லிட்டில் ஜான்
நடிப்பு : பெண்ட்லி மிட்சம், அனுபெம் கெர், நாசர், பிரகாஷ்ராஜ், மோகன்ராம், ஜோதிகா, பாத்திமா பாபு, சௌம்யா.
இயக்கம் : சிங்கீதம் சீனிவாசராவ்
இசை : பிரவீன் மணி

பேண்டஸி கதை. தீய சக்தியை அழிக்கும் தெய்வசக்தியைப் பற்றிய கதை. கூடவே அமெரிக்க பெண்ட்லி மிட்சம் நம்ம ஊர் ஜோதிகாவைக் கை பிடிக்கும் காதல் கதையும்.

மூக்குத்தி அம்மன் கோவிலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வருகிறார் மிட்சம். அவருக்கு வகுப்புத் தோழன் ஜோதிகாவின் அண்ணன் என்பதால் ஜோதிகாவின் வீட்டிலேயே தங்கி ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். ஜோதிகாவிடம் நட்பு ரீதியாகப் பழகும் மிட்சம், அவருடைய காதலுக்குப் பாத்திரமாகிறார்.

ஜோதிகா அவரைக் காதலிப்பதாகக் கூற பதறிப்போகும் அவருடைய பெற்றோர்கள், ''நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல'' என்று மிட்சமிடம் கத்துகிறார்கள். தூக்கத்தில் இருந்து எழுந்தபடியே ''ஏன் இந்த இடத்தில் தூங்கக் கூடாதா?' என்று எழுந்திருக்கிறார் மிட்சம். ஜோதிகா அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து ''ஐயோ நான் அவரைக் காதலிக்கறது இன்னும் அவருக்கே தெரியாது'' என்று மிட்சம் நோக்கி மன்னிப்பு கேட்க... திடுக்கிட்டு சுதாரித்தபடி, ''இல்ல நானும் உன்னைக் காதலிக்கிறேன்'' என்று காதலை வெளிப்படுத்தும் இடம் மிக இயல்பு.

அவருக்கு ஈடுகொடுக்கும் நடிப்பு ஜோதிகாவிடம்.

மற்றபடி கிராபிக்ஸ் பூச்சுற்றல்கள். குட்டியாக மாறிவிடும் லிட்டில் ஜானை மக்கள் வியந்துபோய் ரசிப்பார்கள் என்று நம்பியிருக்கிறார்கள். ஜனங்களுக்கோ அவர் மீண்டும் பெரிய சைஸ¤க்கு எப்படி மாறப்போகிறார் என்பதில்தான் கவனம். அதை சாதாரணமாகக் காட்டி விடுகிறார்கள். குட்டியாக இருக்கிறார் என்பதையே படு டீடெய்லாகக் காட்டி அசுவாரஸ்யப்படுத்திவிடுகிறார்கள்.

இசையும் ஒளிப்பதிவும் அநியாயத்துக்கு வித்தியாசம். என்னென்னவோ கோணங் களில் எடுத்திருக்கிறார்கள். பேண்டஸி படம் என்பதால் ஓகே.

டைட்டில், கதாநாயகன் முதல் எல்லாமே தமிழ்கூறும் நல்லுலகுக்கு அந்நியம்தான்.

தமிழ்மகன்

© TamilOnline.com