இயந்திரமயமான பிரபஞ்சமும் அதற்கு அப்பாலும்
அடிப்படை அறிவியல் கல்வியை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விரிவான விஞ்ஞான கல்வியை அமெரிக்க மாணவர் களுக்கு வழங்க வேண்டும் என்ற பெரு நோக்கில், பலகோடி அமெரிக்க டாலர்கள் செலவில் அமெரிக்காவை மையமாகக் கொண்ட சேவை நிறுவனம் 'அனன்பெர்க் பவுண்டேஷன்' (Annenberg Foundation) 1987ல் 'இயற்பியல் (பௌதிகம்) கல்வித் தொடர்'' (Physics Education Series) என்ற திட்டத்தைத் துவக்கியது.

இத்திட்டத்தின் கீழ், இயற்பியல் கல்வியில் தலைசிறந்த நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொலைத்தூரக் கல்வித்துறையில் பல்லாண்டு அனுபவம் நிறைந்த வல்லுனர் களால் வடிவமைக்கப்பட்ட 52 இயற்பியல் பாடங்கள், ஒவ்வொன்றும் அரைமணி நேரம் ஒளிப்பரப்பக்கூடிய 52 ஒளிப்பதிவு (Video) படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி வகுப்பறைகளில் பேராசிரியர் களால் பாடமாக நடத்தப்பட்ட போது நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட இந்த ஒளிப்பதிவுப் படங்கள், பாடங்கள், அமெரிக்காவில் மட்டுமின்றி, உலகில் பல்வேறு நாடுகளிலும் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் கல்வியாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா தவிர பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா, இஸ்ரேல், நெதர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளிலும் உள்ள கல்வி நிலையங்கள், தங்களுக்குத் தேவையான மொழியில் மொழிபெயர்க்கப் பட்ட இந்த ஒளிப்பதிவுப் படங்களை விலைக்கு வாங்கி, தங்கள் வகுப்பறைகளில், இயற்பியல் பாட வகுப்பில் ஒளிபரப்பி மாணவர்களிடையே விஞ்ஞான அறிவை வளர்த்து வருகிறார்கள்!

சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த வீடியோ படங்கள், சீனாவின் பெரும்பான்மை யான பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங் களிலும் உள்ள மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப் பப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நவீனத் தகவல்கள் நிறைந்த உலகத்தரம் வாய்ந்த இந்த இயற்பியல் விஞ்ஞானப் பாடங்களை தமிழ்நாட்டிலும் - உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழ் மாணவனும், தமிழ் சமுதாயமும் தமிழிலேயே பார்த்து - படித்துப் பெரும் பயனடைய வேண்டும் என்ற பேரார்வத்துடனும் மிகுந்த அக்கறையுடனும், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் வுட்பிரிட்ஜ் நகரில் இயக்குநர் அழகப்பா ராம்மோகன் கீழ் இயங்கும் 'உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை' சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த வீடியோ படங்களை/பாடங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்க முன்வந்துள்ளது.

உலகெங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் தாங்கள் இருக்கும் வகுப்பறையில் இருந்து கொண்டே, கலிபோர்னியாவில் வகுப்பறையில் இருக்கும் மாணவர்களுடன் சேர்ந்து உலகத் தரம் வாய்ந்த விஞ்ஞான, இயற்பியல் பாடம் மற்றும் படங்களைத் தம் தாய் மொழியாம் தமிழிலேயேக் கற்றுக் கொள்ள வாய்ப் பளிக்கும். உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை யின் இந்த முயற்சி, தமிழ் கூறும் நல்லுலகின் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

தமிழகத்தில் உள்ள, பொருளாதார மற்றும் நிதிவசதி குறைந்த மாணவர்கள் பயன் பெறும் வகையில். அவர்கள் பயிலும் பள்ளிக் கூடங்களுக்கு இந்த ஒளிப்பதிவுப் படங்களை, ஒளிபரப்ப தொலைக்காட்சி மற்றும் ஒளிப் பதிவுப் படங்களை ஒளிபரப்பு கருவிகளையும் இலவசமாக வழங்க உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை முன்வந்திருப்பது ''யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'' என்ற அவர் தம் பெருந் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த முயற்சியில் உதவி செய்ய முன் வருவோர் மற்றும் தமிழகமெங்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் உண்டான செலவை காணிக்கை யாக அளிப்பதற்கும், திரு. அழகப்பா ராம்மோகன் மற்றும் 'உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.

இயற்பியல் கல்வித் தொடர் தமிழில் ஒளிபெயர்ப்பு திட்டத்தின் பணிகள் 2007 ஜனவரியில் நிறைவடைய உள்ளது.

இத்திட்டத்திற்கு நிதி வழங்குவோர் மற்றும் மேலும் தகவல் விரும்புவோர் கீழ் காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
International Tamil Language Foundation,
8417 Autumn Drive, Woodridge, IL 60517,
Email: thiru@kural.org www.kural.org

சென்னிமலை சண்முகம்,
நியூயார்க்

© TamilOnline.com