தேர்தலுக்குப் பின்னால்...
இதை நீங்கள் படிக்கும் போது தேர்தல் முடிவுகள் ஏற்கனவே உங்கள் கைகளில் புரண்டு பழைய செய்தியாகப் போயிருக்கும். 'இப்படியும் நடக்கலாம்; அப்படியும் நடக்கலாம்; என ஆருடம் கூறியவர்களெல்லாம் இப்போது எப்படி நடந்தது என தெளிவாக விளக்க முயல்கிறார்கள்.

மற்ற ஊடகங்களைத் தவிர்த்து இணையத்தை உபயோகிப்பவர்களுக்குப் புலப்பட்ட சில போக்குகளை மட்டும் தென்றல் வாசகர்களுக்குச் சுட்டிக் காட்ட இது எழுதப்படுகிறது. மின்னஞ்சல் மூலமாகவும், வலைத் தள விவாத மேடைகளிலும் பெருவாரியான நண்பர்கள் அ.தி.மு.கவுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்தார்கள். இதே போல, தொலைபேசியின் வழியாக நடத்தப்பட்ட ஒரு ஆய்விலும் (Exit poll) தி.மு.கவிற்குப் பெரிதும் ஆதரவாகவே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதில் என்ன தவறு இருக்கிறதென நீங்கள் கேட்கலாம்; நிச்சயம் தவறில்லைதான். ஆனால், இதில் மனதை உறுத்தியது என்னவெனில், கருத்துத் தெரிவித்தவர்கள் அனைவரும் தாங்கள் ஆதரித்தவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றே எண்ணியிருந்தனர். ஆனால், முடிவுகள் மாறிப் போன போது வருத்தமும் கோபமும் கொண்டார்கள் என்பதையே இங்கு முன்னிறுத்த வேண்டியிருக்கிறது. இப்படி கோபம் கொண்டவர்கள் பலரும் 'தமிழ் மக்களுக்குப் புத்தி கெட்டு விட்டது' என்ற ரீதியிலும் எழுதினார்கள்.

வெற்றி தோல்விக்கான காரணங்களை ஆராய்வது எனது நோக்கமல்ல. வெளிநாட்டில் வாழும் தமிழர் மற்றும் வசதியுடைய தமிழ்நாட்டினருக்கும், சாமானிய மக்களுக்கும் இடையில் தற்போது பெரும் இடைவெளி தோன்றியிருப்பதாக தெரிகிறது: 'மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு சாமானியர்களின் தின வாழ்க்கை சங்கடங்கள் தெரியவில்லை. சாமானியர்களுக்கு இன்றைய பொருளாதார நிலையை நீண்ட கால நோக்கில் பார்க்க இயலவில்லை' இது உண்மையாக இருப்பின் இந்த இடைவெளி களையப்பட வேண்டும். இந்த இடைவெளி தொடருமானால் நாட்டின் எதிர்காலத்துக்கும் ஒற்றுமைக்கும் அது ஆபத்தாகவே முடியும்.

ஒரு புறம் தி.மு.க. கூட்டணியின் தோல்வி சாதி அரசியலுக்கான எதிர்ப்பாக எண்ணி மகிழலாமென்று தோன்றுகிறது. இன்னொரு புறம், 'தலித்துகள் சார்ந்த கட்சிகள் அனைத்தும் திரண்டதால்தான் மற்ற சாதிகள் பெருவாரியாக எதிரணிக்கு வாக்களித்தனர்' என்ற கருத்தையும் தற்சமயம் சிலர் எழுப்பி வருகின்றனர். இதையே ஜுனியர் விகடன் பத்திரிகையின் கருத்துக் கணிப்பும் சொல்கிறது. தேர்தல் கணிப்புகளைப் போலவே இதுவும் சரியான கணிப்பாக இருக்கவே கூடாது என்று எண்ணுகிற அதே வேளையில், 'ஒரு வேளை இருந்து விட்டால்...' என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. மக்கள் இன்னும் சாதி ரீதியிலான அரசியலை வரவேற்கிறார்களா? என்ற சந்தேகத்தையும் இது உண்டு பண்ணுகிறது.

GSLV யை ஏவி உலக நாடுகளுக்குச் சவால் விட்டுப் பெருமை கொள்ளும் அதே நேரத்தில் நம்முடைய அடித்தள மக்களின் மனநிலையையும், வாழ்வையும், சாதி,பேத வேறுபாடுகளையும் மாற்ற வேண்டிய கட்டாயமும் நம் முன் இருக்கிறது. மக்களைப் பிளவுபடுத்தும் சாதிபேதத்தைக் களைவதற்காக இன்னும் நாம் பல ஆண்டுகளாவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யிருக்கும். இதனிடையே பொருளாதாரக் கொள்கைள் மற்றும் தாராளமயமாக்கலின் வருகையினாலும் ஏற்கெனவே ஒரு பெரும் இடைவெளி வேறு தோன்றியிருக்கிறது. இந் நிலையில் ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இடைவெளிகளையெல்லாம் எப்படி நிரப்பப் போகிறார்கள் என்பதுதான் முன்னிற்கும் கேள்வி. தென்றல் வாசகர்கள் இப்பிரச்சனையைத் தீர்க்க எவ்வாறு உதவக்கூடும்?

இறுதியாக....

கடந்த ஆறு இதழ்களாகத் தென்றல் வாசகர்கள் எங்களுக்கு அளித்த அமோக ஆதரவு எங்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. வாசகர்களிடமிருந்து பெருமளவில் படைப்புகள் இன்னும் வந்து கொண்டுதானிருக்கின்றன. மேலும் உங்களது ஆலோ சனைகளையும், எண்ணங்களையும், தென்றலுக்கு அனுப்பி எங்களுடன் நீங்களும் கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் சந்திக்கும் வரை,
பி.அசோகன்
சென்னை, ஜூன் 2001.

© TamilOnline.com