வதைபடும் மழைக்காட்டு வளம்
பூமி, மத்திய கோட்டுப் பகுதியில் தன் மீது போர்த்தி அழகு பார்க்கும் பச்சைக் கம்பளம்தான் இந்த எழில் கொஞ்சும் அயன மண்டல மழைக்காடுகள் (Tropical Rain Forests).

மழைக் காடுகளைத் தேசத்தின் மிகக் குறுகிய பரப்பில் கொண்டிருக்கும் நாடுகள் மீது கூட மற்றைய நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு மழைக்காடுகள் இயற்கையின் புதையல்களாகவே இருக்கின்றன.

பிரேசில், கொலம்பியா, பொலிவியா, பெரு, வெனிசுலா, சைரே, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை... என்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே மழைக்காடுகள் காணக் கிடைக்கின்றன. இருந்தும் இந்த பூமியின் ஒட்டுமொத்த உயிரின வகைகளில் (இதுவரை பெயரிடப்பட்ட 104 மில்லியன் தாவர-விலங்கினங்களைத் தவிர பன்மடங்கு ஏராளமான ஜீவராசிகள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன) பாதியளவு, சூரியன் நுழையவே தயங்கும் அடர்ந்த இந்தக் காடுகளில்தான் ராஜாங்கம் செய்கின்றன. அதிலும் இவற்றில் பெரும்பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காண முடியாத அளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக (Endemic) இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மலேரியா நோய்க்குரிய ஒரேயொரு தீர்வாக இருந்த 'குயினைன்' பெறப்பட்ட தென் அமெரிக்காவின் சிங்கோனா மரம் தொடங்கி- குருதிப்புற்று நோய்க்கு மருந்தாகும் மடகாஸ்கரின் பட்டிப்பூ ஊடாக- இன்னமும் மனிதனை வதைத்துக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தாகக் கண்டறியப்பட வேண்டிய ஏராளமான தாவரங்கள் வரையில் கொண்டிருக்கும் முழு உலகுக்குமான 'மருத்துவ அலமாரி'யாக இயற்கை, மழைக்காடுகளையே உருவாக்கியிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரானவை என அடையாளம் காணப்பட்ட 3000 க்கும் அதிகமான மூலிகைகளில் 70 சதவீதம் வரை இந்தக் காடுகளிலேயே காணப்படுகின்றன.

உலகம் பூராவும் உள்ள மழைக் காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கலாச்சாரமும் வாழ்க்கை முறையும் மழைக் காடுகளின் நிலைத்திருத்தலில் வசிக்கும் பங்கு பிரதானமானது. ஏராளமான ரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும் மழைக்காட்டின் 'சாவி' காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் மழைக்காட்டுத் தாவர- விலங்கினங்களே

புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்களால் அறிமுகம் செய்யப் படுகின்றன. தாய்லாந்தின் லுஆ (Lua) பழங்குடியினர் மாத்திரமே 75 விதமான உணவுப் பயிர் வகைகளையும் 25 வகையான மூலிகைகளையும் இனங்கண்டு பயிரிடுகிறார்கள் என்றால் உலகம் பூராவும் உள்ள மழைக்காட்டுப் பழங்குடிகளிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மரபணு வளங்களைக் கற்பனை செய்து பாருங்களேன்.

பல்வகைப்பட்ட உயிரிகளின் மரபணுத் தடாகமாக (Gene pool) இவை இருப்பதுடன் மட்டும் மழைக்காடுகளின் முக்கியத்துவம் முற்றுப் பெற்று விடவில்லை. வருடத்துக்கு 120 தொடக்கம் 235 அங்குலம் வரையும் மழை வீழ்ச்சியைப் பெறும் இந்தக் காடுகள் (பூமியை நனைக்கும் மழையில் அரைவாசி மழைக் காடுகள் மீதுதான்) நீர்ச்சுழற்சியில் பங்கேற்பதன் மூலம் பூமியின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதில் பிரதான பங்களிப்பைச் செய்கின்றன.

இடைவிடாது கரித்துக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள், வாகனங்களிலிருந்து வெளியேறி பூமியை வேக வைத்துக் கொண்டிருக்கும் கரியமில வாயுவை உறிஞ்சி, உயிர் ஆதாரமான ஆக்சிஜன் வாயுவை வெளியேற்றிக் கொண்டிருப்பதால் பூமியின் நுரையீரல் போலவும் இக் காட்டு வளம்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சொல்லப் போனால், மழைக்காடுகளுக்கு வெளியே பூமியின் பிற பகுதிகளில் உள்ள உயிரினங்களின் தொடர்ச்சியான இருத்தலுக்கும் இன்றியமையாத ஒரு காட்டுத்தொடர்தான் இந்த மழைக்காடுகள்.

