ஓண்ணுமே புரியலே உலகத்திலே..
பத்திரிக்கை மற்றும், பிற மீடியா துறையினருக்கு என்றுமே பஞ்சமென்பது இல்லை. ஒவ்வொரு மாதமும், ஏதாவது ஒரிரு செய்திகள் உலக அரங்கை ஆக்ரமித்துக் கொண்டு, தலைப்புச் செய்திகளாகவும், அட்டைப் படக் கட்டுரைகளாகவும் உருவாகி, பரபரப்புடன் பேசப்பட்டு, அதே வேகத்தில் மறைந்தும் விடுகின்றன. சென்ற மாதம், தாலிபான் மற்றும், இந்திய அரங்கிலே தெஹல்கா விவகாரங்கள் பரவலாகப் பேசப்பட்டு, கண்டிக்கப்பட்டு, இப்போது வெகுவாக மறக்கப்பட்டும் விட்டன.

ஏப்ரல் மாதத்திய சூடான செய்தி, அமெரிக்காவுக்கும், சைனாவுக்கும் இடையே உருவான, இறுக்கமான சூழ்நிலையும், அது இளகி சுமுகமான கதையும்தான்.. (தற்காலிகமாகவாவது). அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த உளவு விமானம் EP-3E, தகவல் சேகரிக்கும் பணியிலே, சைனாவின் வான் வெளிக்கு மிக அருகில் செல்லும் போது, சைனாவின் 33 வயதேயான போர் விமானி "வாங் வே", தன்னுடைய F-8 ஜெட் விமானத்தை, அமெரிக்க உளவு விமானத்தின் கீழ் செலுத்தும் போது, ஏற்பட்ட மோதலில், கடலில் வீழ்ந்து மாண்டார். அமெரிக்க விமானமும், மேலே பயணிக்கமுடியாத அளவுக்கு பழுது படவே, லுட்டினன்ட் ஷேன் நார்·பாக், வேறு வழியில்லாமல் சைனாவுக்கு உட்பட்ட ஹைனன் தீவிலே இறங்கநேர்ந்தது. தொடர்ந்து, அமெரிக்க விமானத்தில் இருந்த கடற்படை விமானப்பிரிவைச் சேர்ந்த்த 24 பேரும், சைனாவின் பிணயக்கைதிகளானார்கள். இதைத் தொடர்ந்து அமெரிக்க, மற்றும் சைனாவின் அரசியல், டிப்ளோமெடிக் வட்டாரங்களின், வார்த்தைப் போர்கள், எல்லோருக்கும் சற்றே கவலையை அளிப்பதாகவே இருந்தன.

உலகின் ஒரே 'சூப்பர் பவர்' என்றழைக்கப்படும், அமெரிக்காவுக்கு, எப்போதும் உள்ள பயம், கம்யூனிஸ்ட் நாடுகளால், உலக அமைதிக்கு, குறை வந்துவிடுமே என்று. அதனால், அப்படிப்பட்ட நாடுகளை உளவு பார்க்கவேண்டிய கட்டாயம்,. அமெரிக்காவின் எதேச்சாதிகாரத்திற்கு, உலகின் கடைசி சவுக்கு, தாங்கள்தான் என்னும் எண்ணம் சைனாவுக்கு. சைனா அமெரிக்க அரசு, முழு பொறுப்பை ஏற்று மன்னிப்புக் கேட்டால்தான் பிணயக் கைதிகளுக்கு விடுதலை என, அமெரிக்கா, தான் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை என, இந்த இழுபறியின் உச்சக்கட்டமாக, அமெரிக்கத் தலைமைச் செயலர் 'காலின் பௌவல்' சைனாவின் விமானம் பத்திரமாகத் தரையிறங்காததற்கும், விமானி இழப்புக்கும் அமெரிக்கா மிகவும் வருந்துவதாக சொல்லவும், அமெரிக்கப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் 'புஷ்'க்கு, இது மிகவும் சோதனையான காலம். அமெரிக்க பங்குசந்தையின் மற்றும் பொருளாதாரச் சரிவுக்கும், புஷ் பதவியேற்றதற்கும் ஒரு சம்பந்தமில்லையென்றாலும், இந்த மாதிரியான சோதனைகள், அவருடைய கவனத்தை மிகவும் சிதற அடித்துவிடும்.

இந்தியாவில் தெஹல்கா விவகாரம், இன்னும் இழுபறியாகாத்தான் இருந்துகொண்டிருக்கிறது. உண்மையைக் கண்டறியவேண்டியதுதான். அதற்காக, பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது என்ன நியாயம்..? தமிழக அரசியலோ, தலைச்சுற்றும் படியாக உள்ளது. பிரிந்தவர் கூடுவதும், கூடினவர் பிரிவதும், ஜாதி, மத வோட்டு வங்கியைச் சார்ந்த அரசியல் தொகுதி பங்கீடுகளும் என ஒரே கூத்துதான்..! பாவம் ரஜினிகாந்த் என்ன செய்வார்..? "ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது" என்று, வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுவிட்டார்..!

ஆக, உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, அரசியல் ஒரு தமாஷாகத்தான் போய் கொண்டிருக்கிறது... வரும் மாதங்களில், என்னென்ன காத்திருக்கின்றனவோ?

பொறுத்திருந்து பார்ப்போம்...

மீண்டும் சந்திக்கும்வரை,
அஷோக் சுப்பிரமணியம்.
கலிபோர்னியா,
மே 2001.

© TamilOnline.com