காலைத் தூக்கி நின்றாடும் அந்த தெய்வம்தான் என்னை கை தூக்கிவிட்டது - சீர்காழி கோவிந்தராஜன்
நான் நான்காவது படிக்கும்போதே சீர்காழி கடைவீதி ராமர் கோயில் பஜனையில் கலந்து கொண்டு பஜனைப் பாடல்களையும், 'காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே' என்ற மாரிமுத்துப் பிள்ளையின் பாடலையும் உணர்ச்சியோடு பாடிக்கொண்டு வருவேன். காலைத் தூக்கி நின்றாடும் அந்தத் தெய்வம்தான் இன்று என்னைக் கைதூக்கிவிட்டது.
இன்னுமொரு சுவையான விஷயம். சீர்காழியில் ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் கூட்டம். அந்தத் தலைவரின் முன்னே, 'கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பளிக்கும் களிப்பே' என்ற அருட்பாவை அழுத்தந்திருத்தமாகப் பாடுகிறேன். அவரும் என்னை அன்போடு பார்க்கிறார். யார் தெரியுமா? அந்த மாபெரும் தலைவர்? அவர் தாம் வைக்கம் வீரர் - வெண்தாடி வேந்தர் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள். அன்று முதல் இன்று வரை இசை என் வாழ்வோடு இணைந்து விட்டது.
சின்னஞ்சிறு வயதிலேயே பாகவதர் சின்னப்பா, எஸ்.ஜி. கிட்டப்பா போன்றவர்கள் பாடல்களையும், பல நாதசுவர இசைத்தட்டுக்களை வாய் மூடாமல் கேட்பேன்.
ஞானப்பால் தந்த சீர்காழி திரிபுரசுந்தரியின் சந்நிதியில் என் 14 ஆவது வயதில் கச்சேரி செய்தேன். அதுதான் என் முதல் கச்சேரி. அதன் பின் சினிமா உலகத்துக்கு வந்தேன். திருப்பாம்புரம் டி.என். சுவாமிநாதப் பிள்ளையவர்களிடம் சீடனாக இருந்து குருகுல வாசம் செய்து இசை பயின்றேன். சினிமாவில் நான் பாடிய 'சிரிப்புத்தான் வருகுதய்யா, இவ்வுலகைக் கண்டால்' என்ற பாடலால் நான் மிகவும் பிரபலமானேன்.
'தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்றான் பாரதி. அமரகவியின் ஆசியோடு, முருகன் அருளால் தமிழிசை பாடி, வெளிநாடு சென்று இசைத் தொண்டு செய்து வருகிறேன்.
லண்டன் முருகன் கோயிலில் 'Lord Muruga London Muruga' என்ற ஆங்கிலப்பாடலை என் புதல்வன் சீர்காழி சிவசிதம்பரம் பாடி அபாரமான கைத்தட்டலைப் பெற்றான். பாடலை முடிப்பதற்குள் எத்தனை வரவேற்பு, எவ்வளவு உற்சாகம்.
பட்டம்மாள் என்ற பாட்டம்மாள்
தமது 80 ஆவது வயதில் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மவிபூஷண் பட்டம் டி.கே. பட்டம்மாள் என்ற பாட்டம்மாளுக்கு கிடைத்துள்ளது. தன் இசையால் பாரதத்தை அலங்கரித்த பட்டம்மாளுக்கு பாரத ரத்னா விருதே வழங்கலாம்.
மேடையில் கச்சேரி செய்பவர்கள் அப்பொழுதுதான் நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிப்பது போன்று பாடுவார்கள். பட்டம்மாள் இதற்கு எதிரானவர். இன்றும் பாடல்களை நன்கு மனனம் செய்த பிறகே மேடையில் பாடுவார். இன்றும் கச்சேரிக்குச் சென்றாலும் சங்கீத அப்யாஸம் செய்யும் குழந்தை போல வீட்டில் நன்கு ஒருமுறை பாடிவிட்டுப் பிறகுதான் கச்சேரியில் பாடுவார்.