ஆனால், இவ்வளவு இருந்தும் பொன் முட்டையிடும் வாத்தாக மழைக்காடுகள் மழுங்கச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலியற் படுகொலை இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அயன மண்டல மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து சதவீதம் என்னுமளவுக்குக் குறுகிப் போயிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இங்கிலாந்தின் அளவைக் காட்டிலும் பரந்த நிலப்பரப்புள்ள காட்டுப்பகுதி ஒவ்வொரு ஆண்டும் தொலைந்து கொண்டிருக்கிறது. இது மழைக்காடுகளையும் அதை அண்டிப் பிழைக்கும் விலங்கினங்களையும் மறையச் செய்து விடுமோ என ஆய்வாளர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசான் காடுகள் அமைந்திருக்கும் பிரேசிலைச் சார்ந்த ஆய்வாளர் ·பிலிப் ·பெர்ன்ஸைட், ''இக் காடுகள் இன்ன வருடத்தில் மறையும் என்று எவரும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் ஏதாவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் இக் காடுகள் மறைந்தே போய்விடும்'' - என எச்சரித்து வருகிறார். அமேசான் காடுகளுக்கு ஆரம்பம் முதலே ஆபத்துதான். ஐரோப்பியர்களின் தேவைகளை ஈடு செய்யும் கரும்புச் சாகுபடிக்கென போர்த்துக்கீசியர்களால் ஒரு பகுதி ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டது. (இந்த வனப் படுகொலைக்கு சுதேசிகள் ஒத்துழைக்காமையினால் ஆப்பிரிக்க அடிமைகள் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது). கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அமேசான் காடுகள் அழிக்கப்படும் வீதம் இப்போது அதிகரித்திருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, பிரேசிலைப் போன்றே மழைக்காடுகளைக் கொண்ட நாடுகள் பலவும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி மக்கள் தொகைப் பெருக்கத்தில் முன்னணியில் இருக்கின்றன. வறுமையால் வாடும் இம் மக்களுக்கு உணவிட வேண்டி சாகுபடிக்காக இக் காடுகள் கபளீகரம் செய்யப்படுகின்றன. காடகன்ற பூமி விவசாயத்துக்குப் பொருத்தமானதல்ல. இதனால் ஒரு சில வருட சாகுபடிக்குப் பின்னர் கைப்படாத புதிய கன்னிக் காடுகளை நோக்கி விவசாயிகளின் படையெடுப்பு மீளவும் தொடங்கி விடுகிறது.

தென் அமெரிக்கா பெருமளவில் அமெரிக்காவுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் பெரும் பகுதி துரித உணவுக்கடைகளுக்கும் அமெரிக்கர்களின் செல்ல நாய்களுக்குமே உணவாகி விடுகிறது. அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முகமாக மழைக்காடுகளில் பெருமளவில் நிறுவப்பட்டு வரும் மாட்டுப் பண்ணைகளும் காடுகளின் பேரழிவுக்கு இன்னுமொரு காரணமாகி விடுகின்றன. சாகுபடி கைவிடப்பட்ட காட்டுப்பகுதிகளை மேய்ச்சல் நிலமாக்குவது புதிய துணைக்காடுகள் உருவாகி வளர்வதைத் தடுத்து விடுகிறது.

தளவாடத் தேவைகளுக்காக மரங்களைப் பெருமளவில் வெட்டுவதும் மழைக்காட்டை அச்சுறுத்தும் மற்றுமொரு முக்கிய காரணமாய் இருக்கிறது. மரம் வெட்டும் உரிமத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பதால் கிடைக்கும் பெருமளவு பணத்தால் ஏழை நாடுகள் வசீகரிக்கப்பட்டு விடுகின்றன. வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்கு இந்த அரசுகளுக்கிருக்கும் ஒரு சில தேசியச் சொத்துக்களில் மழைக்காட்டு மரங்களும் ஒன்றாக இருக்கிறது.

ஆனால் இவையெல்லாம் வீண் கனவு. காட்டை அழிப்பதனால் மறைவது ஆயிரக்கணக்கான தாவர விலங்கின வகைகளும் ஈடு செய்யப்பட முடியாத பாரம்பரியப் பொருளுமே ஒழிய வறுமை அல்ல. மாறாக பூமி சந்தித்தது ஒரிசாவின் கோரப்புயல், பஞ்சம், பட்டினி என்று எதியோப்பியாவைப் பொசுக்கிக் கொண்டிருக்கும் கடும் வறட்சி போன்று ஏராளமான சமநிலைக் குலைவுகளைத்தான்.

