சுஜாதா
சுஜாதாவின் இயற்பெயர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன். தமிழ் எழுத்துலகின் 'ஆல்ரவுண்டர்' என எல்லோராலும் கருதப்படுபவர். புதுமை விரும்பி. வாசகர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெட்டுக் கொள்பவர். இதுவரை கதைகள் வாசிப்பதில் உள்ள அயர்வைப் போக்கி, வாசகர்களுக்கு கதைகள் படிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியவர்.

இவரது விஞ்ஞானக் கதைகளும், விஞ்ஞானக் கட்டுரைகளும் குறிப்பாகக் கணிப்பொறி பற்றிய இவரது அறிமுகக் கட்டுரைகளும் தமிழுக்குக் கிடைத்த வரப் பிரசாதங்கள். 'கரையெல்லாம் செண்பகப் பூ', 'கனவுத் தொழிற்சாலை', 'இரண்டாவது காதல் கதை' போன்ற எண்ணற்ற தொடர் நாவல்கள் வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்தாலும் இவரின் சிறுகதைகளே இலக்கியவாதிகளால் இன்றளவும் குறிப்பிடப் பட்டு வருகின்றன.

சுஜாதாவின் 'நகரம்' சிறுகதையைத் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் ஒன்றாகச் சேர்த்து விமர்சகர்கள் மதிப்பிடுவர். 'சில வித்தியாசங்கள்', 'தேவன் வருவாரா' போன்ற சிறுகதைத் தொகுப்புகள் இவரின் சிறுகதைப் படைப்புகளில் குறிப்பிடத் தக்கன.

தழிழ்ச் சமூகத்தில் சுஜாதாவின் பங்களிப்புகள் சகல துறைகளிலும் இருந்திருக்கிறது. இவருடைய 'நகரம்' கதை நவீன நாடக மாக்கப்பட்டுள்ளது. இவரும் சில நவீன நாடகப் பிரதியாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். நாடக விமர்சகராகவும் தன்னுடைய பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சினிமா என்கிற சக்தி வாய்ந்த ஊடகத்திலும் இவருடைய பங்களிப்புகள் தொடர்ந்திருக் கின்றன. நிறையப் படங்களுக்கு வசன கர்த்தாவாக, கதை விவாதங்களில் பங்கு பெற்றவராக இருந்துள்ளார். மணிரத்னத்தின் 'உயிரே' படத்தின் வசனகர்த்தா இவரே. அதுவுமில்லாமல் இந்த ஆண்டு தேசிய விருது பெற்ற 'பாரதி' படத்தின் 'Creative adviser' ஆக சுஜாதா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைய தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்து வரும் கமலஹாசன் இவருடைய விமர்சனங்களால் மெருகேற்றப்பட்டு வளர்ந்தவர் என்பது பெருமையுடன் நினைவுகூரத்தகும் விசயம். கமலஹாசனின் இயக்கத்தில் வெளியான 'ஹேராம்' திரைப்படத்திலும் இவருடைய பங்களிப் புகள் இருந்துள்ளன.

தமிழ்ச் சிற்றிதழ் மற்றும் வணிக இதழ்கள் வரலாற்றிலும் சுஜாதாவின் பங்களிப்பை மறுத்துவிட முடியாது. தீவிர இலக்கிய இதழான கணையாழி பத்திரிகையில் இவருடைய 'சுஜாதாவின் கடைசிப் பக்கங்கள்' என்னும் பகுதியின் வழியாக ஏராளமான இளம் படைப்பாளிகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். தற்போது ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியாகும் 'கற்றதும் பெற்றதும்' தொடரின் வழியாகவும் சிறந்த புத்தகங் களையும் சிறந்த இளம் படைப்பாளி களையும் ஊக்குவிக்கும் வகையில் எழுதி வருகிறார்.

பொதுவாக விமர்சனக் கட்டுரைகள், சிறுகதைகள் என இவருடைய படைப்புகள் எல்லாவற்றிலும் இழையோடும் அங்கதம் கலந்த மொழிநடையே அனைவராலும் வியந்து நோக்கப்படுகிறது. படடோபம் இல்லாத மொழிநடையில் எளிமையாகக் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு இவருக்குக் கைவந்த கலை. சங்கயிலக் கியப் பாடல்களைத் தற்கால புதுக் கவிதை வடிவில் பெயர்த்துச் சொல்லும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். 'அம்பலம்' மின்னிதழின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

சரவணன்

© TamilOnline.com