சாரீரத்திற்கென்று சில பேர் எடுத்துக் கொள்ளும் அதீத அக்கறை இவரிடம் கிடையாது. மோர் என்றால் வேண்டவே வேண்டாம், எலுமிச்சைப் பழமா - அதை விற்பவன் எதிரில் கூட செல்லக்கூடாது, எப்போதும் வென்னீர் என்று அலட்டிக் கொள்கிற சில வித்வான்களைப் போல் இவரில்லை.
''சாரீரம் கடவுள் கொடுத்ததுதானே கடவுளே பார்த்துப்பார்"
என்று சாதாரண குடிநீரைத்தான் குடிப்பார்.
லெளகீக வாழ்க்கையின் அல்லல் சாகரத்தில் அவதியுள்ள பல பேர் இவரது 'சாந்தி நிலவ வேண்டும் உலகினில் சாந்தி நிலவ வேண்டும்' என்ற பாடலின் இசையில் ஈர்க்கப்பட்டுத் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காஞ்சிபுரம் நயினாப்பிள்ளையைத் தன் மானசீக குருவாகக் கொண்ட இவர், பெண்ணாகப் பிறந்ததால் பால்ய காலத்து பல குடும்பத் தடைகளையெல்லாம் மீறி பாரத இசை உலகின் தாரகையாக ஒளிவிடுகிறார்.
ஹம்சா நந்தி
******
தந்தி ஒலிக்க, வாய் பாட செம்பை ஏந்திப் பிட்சை ஏற்ற தியாகய்யர்....!
''தம்புராவின் நாதம் அலை அலையாக எழுந்து செவியையும் உள்ளத்தையும் நிரப்பிற்று. அப்பழுக்கில்லாத நாதமாக கூடம் முழுதும் கமழ்ந்தது அது. சுருதி பரிபூர்ணமாகச் சேர்ந்திருந்தது. தீயும் சூடும் போல. இரவும் இருளும் போல. நிலவும் தண்மையும் போல. வைகறையும் தூய்மையும் போலச் சேர்ந்திருந்தது. மகா கவியில் சொற்களில் எழுதுவது போல, சொல்லாத காந்தாரம் சேர்ந்து தொனித்தது. புலன்களைக் கூட்டி ஒருமுகப்படுத்திற்று அந்த நாதம். புறத்தின் நினைவை அகற்றி, உள்ளத்தை மீற முடியாமல் கவ்விச் சென்றது. உடலையும் உலகையும் விட்டுச் சென்ற நினைவும், புத்தியே ஒலியும் பாவுமான அனுபவத்தின் மேலமர்ந்து, மாயக் கம்பளத்தில் அமர்ந்தது போல் பறந்தது. திக்கும் எல்லையும் அற்ற பெருவெளியில் உலவுவது போன்றிருந்தது அந்த நாத உணர்வு.
நாதமுனிகளெல்லாம் இப்படித்தான் திரிந்தார்கள். நாரதன் திரிந்தது இந்த மாயந்தான். மூவுலக வழிப்போக்கனாகத் திரிந்த அவன் இந்த நாத வெளியில்தான் திரிந்தான் போலிருக்கிறது. இதைத்தான் மனிதனின் விரியாத கற்பனை மூவுலகென்று குறுகிப் பெயரிட்டு விட்டதா? அல்லது மூன்று ஸ்தாயிகளையே மூவுலகென்று சொல்லிற்றா? தந்தி ஒலிக்க, வாய் பாட செம்பை ஏந்திப் பிட்சை ஏற்ற தியாகய்யர் தெருவிலா நடந்தார்.
திக்கை நிறைத்த நாதத்தில்தானே அலைந்தார். அவர் செம்பை ஏந்தியது அரிசிக்கா? அல்லது நாத வெள்ளத்தில் மொள்ளுவதற்கா? ஊர் ஊராகக் காசிக்கும், தில்லைக்கும், தீர்த்தங்களுக்கும் தீட்சிதர் அலைந்ததெல்லாம் நாதத்தில் அலைந்ததுதானே?
