புத்தரின் புன்னகை
கி.பி. 2-ஆம் நூற்றாண்டுப் பழமை வாய்ந்தவைகள் பாமியான் புத்தர் சிலைகள். இதைத் திட்டமிட்டுத் தகர்க்கும் நடவடிக்கைகளில் தாலிபான் தீவிரவாத இயக்கப் படைகள் ஈடுபட்டு வருவதைக் கண்டு உலகக் கலாச்சாரச் சின்னங்களின் காவலர்களும், அனுதாபிகளும் கொதித்துப் போயிருக்கின்றனர். பல எதிர்ப்புக் குரல்கள், கண்டன அறிக்கைகள் உலகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் எழுந்து கொண்டிருந்தாலும், பிப்ரவரியின் கடைசி நாட்களில் தொடங்கிய இந்தக் கொடூர நடவடிக்கை மார்ச் வரை தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன.

இடைப்பட்ட இந்த நாட்களில் புத்தர் சிலைகளின் எண்பது சதவிகிதப் பகுதியைத் தகர்த்தெறிந்து விட்டன தாலிபான் அடிப்படைவாதப் படைகள்.

ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கெல்லாம் பௌத்தத்தைப் பரப்பிய அசோகரின் கல்வெட்டுகள் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. பிற்பாடு மொகலாயர்களின் வருகையின் போதும், இப் பகுதிகளை அவர்கள் ஆக்கிரமித்த போதும் தப்பிப் பிழைத்தவை இந்தச் சிலைகள். பௌத்தம் ஆப்கானிஸ்த மண்ணில் வேர் பாய்ச்சியிருந்த வரலாற்றை நினைவு படுத்துகிறபடியாக இந்தச் சிலைகள் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமால்தான் தாலிபான் தீவிரவாதப் படைகள் இந்த வெறியாட்டத்தை நிகழ்த்தியிருக்கின்றன.

"என்னைப் பொறுத்தவரை திண்ணமாக இவை (கற்பனைக் கடவுள்கள்) அனைத்தும் விரோதிகளாகும்" (அஷ்ஷீ அரா 26:77.82) என்று திருக்குரான் சொல்லும் செய்தியை எடுத்துக் காட்டியே தாலிபான் தலைவர் முல்லா முகமது ஓமார், " அல்லா மட்டும்தான் உண்மையான கடவுள் மற்ற போலியான சின்னங்களை எல்லாம் தகர்க்க வேண்டும்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருக்குரான் அல்லாவை மட்டுமே உண்மையான கடவுளாக முன்னிறுத்தியதே தவிர, எந்தப் பகுதியிலும் மற்ற கடவுளர்களின் சின்னங்களைத் தகர்க்கச் சொல்லவில்லை. திருக்குரான் காட்டும் அறவழியை மதிக்காமல் முல்லா முகமது ஓமார் இது போன்ற பிற்போக்குத் தனத்தை மதக் கோட்பாடாக முன்னிறுத்துகிறார்.

தாலிபான் மதப் பிற்போக்கு அடிப்படையிலான இந்த வெறியாட்டத்தைக் கண்டித்த ஐ.நா.சபை, தகர்க்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. தொன்மைச் சின்னங்களைப் பாதுகாத்து வரும் இந்தியா, கம்போடியா, எகிப்து போன்ற நாடுகளும் தங்களுடைய எதிர்ப்பை நேரடியாகவே வெளிக் காட்டியுள்ளன.

இது குறித்த ஐ.நா தீர்மானமொன்றில்," ஆப்கானிஸ்தானில் அழிவிலிருந்தும் திருட்டிலிருந்தும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது என்று தாலிபான் ஏற்கனவே கொண்டுவந்த தீர்மானத்தை அந் நாடு நினைவுகூற வேண்டும்" எனத் தாலிபானின் முரண்பாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளது.

