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

Gasohol பயன்பாட்டில் இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள சூழ்நிலை வேறுபாடுகள் என்ன?

கரும்பு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் இடம் வகிக்கிற நாம், இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் கார்களையும் இயக்கத் தேவையான அளவுக்கு Ethanol உற்பத்தி செய்யும் வாய்ப்பு நம்மிடம் உள்ளது.

இந்த மிகப் பெரிய புரட்சிகரமான மாற்றத் துக்கு ஈடுகொடுக்கும் தொழில்நுட்ப வல்ல மையும் நம்மிடம் உள்ளது. ஆனால், அதற்கான மனஉறுதிதான் நம்மிடையே இல்லை. இந்தியா முழுவதும் Gasohol பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் அந்த நாள் நிச்சயம் வந்தே தீரும் என்று நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் குறித்து அதிக விழிப்பு ணர்வுள்ள அமெரிக்க மக்களிடையே Gasohol மிகப் பெரிய வெற்றி அடையாதது ஏன்? மாற்று எரிசக்திக்கான மூலப்பொருள்கள் குறித்து உங்களின் கருத்து என்ன? அது குறித்த ஆய்வு மற்றும் அமலாக்கத்தின் தேவை எத்தகையது?

அனைத்து வகை மாற்று எரிசக்தி மூலப் பொருள்கள் பற்றியும் அமெரிக்காவில் மிக விரிவான அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சந்தைப் பொருளாதார சக்திகளின் ஆதிக்கத்தில்தான் அமெரிக்கா இயங்குகிறது; இது தற்காலிகமானதுதான். நீண்ட கால விளைவுகளுக்கு, ஆய்வு முடிவுகளைச் செம்மை யாக அமல்படுத்துவதற்கு ஏற்ற நடைமுறை களைக் கண்டறிய வேண்டும்.

Ethanol 85% அடங்கிய எரிபொருளிலும் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதற்கு, அமெரிக்காவின் பல மாநில நிர்வாகங்களும் ஊக்கமளித்து வருகின்றன. பலரும் இத்தகைய கார்களைப் பயன்படுத்த முன்வரும் போது, பெட்ரோல் விலை குறைவதோடு வாகனங்களில் புகை வெளிப்பாடும் பெருமளவு குறையும்.

Gasohol பயன்பாடு குறித்து வெற்றி கரமாகச் சோதித்து, அன்றாட வாழ்வில் அதனை உபயோகித்து வரும் நாடுகள் எவை?

Gasohol (Ethanol மற்றும் பெட்ரோல் கலவை) குறித்து இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் வெற்றிகரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளன. எனினும், பிரேசில் நாட்டில் மட்டும்தான் Gasohol முழு வீச்சில் உபயோகத்தில் உள்ளது. பிரேசிலில் தூய்மையான பெட்ரோல் கிடைப்பதில்லை. அந்த நாட்டில் உள்ள கார்களுக்கு Gasohol (Ethanol 24% மற்றும் பெட்ரோல் 76%) அல்லது 100% Ethanol எரிபொருளையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

Ethenol 85% அடங்கிய எரிபொருளிலும் இயங்கும் கார்களை அமெரிக்க உற்பத்தி யாளர்கள் வடிவமைத்து தயாரித்தாலும், வெகு சிலரே அவற்றைப் பயன்படுத்த முன்வரு கின்றனர். குறைந்த விலையில் பெட்ரோல் கிடைப்பதே இதற்குக் காரணம்.

Gasohol பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட அனைவரும் முன்வரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் புஷ் வற்புறுத்தியுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

பெரிய மாற்றங்கள் எதையும் செய்யாமலேயே, கார்களை Gasohol கொண்டு இயக்க முடியும் என 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நாம் நிரூபணம் செய்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 'Quota System' இருப்ப தைப் பற்றி உங்கள் கருத்து?

இது ஒரு குழப்பமான நிலை. இந்திய மக்கள் அனைவரும் கல்வி வாய்ப்பை பெறும் வரை இது தேவை. எல்லா மக்களும் கல்வியறிவு பெற்று விட்டால், மற்ற எல்லா முன்னேற்றத் திட்டங் களையும் செயல்படுத்தி விடலாம். ஆனால் எல்லோருக்கும் கல்வி என்பதற்கான Reservation System என்பதிலேயே அரசியல் ரீதியான, சட்ட ரீதியான, மற்றும் ஊழல் என்று ஏராளமான தடைக் கற்கள் உள்ளன. முட்டை யிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டை யா? என்பது போன்ற நிலை.

அடுத்து வாய்ப்புகள் என்பவை நாட்டின் எல்லா தரப்பினருக்கும் கிடைக்க Reservation System தேவை. பின்தங்கிய வகுப்பிலுள்ள மாணவனும் வாய்ப்புக் கிடைத்தால் மேல் மட்டத்துக்கு வரமுடியும் என்பதற்கு என்னுடைய அனுபவத்திலேயே நிறைய உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும்.

தங்களுக்கு 'சொஸைடி ஆப் ஆட்டோ மோட்டிவ் என்ஜினியர்ஸ்' வழங்கிய விருது குறித்து?

டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற அந்த அமைப்பின் உலக மாநாட்டில் (2001, மார்ச்-6), எனக்கு '·பெலோஷிப்' விருது வழங்கப்பட்டது. ஆட்டோமோட்டிவ் பொறியியல் துறையில் எனது தகுதி, திறமை, அனுபவம், பங்களிப்பு ஆகியவற்றைப் பாராட்டும் விதமாக இந்த 'அங்கத்தினர் அந்தஸ்து' அளிக்கப்பட்டது.

