காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா பொருள்களின் விலையேற்றத்தை காரணம் காட்டி மீண்டும் ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியுள்ளது. நல்ல வேளை மண்ணெண்ணை, சமையல் எரிவாயு இரண்டும் தப்பின.
இம்முறை பெட்ரோல் லிட்டருக்கு நான்கு ரூபாயும், டீசல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்விலையேற்றத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விலையேற்றதை சிறிது குறைக்க வேண்டும் என்று பிரதரிடம் கோரிக்கை வைத்தார். மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து போரட்டமும் நடத்தின. பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க நாடு முழுவதும் பல இடங்களில் பேராட்டங்களை நடத்தியது. ஆனாலும் ஏற்றிய விலையை திரும்ப பெற மத்திய அரசு மறுத்துவிட்டது. இது தவிர்க்க முடியாதது என்றும், வேண்டுமென்றால் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைத்துக் கொள்ளலாம் என்றும் யோசனையை அள்ளி வழங்கிவிட்டு ஒதுங்கி கொண்டது.
தமிழகத்திலும் இந்த விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனமும், ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர். பிரதான எதிர்கட்சியாக விளங்கும் அ.தி.மு.க மத்திய அரசுக்கு எதிராக மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை கூட்டணி கட்சிகளுடன் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நேரிடையாகவே ஜெயலலிதா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதாவுடன், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொதுசெயலர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஜெயலலிதா போராட்டக் களத்தில் குதித்தது அவரது கட்சியினரிடைய பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய போது, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க இப்பொருட்கள் மீதான விற்பனை வரியை மாநில அரசு குறைக்கலாம் என்று யோசனை தெரிவித்ததை தற்போது முதல்வர் கருணாநிதிக்கு ஜெயலலிதா தனது அறிக்கையின் மூலம் நினைவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசு டீசலுக்கான வரியை சிறிது குறைத்தது. ஆனால் இந்த விலை குறைப்பு வெறும் கண்துடைப்பு நாடகம் என்று ஜெயலலிதா கருத்து தெரிவித்தார்.
கேடிஸ்ரீ |