சமீபத்தில் தாலிபான் அரசின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டியே இது போன்ற செயல்களில் தாலிபான் ஈடுபடுவதாகக் குறிப்பிடுகின்றனர். அதே சமயம் பொருளாதாரத் தடை விதிப்புக்கு காரணமாகயிருக்கும் பின்லேடனை ஒப்படைப்பதற்கும் தாலிபான் தயாராகயில்லை. உலகை அச்சுறுத்த வேண்டும் என்கிறதைத் தவிர இந்தப் பிரச்சனையில் வேறு எதுவுமில்லையென்றே தோன்றுகிறது.

பௌத்த மதத்தைப் பரவலாக நடைமுறையில் கடைபிடித்து வரும் ஜப்பான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டி களமிறங்கி முகத்தில் அடி வாங்கியிருக்கிறது. ஜப்பான் தூதுக்குழு, தாலிபான் வெளியுறவு அமைச்சர் வக்கீல் அகமது முக்தாவிடம் சிலைகளை இடம்பெயர்த்துக் கொண்டு போவது என்கிற யோசனையை முன்வைத்ததை நிராகரித்து," உலேமாக்கள் சிலைகளை அழிக்க வேண்டும் என்றுதான் உத்தரவு பிறப்பித்தனர். இடம்பெயர்வதற்கு அல்ல" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா தன்னுடைய பங்குக்கு சிலைகளைப் பாதுகாக்கத் தயாராகயிருப்பதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளது. இந்தியா பாபர் மசூதி விவகாரத்தை வசதி கருதி இந்த இடத்தில் மறந்து விட்டது. இத்தகைய சண்டியர்த்தனத்துக்கெல்லாம் தலைவனாகச் செயல்பட்டுவரும் பாகிஸ்தானும் - அமைதிப் பேச்சுவார்த்தைக்குச் செல்வதாக முஷராப் தெரிவித்துள்ளார்.

தாலிபான் பயங்கர வாதத்தைத் தட்டிக் கேட்கும் இலங்கை அரசு யாழ் நூலக எரிப்பை மறந்து போனது. தாலிபான் பேரின வாதத்தைக் கண்டிக்கும் சிங்கள அரசு தன்னுடைய பௌத்தப் பேரினவாதத்தைக் கைவிட்டால்தான், இந்தப் பிரச்சனையின் தீர்வு பற்றி தாலிபான் காது கொடுத்துக் கேட்கும். உலக நாடுகளின் வேண்டுகோளைப் புறக்கணிக்கிற தைரியம் தாலிபானுக்கு எப்படி வந்ததென்பதை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளலாம்.

ஒரு நாட்டின் கலாச்சாரச் சின்னங்கள் அந் நாட்டின் ஆணிவேர் போன்றவை. ஆணி வேர்களைக் களைந்தெடுக்கும் முயற்சியில் மதம், இன்னபிற காரணங்களைக் காட்டி ஒவ்வொருவரும் ஈடுபட்டால், உலகில் புராதனச் சின்னங்களே இருக்காது. கடைசியில் வளரும் தலைமுறைக்கு நம்மால் விட்டுச் செல்ல இடிந்த கோட்டைகளும், அழிந்து போன வீதிகளும்தான் இருக்கும். நீண்ட காலமாகவே இஸ்லாமியர்கள் மதம் என்னும் பெயரால் அழித்தொழிக்கும் முயற்சிகளை அறங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தைமூர், கஜினி, ஔரங்கசிப், செங்கிஸ்கான்... என வரலாறுகளை நியாபகப்படுத்தினால் இந்தியாவில் ஒரு கோட்டை கூட இருக்காது. அதற்காக இந்துக்களின் பாபர்மசூதி இடிப்பு விவகாரத்தை நியாயப்படுத்திவிட முடியாது. எனவே எந்த மதத்தினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.

உலகத்துக்கே அன்பையும் அமைதியையும் போதித்த புத்தரின் சிலைகள் தாக்கப்படுவதை மிஞ்சி, வேறென்ன கொடுமை வரலாற்றில் இனி நிகழ்ந்து விடக்கூடும்.

சரவணன்

© TamilOnline.com