பரவலாக பாராட்டப்பட்டிருக்கும், திரு.யஷ்வந்த் ஸின்ஹாவின் நிதிநிலை அறிக்கை, இரண்டாம் தலைமுறை நிதித்துறை சீர்திருத்தங்களுக்கு கட்டியம் கூறி வரவேற்றிருக்கிறது.
பட்ஜெட் பற்றிய நமது சிந்தனைகளுக்கு முன், இந்திய பொருளாதாரம் "வயதுக்கு வந்திருப்பதை" சற்று மகிழ்ச்சியுடன் கவனிப்போம். உங்களுக்கெல்லாம் நினை விருக்கலாம். 1991 ம் வருடம், நமது அந்நியச்செலாவணி நிலை, மிகவும் பரிதாபகரமான, சுதந்திர பாரதத்தின் வரலாற்றிலேயே மிகக் குறைவான,2 வாரங்களுக்கான இறக்குமதிகளுக்கு மட்டுமே போதுமான நிலையில் இருந்தது (மொத்தமே சுமார் 2.5 பில்லியன் டாலர்கள்). 40 வருட காங்கிரஸ் ஆட்சி பின்பற்றிய நமக்கு ஒவ்வாத சோஷலிஸ கொள்கைகளின் காரணமாக, 1950களில், ஜப்பானை விட மிகவும் முன்னேறிய நிலையில் இருந்த நமது நாடு, தங்கத்தை அடகு வைத்து, வட்டி கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. திரு. மன்மோஹன் சிங் புண்ணியம் கட்டிக்கொண்டு ஆரம்பித்துவைத்த சீர்திருத்தத்தினால், இன்று, அதே அந்நியச்செலாவணி நிலை, இதுவரை எப்போதும் காணா அளவிற்கு 41 பில்லியன் டாலர்கள் வரை வளர்ந்திருக்கிறது.
பல் குத்தும் குச்சி உற்பத்தி செய்யக்கூட, குறைந்தபட்சம் 20 இடங்களில், தட்சணை வெட்டி, லைசென்ஸ் பெற்று, பிறகு சம்பாதிக்கும் சொற்ப லாபத்தில் பெரும்பகுதியை, வரியாகக்கட்டி, இப்படியாவது தொழில் செய்யவேண்டுமா என்று நினைத்த காலம் போய், தாராளமயமாக்கல் கொள்கையின் காரணமாக, பல பன்னாட்டு நிறுவனங்கள், கலப்பையிலிருந்து, கார் வரை எல்லாவற்றையும் சர்வதேச தரத்துக்கே, தயாரிக்க ஆரம்பித்து, "அடுத்த மாதம் இந்தியா வருகிறேன், என்னம்மா வாங்கி வரட்டும்?" எனக்கேட்கும் மகனிடம், "ஓன்றும் வேண்டாம், எல்லாம் இங்கேயே கிடைக்கிறது" என்று கூறும் வகையில், தொழில் துறை முன்னேறியிருக்கிறது.
பட்டி தொட்டிகளிலெல்லாம், STD/ISD வசதிகள், தபால் துறை ஊழியர்கள் ஸ்ட்ரைக் செய்கிறார்களா? விடு கவலையை, கூரியர் வசதி இருக்கிறது என்கிற அளவிற்கு ஒரு மாறுதல், என்னேரமும் இந்த இந்தியன் ஏர்லைன்ஸைக்கட்டிக்கொண்டு அவஸ்தைப் படாமல் இருக்க ஜெட், ஸஹாரா என்று பலப்பல தனியார் விமானங்கள், லோக்கல் தாசில்தார் ஆ·பீஸைவிட ஒரேஒரு படி மேலாக இருக்கும்படியான தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகளை மட்டுமே நம்பியிருந்த காலம் போய், எத்தனையோ hi-tech வங்கிகள் தொடங்கியிருப்பது - இவையெல்லாம், நாம் பொருளாதார சீர்திருத்தங்களினால் கண்ட நிதர்சன சுகங்கள்.
ஒரு பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் foreign exchange கோட்டாவில் வாங்கவேண்டுமெனில், அமெரிக்காவில் என்றோ செட்டில் ஆகிவிட்ட ஒன்றுவிட்ட அத்தை பையனிடம், சொற்ப டாலர்களுக்காக, அசடு வழிந்து கொண்டே மனுப்போட்ட காலம் போய், இன்று அரசே, இந்திய நிறுவனங்கள் வருடத்திற்கு, 50 மில்லியன் டாலர்கள் வரை வெளிநாடுகளில் முதலீடு செய்ய automatic approval route ஏற்படுத்திக்கொடுக்கிறது.
