சுஜாதாவின் 'திமலா' விஞ்ஞானக் கதைகளில் காலத்தால் முந்தையது. அதிலிருந்து சில பகுதிகள்...
....ஆத்மா டச் போனிலிருந்து நிமிர்ந்து நித்யாவை ஒரு மில்லிசெகண்டு புன்னகைத்து விட்டு ""பிஸி பிஸி பிஸி. இந்த சமயத்தில் வந்தாயே?"என்றான்
நித்யா பதில் சொல்லவில்லை ஆத்மா தன் கோட்டின் உட்பறத்தில் கைவிட்டு பேஸ்மேக்கரை அமைத்து இதயத் துடிப்பை அதிகரித்துக் கொண்டான். மூளைக்கு ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிததுக் கொண்டான். துல்லியமாக சிந்திக்க முடிந்தது. அந்த வரைபடங்கள் இன்னும் நடனித்துக் கொண்டிருந்தன."க்ரேட் ! ஒரு நிமிஷத்தில் ஒரு லட்சம் செய்துவிட்டேன். நித்யா நீ நிற்கிறாயே என்னவேண்டும் சொல்"
"நான் யார் தெரியுமா உனக்கு?"
"என்ன பைத்தியக்காரக் கேள்வி? நீ என் மனைவி. ஹலோ நியுயார்க் பத்தொன்பது ஐம்பதா? முடியாது இன்னும் நாற்பது செகண்டு தயங்கி நாற்பத்தி ஐந்துக்கு முடித்து விடு. என்ன சொன்னே நித்யா"
"ஒன்றுமே சொல்லவில்லை. என் கணவன் இயங்குவதைப் பார்ததுக் கொண்டிருக்கிறேன்.
"என்னவேண்டும? சொல்லவே இல்லையே"
"ஆத்மா,எனக்கு நீ வேண்டும்"
"நானா? அதுதான் எதிரிலேயே இருக்கிறேனே"
"என் எதிரில் இருப்பது ஒரு பணம் பண்ணும் இயந்திரம்"
"பணம் சக்தி நித்யா. வந்த காரியத்தை நாற்பது செகண்டுக்குள் சொல்"
"ஆத்மா நீ ஒரு மணிநேரம் எனக்கே எனககு என்று பிரத்தியேகமாக வேண்டும்"
"ராத்திரிதான் வருகிறேனே"
"வருகிறாய் ,மாத்திரை விழுங்குகிறாய் இதயத் துடிப்பைக் குறைத்துக் கொள்கிறாய். தூங்கி விடுகிறாய்.காலை எழுந்து நான் காண்பது காலிப் படுக்கை"
"தேவைப் பட்ட போது ஸ்டிவியில் பேசிக் கொள்கிறோமே?"
"அது வெறும் பிம்பம் எனக்கு வேண்டியது நிஜ நீ"
"ஹலோ டோக்கியோ"
நித்யா டச்போனை பட்டென்று நிறுத்தினாள்.
"என்ன நித்யா இது?"
"ஆத்மா நான் சொல்வதை தயவு செய்து கவனி போன வருஷம் திமலா போவதற்கு அனுமதி கேட்டு எழுதினோமே
ஞாபகம் இருக்கிறதா?"
"அதற்கென்ன?"
"அனுமதி கிடைததிருக்கிறது" என்று ஆர்வததுடன் ஒரு மஞ்சள் அட்டையை எடுதது அவனிடம் காட்டினாள் அதில் கம்பயுட்டர் அச்சில்
திமலா நிர்வாகம் உங்கள் வேண்டுகோள்- 20-2-2080 அன்று காலை 10-16 உங்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது நேரந்தவறாமல் வரவும் இந்த அட்டையையும் கொண்டு வரவும் உங்கள் பார்வையாளர் எண் 164396 (இது செயற்கைக் காகிதம்)
ஆத்மா அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு "அப்பாடா கடைசியில் அனுமதி கிடைத்து விட்டது சந்தோஷம் போய்வா" என்றான்
நித்யா கோபத்துடன் தெளிவாகப் பேசினாள் "ஆத்மா நீயும் என்னுடன் வருகிறாய் வந்துதான் ஆகவேண்டும். ஒரு மணி நேரம்தான் ஆகும். வரவில்லையென்றால் இந்த அலுவலகத்தை நாசம் பண்ணிவிட்டுத்தான் போவேன் அத்தனையும் உடைத்து.."