'மோகமுள்' நாவலில் தி. ஜானகிராமன்
******
கருணாமிர்த சாகரத்தில் ஆபிரகாம் பண்டிதர்
''ஒரு ஸ்தாயியில் வரும் பன்னிரண்டு சுரங்களில் மயக்கம் கொண்டு தமிழ் மக்களுக்கு சங்கீதம் ஏது? எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்தே வந்தவையென்று போராடுகின்றனர் இக் காலத்தில். இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழில் ஒன்றாகிய சங்கீதத்தை, வெகு காலமாகவே தமிழ் மக்கள் வழங்கி வந்துள்ளனர்.
ஷட்ஜம, ரிஷப, காந்தார, மத்திம, பஞ்சம, தைவத, நிஷாதங்களிலிருந்தே சரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களும் வந்திருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். சரிகமபதநி என்ற ஏழு சுரங்களின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களே. சமஸ்கிருதப் பெயரல்ல.'
1365 பக்கங்கள் கொண்ட 'கானாமிர்த சாகரம்' என்ற நூலில் ஆபிரகாம் பண்டிதர் இவ்வாறு எழுதியுள்ளார். அற்புதமான நூல் இது. இவரது சங்கீத மேதைமைக்குச் சான்று பகரும் நூலாக இதைக் கொள்ளலாம். குற்றாலம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஆபிரகாம் பண்டிதர் 1883 ஆம் ஆண்டு தஞ்சைக்கு வந்தார். அவர் எழுதிய பாடல்கள்,
'கருணாமிர்த சாகரத்திரட்டு' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. இவ்வளவு பெரிய நூலைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களால் கூட இன்று வரையிலும் செய்ய முடியவில்லை.
ஆகிரி பைரவன்
யானை பரிசு பெற்ற கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை
ஒருநாள் தன் பெரியம்மா ரத்தினம் அம்மாள் வீட்டில் தட்டு முட்டுச் சாமான்களுக்கிடையே பழைய வயலின் ஒன்று கிடந்தது. அதனை எடுத்துச் சுத்தம் செய்து வாசிக்கத் தொடங்கினான் சிறுவன் ராஜமாணிக்கம். நாராசமான ஓசை வீட்டில் உள்ளோர்க்கு வேதனை அளித்தது. தொடர்ந்து தன் மனோதர்மப்படி வாசிக்கத் தொடங்கினான் சிறுவன். வாசிப்பின் குறை நீங்கிவிட்டது. புத்தம் புதிய சுநாதமான, ஸ்வரங்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளிப்பதற்காக கும்பகோணத்திற்கு வாரம் இருமுறை வருவார். தானே வயலின் இசைத்து வரும் சிறுவன் ராஜமாணிக்கத்தைப் பார்த்து வியந்த இவர், விரைவிலேயே நல்ல நாள் பார்த்து வயலின் அப்பியாசத்தைத் தொடங்கினார். பட்டை தீட்டப்பட்ட வைரமாய் வயலின் இசையில் ஜொலித்தார் ராஜமாணிக்கம். ராஜமாணிக்கத்தின் புகழ் பாரெங்கும் பரவியது.
இவரது வயலின் இசையில் மயங்கிய மைசூர் மகாராஜா, கில்லத் என்ற பட்டால் ஆன ஆடைகளைச் சன்மானமாக இவருக்கு வழங்கினார். 1935-இல் தன் மகள் ஜீவரத்தினத்திற்குத் திருமணம் நடந்தது. இத் திருமணம் - கல்யாணமா, அல்லது இசைவிழாவா என்று பிரமிக்க வைக்கும்படி அப்போதைய பிரபலங்களின் கச்சேரிகள். அரியக்குடி, செம்பையின் கச்சேரிகள் ஒருபுறம், வீணைக் கச்சேரிகள், சரஸ்வதிபாய் கதாகாலட்சேபம், மைசூர் செளடய்யா, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி, அழகர்நம்பி பிள்ளை போன்ற இசைமேதைகளின் அணிவகுப்பு.
திருவிதாங்கூர், எட்டையபுரம், மைசூர் போன்ற சமஸ்தானங்களின் ஆஸ்தான வித்வான் என்ற பெருமையையும் பெற்றார் பிடில் ராஜமாணிக்கம்.
