அர்ஜுனின் அதிரடி
அர்ஜுனை கதாநாயகனாக வைத்து 'அரசாட்சி' என்ற படத்தைத் துவங்கியிருக்கிறது சி டிவி நிறுவனம். இதன் இயக்குநர் மகராசன். விஜயகாந்தை வைத்து 'வல்லரசு' என்ற அதிரடி படத்தை இயக்கிய அதே நபர்தான். இதைவிட பெரிய அதிரடியை விரைவில் எதிர்பார்க்கலாம். படத்தின் நாயகன் அர்ஜுனுக்கு இன்னும் சம்பளம் பேசப்படாமல் படப்பிடிப்பைத் துவங்கி விட்டார்கள். ஏற்கெனவே இவர்கள் தயாரித்துவரும் 'மஜ்னு' படத்தில் பிரசாந்துக்கு சம்பள பாக்கி. அதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதில் அர்ஜுன் தரப்போகும் அதிரடி எப்படி இருக்குமோ?

*****


45 லட்ச ரூபாய் கேள்வி

பிரசாந்தும் ஜோதிகாவும் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், 'ஸ்டார்'. ஒவ்வொரு பாடல் காட்சியையும் விதம் விதமான லொகேஷனில் எடுத்து வருகிறார்கள். துங்கபத்ரா நதிக்கரையில் 12-ஆம் நூற்றாண்டின் பழைய கோவில்களைக் கொண்ட சரித்திரப் புகழ் வாய்ந்த ஹம்பி என்னும் இடத்தில் 45 லட்ச ரூபாய் செலவில் ஒரு பாடல் காட்சியை எடுத்திருக்கிறார்கள்.

புதிதாக செட் போட்டு எடுப்பதற்கு 12-ஆம் நூற்றாண்டு கோயில்களின் பின்னணி எதற்கு என்பது 45 லட்ச ரூபாய் கேள்வி.

*****


டும் டும் டும்

'உதயா' பட வேலைகளில் இரண்டு வருடங்களாக முடங்கிக் கிடந்த அழகம்பெருமாள் படு ஜரூராக 'டும் டும் டும்' பட வேலைகளை முடித்துக் காட்டி படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னத்தின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ். படம் ரிலாஸான வேகத்தில் அழகம்பெருமாளுக்குக் கால் கட்டுப் போட இருக்கிறார்கள்.

மாலினி மன்னத், தமிழ்மகன்

*****


அ'சத்திய ராஜ்'

சத்யராஜுக்காகவே சில வார்த்தைகளைத் தேடிப்பிடிக்கிறார்கள். 'என்னம்மா கண்ணு'. 'லூட்டி', 'மிஸ்டர் நாரதர்'.... இந்த வரிசையில் பி. வாசு இயக்கும் அசத்தல் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். எஸ். ராஜராம் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் ரமேஷ் கண்ணா, சுவாதி, வடிவேலு, மணிவண்ணன், பாபிலோனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

பி. வாசு இயக்கத்தில் 'நடிகன்', 'ரிக்ஷாமாமா', 'வால்டர் வெற்றிவேல்', 'மலபார் போலீஸ்' போன்ற படங்களில் அசத்திய சத்யராஜுக்கு 'அசத்தலி'ல் அசத்த பஞ்சமிருக்காதுதானே?

*****


டிஜிட்டல் கேமிராவில் கனவுத் தொழிற்சாலை

டிஜிட்டல் கேமிராவிலேயே சினிமாவை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் பல படங்கள் இப்போது டிஜிட்டல் கேமிராவில் தயாராகுபவைதான். இதில் நன்மை என்னவென்றால் முழு படத்தையும் ஒரு பைசா செல்லுலாய்ட் செலவில்லாமல் எடுத்து முடித்து எடிட்டிங் வேலைகளையும் முடித்துவிடலாம். முதல் பிரதி எடுக்கும்போது மட்டும்தான் பிலிம் சுருளே தேவை. தமிழில் எடிட்டர் லெனின் டிஜிட்டல் கேமிராவில் ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

*****


மும்தாஜை ஜெயிப்பாரா அவந்திகா?

99- ஆம் ஆண்டில் மிஸ்.கோவா - ஆக தேர்வு செய்யப்பட்டவர் அவந்திகா. அப்போதே வந்த பட வாய்ப்புகளுக்கெல்லாம் சாரி சொல்லிவிட்டுக் காத்திருந்தார், ஒரு நல்ல வாய்ப்புக்காக. அதற்கான தருணம் வாய்த்துவிட்டது அவருக்கு. ஷங்கரின் இணை இயக்குநரான மாதேஷ் தயாரித்து வரும் 'சாக்லெட்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ''இந்தப் படத்தில் எனக்கு சவாலான வேடம்'' என்கிறார். சாக்லெட் படத்தில் மும்தாஜுக்கு இரட்டை வேடமாம். ஒரு மும்தாஜை சமாளிப்பதே கஷ்டம். இரண்டு மும்தாஜை மீறி அவந்திகா வெளியே தெரிவது சவாலாகத்தான் இருக்கும்.

தமிழ்மகன்

© TamilOnline.com