"இரு இரு எப்போது போகவேண்டும்"
"நாளை காலை 10-16"
"ஹேய் கம்ப்யுட்டர் நாளை காலை 10-16 க்கு நான் ·ப்ரீயா?"
அறையில் ஓர் அமானுஷ்யக் குரல் ஒலித்தது.
"நாளைக் காலை 10-16க்கு வத்தாநபே வருகிறார் "
"ஓகாட்! வத்தாநபே ஜப்பானியன். மிக முக்கியமான சந்திர காண்ட்ராக்ட்.ஸாரி நித்யா நான் வரமுடியாது"
நித்யா இப்போது அழுந்தி உட்கார்ந் தாள்."முடியாது நாளை நீ என்னுடன் வந்துதான் ஆக வேண்டும்.டச்போன் கொடு ஜப்பான் காரனுடன் பேசகிறேன். ஹேய் கம்ப்யுட்டர் வத்தாநபே கொடு" "ஸாரி கிடைக்கவில்லை" என்றது குரல்.
"போய் உன் தலையைத் தின்னு"
"ஸாரி தலை கிடையாது"
"இரு நித்யா கோபிக்காதே நான் வந்துதான் ஆகவேண்டும என்று என்ன கட்டாயம்? நீதான் திமலா பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தாய். தனியாகப் போய்ப் பாரேன் மற்றொரு முறை உன்னுடன் வருகிறேன்"
நித்யா பதற்றத்துடன் " ஆத்மா எப்படி இதைச்சொல்வேன் இரண்டுபேரும் போவதா கத்தானே முதலிலிருந்தே பேச்சு.அட்டையைப் பார் அனுமதி இரணடுபேருக்கு!"
"கூட யாரையாவது அனுப்பட்டுமா?"
நித்யா அழ ஆரமபித்தாள்
"நித்யா என்ன இது? இந்த நு¡ற்றாண்டில் யாரும் அழுவதில்லை"
மேலும் அழுதாள்.
"இதோ பார் நித்யா உனக்கு என்ன குறை? கல்யாணம் செய்துகொள்ளும்போது என்னுடன் வாழ்க்கை இப்படிததான் இருக்கும் என்று நான் சொல்லவில்லையா?"
"ஒரே ஒரு மணி நேரம். அப்படி நான் என்ன பெரிசாகக் கேட்கிறேன்?"
"ஒன்று செய்யலம் திமலா எவ்வளவு தூரம்?"
"நூற்றம்பது கிலோ"
"நீ முதலில் போ நான் சட்டென்று அவனுடன் பேச்சை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்"
"முடியாது நீ வரமாடடாய்.எனக்குத் தெரியும் . நான் போகிறேன்.உனக்கு வாழ்க்கைப் பட்டதற்கு பதில் ஒரு கம்ப்யூட்டரைக் கட்டிக்கெண்டிருக்கலாம் ஹேய் கம்ப்யூட்டர் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா"
"ஸாரி பதில் இல்லை"
ஆத்மா சிரித்தான்
"சிரிக்கிறாய்! எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. ஆத்மா நாம் பிரிந்து விடுவோம் என்று நினைக்கிறேன்.எனக்காகப் பத்து பேர் மனுப் போட்டிருக்கிறார்கள்"
"அப்படி எல்லாம் பேசாதே நித்யா"
"பின்னே என்ன?"