ஆனால், இவ்வளவு இருந்தும்,இந்திய பொருளாதாரநிலையில்,பற்றாக்குறை என்பது நெடுநாட்களாகவே தொடர்ந்து வரும் ஒரு சோகம். 1950களில், வரவுக்கு மீறிய செலவை சரிக்கட்ட, அயல்நாட்டு உதவிகள் வாங்கி, பிறகு 1960களில், சலுகை வட்டிகளில் கடன் வாங்கி, சமீபமாக, சந்தை வட்டிகளில் கடன் வாங்கி, - இப்போது, வட்டி செலுத்துவதற்காக கடன் வாங்கி, இப்படி கடன் வாங்கியே பழக்கப்பட்டு, (தற்போதைய மொத்த கடன் சுமார் 11 லட்சம் கோடி!) பிற்கால சந்ததியினரை, பிறக்கும் போதே கடனாளிகளாக ஆக்கும் போக்குக்கு, முடிவு கட்ட ஆரம்பிக்கலாம் என்று நினைப்பதே ஒரு ஆறுதலான விஷயம் தானே!
அரசின் மொத்த வருமானமான ரூ. 281,000 கோடியில், மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையான ரூ. 72,000 கோடி போக, இருக்கும் ரூ. 209,000 கோடியில், கிட்டத்தட்ட பாதி அதாவது ரூ. 101,000 கோடி வட்டி கட்ட மட்டுமே போகிறது. ராணுவத்திற்கு ரூ. 59,000 கோடியை ஒதுக்கி, ரூ. 39,000 கோடியை சந்தை சலுகை (subsidies) மற்றும் பென்ஷன் செலவுக்கும் எடுத்து வைத்து, நாட்டின் முன்னேற்ற செலவுகளுக்கு மிஞ்சுவது வெறும் ரூ. 12,000 கோடி தான். வேண்டிய தொகையோ ரூ. 123,000 கோடி!
வரிச்சுமைகளை மக்கள் மீது mindless ஆக ஏற்றாமல், வேறு வகையில் நிதி திரட்டுவதும், செலவினங்களைக் குறைக்க முற்படுவதும் தான், "அறிவார் தொழில்" ஆக இருக்கும். அந்த வகையில் பார்க்கையில், நிதியமைச்சர் யஷ்வந்த் ஸின்ஹா புத்திசாலித்தனமான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். கடினமான முடிவுகளை நேர்கொள்ள வேண்டிய நேரம் என்று, முக்கியமாக குஜராத் பூகம்பம் ஏற்படுத்திய அழிவிற்குப்பிறகு, சூசகமாக நமக்கெல்லாம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாமெல்லாம் வரிகள் அதிகரிக்கக்கூடிய அச்சத்தில் இருந்த வேளையில், அப்பாடா, பயந்த மாதிரி இல்லை என்று நிம்மதியடையக்கூடிய வகையில், பட்ஜெட் அமைந்திருப்பது உண்மை தான். அதைவிட முக்கியம், சில ஆதார இலக்குகளோடு, நாட்டின் நிதி நிலை சரி செய்யப்பட தொடங்கியிருப்பது தான். அதாவது, பிரச்னைகளை சரிவர புரிந்து கொண்டு, அரசியல் சங்கடங்களுக்காக கடின முடிவுகளை எடுக்காமல் "டபாய்ப்பதை" நிறுத்தியிருப்பது தான்.
இப்போது பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.
ஏற்கெனவே தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் அரசு பங்குகளை தனியார்களுக்கு விற்று, அதன் மூலம் நிதி திரட்டுவதை தீவிரப்படுத்தி, அந்த வருவாயைக்கொண்டு கடனடைக்கத் தொடங்குவது.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசு முதலீடு தான், நாட்டின் கடன் சுமைக்கு முக்கிய காரணம். அரசின் கடமை நிர்வகிப்பது - வியாபாரம் செய்வது அல்ல. குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, எதிர்க்கட்சிகளின் கூக்குரல்களுக்கெல்லாம் செவி சாய்க்காமல், பட்ஜெட்டில் அறிவித்தபடி, VSNL, ஏர் இந்தியா, மாருதி உள்ளிட்ட 27 நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை தயங்காமல் அரசு செய்திட வேண்டும்.
கட்டமைப்பு (infrastructure) பணிகளை (மின் துறை, சாலைவழிகள், தொலைதொடர்பு, துறைமுகங்கள் முன்னேற்றம்) முடுக்கி விடுதல்.
மின் வாரியங்களைப்பற்றி, அவைகள் அபார நஷ்டங்களில் இயங்குவது பற்றி, அந்த நஷ்டங்களில் பெரும்பகுதி மின் திருட்டு என்பதைப்பற்றி மிகவும் வேதனைப் பட்டிருக்கிறார் நிதியமைச்சர். மத்திய அரசுக்கு, இவைகள் மொத்தமாக ரூ. 25,000 கோடி பாக்கி. இவைகளின் சீரமைப்பில் அரசின் கவனம் திரும்பியிருப்பது நல்ல விஷயம்.