ராஜமாணிக்கத்தின் வாசிப்பில் மறந்துங்கூட கமக நலிவையோ, ஸ்வர சேதத்தையோ, வாசிப்பில் அலட்சிய பாவத்தையோ, அதிகப்படியான ஏதோ ஒன்றையோ நாம் கேட்க முடியாது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் வாயால் பாடுவது போல் இருக்கும். அடங்கி நின்று அளவோடு வாசித்துத் தம்முடைய ஞானம், சொந்தப் பாணி, சிறப்பு அம்சம் பளிச்சிட இழைந்து கொடுப்பார்.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக வாசித்த ராஜமாணிக்கத்தை சமஸ்தான ராஜா ''உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்?" என்று கேட்டார். ''யானை வேண்டும்" என்று இவர் கூறவே யானை ஒன்றைப் பரிசாகத் தந்துவிட்டார் மகாராஜா. அருகிலிருந்த முத்தையா பாகவதர் , ''என்னைய்யா உமக்கு ஏதாவது புத்தியிருக்கிறதா? யானையைக் கட்டித் தீனி போடப் போகிறாரா?" என்று கேட்டபோது, அதற்கு ராஜமாணிக்கம், ''யானையை எனக்கா கேட்டேன். கும்பகோணம் கும்பேஸ்வரன் கோயிலுக்கல்லவா கேட்டேன்" என்று சொல்லி அந்த யானையைக் கோயிலுக்கு ஒப்படைத்தார்.
திருவாங்கூரிலிருந்து கும்பகோணம் வரும் வரை ஆங்காங்கே கோயில்களில் யானைக்கு மிகச் சிறந்த வரவேற்பு, பூர்ணகும்ப மரியாதைகள்.
பவப்ரியா
******
இவர் பட்டம்மாள் அல்ல!
பட்டம்மாள் இசைக் கச்சேரி; செம்மங்குடி தலைமை. மேடைக்கு வந்தார் செம்மங்குடி. "இவ்வளவு நேரம் பாடிய இவர் பட்டம்மாள் அல்ல" என்று தம் பேச்சைத் தொடங்கினார். பலருக்கு திகைப்பு. செம்மங்குடிவிளக்கினார்.
"இவர் வெறும் பட்டம்மாள் அல்ல. பாடும் பட்டம்மாள். சங்கீதத்திற்காகப் பாடுபட்ட அம்மாள். இவரைப்
பட்டம்மாள் என்று மட்டுமே எப்படிச் சொல்வது? உண்மையில் இவர் பாட்டம்மாள்" என்று செம்மங்குடி புகழ்ந்து பேச அவையில் மகிழ்ச்சியான கலகலப்பு.
ஊருக்கு ஒரு பாட்டு.
அரியக்குடி ஒருமுறை பம்பாய் மாநகரில் கச்சேரி செய்து கொண்டிருந்தார். அன்று பல்வேறு திருத்தலப் பாடல்களாகப் பாடிக் கொண்டிருந்தார். மதுரை, திருப்பதி, பழனி என்று பற்பல தலங்களைத் தொடர்ந்து அவர்
பாடல்களால் போற்றியதைக் கண்டு ரசிகர் ஒருவருக்கு ஆர்வம். தங்கள் ஊரைப் பற்றியும் அவர் ஒரு கீர்த்தனை
பாட வேண்டும் என்று கேட்டு துண்டுச் சீட்டை அனுப்பினார்.
சீட்டைப் பார்த்தார் அரியக்குடி. சீட்டு அனுப்பியவரின் மனதை மகிழ்விக்க வேண்டும். ஆனால் பம்பாயைப் பற்றிப் பழைய கீர்த்தனை ஏது?
மனம் தளரவில்லை அரியக்குடி. "ஆடு பாம்பே விளையாடு பாம்மே" என்ற பாடலைத் தொடங்கி பாம்பேயின்
முதல் 'ப' அழுத்தி உச்சரித்து BOMBAY ஆக்கினார். கேட்ட ரசிகர் உள்படப் பலர் முகத்திலும் புன்முறுவல். |