"அந்த திமலா அப்படி என்ன முக்கியம் உனக்கு"
"முக்கியம் ஆத்மா.அங்கே போக வேண்டியது என் நிம்மதிக்கு முக்கியம்,என் மனநிலை ஸ்திரமடைவதற்கு முக்கியம்.ஒரு வருஷமாக நான் இதை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறேன். அங்கே நமக்கு கிடைக்கப்போகும் ஆறுதலும் நிம்மதியும் பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை" "இந்த நூற்றாண்டில் இதெல்லாம் அபத்தமாக பிற்போக்காகப் படுகிறது எனக்கு"
"ஒரு முறை வந்துபார்.உன் மனம் மாறிவிடும் கணவன் மனைவியாகப் போவது பெரும் பாக்கியம் என்கிறார்கள்"
"இந்த முறை மன்னித்துவிடு நித்யா மற்றொரு மனுப்போடலாம் ஹலோந்யூ யார்க் என்ன ஆச்சு?" நித்யா டச்போனைப் பிடுங்கி எரிச்சலுடன் கீழே எறிந்தாள் ஹை இம்பாக்ட் பாலிமரி‘ல் செய்யப்பட்ட அது சேத மடையவில்லை. ஆத்மா அதைப் பொறுக்கிக் கொண்டு
"கோபம் கூடாது என் மனைவியே"என்றான்.
"நான் அனி உன் மனைவி இல்லை"
கம்ப்யூட்டர் குறுக்கிட்டது "ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது"
"என்ன?"
"வத்தாநபேக்கு வேறு அவசர வேலைகள் இருப்பதால் நாளை வர முடியாதாம் அதிக மன்னிப்புக்கள் கேட்கிறார்"
நித்யா முகம் மலர்ந்தாள் "வாழ்க வத்தாநபே. கம்ப்யூட்டரே நீயும் வாழ்க"என்று கூவினாள்
"மிகைப் பட்ட உற்சாகம் எதற்கு என்று தெரியவில்லை எனினும் வாழ்த்துக்களும் அஸ்ட்ரா கம்பெனியின் சார்பாக வந்தனமும் "என்றது கம்ப்.
ஆத்மா சிரித்து" திருப்திதானே? நாளை வருகிறேன். முத்தம் உண்டா?"
நித்யா அவன் உதடுகளில் முத்தமிட்டாள்
மறு நாள் ஒன்பது மணிக்கே தயாராகி விட்டாள்.ஸ்டி.வி அலுவலகத்தில் சொல்லி விடுமுறை வாங்கிக்கொண்டாள்.தன்னை மெலிதாக அலங்கரித்துக் கொண்டள். ஸின்த்ரானில் பாட்டு அமைத்தாள்.பைக்குள் தேவையான சாமான்களை அடைத்துக் கொண்டாள். டச்போனை எடுத்து வான டாக்ஸியை அழைத்தாள்.ஒன்பது பதினைந்துக்கு மேல்மாடிக்கு வந்து காத்திருந்தாள். நிறைய சமயமிருக்கிறது
திமலா!
அவள் எதிர்பார்த்து ஏங்கிய திமலா!
கணவனுடன் சென்று வரவேண்டும் என்ற ஒரு வருஷ வைராக்கியம் ஏன், விரதம் இன்று பூர்த்தியாகப் போகிறது.
நித்யா மற்ற பெண்களைப் போல் இல்லை கணவன் மனைவி உறவுக்கு இந்த நு‘ற்றாண்டின் புதிய அர்த்தங்கள் அவளுக்குப் பிடிக்கவிலலை.அயற்சேர்க்கை விழாவுக்கு அவள் போவதே இல்லை குருட்டுக் கூட்டுக்கள் அவளுக்கு பிடிக்காது.கணவன் மனைவி உறவில் இன்னும் சில கவிதை கலந்த சங்கதிகள் இருப்பதாகவே நம்புகிறவள். அவள் ஜீன்களில் கோளாறு என்று ஆத்மா சொல்லியிருக்கிறான். இருக்கட்டும் கோளாறு அவளுக்குப் பிடித்திருக்கிறது.எனக்கு ஆத்மா ஒருவன் போதும், அவனுடன் என் சுக துக்கங்கள் அனைத்தும் ஐக்கியமாகட்டும் மெலிதாக பெருமூச்சு விட்டுக்கொண்டு வான டாக்ஸி வந்து வரைந்த வட்டததில் இறங்கி சுவாசித்தது.
நித்யா ஏறிக் கொண்டாள் "எங்கே" என்றான் டாக்ஸி ஓட்டி
"முதலில் அஜாக்ஸ் கட்டிடம். அங்கே கணவனை அழைத்துக்கொண்டு திமலா போகவேண்டும் பத்தே காலுக்குள்.உன்னிடம் பூஸ்டர் இருக்கிறதா?"