வர்த்தக மேம்பாட்டுக்கு மிக அவசியம், உற்பத்திப்பொருளை, தாமதமின்றி விற்பனையிடங்களுக்கோ, ஏற்றுமதித் தடங்களுக்கோ கொண்டுசெல்ல ஏதுவாக, நல்ல சாலைவழிகள் தேவை. தொலைநோக்குப் பார்வையுடன், இந்த துறைக்கு ஒதுக்கப்படும் நிதி கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குவது மிகவும் சிறப்பான செயல்.
தொலைதொடர்பு, துறைமுகங்கள் துறைகளுக்கும், முக்கியத்துவம் வழங்கப் பட்டிருப்பது பாராட்டப்படவேண்டியது.
அர்த்தமுள்ள வகையில் அரசு ஊழியர்கள் குறைப்புக்கான முயற்சி. அரசுத்துறைகளில் இருக்கும் அதிகப்படியான ஊழியர்களை படிப்படியாக குறைக்க முன்வந்திருப்பது நல்ல முயற்சி. முன்மாதிரியாக, நிதி மற்றும் பொருளியல் அமைச்சரக அளவு குறைப்பு செய்திருப்பது, மற்றவர்களுக்கு சொல்வதை தான் முதலில் செய்ய வேண்டும் என்று பொதுவாக பின்பற்றாத விதியை பின்பற்ற ஆயத்தம் காட்டியிருக்கிறார் யஷ்வந்த் ஸின்ஹா.
சிக்கன நடவடிக்கைகள் மேற்கொண்டு அரசுத்துறை அனாவசிய செலவினங்களை குறைக்க முற்படுதல்.
செய்வதை விட சொல்வது எளிதான விஷயம் சிக்கன நடவடிக்கை என்பது. திட்டம் சாரா செலவினங்கள் (non-plan expenditure) குறைக்கும் வகையில், சில நிச்சயமான நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார் அமைச்சர். சிக்கனம் சாதிக்கப்படும் என நம்புவோம். வாழ்த்துவோம்.
வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தி (widening tax base), அதன் மூலம் வருவாயை அதிகரித்தல்.
ஆறில் ஒன்று திட்டம் (சில வசதிகள் படைத்தவர்கள் வருமான வரி படிவங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி), ஏற்கெனவே பெரிய நகரங்களில் நன்கு செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. இதை எல்லா நகர்ப்புறங்களுக்கும் விரிவு படுத்தி, அதன் மூலம், வருமான வரி கட்டாத மக்களை, வரி வலைக்குள் கொண்டு வந்து, வருவாயை அதிகரிக்கச் செய்வது, ஒரு பலனளிக்கக்கூடிய திட்டம் தான்.
வரவேற்கத்தக்க வேறு பல அம்சங்கள் - வருமான வரியின் மீது இருந்த உபரி வரி ரத்து செய்யப்பட்டது, டிவிடெண்ட் வரியை பாதியாகக் குறைத்தது, மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், உயர் கல்விக்கான கடன் வசதிகளை அதிகரித்திருப்பது, கலால் வரியை சீரமைத்து, ஒரே வரிவிகித்தை அமலுக்குக் கொண்டு வருவது ஆகியவை.
குறைகளே இல்லை என்று கூறிவிட முடியாது. வாகனங்கள் மீதான கலால் வரியை குறைத்திருப்பது, செல்வந்தர்களுக்கும், வாகன உற்பத்தியாளர்களுக்கும் தான் பயனளிக்கும். ஏற்கெனவே, பெருத்துப்போயிருக்கும், வாகன எண்ணிக்கை மேலும் பெருகி, சாலை நெரிசல்களை ஏற்படுத்தும். பாமர ஜனங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தாத நடவடிக்கை.
சேமிப்பு நிதிகளின் மீது வட்டி குறைக்கப்பட்டிருப்பது, மேலும் வட்டிகளின்
மீது வருமானவரி பிடித்தம் கடுமையாக்கப் பட்டிருப்பது பரவலாக, வட்டி வருமானத்தையே நம்பி ஜீவனம் நடத்தும் ஓய்வு பெற்றவர்களையும் நடுத்தர வர்க்கத்தினரயும் அதிருப்தி அடையவைத்திருக்கிறது.
கணக்கில் வராத கறுப்புப்பணத்தை வெளிக்கொணர எந்தவிதமான செயல் திட்டத்தையும் அறிவிக்காதது எதற்கோ இந்த தயக்கம் என எண்ண வைக்கிறது.
கூட்டிக்கழிச்சிப் பாத்தா, கணக்கு அப்படி ஒண்ணும் சரியா வரலே, ஆனா தப்பாவும் வரலே! |