இந்தியாவில் ஆற்றிய பணிக்காக இந்த விருதினைப் பெரும் முதல் இந்தியர் நான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியற் கல்லூரியில் இடம் கிடைக் காதவர்கள் வெளிநாடு போவது பற்றி....

இப்போது அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. முன்பு ஏழே கல்லூரிகள். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் மட்டுமே 200 பொறியியற் கல்லூரிகள் உள்ளன.

தமிழ்நாட்டுப் பொறியியற் கல்லூரிகளின் தரத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு சொல்ல முடியுமா?

தமிழ்நாட்டுப் பொறியியற் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆசிரியர்களின் கற்பிக்கும் முறையில் முன்னேற்றம் கொண்டு வருவதில் 'Quality Circle Programme of India - Chennai' என்ற அமைப்பின் தலைவராகப் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதன்படி தற்போது கல்வித் தரத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

ஸிம்ஸன் குரூப்பின் தலைவர் தொழிலதிபர் அனந்த ராமகிருஷ்ணனைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. அதில் எனக்குப் பேராசிரியர் பதவி அளித்துள்ளனர். இதில் தொழில் நிறுவனங்களையும், கல்வி நிறுவனங்களையும் ஒன்றாய் இணைத்துச் செயல்படுத்த வைப்பது என்னுடைய பொறுப்பாகும்.

தொழில் நிறுவனங்களின் நிதி உதவி ஐ.ஐ.டி. க்கு அதிகம் கிடைக்கின்றன என்பது குறித்த உங்களது கருத்து?

ஐ.ஐ.டி. யில் கோடி கோடியாகப் பணம் போட்டு தேவையான கருவிகளை வாங்கி வைத்திருப்பதுதான் காரணம். ஆனால் நிலைமை மாறிக் கொண்டு வருகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள Remote Sensing' துறை போல் வேறு எங்கும் இல்லையென என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

உங்கள் திறமைகளுக்கும் ஆய்வுகளுக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந் தவை?

என் பெற்றோர், என் மனைவி மற்றும் குழந்தைகள், என் உழைப்பு, கல்லூரிகள் எல்லாமே காரணம். என் மனைவியும் குழந்தை களும் என் ஆய்வுக்கும் என் மேற்படிப்புக்கும் பல தியாகங்களைச் செய்துள்ளனர். அன்பும் பாசமும் பொழியும் குடும்பம் என்னுடையது.

இந்திய நாட்டு இளைஞர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நம்முடைய குழந்தைகள் இங்கு படித்தாலும், இந்தியாவில் படித்தாலும் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. Traditioally கடவுள் நம்மையெல்லாம் புத்திசாலிகளாகப் படைத் திருக்கிறார். அயல் நாட்டுக்கு யார் போனாலும் சரி. எனக்கு வருத்தமேயில்லை. நானே பணியிலிருந்தபோது சிபாரிசு செய்து நிறைய பேரை அயல் நாடுகளுக்கு அனுப்பியுள்ளேன். அவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டும். அதுவே என்னுடைய ஆசை.

தென்றல் பற்றி...

சென்னையில் எத்தனையோ பத்திரிகை கள் வெளி வருகின்றன. ஆனால் தென்றல் ஒரு மாறுபட்ட பத்திரிகையாகக் காணப்படுகிறது. மிகவும் சிறப்பாக இது அமைந்திருப்பதைக் கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன்.

சந்தித்து உரையாடியவர்: பிரதாப் சுப்ரமணியம்

Gasohol

Gasoline (90%) மற்றும் Ethanol (10%; விவசாய விளைபொருள்கள் அல்லது அவற்றின் கழிவுகளை நொதிக்கச் செய்வதன் மூலம் Ethanol பெறப்படுகிறது) அடங்கிய கலவையிலிருந்தே Gasohol உற்பத்தி செய்யப்படுகிறது. Gasoline (97%), Methanol அல்லது மரச் சாராயம் (3%) கொண்ட கலவையிலிருந்தும் Gasohol உற்பத்தி செய்யலாம்.

Gasoline -ஐ விட Gasohol நின்று நிதானமாக, முழுவதுமாக எரிகின்றது. இதனால் சில மாசுபாடுகள் குறைவதோடு, புகை வெளிப்பாடும் குறைந்த அளவிலேயே உள்ளது. எனினும், Gasohol வெகு விரைவில் ஆவியாகிவிடும் தன்மையுடையது. வெப்பமான காலநிலையில் ஓஸோன்படல பாதிப்பைத் தீவிரப்படுத்தும்.

Ethanol அடிப்படையிலான Gasohol விலை அதிகம் என்றாலும் வீரியமிக்கது. Ethanol-ன் அளவு அதிகமுள்ள நிலையில், ரப்பர் சீல்கள், டய·ப்ரம்கள் மற்றும் சில வகைப் பூச்சுக்களைப் பாதிக்கக் கூடும்.

Methanol அடிப்படையிலான Gasohol தயாரிப்புக்குமே அதிக செலவு தேவைப்படுகிறது. மேலும் இவ்வகை Gasohol அரிப்புத் தன்மை மிக்கதாகவும் விஷத்தன்மை யுடையதாகவும் இருப்பதோடு, இதன் புகை வெளிப்பாட்டில் புற்றுநோய் உண்டாக்கும் பார்மால்டிஹைட் அடங்கியிருப்பதும் கவனிப்புக்குரியது.

© TamilOnline.com