"இருக்கிறது. நிறைய சமயமும் இருக்கிறது. அஜாக்ஸ் கட்டித்தில் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?"
"அதிகப் படியாக ஐந்து நிமிஷம்"
"சரி"
டாக்ஸி நழுவியது.
அஜாக்ஸ் கட்டிடத்தில் இறங்கிய போது ஒன்பது நாற்பது முப்பது.
"ஒரு நிமிஷம்" என்று சொல்லி அதிவேக லி·ப்ட்டில் இறங்கி ஆத்மாவின் அறைக்குள் சென்றாள்.
எப்போதும் போல் அவன் பணம் பேசிக்கொண்டிருந்தான் "ஹலோ லண்டன்! ஸ¥ப்ராமெட்ரோவில் டாக்டர் டாம்லின்ஸன் வேண்டும்.ஹலோ நித்யா"
"நேரமாகிறது கிளம்பு கிளம்பு"
"ஒரு நிமிஷம் டாக்டர் டாம்லின்ஸன் ஆத்மா ஹியர் ஐயம் ஹோல்டிங் எங்கே போகிறோம்?"
"நாசமாப் போச்சு. திமலா!"
"ஓ எஸ் திமலா திமலா நமக்கு அனுமதி கிடைத்து விட்டதல்லவா? இன்னும அரை மணி இருக்கிறதே இதோ வந்துவிட்டேன்"
ஆத்மாவை ஒரு வழியாக பிடுங்கிக்கொண்டு வர பத்தாகி விட்டது.பத்து பதினாறுக்கு அனுமதி. நித்யாவுக்கு கவலை அதிகரித்தது. கடவுளே! போக்கு வரத்துக் குழப்பமில்லாமல் போய்ச் சேரவேண்டும்.
"டிரைவர் பத்து பதினைந்துக்கு நங்கள் அங்கே இருக்க வேண்டும்"
"கவலைப் படாதீர்கள் ·ப்யூல் செல்கள் எல்லாம் புதிதாக சார்ஜ் வாங்கியிருக்கின்றன பூஸ்டர் வைத்திருக்கிறேன் . திமலாவில் எந்த ப்ளாட்பார்ம்?"
"புரிய வில்லை"
"உங்கள் அனுமதி அட்டை என்ன நிறம்?"
"மஞ்சள்"
"பத்தாவது ப்ளாட்பார்ம்"
வான டாக்ஸி அம்பாக விரைந்தது. அதன் வேக ஈர்ப்புடன் நித்யாவின் வயிற்றில் எதிர்பார்ப்பின் ஈர்ப்பும் கலந்திருக்கிறது. ஆத்மாவை முழுசாக பககத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அவனை உரசிக் கொணடாள்
திமலாவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது பத்து பதிநான்கு நாற்பது. அப்பாடா!
ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.
நீண்ட ப்ளாட்பாரத்தில் அதிகம் சந்தடி இல்லை.'திமலாவுக்கு வரவேற்கிறோம்' என்று ஸோடியம் ஒளிர்ந்தது. நித்யா வேகமாக நடந்தாள். நீண்ட சதுர இயந்திரங்கள் 'உங்கள் அனுமதிச் சீட்டை செருகுங்கள் ' என்றன.
செருகினாள். உள்ளே அதன் காந்த எண்கள் படிக்கப் பட்டு" நீங்கள் ஒரு நிமிஷம் முன்னதாக வந்திருக்கிறீர்கள் ஒன்பதாம் எண் கன்வேயரில் செல்லவும்"
சற்று தூரம் நடந்தார்கள்.ஒன்பதாம் எண் கன்வேயருக்கு ஒரு வரிசை காத்திருக்க மேலே ஒரு ஆரஞ்சு வண்ண விளக்கு பளிச் பளிச்சிட்டது.
'இன்னும் முப்பது செகண்டுகளில் புறப்படும்' என்றது ஒலிபெருக்கி
ஆத்மாவும் நித்யாவும் அதன்மேல் ஏறிக்கொள்ள சற்று நேரத்தில் ஆரஞ்சு சிவப்பாகி டர்ன்ஸ்டைல் பூட்டிக் கொள்ள ஊஷ் என்ற சப்தத்துடன் பெல்ட் நகர ஆரம்பித்தது.
