முட்டாள் தினத்திற்கு முன்பே முட்டாள் ஆனவர்கள்
மெட்ராஸ் பாஷையில் 'டகுலுவுடறது' என்றால் பொய் பேசுவது என்று அர்த்தம். ஆனால் 'டெஹல்கா'டாட் காம் போலியாக நடத்திய ராணுவதளவாட பேரத்தால் பாரதியஜனதா தலைமையிலான மத்திய ஆட்சியே ஆட்டம் கண்டுவிட்டது.

நாட்டிற்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறுகின்றன என்பதற்காக டெஹல்கா டாட் காம் நிறுவனம். வெஸ்ட் எண்ட் இண்டர்நேஷனல் என்ற கற்பனையில் புனையப்பட்ட நிறுவனத்தை துவக்கியது. அது இல்லாத தெர்மல் காமிராவை இந்திய ராணுவத்துக்கு விற்பது தொடர்பான பேரத்தை இறுதி செய்ய லஞ்சம் கொடுத்தது.

வெஸ்ட் எண்ட் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றவர்களில் பாஜக தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன், பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸின் கட்சியான சமதா கட்சி தலைவர் ஜெயா ஜேட்லி, பொருளாளர் ஆர்.கே. ஜெயின், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ட்ரஸ்ட் ஆர்.கே. குப்தா ஆகியோரோடு பாதுகாப்பு அமைப்பு துணைச் செயலர் எச்.சி. பந்த், அத்துறையின் மூத்த அதிகாரி சசிமேனன் மற்றும் நிதித்துறை ஆலோசகர் நரேந்திரசிங் ராணுவ உயர் அதிகாரி அணில் செகால் உள்ளிட்ட 23 ராணுவ அதிகாரிகளும் அடக்கம்.

டெஹல்கா டாட் காமின் 2 நிருபர்கள் கடந்த 8 மாதங்களாக பாடுபட்டு இந்த ஊழலை அம்பலப்படுத்தி உள்ளனர். ஆயத வியாபாரிகளிடம் பணம் பெற்றது உண்மைதான் என்று கூறி டெஹல்கா டாட் காமின் வீடியோ படப்பதிவு வெளியிடப்பட்டப்பின் முதலில் பாஜக தலைவர் பங்காரு லட்சுமணன் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி திரிநாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும் (ரெயில்வேதுறை) அந்தக் கட்சியின் அஜித் பாஞ்சா (வெளியுறவுத்துறை இணை அமைச்சர்) அமைச்சரவையிலிருந்த விலகியதோடு மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

அதன் பிறகு சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ¥ம் பதவி விலகினார். அவரை தொடர்ந்து நிதிஷ்குமார், திக் விஜய்சிங், சீனிவாச பிரசாத் ஆகியோரும் அமைச்சரவையிலிருந்து விலகினர். இதில் மம்தா, பாஞ்சா, பெர்னாண்ட்ஸ் ஆகியோரின் ராஜினாமா ஏற்கப்பட்டது. மற்ற 3 அமைச்சர்களின் ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் நடைபெறுவதால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இப்பிரச்சினை எழுப்பப்பட்டு மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இரு அவைகளையும் நடத்தவிடாமல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.

பிரதமர் வாஜ்பாய் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார். நாடாளுமன்றத்துல் விவாதம் நடத்தவும் தயார். தெலுங்குதேச கட்சியோடு ஆலோசித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்றும் அறிவித்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு பிரதமர் மற்றும் மத்திய அரசின் ராஜினாமாவை கோரி வருகின்றன.

போலி ராணுவ தளவாட ஊழல் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுவை யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும மத்தியஅமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும் திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி பிரதமர் வாஜ்பாய் மீது தமக்கு நம்பிக்கை உண்டும் என்றும், இது குறித்து அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவு உண்டு என்றும் கூறிவிட்டார்.

அடுத்து தமிழகத்தில் ஆட்சியைப் கைப்பற்றத் துடிக்கும் ஜெயலலிதா, ''தேசத்தின் பாதுகாப்பு, ஜார்ஜ் பெர்னாண்டஸின் கையில் பாதுகாப்பாக இருக்காது என்று நான் முன்பே கூறினேன். அது தற்போது உண்மையாகிவிட்டது. கருணாநிதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல்தன் முக்கியப் பிரச்சினையாக இருக்கும் என்று கூறினார். இந்த விஷயத்தில் அவர் சரியாகத் தான் கூறியிருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயதபேர ஊழல்தான முக்கியப்பிரச்சினையாக இருக்கும்'' என்று அதிரடியாக கூறிவிட்டார்.

பெங்களூரில் மார்ச் 17, 18 ஆகிய 2 நாள் நடந்த மாநாட்டில் ஆயுதபேர ஊழல் என்பது தேச விரோத செயல். இந்த ஊழலில் ஈடுபட்டவர்களை பிரதமர் வாஜ்பாய் காப்பாற்ற முயற்சிக்கிறார். முதலில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மதச்சார்பற்றகட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு தற்போது ஆயுதபேர ஊழல் என்ற 'அவல்' கிடைத்துவிட்டது. இன்னும் கொஞ்சகாலம் அதை அவர்கள் மென்று கொண்டிருப்பார்கள். அது ஜீரணமான உடன் வேறு 'அவலை' மெல்லுவார்கள். இல்லையென்றாலும் வெறும் வாயை மெல்லுவார்கள்.

போலி ராணுவ தளவாட பேர ஊழலில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்பே முட்டாள் ஆனவர்கள் பிரதமர் வாஜ்பாயோ, ஜார்ஜ் பெர்னாண்டஸோ, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரோ அல்ல!

முட்டாள்களானது இந்திய மக்கள்தான்.

அவர்களுக்கு இது வாடிக்கையானதுதான். ஏனெனில் வருடம்தோறும் ஏப்ரல் 1 வரத்தானே செய்யும்.!

வே.பெருமாள்

© TamilOnline.com