இதனாலேயே இயற்கை விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், சூழல்வாதிகள், சமூக வியலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரதும் கவன ஈர்ப்பை மழைக் காட்டுச்சூழல் பெற்றிருக்கிறது. வருகின்ற தலைமுறை களுக்காக பூமியை எப்படிப் பாதுகாப்பது என்பது இவர்கள் எல்லோரினதும் கவலையாக இருந்தாலும், தேசங்களுக்கிடையே நிலவும் குறுகிய மற்றும் எதிர்மறையான மனப்பாங்குகளையெல்லாம் தாண்டி மழைக் காடுகளைக் காப்பாற்றுவதற்குரிய சர்வ தேசியத்தை எட்டுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றாக இல்லை. கொள்கை வகுப்பதிலும் நிறைவேற்றுவதிலும் நாடு களுக்கிடையேயான அரசியலே பெரும் பங்கு வகிக்கிறது.

1960-களில் நச்சுக் கழிவுகளின் சேர்க்கையினால் இனம் பெருக்கும் ஆற்றல் குறைந்து அமெரிக்காவின் தேசியச் சின்னமான கழுகுகள் (Bald Eagle) பேரழிவைச் சந்தித்ததன் காரணமாக சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் நாட்டம் கொள்ள ஆரம்பித்த அமெரிக்க அரசியல், இன்று- பிற நாடுகளின் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழல் மேலாண்மையைப் பெற்றிருக்கிறது.

தூய்மையான மழைக் காடுகளினூடே நெடுஞ்சாலை அமைப்பதற்கு பிரேசிலுக்குக் கடனுதவி வழங்க வேண்டாமென அமெரிக்கா ஜப்பானைக் கேட்டுக் கொண்டுள்ளது. காடுகளுக்குச் சேதத்தை உண்டு பண்ணும் திட்டங்களுக்குக் கடனுதவிகளைக் கொடுப்பதை உலக வங்கியும் நிறுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஆனால், வடக்கு அமெரிக்கப் பகுதிகளில் பல கோடி டாலர் வருமானமுள்ள மரம் வெட்டும் தொழிலைத் தடுக்க அமெரிக்கா இன்னமும் முன் வரவில்லை. பூமியைச் சூடு போட்டுக் கொண்டிருக்கும் காபனீ ரொட்சைட்டு வாயுவை தொழிற்சாலைகள் வெளிவிடும் வீதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இன்னமும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. இந்நிலையில் அன்றாடத் தேவைகளுக்காக விறகு வெட்டுகின்ற, விவசாயத்துக்காகக் காடுகளை அழிக்கின்ற ஏழை நாடுகளினால்தான் சூழல் பாதிக்கப்படுகிறது என வளர்ந்த நாடுகள் வாதிடுகின்றன.

''பசியால் மரணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் தன்னுடைய அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முன்னால் எப்படிச் சூழல் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்க முடியும்? உங்கள் நாடுகள் வெளியேற்றும் கரிக்காற்றை ஜீரணிக்கும் சக்தி எங்கள் காடுகளுக்கு உண்டு என்று நீங்கள் நினைத்தால் எங்கள் காடுகளைக் காப்பாற்றுவதற்கும், காடுகளை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களுக்காகவும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று அடுக்கடுக்கான கேள்விகளை வளர்ந்த நாடுகளை நோக்கி மூன்றாம் உலக நாடுகள் பிரேசிலில் 1992-ல் நடந்த பூமி உச்சி மாநாட்டிலிருந்து இன்னமும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.

அமெரிக்கா 1970 ஏப்ரல் 22 ல் ஆரம்பித்து வைத்து 'பூமி தினம்' பல்வேறு நாடுகளிலும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பங்குக்கும் வருடந்தோறும் ஜூன் 5ஆம் தேதி 'உலக சுற்றுச் சூழல் தினம்' உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தும் பணக்கார நாடுகளின் 'மதப்பு'க்குமிடையே தனது 'தலை'விதியைக் கொடுத்துவிட்டு இரண்டு தரப்புக்குமிடையே நிகழும் இழுபறியில் மழைக்காடுகள் இன்னமும் மொட்டையாகிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் வருடத்துக்குப் 17,000 தாவர-விலங்கினங்களைப் பூமியை விட்டு நிரந்தரமாகவே அழித்துக் கொண்டு!

மேலதிக தகவல்களுக்கு: www.globalforestwatch.org

பொ. ஐங்கரநேசன்

© TamilOnline.com