முதலில் ஒரு மண்டபத்தின் ஊடே விரைந்தது.மேலும் வேகம் பிடித்து மிக மெலிதான கட்டத்துடன் சுற்றி வந்து ...கோபரம் தெரிந்தது. நித்யாவின் துடிப்பு அதிகரிக்க ஆத்மாவை அப்படியே அணைத்துக் கொண்டாள். பிரதான வாசல் திறந்திருந்தது . அவர் இங்கிருந்தே தெரிந்தார் நித்யா துள்ளினாள். "பார் ஆத்மா, அவர்தான்!"
வேகம் குறைந்து சரியாக பத்து பதினாறுக்கு ஆத்மாவும் நித்யாவும சன்னிதியில் அனுமதிக்கப் பட்டார்கள்.
மெலிதாக ஏர்கண்டிஷனரின் மூச்சு கேட்டது அருகே அருகே அருகே சென்றார்கள்.
"அப்பா! என்ன ஜாஜ்வல்யம் என்ன கம்பீரம்!"
"உங்களுக்காக சரியாக இருபது செகண்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறது
ஆசை தீர சேவிக்கலாம்'என்று குரல் மேலே ஒலித்தது.
அர்ச்சகர் பட்டாடை அணிந்து நெற்றியில் நாமம் அணிந்து "அர்ச்சனை உண்டா? என்ன மொழி?" என்றார்.
"தமிழ்" என்றாள் நித்யா
அர்ச்சகர் அருகே இருந்த பட்டன்களைத் தொட்டார்.மெலிதான இசை பரவியது.
துல்லியமான கணீர் என்ற பெண் குரலில் பாட்டுக் கேட்டது-
"குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை என்றுமே தொழ நம் வினை ஓயுமே"
"சேவிங்கோ சேவிங்கோ! நன்னா கண்குளிரச் சேவிங்கோ சீனிவாசப் பெருமாள்! முன்னெல்லம் திருப்பதி திருவேங்கடம் திருமலைன்னு பேரு.இப்பதான் கம்ப்யூட்ட ருககுத் தோதா திமலான்னு சின்னதாக்கிட்டா... பூலோக தெய்வம்..பிராசீனமான கோயில். நின்ற திருஉருவம் திருமுடியும் தாளும் தடக்கையும்.."
கற்பூர ஒளியில் ஆத்மா "த்ரில்லிங்!"என்றான்.
இக்கதையை முழுமையாக படிக்க http://www.clicksujatha.com
*****
இந்தக் கதை பற்றி சுஜாதா...
இந்தக் கதை என்னுடைய விஞ்ஞானக் கதைகளில் காலத்தால் முந்தையது. இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கதைகளை எழுதியுள்ளேன். விஞ்ஞானக் கதைகள் என்று சொன்னாலே புதிர் நிறைந்த ஒரூ உலகத்திற்குள் போய் வருவது மாதிரி. இதற்காக புதிதாக சில வரையறைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பின்னர் அந்த வரையறைகளை வைத்துக் கொண்டு புதிய கற்பனைகளுடன் முன்னேற வேண்டியிருக்கிறது. இந்தக் கதையும் அதுமாதிரியே.
விஞ்ஞானக் கதைகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக கீழ்க் கண்ட சில புனைகதை ஆசிரியர்களைப் பரிந்துரை செய்கிறேன். Ursulak. Le Guin, Clifford Simak,Ray Bradbury,Brian Aldiss, Theodore Sturjeon, Douglas Adams. இவர்களில் Douglas Adams பிரிட்டிஸ் மொழியில் விஞ்ஞானக் கதைகள் படைப்பதில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர். அவருடைய கதைகள் போன்று தமிழில் எழுதுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். எழுதுவதும் சிரமம்.
விஞ்ஞானக் கதைகள் என்பது புதிய விளையாட்டு. வித்தியாசமான விதிமுறைகள் கொண்டது. இவற்றில் நகைச்சுவை கலந்து எழுதுவதற்கு பிரம்மப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.
சுஜாதா |