'ஆத்தா' இன்னும் பாஸாகல.....
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே"
"என்னைப் பெத்த ஆத்தா, என்னைப் பெத்துப் போட்டா"
"அம்மா என்னும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்"
"தாயில்லாமல் நானில்லை...."
"நானாக நானில்லை தாயே"

தமிழ்ச் சினிமாவில் தலைப்புகளுக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகள் அம்மா, ஆத்தா, தாய் எனும் வார்த்தைகள்தான். அம்மா செண்டிமெண்டை அநியாயத்துக்குப் போட்டு வதக்கி எடுத்து விட்டனர் தமிழ் இயக்குனர்கள். ஒரு படம் ஓட வேண்டுமெனில் கதை இருக்கிறதோ இல்லையோ அழுது மூக்கைச் சிந்துகிற ஒரு அம்மா இருக்க வேண்டும். நம்முடைய ஹீரோக்களும் நாற்பது வயதில் காலேஜ் தேர்வில் ஜெயித்துவிட்டு 'ஆத்தா நான் பாஸாயிட்டேன்'னு வயல்வெளி பேக்ரவுண்டில் ஓடி வரத்தான் இப்போதும் விரும்புகிறார்கள்.

சினிமாவில் அம்மாவாக ஒரு நடிகை நடித்துவிட்டாலே போதும் அவர் வீட்டுக்குப் போகத் தயாராகிவிட்டவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் காலத்திலெல்லாம் நடிகைக ளுக்கு அறுபது வயது வரைக் கும் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. இருபது வயதில் ஹீரோ யின், முப்பது வயதில் அக்கா வேடம், முப்பதுக்கு மேல் அவர்கள் உயிர் வாழ்கிற வரை அம்மா வேடம் என்று ஜமாய்த்துக் கொண்டிருந் தார்கள்.

இதைப் பொறுத்துக் கொள்ளாத இயக்குனர்கள் சினிமா அம்மாக்களின் குறிப்பாக கண்ணாம்பாள், பண்டரிபாய் போன்றவர்களின் வயிற்றில் அடித்து விட்டனர். கதைப்படி நாயகனுக்கு இருபத்து எட்டு வயது. ஹீரோவின் அம்மா இப்போதெல்லாம் இருபது வயதுக்குரிய தோற்றத்துடன்தான் வலைய வருகிறார்கள். பண்டரிபாய் போன்ற எக்ஸட்றா அம்மாக்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பத்திமாபாபு, கவிதா, ராதிகா, ரேவதி போன்ற இளமைப் பட்டாளங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

அந்தக் காலத்தியப் படங்களில் அம்மாவிடம் தன்னுடைய காதலைச் சொல்ல நாயகன் அந்தத் தயங்கு தயங்குவார். இப்போதைய படங்களில் கவலையேயில்லை அம்மாவே காசு கொடுத்துக் காதலித்து விட்டுவர வெற்றித் திலகமிட்டு உச்சி மோர்ந்து அனுப்பி வைக்கிறார்கள். (இதைப் பார்க்கிற நமக்குத் தான் 'நம்மளுக்கும் இருக்காளே கிருசுகெட்ட ஒரு அம்மா' என்று சொல்லிப் பொறாமைப் பட வேண்டியிருக்கிறது)

ஹீரோவின் அம்மாக்கள் பிரச்சனையில்லை. ஹீரோயின்களின் அம்மாக்கள்தான் பிரச்சனை. படம் ஆரம்பித்து அரை மணிநேரம் வரை யார் ஹீரோயின் என்றே தெரியவில்லை. அந்தள விற்கு கலர்க் கலர் காஸ்டுயூம்களில் அம்மாக்கள் கலக்குகிறார்கள். பாவம் ஹீரோகூட கொஞ்ச நேரம் குழம்பிப் போய் கடைசியில்தான் போதை தெளிந்து ஹீரோயினை டாவடிக்க ஆரம்பிக் கிறார்.

அழுது அழுதே செத்துப் போன பழங்காலத்திய திரைப்பட அம்மாக்களுக்கு விமோசனம் கிடைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டி யிருக்கிறது. தற்போது வெளியாகும் படங்களில் அதிகப்பட்சமாக 'ஏண்டி இப்படிச் செஞ்சே' என்கிற ரீதியில் மட்டுமே புலம்புகிறார்கள். அப்புறம் சமாதானமாகி 'யாருடி அவன்' என்று கேட்கிறார்கள். அப்புறம் 'பையன் பாக்குறதுக்கு எப்படியிருப்பான்' என்று கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். உடனே அப்பாவும் குறுக்கே புகுந்து 'இப்படித்தான் இவள நான் காதலிச்சேன்' என்பார். உடனே அம்மா, 'எனக்கு இவர விட இவரு பிரண்டத்தான் ரெம்பப் பிடிச்சிருந்தது' என்பார். அப்பாவும் தேமேவென ஒரு அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டிருப்பார்.(என்னடா கல்ச்சர் என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது)

ஒன்று சித்தரித்தால் ஹைடெக் அம்மாக் களைச் சித்தரிப்பர். இல்லாவிட்டால், நடக்க முடியாத அம்மாக்களைச் சித்தரிப்பர். ஹீரோவும் நாள் முழுக்க வேலைக்கே போகாமல் அம்மாவைக் கோயில் கோயிலாகச் சுமந்து கொண்டு செல்வார். இந்தக் காட்சிகளைப் பார்க்கிற நம்முடைய நிஜ அம்மாக்களும் கண்ணீர் மல்கி தங்களுடைய பொன்னான வாக்குகளை அந்தப் படத்திற்கே குத்தி விடுவர். வாக்குக் குத்துவதோடு நின்று விடாமல் வீட்டிற்கு வந்த பிறகும் தங்களுடைய பிள்ளைகளிடம் இதைச் சொல்லி டார்ச்சர் கொடுப்பர். ஆனால் ஒரு நாளாவது அவர்க ளுக்குக் கால்சுளுக்கிக் கூட நடக்க முடியாமல் இருப்பதில்லை. (பாவம் பிள்ளைகள் சினிமா போல் தங்களுடைய அன்பை எப்படி வெளிக்காட்டுவது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பர்)

தமிழ்ப் பட அம்மாக்களை ஒருவிதத்தில் பாராட்டியாக வேண்டியிருக்கிறது. இப்போ தெல்லாம் மருமகள்களுடன் குடுமிப்பிடிச் சண்டைகள் நடத்துவதில்லை. அதற்குக் காரணமாக ஹீரோவின் கல்யாணத்தோடு படம் முடிந்து போவதைக்கூடச் சொல்லலாம். ஹீரோ, ஹீரோயின் அம்மாக்கள் படத்தில் காதல் சீன் ஆரம்பித்ததும் நாகரிகம் கருதி ஒதுங்கிக் கொள்வதை மனமாரப் பாராட்ட வேண்டும். இந்த அப்பாக்கள்தான் ஐம்பத்தைந்து வயதைக் கடந்த பின்னரும் இரட்டை அர்த்தத்தில் பேசி அம்மாக்களை டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அன்னையர்தினக் கொண்டாட்டங்களின் போதாவது சினிமா அம்மாக்களை இது போல் டார்ச்சர் செய்யக் கூடாதென பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும்.

சரவணன்

© TamilOnline.com